Skip to main content

என் மக்களின் கனவு“மரங்கள் குழுக்களாகவே வாழ்கின்றன. மனிதர்களைப்போல. ஒரு மரத்தை அதன் குழுவிலிருந்து பிரித்து வேறொரு இடத்தில் கொண்டுபோய் நடுவது என்பது ஒரு மனிதரை தன்னுடைய இனக்குழுவிலிருந்து பிரித்து இன்னொரு நாட்டுக்குக் கொண்டுசென்று வளர்ப்பதுபோன்றது. மரங்கள் அப்போது அகதிகளாக்கப்படுகின்றன.”
“My People’s Dreaming”. அவுஸ்திரேலியப் பழங்குடிகளின் வாழ்வு எப்படி இயற்கையோடு பின்னிப்பிணைந்து கிடக்கிறது என்பதைப் படங்களோடு சேர்த்து விளக்கும் புத்தகம் இது. யூலின் தேசத்துப் பழங்குடியின் மூத்தவரான மக்ஸ் டுலுமன்முன் என்பவரோடான உரையாடல்களின் தொகுப்பே இந்த நூலாகும். புத்தகம் முழுதும் அங்கிள் மக்ஸ் பழங்குடி மனிதர்களின் நிலத்தினுடனான உறவை விரிவாக விளக்குகிறார்.
“எம் கனவுகள் பிரெய்ட்வூட் மலை உச்சியிலிருந்தே ஆரம்பிக்கின்றன. அது எம் பாட்டி, முப்பாட்டியினுடைய தேசம். ஷோல்ஹேவன் நதியானது எம் கனவுகளை அங்கிருந்து சுமந்துவருகிறது. மலை உச்சியிலிருந்து வளைந்து நெளிந்து வருகையிலே, வழியெல்லாம் விரவிக்கிடக்கும் கதைகளையும் நமக்காக அது கூடச்சேகரித்துக்கொள்கிறது. இதே நதிதான் நமக்குக் கடலுக்குச் செல்லும் வழியையும் காட்டுகிறது. நாமெல்லாம் நன்னீரும் உவர்நீரும் ஒருசேரப்பெற்றவர்கள் என்பதை உணர்த்துகிறது. இந்தச் ஷோல்ஹேவன் நதி கொண்டுவரும் கதைகளை நாம் தொடரத்தவறினோமானால் கடலைச் சென்றடையும் வழி எமக்குத் தெரியாமலேயே போய்விடும். கூடவே நம் தேசத்துக்குச் செல்லும் வழியும்.”
ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் அவுஸ்திரேலியக் கண்டத்தில் இருநூறுக்குமதிகமான தேசங்களும் எண்பத்துச்சொச்ச மொழிகளும் வழக்கில் இருந்தன. அருகருகே இருக்கும் ஒரே மொழியைப் பேசும் தேசங்களை கலாச்சாரப் பிராந்தியம் என்பர் (Cultural Bloc). ஒரு கலாச்சாரக் பிராந்தியத்துத் தேசங்களுக்கிடையே திருமண உறவுகளும், கொண்டாட்டப் பகிர்தல்களும் இடம்பெறும். அவர்களின் நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் பெரும்பாலும் பொருந்திவரும். ஆனால் பிராந்திய எல்லைகளுக்கு வெளியே இப்படியான உறவுகள் ஏற்படுவதில்லை. பெரும்பாலும் கலாச்சாரப் பிராந்தியங்கள் மொழியினாலேயே எல்லை வகுக்கப்பட்டிருக்கின்றன. பேசும்மொழி மற்றவருக்குப் புரியும்வரைக்கும் பிராந்தியத்தின் எல்லை விரிகிறது. மொழி வழக்கு மாறுகின்ற இடம் எதுவோ அதுவே எல்லை ஆகிறது. இவர்கள் தம்மிடையே தொடர்புகொள்ளப் பல உத்திகளைக் கையாண்டு இருக்கிறார்கள். தூரப்பயணிகள் எப்போதும் ஒரு குச்சியைக் கைவசம் வைத்திருப்பார்கள். கடவுச்சீட்டுப்போல. அதுதான் அவர்களுடைய அடையாளம். குச்சியில் பல குறியீடுகள் வரையப்பட்டிருக்கும். எந்தத் தேசம். பிராந்தியம். குடும்பம் என்று பல விடயங்கள் அதில் இருக்கும். எல்லையில் அயல் பிராந்தியத்து மனிதர்கள் வழிமறித்தால் உடனேயே குச்சியை உயர்த்திப் பிடிப்பார்கள். அப்புறம் வழமையான குடிவரவுச் சோதனைகள். அவர்கள் பாணியில். அனுமதி கிடைத்தால் மாத்திரமே மேலும் பயணத்தைத் தொடரலாம். எல்லைகள் மனிதர்களுக்கு மாத்திரம் வகுக்கப்படவில்லை. டொல்பின்களுக்கும் சுறாக்களுக்கும்கூட எல்லை வகுத்திருக்கிறார்கள். அடிப்படை எதுவென்றால், தேவையில்லாமல் இன்னொரு பிராந்தியத்துக்குள் நுழையாதே என்பதுதான். மனிதர்கள், மிருகங்கள் என்றில்லாமல் மொழிக்குக்கூட இந்தச் சட்டம் பொருந்துகிறது. மலைதேசத்துக் கதைகளை அந்தப் பிராந்திய மொழியில் மாத்திரமே சொல்லல்வேண்டும். அந்த மொழியை கடலோரத்துக் கதைகளைச் சொல்லுவதற்குப் பயன்படுத்தக்கூடாது. மொழியை அதன் எல்லைக்கு அப்பால் கொண்டுசெல்வது அதன் புனிதத்தைச் சிதைப்பதாகிவிடும் என்று அவர்கள் நம்பினார்கள்.

