இக்கேள்விக்கு முட்டை என்பதுதான் சரியான பதிலாக இருக்கமுடியும். உடனேயே அந்த முட்டையை ஒரு கோழிதானே போட்டிருக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதுதான் இல்லை. கோழி அல்லாத இன்னொரு பறவை போட்ட முட்டையிலிருந்துதான் கோழி முதன்முதலில் உருவாகியது. கொஞ்சம் ஆழமாக இதனைப் புரிந்துகொள்வதற்கு உயிரிகளின் கூர்ப்பினைப் பின்னோக்கி வேகமாக ரீவைண்ட் செய்து பார்க்கவேண்டும்.
இன்று நாங்கள் கோழி என்று நிர்ணயம் செய்யும் பறவையின் தாய்க்கோழி, அதனுடைய தாய்க்கோழி, அதன் பத்துப் பரம்பரைக்கு முன்னரான தாய்க்கோழி, இப்படியே பின்னோக்கி நகர்ந்துகொண்டிருந்தால் என்றோ ஒரு புள்ளியில், ‘ஐயே, இது கோழியே இல்லை’ என்று நாம் விளிக்கக்கூடிய பறவை ஒன்று நம் முன்னே நின்றுகொண்டிருக்கும். அது இட்ட முட்டையிலிருந்து பொரிந்து வந்த குஞ்சு வளர்ந்து, நாம் இன்று கோழி என்று அங்கீகரிக்கக்கூடிய பறவையாகக் கூவியிருக்கும். ஆக அந்த முட்டைதான் கோழி இனத்துக்கான ஆரம்பப்புள்ளி. மனித சமூகத்தின் முதல் தாய் ஆபிரிக்காவில் உருவானார் என்று சொல்கிறோம் அல்லவா? அதற்கு என்ன அர்த்தம் என்றால், அந்தத் தாய் மனித இனம் என்று நாம் நிர்ணயிக்கிற ஹோமோ சேப்பியன் இனத்தைச் சேராதவர். ஹோமோ சேப்பியன் என்ற உயிரணு வரைவிலக்கணத்தின் விளிம்பிற்கு அப்பால் நிற்பவர். மில்லியன் கணக்கான ஆண்டுகள் நீடிக்கும் மெதுவான கூர்ப்பில இந்த வித்தியாசங்களை உணருவதே இயலாத ஒன்று. ஒவ்வொரு தலைமுறைக்குமிடையே கூர்ப்பில் விரிசல்கள் உண்டு. கூர்ப்புக்கு எனக்கும் என் பெற்றோருக்குமிடையேயான விரிசல் முக்கியமானது. எனக்கும் என் சக மனிதருக்குமிடையேயான பிழைத்தல் திறன் அவசியமானது. அதிலிருந்து அது தன்னாலே இயற்கைத் தெரிதலை மேற்கொள்கிறது. மற்றபடி சேப்பியன்ஸ், நியாண்டதால், எரக்டஸ் என்பதெல்லாம் வெறுமனே அறிதலுக்காக நாங்கள் செய்துகொள்கின்ற நிர்ணயங்கள். அவ்வளவுதான்.
ரிச்சார்ட் டோக்கின்ஸ் இதற்கு அழகான ஒரு உதாரணம் கொடுப்பதுண்டு.
எங்களுடைய அம்மா, பாட்டி, பூட்டி என்று பின்னோக்கிய தலைமுறைகளைக் குறித்துக்கொண்டே போனால் எமது இருநூறு மில்லியனாவது பாட்டி ஒரு மீனாக நீந்திக்கொண்டு அலைவார்.
ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அண்மையில் சுகிந்தன் அண்ணா ஒரு செயற்கை நுண்ணறிவுக் காணொளி ஒன்றைப் பகிர்ந்திருந்தார். ஒவ்வொரு பருவத்திலும் அவரை வைத்து எடுத்த புகைப்படங்களைத் தொடுத்து அத்தனை சுகிந்தன்களும் மாறி மாறி அந்தக் காணொளியில் செல்பி எடுக்கிறார்கள். உண்மையில் செயற்கை நுண்ணறிவுக்குத் தேவையான அளவு தரவுகள் ஊட்டப்பட்டால், ஒரே செல்பி காணொளியில் நான், என் பாட்டி, பூட்டி, சேப்பியன்ஸ், நியாண்டதால், எரெக்டஸ் என்று போய் மீன்வரைக்கும் கூடி நிற்கலாம். அந்த நீண்ட காணொளியைப் பார்த்துக்கொண்டே போகையில் எந்தப் புள்ளியில் நாம் தரையிலிருந்து கடலுக்குப் போகிறோம் என்பதையே உணரமுடியாமலிருக்கும். அத்தனை தலைமுறையின் அனுபவமும் படிப்பினையும் நம் டி.என்.ஏக்குள் பதியப்பட்டிருக்கிறது. ஹாக்கிங் சொல்வதுபோல், we are the genetic book of the dead. நீங்கள் விள மீன் பிரியராயிற்றே, உங்கள் பாட்டியை நீங்களே எப்படிச் சாப்பிடலாம் என்று கேட்டால், கூர்ப்புத்தத்துவம் பற்றி இன்னொரு பத்தி எழுதவேண்டி வரும். விள மீன் என் பாட்டி கிடையாது. கூர்ப்பு என்பது நேர்கோடு அல்ல. அது ஒரு மரம் போன்றது. அந்த மரத்தின் ஒரு கிளை கடலிலேயே தங்கி, கிளை விட்டு, அதன் உச்சி இலை இன்றைய விள மீன் ஆகப் பரிணமித்திருக்கிறது. என்னுடைய பாட்டி மீனின் கிளை கடலிலிருந்து நிலத்துக்குள் புகுந்து, வளர்ந்து, மருவி இன்று நான் பிறிதொரு கிளை உச்சியில் நிற்கிறேன். என்ன ஒரு வித்தியாசம். இந்தப் பெரு மரத்தில் ஒரு கிளை மற்றைய கிளையைப் பிடித்துச் சாப்பிடவல்லது.
1915ம் ஆண்டளவில் ஜோய்ஸ் கில்மர் எழுதிய மரங்களைப்பற்றிய கவிதை இப்படி ஆரம்பிக்கிறது.
I think that I shall never see
A poem lovely as a tree.
இதனைத் தமிழ்ப்படுத்த முயல்கிறேன்.
ஒரு மரம்போல் அழகான கவிதையை - நான்
ஒருபோதும் காணப்போவதில்லை என்றே நினைக்கிறேன்.
பூமித்தாயின் பாலூறும் மார்பினிலே - தன்
பசித்த வேர் வாயைப் பரப்பி அழுத்தி நிற்கும் மரம்.
இலைகளாலும் கிளைகளாலும் கரங்கள் ஏந்தி - தன்
இறைவரை நாள் முழுதும் இறைஞ்சி நிற்கும் மரம்.
கோடை காலத்தில் சிட்டுக் குருவிகள் கூடு கட்ட - தன்
கூந்தலை ஏது செய்யும் மரம்.
அதன் மார்பினில் பனி படர்ந்திருக்கிறது.
மழையோடு அதற்கு நட்பு நிலைத்திருக்கிறது.
என் போன்ற மூடர்கள் வெறும் கவிதையையே எழுதுவார்கள் - ஆனால்
இந்த மரத்தினைப் படைக்கக் கடவுளால்தான் முடியும்.
இந்தக் கவிதையைப்பற்றி விஞ்ஞானிகளான டோக்கின்ஸும் நீல் டைசனும் உரையாடுகிறார்கள். விஞ்ஞானம் விளக்க இயலாத தத்துவப் புள்ளிகளைக் கலை தனக்குக் கொடுத்துதவ வேண்டும் என்று நீல் டைசன் சொல்கிறார். இந்தப் பிரபஞ்சம் எப்படி வியாபித்துக்கிடக்கிறது என்பதை விஞ்ஞானம் தெளிவாக விளக்கிவிடுகிறது. அதனை அறிவதற்கு எனக்கு இலக்கியம் தேவையில்லை. ஆனால் வாழ்க்கையை இரசிக்கவும் புரிந்துகொள்ளவும் இந்த மரம் கவிதை உதவி செய்கிறது. டோக்கின்ஸ் இருக்கின்ற உரையாடலில் கடவுளைப் பற்றிய ஒரு கவிதையா என்று சிலர் நகைக்கக்கூடும். கடவுள் இக்கவிதையில் ஒரு படிமம்தான். இயற்கையின் மெது கூர்ப்பின் அதி பெரும் அற்புதங்களுள் ஒன்று