Skip to main content

சுந்தரம்பிள்ளை அங்கிள்




சற்று முன்னர்தான் அம்மா அழைப்பெடுத்து சுந்தரம்பிள்ளைஅங்கிள் காலமான செய்தியைச் சொன்னார்.

எனக்கு உடனடியாக எதுவுமே தோன்றவில்லை. கொஞ்ச நேரம் டிவி பார்த்தேன். ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துத் தட்டினேன். செல்பேசியில் சில காணொளிகள் பார்த்தேன். ம்ஹூம். உடலும் உள்ளமும் கூட்டாகப் பிரிந்து கடந்த காலத்துக்கு ஓடிப்போனதில் நிகழ்காலம் மரத்துப்போயிருந்தது. இதைக்கூட எழுதக்கூடாதென்றுதான் புத்தி சொல்கிறது. மனம் தன் போக்கில் எழுதிக்கொண்டிருக்கிறது. நான் தடுக்கப்போவதில்லை.

என் எழுத்துகளைப் படித்தவர்களுக்கு சுந்தரம்பிள்ளை அங்கிள் ஏலவே பரிச்சயமானவர்தான். கொல்லைப்புறத்துக் காதலிகள் நூலின் இறுதி அத்தியாயத்தில் அவர் அடிக்கடி வந்து போயிருப்பார். குட்டியின் அப்பா என்றாவது அவரைப் பலர் அறிந்திருப்பார்கள். வேறு பல கட்டுரைகளிலும் அவரைப்பற்றி எழுதியிருக்கிறேன். இனியும் எழுதுவேன். சில மனிதர்கள் தம் நினைவுகளை எம் நடைவழிப்பாதைகள் எங்கும் ஒளித்துவைத்துவிடுவார்கள். பூக்களிடையே நறுமணமாக. இரவு வானின் துல்லிய வெள்ளி நட்சத்திரமாக. வேலிக் கதிகாலில் உட்கார்ந்திருக்கும் புலுனிக்குஞ்சு சிறகு அடிக்கும்போது தெறிக்கும் பனித்துளியாக. அந்த மனிதர்களின் தம்மை எப்படியும் எமக்கு நினைவூட்டியபடியே இருப்பார்கள்.

அங்கிள் பற்றிய நினைவுகள் பல என் பதின்மங்களையும் இருபதுகளையும் நிறைத்து நிற்கின்றன.

ஒரு கோபக்கார மனிதராகத்தான் அங்கிள் எனக்கு அறிமுகமாகியிருக்கவேண்டும். 92ம் ஆண்டுப் பகுதியாக இருக்கலாம். தின்னவேலிச் சந்தியடியில் அவர்கள் வாடகைக்கு இருந்த வீட்டில் சைக்கிளை நிறுத்திவிட்டு சந்தைக்குப்போன பள்ளிச் சிறுவனின் கதையினை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்நாள்களில் அன்ரியோடு பேசிய அளவுக்கு அங்கிளோடு நான் பேசியதில்லை. காரணம் பயம். தமிழாசிரியர். முன் கோபக்காரர். கட் அண்ட் ரைட்டான ஆள் என்று என் அப்பா அவரைப்பற்றி உரு ஏற்றி வைத்திருந்தார். அப்பாவும் அவரும் தொழில் நுட்பக் கல்லூரியில் ஒன்றாகக் கற்பித்தவர்கள். என் அக்காவும் சுபாஷினி அக்காவும் ஒன்றாகப் படித்தவர்கள். அக்காவுக்கும் அவரைக்கண்டால் பயம். அங்கிளோடு கவனமாகப் பழகவேண்டும் என்பார்.

ஆனால் நாளாக நாளாக அங்கிளே என்னோடு பேச ஆரம்பித்தார்.

