Skip to main content

நிகழ்ச்சி அறிவித்தல் - எழுத்துப் பயிற்சிப் பட்டறை

                                          

வணக்கம் நண்பர்களே,

மெல்பேர்னில் வரும் பெப்ரவரி மாதம் 22ம் திகதி 'எழுத்துப் பயிற்சிப் பட்டறை' ஒன்றை ஒழுங்கமைத்துள்ளோம்.

நம்முடைய மெல்பேர்ன் வாசகர் வட்டத்திலாகட்டும், இளவேனில் சஞ்சிகைக் கலந்துரையாடல்களாகட்டும், அல்லது பொதுவான சந்திப்புகளாகட்டும், எல்லாவிடங்களிலும் எழுத்து பற்றிய உரையாடல்கள் அடிக்கடி எழுவதுண்டு. பலர், ‘தம்மிடமும் சொல்வதற்குக் கதைகள் பல உண்டு, ஆனால் எழுத உட்கார்ந்தால் வரிகள் வந்து தன்னாலே விழுவதாயில்லை’ என்று ஆதங்கப்படுவார்கள். 

கடந்த சில ஆண்டுகளாக இளவேனில் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றுவதால், புதிதாக எழுத வருபவர்களின் ஆரம்பச் சிக்கல்களையும் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. பல தடவைகள் தனிப்பட்ட ரீதியில் நண்பர்களோடு இவை பற்றி ஆழமாகக் கலந்துரையாடியுமிருக்கிறேன். இப்போது இவற்றை எல்லாம் தொகுத்து ஒரு பட்டறைப் பயிற்சியின் ஊடாக எழுத்திற்கான வெள்ளோட்டத்தைப் பலரிடத்தில் செய்துபார்க்கலாம் என்ற ஆவலில்தான் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

எழுத்து என்பது ஒரு தனித்த செயற்பாடு. அது தன்னினின்று முகிழ்வது. வற்றா ஊற்றைப்போல இறைக்க, இறைக்கப் பெருகிக்கொண்டே இருப்பது. ஆயினும், அந்த முதல் ஊற்றைக் கண்டடைய ஒரு கிணறு தோண்டுதல் அவசியமல்லவா? இராசாளிக் கழுகே ஆனாலும் அதனுடைய முதற் பறப்பில் ஒரு தயக்கமும் தள்ளாட்டமும் இருந்திருக்கும்தானே? அந்தப் புள்ளியை எப்படிக் கடந்தேறுவது என்பதற்கான ஒரு பட்டறைதான் இது.

எது எழுத்தாகிறது? எது எழுத்தாகாது? இத்துறையில் தொடர்ச்சியாக இயங்குவது எப்படி? அடுத்த சொல்லைக் கண்டடைவது எவ்வாறு? போன்ற எழுத்தின் நுணுக்கங்களையும், இந்தச் செயல்பாட்டிற்கு உதவும் தொழில்நுட்பச் செயலிகளையும் பற்றி நானறிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

சுமார் 20-25 பேர் கொண்ட சிறு குழுவாக இருந்து, ஒவ்வொருவர் மீதும் பிரத்தியேகக் கவனம் செலுத்தும் வகையில் இந்த அரை நாள் அமர்வு அமையும். உணவு, அரங்கு வாடகை போன்ற செலவினங்களை ஈடுகட்டவும், வருகையை உறுதிப்படுத்தவும் சிறு கட்டணம் அறவிடப்படுகிறது.
ஆர்வமுள்ளவர்கள் என்னையோ அல்லது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான சாந்தி சிவகுமாரையோ  தொடர்புகொண்டு உங்கள் வருகையை விரைவில் உறுதிப்படுத்தினால், தயார்ப்படுத்தல்களைச் செய்வது இலகுவாக இருக்கும். நன்றி.

சந்திப்போம்.


Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.