மக்ஸ் மொழியைப்பற்றி விவரிக்கும்போது ஆச்சரியம் விரிகிறது.
“மொழி என்பது வெறுமனே அங்குமிங்குமாகப் பேசப்படும் ஒன்று என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால் அது அப்படியல்ல. மொழி நம் எல்லைகளையும் கலாச்சாரத்தையும் சட்டதிட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய்கிறது. நம் எல்லைகளைக் காப்பதற்கு சிறந்த வழி நம் மொழியைக் காப்பதே”
மொழி விரியும்போது எல்லையும் விரிகிறது. ஒடுங்கும்போது எல்லையும் ஒடுங்குகிறது. எவ்வளவு உண்மை.

இயற்கையைப் பகிர்தலில் இந்தப் பழங்குடியினருக்குப் பெருத்த புரிந்துணர்வு இருந்திருக்கிறது. ஒரு காட்டுப்பகுதியில் உணவுத் தாவரங்களைப் பயன்படுத்தினாலோ அல்லது அந்தப்பகுதியில் வேட்டையாடி முடித்தாலோ அங்கிருக்கும் மரங்களில் அதற்கான குறியீடுகளை அவர்கள் வரைந்து வைப்பார்கள். அது பின்னர் அங்கு உணவு தேடி வரப்போகும் குழுவினருக்காக விட்டுச்செல்லும் செய்தி. “நாம் இங்கே வந்து இத்தனை நாள்கள் வேட்டையாடியிருக்கிறோம். உணவுத்தாவரங்க்களை நுகர்ந்திருக்கிறோம். அதனால் இனி இதனைப் பயன்படுத்தவேண்டாம். இந்தப்பருவத்துக்கு இது போதும்” என்பதே அந்தச்செய்தி. இயற்கையை ஒரேயடியாக வெட்டிச்சாய்த்துவிடக்கூடாது என்கின்ற இருத்தல்சார்ந்த கரிசனை இம்மக்களுக்கு நிறையவே இருந்திருக்கிறது.
“பூமித்தாய் எமக்காக எல்லாவற்றையும் பெற்றெடுத்துத் தருகிறார். ஆகாயம் தந்தை. அவர் எமக்கான காற்றையும் மழையையும் கொடுத்து நம்மை வளர்த்தெடுக்கிறார். கூடவே எம்மோடு சேர்ந்து வாழும் எம் சகோதரங்களான மரம் செடிகளையும் அவரே பெற்றுத் தருகிறார். தாத்தா சூரியன் எம் உடலை வெதுவெதுப்பாக வைத்திருக்கிறார். நாம் பார்க்க ஒளியையும் உண்ண உணவையும் கொடுக்கிறார். தாத்தா ஒரு சிறந்த கதை சொல்லியும்கூட. குளிர் இரவில் நாம் எல்லாம் சுற்றி உட்கார்ந்திருக்கையில் நடுவில் நெருப்பாக அமர்ந்து நமக்கெல்லாம் கதை சொல்லுபவர் அவரே. தீச்சுவாலை என்பது ஒரு தொலைக்காட்சி போன்றது. உண்மையை மட்டும் சொல்லும் தொலைக்காட்சி, நிலா எம் பாட்டி. அவர்தான் நீரை நகர வைப்பவர். அது மட்டுமல்ல. இரவைக் காதல் செய்வதற்கான தருணமாக மாற்றுவதும் அவரே.”
ஆங்கிலேயர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்ததும் இங்கிருந்த பழங்குடி இனத்தவரை மிருகங்களை வேட்டையாடுவதைப்போல கொன்று குவித்தார்கள். இயற்கையும் வாழ்வுமாய் இருந்த மக்கள் அவர்களின் வாழுமிடங்களிலிருந்து துரத்தப்பட்டார்கள். மகளிர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். பழங்குடி மக்களுக்குப் பிறந்த குழந்தைகளை, குறிப்பாகக் கலப்பினக் குழந்தைகளை பிறந்தவுடனேயே அபகரித்துச்சென்று மிசனரிகளில் வளர்த்தார்கள். கிறிஸ்தவமும் ஆங்கிலமும் மேலைத்தேயக் கலாச்சாரமும் அவர்களிடையே பரப்பபட்டு இந்த மக்களின் வாழ்வியல் முற்றாகவே சிதைக்கப்பட்டது. இரண்டு தலைமுறை பழங்குடிக் கலாச்சாரத்தைப் பின்பற்றத் தவறினால் அந்த இனமே அழிந்துபோய்விடும் என்று ஆட்சியாளர்கள் நம்பி அதற்கமைய காய்களை நகர்த்தினார்கள். இளைஞர்கள் போதைப் பழக்கங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இந்த இனத்தை அழிப்பதற்கான அத்தனை நகர்வுகளையும் மேலைத்தேய ஆக்கிரமிப்பு அரசு இருநூறு ஆண்டுகளுக்குமேலாக செய்துகொண்டிருந்தது. மிக அண்மைக்காலத்தில்தான் இந்தப் பாதகச் செயல்களுக்கு அவுஸ்திரேலிய அரசு பகிரங்க மன்னிப்புக்கேட்டது. மிகத்தாமதமான சௌகரியமான மன்னிப்புக்கோரல்.

