லெ. முருகபூபதி எழுதிய ‘வாழும் வரலாறு மல்லிகை ஜீவா’ என்ற அற்புத நூலை வாசித்துக்கொண்டிருந்தேன்.
முருகபூபதியின் கட்டுரைகளில் எப்போதும் ஒருவித பத்திரிகையாளருக்கேயுரிய பற்றின்மை இருக்கும். சம்பவங்கள் குறித்தோ, மனிதர்கள் குறித்தோ அவர் எழுதும்போது அதில் எந்தவிதக் ‘commentary’யும் இருக்காது. ஆனால் அப்படி எழுதுவதே அவற்றின்மீதான பெரும் அபிப்பிராயத்தை வாசகர்மேலே ஏற்றிவிடும். ஒரு தேர்ந்த பத்திரிகையாளரின் திறன் அது.
ஒரு உதாரணம் கொடுக்கிறேன். இந்தச் சம்பவம் அறுபதுகளில் இடம்பெற்றிருக்கவேண்டும். பத்தி இப்படிப்போகிறது.
000
யாழ்ப்பாணத்தில் செங்கொடி ஏந்திய இரண்டு கட்சிகள் அக்காலத்தில் பிரபலமாக விளங்கின. இரண்டும் ஒரு காலகட்டத்தில் இணைந்திருந்தன. பின்னாளில் அந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, மாஸ்கோ அணி - பீக்கிங் அணி என்று பிளவு கண்டது.
மாஸ்கோ அணியில் தோழர்கள் அ. வயித்தியலிங்கம், வி. பொன்னம்பலம், பொன். குமாரசாமி, ஸி. குமாரசாமி, ஆர். ஆர். பூபாலசிங்கம், ஐ.ஆர். அரியரத்தினம், விஜயானந்தன், எம். சி. சுப்பிரமணியம், ஜீவா ஆகியோர் உட்பட பலர் அங்கம் வகித்தனர்.
பீக்கிங் அணியில் தோழர்கள் என். சண்முகதாசன், கே. ஏ. சுப்பிரமணியம், செந்திவேல், கந்தசாமி, கே. டானியல் உட்பட பல தோழர்கள் அங்கம் வகித்தனர்.
இரண்டு அணிகளும் கருத்துப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்த காலப்பகுதியில் மாஸ்கோ அணியைச் சேர்ந்தவரும் கொழும்பு மத்தியிலிருந்து நாடாளுமன்றம் தெரிவாகும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் எழுத்தாளரும் சிறந்த பேச்சாளருமான தோழர் பீட்டர் கெனமன், யாழ்ப்பாணத்திற்கு அவரது அணி சார்ந்தவர்களால் அழைக்கப்பட்டார். அந்தக்கூட்டம் யாழ். மாநகர சபை மண்டபத்தில் நடக்கிறது.
அதனைக் குழப்பவேண்டும் என்ற எண்ணம் பீக்கிங் அணிக்குத் தோன்றியதும், அதன் இளைஞர் பிரிவிலிருந்த தோழர் செந்திவேலும் மற்றும் சில இளம் தோழர்களும் அந்தக் கூட்டத்திற்குச் சென்று சபையில் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். பீட்டர் கெனமன் பேசிக்கொண்டிருந்தபோது இடையில் குறுக்கிட்ட செந்திவேல், “நீங்கள் பேசுவது தவறு” என்று உரத்த குரல் எடுத்துப் பேசியதும், அவரது அணியைச் சேர்ந்தவர்களும் ஆளுக்காள் எழுந்து கூக்குரலிட்டனர். நிலைமை மோசமடைந்து, கதிரைகளும் தூக்கப்பட்டு, அடிதடியாகிவிட்டது.
மாஸ்கோ அணியைச் சேர்ந்த ஒருவர் செந்திவேலை மடக்கிப்பிடித்து அவரது கழுத்தைக் கெட்டியாக அழுத்திக்கொண்டார். அதனை கண்ணுற்ற அதே மாஸ்கோ அணியைச் சேர்ந்த ஜீவா ஓடிவந்து “விடு, விடு... அவரை விடு. நாமெல்லோரும் ஒரு இரத்தம். எதனையும் பேசித் தீர்க்கலாம்” எனச்சொல்லி செந்திவேலை அந்த நபரிடமிருந்து விடுவித்துள்ளார்.
அங்கு நடந்த களேபரத்தில் செந்திவேல் தனது பாதணியையும் விட்டுவிட்டுப் போய்விட்டார். ஜீவா அதனை பத்திரமாக எடுத்துச்சென்று தனது கஸ்தூரியார் வீதி ஜோசப் சிகையலங்கார நிலையத்தில் வைத்திருந்து, மறுநாள் அந்த வீதியில் நடந்து வந்துகொண்டிருந்த தோழர் செந்திவேலிடம் தனது கையாலேயே எடுத்துவந்து கொடுத்தாராம்.
000
இந்த நூல் முழுதும் ஜீவாவின் இந்த இயல்பே பேசப்படுகிறது. தன்னறமும், அதனாலே விளையக்கூடிய சீற்றமும் மிகுந்தவர்தான் ஜீவா; ஆனால், இவ்வாறான அற்பத்தனமான மோதல்களுக்குள் அவர் ஒருபோதும் நுழைந்ததில்லை. அது அவருடைய ஆளுமையின் மிக முக்கியப் பண்புகளுள் ஒன்று. இந்த நூலை வாசிக்கையில் ஜீவா மீதான பிரமிப்பு இரட்டிப்பாகிறது.
மேற்சொன்ன பத்தி நமக்கெல்லாம் ஒரு பெரும் பாடம் என்றுதான் தோன்றுகிறது. சற்று யோசித்துப் பாருங்கள்; யாழ்ப்பாணத்தில் மாஸ்கோ அணி, பீக்கிங் அணி என்று பிரிந்து மோதியிருக்கிறார்கள். இன்றைக்கு மாஸ்கோவும் பீக்கிங்கும் தத்தமது கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு, தமக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு இணக்கமாக இருக்கிறார்கள். ஆனால், இந்த நாடுகளுக்காக அன்று நாம் செருப்புகளைப் பறக்கவிட்டிருக்கிறோம். இதே 'டி.என்.ஏ'தான் எண்பதுகளில் நாம் நாற்பது குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொள்ளக் காரணமானது. இன்றும் யார், எந்தக் குழு, என்ன தத்துவம் என்று ஏதும் தெரியவில்லை; ஆனால், மோதல்கள் மட்டும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது: இன்று நாம் யாருக்காகவோ, எதற்காகவோ பிரிந்து மல்லுக்கட்டி, வசைபாடுகிறோமோ, அவை யாவும் சில வருடங்களில் தம் இயல்பை இழந்துவிடும் சாத்தியமே அதிகம். மானுட முன்னேற்றத்தில் தத்துவங்கள் அழிவதும், உருமாறுவதும், புதிதாகத் தோன்றுவதும் இயல்பே. 'விஷ்ணுபுரம்' நாவலில் இது மிக ஆழமாகப் பேசப்படும். எனவே, கருத்தியல் ரீதியாக என்றைக்கும் வசையோ, வன்முறையோ வேண்டாம்; அதைவிட அபத்தம் வேறொன்றுமில்லை. நாளையே நாம் கொண்டாடும் தரப்பும் நாம் வசை பாடும் தரப்பும் கூட்டுச்சேர்ந்துவிடும். அப்போது நாம் அவர்கள் சொல்லும் இன்னொரு தரப்பை வசை பாடவேண்டி வரும். எதுக்கு? இங்கே அறிதலைப் பகிர்தல் மட்டுமே அவசியமானது. அதுவும் நிலையற்றது என்பதை உணர்ந்தே பகிர வேண்டும். அவ்வளவுதான்.
இந்நூலை எழுதி, ஒரு காலத்தின் வாழ்வைப் பதிவு செய்த எழுத்தாளர் லெ. முருகபூபதி அவர்களுக்கு நன்றிகள்.
000
Comments
Post a Comment