Skip to main content

தூக்கமா கண்மணி, பள்ளி எழு



இன்று காலை இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது. சிறு வயதில் இப்பாட்டை அடிக்கடி நான் முணுமுணுப்பதுண்டு. ஊரின் ஒவ்வொரு சந்தி மூலைகளிலும் எஞ்சி நின்ற மின்சாரக் கம்பங்களில் ஒலி பெருக்கிகள் பூட்டப்பட்டு இயக்கப்பாடல்கள் இசைக்கப்பட்ட காலம் அது. ஒரு பக்கம் ‘கனலில் கருவாகி’, ‘பிள்ளையார் சுழி போட்டு’ என்று கோயில் கோபுரங்கள் பாடல்கள் இசைக்க, இன்னொரு பக்கம் ‘மக்களெல்லாம்’ என்று இசை கேட்க, சைக்கிளில் சுற்றித்திரிந்த சிறுவர்களுக்கு இவ்விரண்டு வகைப் பாடல்களும் மண்டைகளுக்குள் ஏறியது ஆச்சரியமில்லை.
 
எப்படி மதங்களினூடாகப் பல தலைமுறைகளில் கலை முகிழ்ந்தெழுந்ததோ அதுபோலவே போராட்ட காலத்தின் கலையும். மதங்களையும் அவற்றின் எதேச்சதிகாரங்களையும் நிராகரிக்கும்போது நாச்சியார் திருமொழியையும் சுந்தர காண்டத்தையும் நாம் புறந்தள்ளினோமானால் இழப்பு நமக்குத்தான். அதுபோலவே போராட்டங்கள்மீது நாலு பேருக்கு நாலு விதமான எண்ணம் சிந்தனைகள் இருக்கலாம். அதனாலேயே அக்காலத்துக் கலையை மறுதலித்துவிடக்கூடாது. அந்தக் காலத்தின் ஈழத்து இசையும் அவ்வகையானதுதான். மிக அற்புதமான இசைத்தொகுப்புகள் அக்காலப்பகுதியில் வந்திருக்கின்றன. அப்பாடல்களின் வரிகள்கூட அவற்றின் ஆதார நோக்கங்களையும் தாண்டிய இலக்கிய நயங்களைக் கொண்டவை. ஏனெனில் அவற்றைப் படைத்தவர்கள் அனைவரும் தேர்ந்த கலைஞர்கள் ஆவர்.
இத்தனை வருடங்கள் கழித்து இந்தப் பாட்டை மீட்டுப்பார்க்கையில் முதலில் இது ஒரு நேரிசை வெண்பா என்றுதான் தோன்றியது. ஆனால் மூன்றாம் அடியில் ஒரு தனிச்சொல் தொக்கி நிற்பதாக மூளையின் முப்பத்தைந்து வருட ஆவணம் கோடி காட்டுகிறது. அப்படியெனில் இது இன்னிசை வெண்பா வகையைச் சேர்ந்தது. அப்படிப்பார்த்தாலும் ஆங்காங்கே தளை தட்டுகிறது. அது இசைக்காகத் தட்டும் தளை என்க. சரி வெண்பாவே வேண்டாம், சிந்துவும் அழகுதானே? பொல்லாப்பில்லை.

தூக்கமா கண்மணி பள்ளி எழு
தொட்டிலை விட்டு நீ துள்ளி எழு
பூத்த என் பூந்தமிழ் பொற்கொடியே - கையில்
புலிக்கொடி ஏந்த வா பூங்கொடியே.

யாரிடமாவது முழுப்பாடல், எழுதியவர், இசையமைத்தவர் விபரம் இருக்கிறதா? இதனைக் கணீர் என்று பாடிய அக்கா இப்போது எங்கே இருக்கிறார்? அவர் வாழ்வு என்னானது? அவர் வீட்டில் நம் சொந்தம் ஒன்று இத்தகு அற்புதப் பாடலைப் பாடிய விபரமாவது ஞாபகமிருக்குமா? அவரது உறவுகளின் நிகழ்வுகளில் இன்னார் பாடிய பாடல் என்று பெருமையோடு இதனை ஒலி பரப்புவார்களா?
பூத்த என் பூந்தமிழ் பொற்கொடியே என்ற வரிகளின் இசையை மனதுள் மீட்கும்போது சின்னதாகக் கண் கலங்காதவர் எவரும் உண்டா?

காலம் பல சமயங்களில் பொக்குளிப்பான்போல இப்படி மனம் முழுதும் கொப்புளங்களைப் போட்டுவிடுகிறது அல்லவா?

*****
பிற்குறிப்பு:

இசை - கண்ணன்
பாடியவர் - சியாமளா (ஏறுது பார் கொடி பாடலைப் பாடியவரும் இவரே)
வரிகள் - புதுவை இரத்தினதுரை

தகவல்களைக் கொடுத்த வாசகர்களுக்கு நன்றி

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.