அங்கிள் மக்ஸ் இந்த ஆக்கிரமிப்புப் பற்றிச் சொல்லும் விடயம் நம் எல்லோருக்கும் வாழ்வியல் பாடம்.
“இதை எப்படி மன்னிப்பது? மன்னிப்பு என்பது சிறிய விடயம் அல்ல. ஆனால் மன்னிப்பு எமக்கே தேவைப்படுகிறது. எம்முடைய ஆறுதலுக்கு. எம்முடைய மீள்தலுக்கு. இந்தக் கொடுமையைச் செய்தவர்களுக்கும் நான் இப்போது பேசும் மன்னிப்புக்கும் தொடர்பு ஏதும் இல்லை. இது எமக்கானது. எல்லோராலும் இதனை இலகுவாக மன்னிக்கமுடியுமா என்று தெரியவில்லை. சிலர் பெருத்த கோபத்தில் இருப்பார்கள். சிலர் எப்போதுமே அழுதுகொண்டிருப்பார்கள். நான் அவற்றைப்பற்றி பேசாமலிருக்கவே விரும்புகிறேன். அந்த எதிர்மறை எண்ணங்களில் என் சக்தியை வீணாக்க நான் விரும்பவில்லை. எனக்குத் தொடர்ச்சியான என் இருத்தலின் பிழைப்பு அவசியம். என்னுடைய கலாச்சாரத்தையும் அறிவையும் தக்க வைத்தல் அவசியம். அதை மற்றவர்களுக்குப் பகிர்தல் முக்கியம். மனிதர்களுக்கு நான் இதைச் சொல்லவேண்டும். இந்த இயற்கைதான் நம் வாழ்வு. இங்கிருந்துதான் நாம் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறோம். சொகுசுவாகனப் பிரயாணங்களும் டொலர் கனவுகளும் எம் வாழ்க்கை அல்ல. இன்று காலை நான் துயிலெழுகிறேன். முதல் சூரிய ஒளிக்கீற்று என்னில் படுகிறது. அதுதான் என்னுடைய எஞ்சிய வாழ்வினுடைய முதல் கணம். அப்படித்தான் நான் வாழ்வை எதிர்கொள்கிறேன். எல்லாவற்றையும் மன்னித்து, எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு இப்படித்தான் நான் முன்னே நோக்கிச் செல்கிறேன். அப்படி நான் செல்வதற்கு இந்த மன்னிக்கும் இயல்பு மிக முக்கியமாகிறது. மன்னிப்பு என்பது ஒரு மீள்தல்”
“எமக்குக் கொடுமை இழைத்தவர்களை மன்னிப்பதன்மூலமே இதிலிருந்து மீள எனக்கு வழிகிடைக்கும்”
000

Comments

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட