Skip to main content

"இல 20, சூரியா வீதி, நீர்கொழும்பு" – முருகபூபதியின் வீடு



சில வாரங்களுக்கு முன்னர் லெ. முருகபூபதியின் நூல் ஒன்றை வாசித்துக்கொண்டிருக்கையில் ஒரு வரியில் கடந்துபோன அவருடைய பிரிட்டிஷ் கால ‘பொலீஸ் தாத்தா’ பாத்திரம் உடனேயே மனதுள் பதிந்தது. பின்னர் அந்த இழையைப் பிடித்து அவருடைய ஏனைய பல புத்தகங்களைத் தேடி தேடி வாசித்தபோது, கொஞ்சம் கொஞ்சமாக, பொழுது புலர்வதுபோல இக்கட்டுரை அதன் பாட்டுக்குத் தன்னைத்தானே எழுத ஆரம்பித்தது.



கட்டுரையை எழுத எழுத, மேலும் அவருடைய புத்தகங்களைத் தேடி வாசிக்க ஆரம்பித்தேன். நூலகம் இணையத்தில் அவருடைய சில நூல்கள் மட்டுமே கிடைக்கின்றன. அப்புறம் கிருஷ்ணமூர்த்தி அண்ணாவிடம் கேட்டபோது அவரிடம் ஒன்றிரண்டு இருப்பதாகச் சொன்னார். அவருடைய வீடு எங்கள் வீட்டிலிருந்து நூறு கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது. அதனால் எங்கோ இசை நிகழ்ச்சிக்குப் போன இடத்தில் அவரைத் தேடிச்சென்று புத்தகங்களைப் பெற்றுக்கொண்டேன். ஈற்றில் ஒரே ஒரு புத்தகம் தண்ணி காட்ட, முருகபூபதி அவர்களையே தொடர்புகொண்டு புத்தகத்தைப் பெறவேண்டியதாயிற்று.

கிட்டத்தட்ட பதினைந்து புத்தகங்களைப் பரப்பி வைத்து இதனை முழுமையாக எழுதிய அனுபவம் அலாதியானது. எழுதுவது ஒரு சுவை எனில், அதற்காகத் தேடுவதும் அலைவதும் பிறிதொரு சுவை. ஐம்பதாண்டு காலம் எழுத்தூழியம் செய்யும் ஒரு முன்னோடியை வாசித்து உணர்ந்துகொள்ளுதல் என்பது பேரனுபவம். ஏழு பக்கக் கட்டுரையில் அதனை முழுமையாக உணர்த்தமுடியாது என்பதை அறிவேன். ஆயினும் சிறு சுவையையேனும் கட்டுரை கோடி காட்டியிருக்கிறது என்று நம்புகிறேன்.

அகழ் இணைய இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது.



Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.