என் பேரபிமானத்துக்குரிய இசைக் கலைஞர் அர்ஜீத் சிங், இனிமேல் தான் திரையிசைப் பாடல்களைப் பாடப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.
வீட்டிலும் நண்பர்களது வாட்சப் குழுமங்களிலும் அர்ஜீத் சிங்கின் பாடல்கள் குறித்துப் பேசாமல் ஒரு வாரம்கூடக் கழிவதில்லை. சென்றவாரம்கூட Gandhi Talks என்ற திரைப்படத்தில் அவர் பாடிய பாடல் ஒன்றைச் சிலாகித்துக்கொண்டிருந்தோம். ரகுமானின் அற்புத இசையில் Sunhari Kirne என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலின் மெலடியும் அதை அர்ஜீத் பாடிய வண்ணமும் அழகோ அழகு. ரகுமான் - அர்ஜீத் சிங் கூட்டணியில் உருவான பல பாடல்கள் அப்படிப்பட்டவை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியான Vida Karo பாடலை இவர்களின் இரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள். Tamaasha திரைப்படத்தின் Agar Tum Saath Ho இன்னொன்று. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலிருக்கும் சின்னஞ் சிறு நிலவே பாட்டின் இந்தி வடிவத்தைக் கேட்டிருக்கிறீர்களா? அர்ஜீத்தான் பாடியிருப்பார். மனுசனின் குரல் அப்படியொரு காந்தம் இருக்கிறது. அர்ஜீத்-ரகுமான் சோடியே இப்படி என்றால் அர்ஜீத்-பன்சாலி சோடியைப்பற்றிக் கேட்கவே தேவையில்லை. Laal Ishq, Aayat இந்த இரண்டு பாடல்களையும் இடைவிடாது தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருங்கள். இந்த இரு பாடல்களுக்கும் உருகாதார் ஒரு பாடலுக்கும் உருகார். இப்போதும் அவற்றை இசைக்கவிட்டவாறே இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். ப்ச்ச். ரகுமான், பன்சாலி தவிர்த்து ஏனைய இசையமைப்பாளர்களுக்கு மட்டும் பாடமாட்டேன் என்றாவது மனுசன் அறிவித்திருக்கலாம்.
எனினும் அர்ஜீத் சிங் ஏன் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பதை நன்றாகவே புரிந்துகொள்ளமுடிகிறது. அர்ஜீத்தின் இசை நிகழ்வுகளை, அவருடைய நேர்காணல்களைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். கொரோணா காலத்தில் அவரும் ரகுமானும் ஒரு சூம் உரையாடலைச் செய்திருந்தார்கள். மிக ஆழமான இசைக் கலந்துரையாடல் அது. அர்ஜீத் எப்போதும் இசையின் ஆதார சீவனைத் தேடித் திரிபவர். மாண்டு இராகத்தை மூங்கில் தோட்டத்தில் கண்டறிந்த இசை இரசிகன் அவர். மேடையில் பாடும்போதுகூட அவரது கண்கள் நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோலத் தெரியும், ஆனால் அவரின் மனமோ விட்டேற்றியாக அந்த இசையோடு எங்கோ ஓடி ஒளிந்து தனித்துக் கிடந்து மகிழ்ந்திருக்கும். அப்படிப்பட்டவர் திரையிசையின் வடிவங்களிலிருந்து மீண்டு பிறிதொரு பரிமாணத்தைத் தேடிச்செல்வது ஆச்சரியமானதொன்றல்ல. அதிலும் சமீபகாலத் திரையிசையின் போக்கோடு ஒப்பிடுகையில் அர்ஜீத் போன்ற கலைஞர்கள் அதனோடு ஒத்திசையாது தனிப்பாதையில் பயணிப்பது என்பது இசைக்குச் சாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
தெற்காசிய main stream இசை என்பது திரைத்துறையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக independent இசைக்கு மாறிக்கொண்டிருக்கிறது. அபீதா பர்வீன்போல, ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்போல அர்ஜீத்தும் முழு நேர independent இசை வடிவத்துக்கு மாறட்டும். பலவித பரிசோதனை முயற்சிகளைச் செய்யட்டும். இரு வருடங்களுக்கு முன்னர் ஹரிஷ் சிவராமகிருஷ்ணனுடைய இசைக்குழு மெல்பேர்ன் வந்தபோது நிகழ்வைப் பார்க்கச் சென்றிருந்தோம். ஒரு உள்ளக, மதுபான விடுதி அரங்கில் நிகழ்ச்சி நடந்தது. ரொக் இசையும் கர்நாடக சங்கீதமும் இணைந்து, அரங்கே அதிர, மனவியாலகின் தியாகராஜ கீர்த்தனையை ஹரீஷின் குரலில் கேட்கவே புல்லரித்தது. அண்மையில் அவருடைய அகம் இசைக்குழு வெளியிட்ட Arrival of The Ethereal இசை ஆல்பத்தை கேட்டுப்பாருங்கள். அதி அற்புதமான இசை அனுபவத்தை அது கொடுக்கும். இந்த வரிசையில் அர்ஜீத்தும் இணைந்து இசையின் புதிய சாத்தியங்களை நிகழ்த்தட்டும்.
தனிப்பட்ட ரீதியிலும் அர்ஜீத்தின் இந்த முடிவு எனக்கு உற்சாகத்தையும் பெரும் ஊக்கத்தையுமே கொடுக்கிறது. இப்படித்தான் என்னுடைய அபிமான ஜூம்பா லாஹிரி ‘intepreter of maladies’, ‘namesake’, ‘unaccustomed earth’, ‘lowland’ என்று எழுதித்தள்ளிவிட்டுத் திடீரென்று காணாமற்போனார். என்னாச்சு என்று தேடினால் மனிசி இத்தாலியன் மொழியைப் படித்து, உரோம் நகருக்குக் குடிபெயர்ந்து, அந்த மொழியில் எழுத ஆரம்பித்துவிட்டது. ஆங்கிலத்தையும் நீயூ யோர்க்கையும் விட்டுப்போனால் தன்னுடைய இலக்கியத் தடத்தில் புல் முளைத்துவிடுமே என்று அவர் அப்போது கவலையுறவில்லை. தனக்கு என்ன பிடித்ததோ, என்ன தேடலோ, அதனை அவர் தேடிப்போனார். எழுதினார். அவ்வளவுதான்.
ஹரீஷ், லாஹிரி, இப்போது அர்ஜீத்; எப்போதெல்லாம் மனம் சோர்ந்து, ஊக்கம் தள்ளாடி, சந்தேகம் தலையெடுக்கும்போதெல்லாம் இப்படியான கலையுள்ளங்கள் நம் தோள்களைத் தூக்கி நிமிர்த்தி விடுகிறார்கள். தம் கலையினூடே வாழ்தலும் வளர்தலும் நம்மை நாமே திருப்தியுற வைப்பதும் எப்படி என்றும் கற்றுத்தருகிறார்கள். எழுத்தின் அடுத்த வரிகளைச் சுமந்து வந்து காலடியில் வளர்த்திவிடுகிறார்கள்.
அர்ஜீத்துக்கு எண்ணிய யாவும் இசை வசப்படட்டும்.
