Skip to main content

எழுத்துப் பட்டறை - புகைப்படங்கள்

நேற்றைய எழுத்துப் பட்டறை இனிதே நிகழ்ந்தேறியது.
 
ஹெமிங்வேயின் Hills like white elephants சிறு கதையோடு ஆரம்பித்தோம். பின்னர் இளவேனில் சஞ்சிகையில் வெளியான சாந்தி சிவகுமார் எழுதிய ஒரு சேலையின் பயணம் என்ற சிறுகதை எப்படி அதன் ஆரம்ப பொறியிலிருந்து இப்போதுள்ள வடிவத்தை வந்தடைந்தது என்று உரையாடினோம்.

இடையிடையே நவீன இலக்கியத்தில் பலரும் பயன்படுத்தும் நுட்பங்கள், புனைவுகளை அணுகுவதற்கான சில ஆரம்ப உத்திகள் என்று பலதையும் விவாதித்தோம். பங்குபெற்றவர்களும் எழுத்து, வாசிப்புடன் பரிச்சயமானவர்கள் என்பதால் கேள்விகளும் ஆழமாக அமைந்திருந்தன.

மொத்தத்தில் நம் ஞாயிறு காலையின் மூன்று மணி நேரம் இனிதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது.
இவ்வாறான இலக்கியம் சார்ந்த கூட்டு முயற்சிகளை சிறிய அளவில் முன்னெடுக்கவேண்டும் என்ற ஆவல் பல ஆண்டுகளாகவே இருந்தது. இந்நாள்களில் மெல்பேர்ன் வாசகர் வட்டத்தினூடும் இளவேனில் சஞ்சிகையினூடும் அவற்றைச் சாத்தியப்படுத்தக்கூடியதாக இருப்பது பெரு மகிழ்ச்சி.
 
இந்த அரங்கினை நம் வாசகர் வட்டத்தின் சார்பாக முன்றில் அமைப்பின்வழி சாந்தி அக்காதான் ஒழுங்கமைத்தார். எப்படியானதொரு அரங்கைத் தாம் எதிர்பார்க்கிறோம் என்பது, மண்டப ஒழுங்கு, உணவு, சிற்றுண்டி, தேநீர், இடையிடையே என்னுடைய ஆயிரத்தெட்டுக் கேள்விகளைச் சமாளிப்பது என்று எல்லாவற்றிலும் அவருடைய உழைப்பே இதில் முதன்மையானது. ஏனைய நண்பர்கள்
பலரும் அவருக்குத் துணை நின்றனர்.

அனைவருக்கும் பேரன்பும் நன்றியும்.

 









Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.