93ம் ஆண்டாக இருக்கலாம். சரியாக ஞாபகமில்லை. மேஜர் கணேஷ் வீதியிலிருக்கும் சிவன் கோயில் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுடைய மகாபாரதத் தொடர் சொற்பொழிவு இடம்பெற்ற காலம். நான் தவறாமல் அத்தனை நாளும் போய்க் கேட்டேன். சுந்தரம்பிள்ளை அங்கிளும் ஓரிரு நாள்கள் வந்திருக்கவேண்டும். கோயில் நிர்வாகத்தினர் தொடர் சொற்பொழிவு முடியும் தறுவாயில் பரீட்சை ஒன்றை அறிவித்தார்கள். எங்கள் வீட்டிலோ இப்படி இலக்கியங்கள் மீது எனக்கு ஆர்வம் என்ற விசயமே அதிகம் தெரியாது. நாற்பது நாள்கள் சொற்பொழிவு கேட்டு முடித்துவிட்டு அம்மாவிடம் போய் நானும் அந்தப் பரீட்சைக்குத் தோற்றலாமா என்று கேட்டபோது, உனக்கென்ன மகாபாரதம் தெரியும் என்றுதான் அவர் சொன்னார். ஆனாலும் நானாகப் போய்ப் பெயர் பதிந்து பரீட்சைக்குத் தோற்றினேன். மங்கையர்க்கரசி மகாவித்தியாலயத்தில் பரீட்சை நடந்தது. எனக்குப் பரிசில் கிடைத்ததைக் கோயில் மண்டபத்தில் அறிவித்தபோது நான் எங்கள் வீட்டுக் கப்பிக் கிணற்றில் தண்ணீர் அள்ளிக்கொண்டிருந்தேன். ஆனால் காது என்னவோ லவுட்ஸ்பீக்கர் பக்கம் திரும்பியிருந்தது. உடனேயே முகம் கழுவி, புதுக்கழுசான் சேர்ட்டு போட்டுக்கொண்டு கோயிலுக்கு ஓடிய அக்கணங்கள் நிழலாடுகின்றன.

செல்போனில் எப்போதாவது பழைய போட்டோ ஆல்பங்கள் வந்து நினைவினைக் கிளறுமல்லவா? அப்படித்தான் மனது அந்நாள்களுக்குத் திரும்பி அலைந்துகொண்டிருக்கிறது.

எனக்குப் பரிசு கிடைத்த விசயம் சுந்தரம்பிள்ளை அங்கிளையும் எட்டியிருந்தது. அதன் பிற்பாடு என் மீதான மதிப்பு அவருக்குள் கூடியிருக்கவேண்டும். அல்லது குட்டி என்னைப்பற்றிச் சொல்லியிருக்கலாம். அப்போது குட்டியும் நானும் நண்பர்களாகியிருந்தோம். குட்டி என்றால் அவருக்குக் கொள்ளைப் பாசம். அதில் கொஞ்சம் என் மீதும் கொட்டியிருக்கவேண்டும். எது எப்படியோ, என் திறமைமீது நம்பிக்கை வைத்த வெகு சிலரில் அங்கிளும் ஒருவர். அன்றிலிருந்து கடந்த மாசி மாதம் பதினெட்டாம் திகதிவரை அவர் அப்படித்தான் இருந்தார்.

சுந்தரம்பிள்ளை அங்கிளின் சொந்த இடம் சுழிபுரம். பின்னாள்களில் தொழில் நிமித்தமாகவும் குழந்தைகள் படிப்புக்காகவும் அவர்கள் தின்னவேலியில் குடியிருந்தார்கள். 95ம் ஆண்டு முன்னேறிப்பாய்தல் நடவடிக்கையின்போது சுழிபுரத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த இருபது முப்பது குடும்பங்கள் அங்கிளின் தின்னவேலி வீட்டில்தான் தங்கியிருந்தன. யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வட்டக்கச்சிக்கு எங்கள் குடும்பம் இடம்பெயர்ந்தபோது அங்கேயும் அங்கிளின் குடும்பம்தான் எமக்கு அடைக்கலம் கொடுத்தது. அப்போது எம்மைப்போல மொத்தமாக நாற்பது குடும்பங்கள் அந்த வட்டக்கச்சி வீட்டில் குடியிருந்தன. எல்லோருமே அங்கிளுக்குத் தெரிந்தவர்கள். அல்லது தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்கள். அல்லது தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்கள் கையோடு கூடவே கூட்டி வந்தவர்கள். எத்தனை பேர் வந்தாலும் அட்சயம் பாத்திரம்போல அந்த வீடு அரவணைத்துக்கொண்டேயிருந்தது.