மரம். அதனைக் கடவுள்தான் படைத்திருக்க முடியும் என்ற வரியை முன்னைய வரியோடு பொருத்தி உணரவேண்டும். கூர்ப்பின் போக்கில் நம் இருப்பும் செயல்களும் மிக மிக அற்பமானது என்பதுதான் அங்கே ஆதார செய்தி. நாம் அத்தனை சக்தி வாய்ந்தவர்கள் கிடையாது. வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்களில் நாம் மையப் புள்ளியாக இருப்பதில்லை. என் பிறந்த நாள் கொண்டாட்டத்தில்கூட மெழுகுதிரி அணைத்து கேக்கு வெட்டும் புள்ளியில் மாத்திரமே நான் மையமாகிறேன். அப்போதுகூட என்னருகில் நிற்பவரின் நினைப்பு என்னைப்பற்றியதாக இருக்குமா என்பது சந்தேகமே. தன் தொப்பை புகைப்படத்தில் வந்துவிடுமோ, தன் சேலைத்தலைப்பு சரியாகத் தோளில் கிடக்கிறதா, அடுத்த பிறந்த நாளுக்கு அம்மா எனக்கு என்ன கேக் அடித்துத்தருவார் என்கின்ற எண்ணங்கள் என்னைச் சுற்றியிருப்பவர் மனங்களில் ஓடிக்கொண்டிருக்கலாம். பெரும்பாலும் மனிதர்கள் தம்மைப் பற்றியே சிந்திப்பார்கள்; என்னைப் பற்றி அல்ல. நான் இல்லாமற்போகும்போதுகூட உலகம் பெரிதாக அசைந்துவிடாமல் தன் சுழற்சியில் நகர்ந்துகொண்டே இருக்கும். என் அப்பா வழிப் பூட்டியின் சொந்தப் பெயரே எனக்குத் தெரியாது. என்னை விடுங்கள். இந்தக் கவிதை சொல்வதுபோல, ஒரு மரத்துக்குள் இத்தனை ஆழ் பொருள் இருக்கிறதல்லவா? காட்டிலே இதற்கருகில் இன்னொரு மரம் நிற்கிறது. அருகில் அந்த மரத்தின் செடி வளர்கிறது. பக்கத்தில் இன்னொரு மரம். சற்று நடந்து சென்றால் முதலில் பார்த்த மரம் எது என்று நமக்குக் குழப்பம்கூட வந்துவிடும். பெருங் காட்டில் அந்த ஒரு மரம் என்பது பெரும் மனிதக்கூட்டத்திலிருக்கும் நானாக மாறிப்போய்விடுகிறேன் அல்லவா?
விஞ்ஞானமும் கலையும் சேரும் புள்ளி இதுதான். இந்தப் புள்ளியை உள்வாங்குகையில் வாழ்தல் எளிதாகிவிடுகிறது.
மரம் போன்ற ஒரு நேர்த்தியான படைப்பை என்னால் படைக்க முடியாது, அதனைக் கடவுள்தான் படைப்பார் என்று கவிஞர் சொல்கிறார். ஆனால் மரம் எப்படித் தோன்றியது என்பதற்கு இன்று தெளிவான அறிவியல் விளக்கம் உண்டு. பில்லியன் கணக்கான ஆண்டுகளில் இயற்கை செய்த trial and error தேர்வுகளின் விளைவுதான் மரமும் நானும் நீங்களும். அந்தந்த காலத்தில் சூழலுக்குப் பிழைக்க ஏற்றது எதுவோ அது தப்பியது. தப்பியது தன்னை மறு உற்பத்தி செய்தது. சூழல் மாற, ஆசையும் உந்துதலும் அதிகரிக்க, அதற்கமைய அது தன்னைச் சிறிது சிறிதாக மாற்றிக்கொண்டது. ஒன்றே நிலைத்து நின்றால் அது பிழைத்தலுக்குக் கேடு. அதனால்தான் இறப்பு என்ற ஒன்று உருவானது. கூர்ப்பின் தெரிவு அது. கூர்ப்புக்கு நானும் எனது பிழைத்தலும் முக்கியமில்லை. ஆனால் நமது பிழைப்பு என்பது முக்கியமானது. பிறப்பும் இறப்பும் கூர்ப்பின் தெரிவு ஆனதற்குக் காரணம் அதுவே. இதனை சாதாரண மனது ஏற்காது. ஏற்றால் சிலரால் வாழவும் முடியாது. அதனால் நீ நிரந்தரமானவன் என்று மனம் நம்மிடம் சொல்லிக்கொண்டேயிருக்கிறது. ஆன்மா என்ற மரணத்துக்குப் பின்னும் நிலைப்பதான ஒன்றை உருவகிக்கிறது. அந்த நம்பிக்கைக்கு உருவம் கொடுக்கவே கடவுள்களும், மதங்களும் படைக்கப்பட்டன. பிழைத்தலுக்காக இயற்கை நம்முள் விதைத்த ஒருவித self-delusion இது.
