Skip to main content

podcast: The Anthropologists நூல் உரையாடல்


துருக்கியைப் பூர்வீகமாகக்கொண்ட ‘ஐஷீகுள் சவாஸ்’ என்ற எழுத்தாளர் எழுதிய ’The Anthropologists’ என்ற நாவலைப்பற்றி இம்முறை உரையாடியிருக்கிறோம்.

சென்ற வருடம் வாசித்தவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த நூல் இது. புதிய வடிவம். ஒரு புதிய நகரிலே (அது பாரிசாக இருக்கலாம்) இளம் தம்பதி ஒன்று எப்படி வாழ்வை ஆரம்பிக்க முனைகிறது என்ற எளிமையான களத்தைக் கொண்ட நாவல் இது. ஆசியாவும் மானுவும் புதிய நகரில் தாம் குடியிருக்க சிறு வீடு ஒன்றைத் தேடுகிறார்கள். நகரில் நண்பர்களை உருவாக்குகிறார்கள். பூங்காகளில் உலாவுகிறார்கள். மேல் வீட்டு பாட்டியோடு நட்பாகிறார்கள். ரவி என்கின்ற நண்பனோடு கஃபேகளிலும் மதுபான விடுதிகளிலும் காலத்தைப் போக்குகிறார்கள். ஆசியா தன்னுடைய கற்கை நெறிக்காக ஆவணப்படம் ஒன்றுக்கான காணொளிகளைத் தயாரிக்கிறாள். அதற்காக பல்வேறு விடயங்களைப் பதிவு செய்கிறாள். ஆசியாவின் பார்வையில்தான் நாவல் நகர்கிறது. அவள் தன்னைப் பார்ப்பது, மற்றவர்களைப் பார்ப்பது, சூழலையும் வாழ்வினையும் பார்ப்பது, கனவுகள் காண்பது என்ற ஒருவித navalgazing நாவல் இது. மிக இயல்பான, அதிர்ச்சிகளும் திருப்பங்களும் இல்லாத, வாழ்வின் அன்றாட சலனங்களைப் பதிவுகளால் நிறைத்த நூல். A pleasant and thought provoking piece.

நியூ யோர்க்கர் சஞ்சிகையில் சவாஸ் முன்னர் எழுதிய ‘Future selves’ சிறு கதைதான் இப்போது ’The Anthropologists’ என்கின்ற நாவலாக விரிவடைந்திருக்கிறது. நான் அச்சிறுகதையையும் வாசித்திருக்கிறேன். அச் சிறுகதை எப்படி புதிய வடிவத்தைக் கொண்ட இந்நாவலாக மாறியது என்பதை உணரும்போது ஆச்சரியமும் புன்னகையும் தோன்றியது. சவாசுக்கு எழுத்துப் பற்றிய எந்த அவசரங்களோ பதட்டங்களோ இல்லை என்பதையும் உணர்ந்துகொள்ளவும் முடிந்தது.

சொல்லப்போனால் ஒவ்வொரு எழுத்தாளர்களுமே ஒரு வகையில் ‘anthropoligists’தான். வாசிக்கும் கணத்தில் வாசிப்பவருக்கும் அந்நோய் தொற்றிவிடுகிறது. எழுத்தினதும் வாசிப்பினதும் அற்புதம் இது.



Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.