அப்போது பாடசாலைகள் இயங்கவில்லை. வட்டக்கச்சி வீட்டு முன் தட்டிக்குள் அங்கிள் தானே சிறு பள்ளிக்கூடத்தை ஒழுங்கமைத்தார். அவர்தான் தலைமை ஆசிரியர். அக்கா கணிதம் கற்பிப்பார். நான் சிறு பிள்ளைகளுக்குத் தமிழும் ஆங்கிலமும் கற்பித்தேன். அங்கிள் எனக்குத் தமிழ் கற்பித்தார். அங்கிள் கந்த சஷ்டி விரதம் இருக்கக்கூடியவர். ஆறு நாள்களும் அவரை நான் வட்டக்கச்சி முருகன் கோயிலுக்கு அதிகாலையில் கூட்டி சென்ற நாள்கள் மீளவும் நினைவுக்கு வருகின்றன. குளித்து, வேட்டி அணிந்து திருநீற்றுப் பட்டையோடு அவர் சைக்கிள் முன் பாரில் உட்கார்ந்திருக்க, அவருடைய தோள்களில் துளிர்த்த அதிகாலை வியர்வையின் வாசம் இப்போதும் நாசியை அரிக்கிறது. பனி படர்ந்த வட்டக்கச்சியின் காலைப்பொழுதில் அவருடைய கந்த புராணக் கதைகளைக் கேட்டபடியே சைக்கிள் மிதிப்பது என்பது பேரனுபவம். நானும் குறுக்கு மறுக்காக அவரிடம் கேள்விகள் கேட்பேன். அடிக்கடி சண்டையும் பிடிப்போம். அந்தக் காட்சியே ஒரு கவிதைபோல மனத்திரையில் விரிகிறது. இப்போது யோசிக்கையில் புள்ளிகளை இணைக்கக்கூடியதாக இருக்கிறது. ஒரு பக்கம் கம்பன் விழாக்கள். பின்னர் சுந்தரம்பிள்ளை அங்கிள் போன்ற தமிழாசிரியர்கள். ஆங்கில இலக்கியத்துக்கு சண்முகநாதன் மிஸ். நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தப் பாடசாலை நூலகங்கள். யாழ் மாநகரசபை நூலகம். ஏராளம் சனசமூக நிலையங்கள்.

காலம் எம் மீது பாய்ச்சிய தனிப்பெருங் கருணையல்லவா அது?

பின்னர் கொழும்பு வாழ்க்கையிலும் அங்கிளோடு மறுபடியும் என் உறவு துளிர் பெற்றது. இப்போது நான் பல்கலைக்கழக மாணவன். அவருக்கு அதில் பெருமிதமுங்கூட. அப்போது சுழிபுரத்தில் அவர் பொறுப்பில் ஒரு சனசமூக நிலையம் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. அதன் கணக்கு வழக்குகளைப் பார்க்க அவருக்கு நான் உதவி செய்திருக்கிறேன். கொழும்பு சென்ற புதிதில், பல்கலைக்கழக விடுதி கிடைக்கும்வரை நான் அவர் வீட்டில்தான் தங்கினேன். அப்போது கொழும்பில் பாஸ் நடைமுறை இருந்தது. ஏலவே அவர் வீட்டில் ஏழு பேர் குடியிருந்தார்கள். ஆனாலும் அவர் என்னை வீட்டு உரிமையாளரிடம் அழைத்துச்சென்றார். உரிமையாளரோ என்னைப்பார்த்து திட்டுகிறார். அந்தச் சின்ன வீட்டில் எட்டுபேர் தங்கினால் கொமேட் எப்படித் தாங்கும் என்று கேட்கிறார். இந்த மனுசனுக்குக் கோபம் வந்துவிட்டது. ஏன் எல்லோரும் ஒன்றாகவா கொமெட்டில் இருக்கப்போகிறோம்? என்று அவரிடமே அங்கிள் பதில் கேள்வி கேட்டார். அப்படிச் சண்டை போட்டால் தம் குடும்பத்தையும் எழுப்பிவிடுவார்களோ என்ற பதற்றம் கொஞ்சம்கூட அங்கிளிடம் இருக்கவில்லை. ஏனெனில் அங்கிளுக்கும் நானும் அவர் குடும்பத்தினன்தான்.

மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது வாணி விழா ஒன்றை நாம் நடத்தினோம். அதில் பட்டி மன்றம் ஒன்றை ஒழுங்கமைத்து நடுவராக அங்கிளை அழைக்கலாம் என்று நான் ஒருங்கிணைப்பாளர்களிடம் கோரிக்கை விடுக்க அவர்களும் சம்மதித்தார்கள். பட்டிமன்றத் தலைப்பு மறந்து போய்விட்டது. ஆனால் அங்கிள் தனது தீர்ப்பில் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதுதான் பாடலே ஒழிய ‘புதியன புகுவித்தல்’ அல்ல என்று சொல்லி, மாற்றம் இயல்பாக அமைதல் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். எனக்கு அத்தீர்ப்பில் உடன்பாடில்லை. அடுத்த நாள் அவர் வீட்டுக்குப்போய், புதியனவற்றைப் புகட்ட முயற்சியே எடுக்காவிட்டால் எப்படி மாற்றம் சாத்தியமாகும் என்று சண்டை போட்டேன். அங்கிளும் பதிலுக்குக் கத்தினார். அன்ரி வந்து ‘டேய் அந்த மனுசனோட ஏன் சண்டை போடுறாய்?’ என்று கேட்டார். ‘நான் எங்க அவனோட சண்டை பிடிக்கிறன்?’ என்று அங்கிள் அப்போதும் சத்தமாகச் சொன்னார். ‘ரெண்டு பேரையும் திருத்தமுடியாது’ என்றுவிட்டு அன்ரி தன் வேலையைப் பார்க்கத்தொடங்கினார்.

நம்மிடையே இருந்த அதீத அன்பினாலான உறவு புரிகிறதா?

என் இரண்டாவது அக்காவுக்குத் திருமணம் ஏற்பாடாகியிருந்தது. அப்போது அப்பா சவுதியில் பணி புரிந்தார். அவரால் வரமுடியாத நிலைமை. அங்கிள்தான் திருமணத்தை முன்னின்று ஒழுங்கமைத்தார். மொத்தமாக ஐம்பதினாயிரம் ரூபாயில் மொத்தத் திருமணத்தையும் முடிக்கலாம் என்பதுதான் அவருடைய பட்ஜட். இது நடந்தது 2002ம் ஆண்டு என்று நினைக்கிறேன். ஒவ்வொரு செயலையும் தீர்க்கமாகத் திட்டமிட்டு, பிளேன்ரீக்குக்கூட பக்காவாகக் கணக்குக் காட்டி, சொன்ன செலவுக்குத் திருமணத்தை அங்கிள் நிகழ்த்திக்காட்டினார். அதற்காக அவர் போட்ட மன உடல் உழைப்பை மதிப்பிடவே முடியாது. இத்தனையையும் தன் நண்பரின் மகளுக்காகச் செய்தார் என்பதுதான் தலைமுறைகள் அறியவேண்டிய மானுட நேயத்தின் பாடம்.