மனிதர்களின் ஆறாம் அறிவான பகுத்தறிவு பற்றி நாம் அடிக்கடி பெருமிதம் கொள்கிறோம். நம்மைக் கூர்ப்பின் உச்சம் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் சிம்பன்சிகளுக்கும் நமக்கும் இடையிலான டி.என்.ஏ வித்தியாசம் வெறும் 1.2% மட்டுமே. அதாவது இரு விலங்கினங்களினதும் வாழ்க்கை வழிகாட்டி நூலில் சில பக்கங்கள்தான் மாறுபட்டிருக்கின்றன. அந்தச் சில பக்கங்களே இரண்டு உயிரிகளின் பாதையையும் முற்றாக மாற்றிவிட்டன. ஒன்று குச்சியொன்றை புற்றுக்குள் இறக்கி கறையான்களைப் பிடித்து உண்ணக் கற்றுக்கொண்டது. மற்றொன்று நிலாவரைக்கும் சென்று திரும்பிவிட்டது. இப்போது சற்று முன்னோக்கி நகர்ந்து பாருங்கள். நம்மைவிட இன்னும் 1.2% கூடுதல் வித்தியாசம் கொண்ட ஒரு உயிரி கூர்ப்பினூடு உருவாகினால் எப்படியிருக்கும்? நமது இலக்கியமும் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் அதன் பார்வையில் வெறுமனே கறையான் பிடிக்கும் குச்சியாகத் தோன்றலாம். யார் கண்டார்? அந்த உயிரியின் ஆய்வுக்கூடத்தில் வைக்கப்பட்ட ஒரு மாதிரியாக நாமே இருக்கக்கூடும். அங்கு ஒரு சிறுமி என்னைப் பார்த்து, ‘அய், சின்னக்குழந்தைபோல இது கதை எழுதிக்கொண்டிருக்கு, புத்திசாலிதான்’ என்று வியக்கவுங்கூடும்.
கடவுள் என்பது கற்பனை என்று தெரிந்திருந்தாலும் அறம் போதிப்பதற்காக மதங்களைப் பற்றி நிற்போர் கூட்டம் ஒன்று உலகில் இருக்கிறது. மதங்களால் நிகழும் பலவும் மறம் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். விஞ்ஞானமும் கலையும் நமக்கு உணர்த்தக்கூடிய தன்னறம் என்பது மிக ஆழமானது. கார்ஸ் சாகனை அறிந்திருப்பீர்கள். பூமியை நீலப் புள்ளி என்று விளித்து வியந்த அதே சாகன்தான். Science is not only compatible with spirituality; it is a profound source of spirituality என்று அவர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். என்ன ஒன்று, விஞ்ஞானம் மதங்கள் கூறும் தத்துவங்கள்போல எளிமையானது அல்ல. நன்மை செய்தால் நன்மை விளையும், கர்மா, பற்றை அகற்றினால் கடவுளை அடையலாம் என்கின்ற எளிமையான சமன்பாடுகளை அறிவியல் கொடுப்பதில்லை. அறிவியல் நம்மிடம் தேடலை எதிர்பார்க்கிறது. தொடர்ச்சியான கற்றலைத் தூண்டுகிறது. அது சாசுவதமும் கிடையாது. அறிதலினூடு அது தன்னைத்தானே திருத்தி மேம்படுத்திக்கொள்கிறது. கலை அதனோடு சேரும்போது, அறிவியலுக்கு ஒரு தத்துவப் பார்வையும் கிடைக்கிறது. அங்கேதான் வாழ்க்கை எளிதாகி, நம்மைச் சுற்றிய சூழல், மனிதர்கள், மற்றும் நம்மைத் தனிப்பட்ட முறையில் புரிந்துகொள்வது சாத்தியமாகிறது.
இதுவும் கார்ல்ஸ் சாகன் சொன்னதுதான்.
Every one of us is, in the cosmic perspective, precious. If a human disagrees with you, let him live. In a hundred billion galaxies, you will not find another.
இப்பிரபஞ்சத்தின் அகன்ற பார்வையில் நாம் ஒவ்வொருவரும் அரிதானவர்கள். அபரிமிதமானவர்கள். அதனால் உன்னுடன் முரண்படும் சக மனிதரும் வாழ்ந்து போகட்டும். நூறு பில்லியன் கலக்சிக் கூட்டத்தில்கூட அவரைப்போன்ற இன்னொரு மனிதரைக் காணமாட்டாய்.
இதை உணரும்போது, வாழ்தல் எளிதாகி, மனம் அமைதியாகி விடுகிறது அல்லவா?
Comments
Post a Comment