பிற்காலத்தில் அங்கிளும் அன்ரியும் மறுபடியும் சுழிபுரத்திலேயே சென்று தங்கிவிட்டார்கள். நான் அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்துவிட்டேன். எம் குடும்பத்தில் யார் எப்போது யாழ்ப்பாணம் சென்றாலும் அவர்களைச் சென்று சந்திக்காமல் திரும்புவதில்லை. குமரன் எங்கட பிள்ளை என்றுதான் அவர்கள் சொல்லுவதுண்டு. ஏன் என்மீது அப்படி ஒரு அன்பு என்று அறியேன். ஒருமுறை அப்படி அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கிள் என்னைப் பறாளை விநாயகர் கோயில், சனசமூக நிலையம் என்று எல்லா இடங்களுக்கும் கூட்டிச்சென்று காட்டினார். ‘உன்னுடைய ஒவ்வொரு புத்தகமும் வெளியான கையோடு ஓட்டோ ஒன்றைப் பிடித்துப்போய் புத்தகக்கடையில் வாங்கிவிடுவார்’ என்று அன்ரி சொன்னார். ‘அவ பிழையா சொல்லுறா, நான் இரண்டு கொப்பி வாங்குவன். ஒண்டு எனக்கு. மற்றது சனசமூக நிலையத்துக்கு. அதுக்கு நீதான் காசு குடுக்கோணும்’ என்று அவர் முணுமுணுப்பார்.

சென்றமுறை போனபோது அங்கிள் என்னை அடையாளம் கண்டு முதன்முதலாகக் கண் கலங்கினார். இப்போது எனக்குள் பல காட்சிகள் ஓடுவதுபோல அப்போது அவருக்குள்ளும் பலதும் தோன்றி மறைந்திருக்கலாம். அடுத்ததாக என்ன புத்தகம் எழுதுகிறாய் என்று கேட்டார். சொன்னேன். இரண்டு கொப்பி வேண்டும், சனசமூக நிலையக் கொப்பி பிரீயாத் தரோணும் என்றார். அப்போது நாவலின் இறுதிப்பாகத்தை நான் முடித்திருக்கவில்லை. இப்போது முடிந்துவிட்டது. இன்னொரு இரண்டு மூன்று மாதங்கள் பொறுத்திருந்தால் இரண்டு கொப்பிகளை அங்கிளிடம் கொண்டுபோய்க் கொடுத்திருப்பேன். மனுசன் பொறுமை இல்லாமல் போய்ட்டுது.

அங்கிள் என்மேல் அத்தனை அன்பு வைக்க என்ன காரணம் என்று இப்போதும் யோசிக்கிறேன். என்மேல் என்றில்லை. என்னைப்போன்ற பலர் மேலே அங்கிள் அன்பினையும் கருணையையும் கொட்டியிருக்கிறார். அவருடைய கோபம்கூட கருணை என்ற பானையில் பொங்கி வழியும் பாலே அன்றி வேறில்லை. இத்தனை அன்பினையும் அவர் பலன்கள் எவற்றையும் எதிர்பாராமலேயே அள்ளி வழங்கினார். பேரன்பு என்பது பலனை எதிர்பாராமல் கொட்டிக்கொண்டேயிருக்கும். காயும்போது நிலா காடு, மலை, கடல் என்று தெரிந்து காய்வதில்லை அல்லவா? கொட்டும் மழைக்கு மரமேது செடியேது? யாராவது கவனிக்கிறார்களா என்று அவை எப்போதும் அக்கறைப்படுவதில்லை. அன்பும் ஈகையும் அத்தகு பண்புகளாம். The Alchemist நாவலில் வரக்கூடிய வரியொன்று முன்னே எழுகிறது. One is loved because one is loved. No reason is needed for loving. அதுதானே? அன்பு செலுத்தக் காரணம் வேண்டுமா என்ன?

சுந்தரம்பிள்ளை அங்கிள் என்றென்றும் எம் நினைவுகளில் நிறைந்து அன்பினை நீக்கமறப் பொழியட்டும்.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?