Skip to main content

முரண் நயத்தல்



உங்களை இங்கே எதிர்பார்க்கவில்லை.

நேற்றைய நிகழ்வில் மொத்தமாக மூன்று பேர் இந்தக் கூற்றை என்னிடம் சொன்னார்கள். அது கம்பன் கழகம் நடத்திய ஞானவேள்வி எனும் நிகழ்வு. ஆண்டுதோறும் இந்த நிகழ்வை குமாரதாசன் அண்ணா மெய்யும் மடியும் வருந்த மேடையேற்றிக்கொண்டிருக்கிறார். நானும் ஒவ்வொரு வருடமும் தவறாமல் இந்நிகழ்வுக்குச் செல்லும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் யாரேனும் சிலர் அதிசயமாக இப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்பதுண்டு. இத்தனைக்கும் கேட்டவர்கள் அத்தனை பேரும் ஓரளவுக்கு எனக்கு நெருக்கமானவர்களும்கூட. ஆனாலும் என்னைக் கண்டவுடன் சிறு திகைப்பு அவர்களது கண்களில் ஒளிர்ந்து மறையும். ஆச்சரியம் விளையும். வாய் அறியாது சொற்களை உதிர்த்துவிடும்.

உங்களை இங்கே எதிர்பார்க்கவில்லை.

அவர்களை எது அப்படிக் கேட்கவைக்கிறது என்று யோசித்தேன். ஒரு காரணம், பல வருடங்களுக்கு முன்னர் கம்பவாரிதி அவர்களுக்கு பொது வெளியில் நான் எழுதிய ஒரு கடிதமும் அதற்கு அவர் அனுப்பிய எதிர்வினையுமாக இருக்கலாம். ஆயினும் அதற்குப் பிறகும் நான் கம்பன் விழாக்களுக்குத் தொடர்ச்சியாகச் சென்றிருக்கிறேன். கம்பவாரிதி அவர்கள் மெல்பேர்ன் வரும்போதெல்லாம் மரியாதை நிமித்தமாகச் சென்று அவரிடம் அன்பு பாராட்டுவதுண்டு. கம்பன் கவிதைகளை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை என்னைத் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் அறிந்திருப்பார்கள். அகத்திணையில் ஒரு பாடலைப் பற்றிக்கொண்டால் அதிலிருந்து தொங்கி கம்பனை வந்தடையாவிட்டால் சாப்பாடு செரிக்காது எனக்கு. அதேபோல கம்பவாரிதி மீது நான் கொண்ட அன்பும் என்றைக்கும் மாற்று குறைந்தது கிடையாது. அது எப்படிக் குறையும்? பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடி அறிவதற்கான விதை அவர் போட்டது. கம்பன் எனும் அபரப்பிரம்மனின் அதிரதர் அவர். கலட்டி எச்சாட்டி மகாமாரியம்மன் ஆலயத்திடலில் எனக்கு அக்கவிஞனை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது அவர்தான். அந்த நன்றியை நான் எப்படி மறப்பேன்?

கம்பன் கழக மேடை நிகழ்வுகளில் பங்கெடுப்பதை நான் தவிர்ப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்குக் காரணங்கள் பல இருக்கின்றன. ஒன்று, பட்டி மன்றங்கள், விவாதங்கள் மீதான நாட்டம் இன்று என்னிடமில்லை. என்னால் வெறும் மேடைக்காகவேனும் ஒரு தரப்பு சார்ந்து பேசுதல் இயலாது. 

இன்னொன்று ஐந்து பத்து நிமிடங்களில் ஒரு பொருளை அறுதியும் இறுதியுமாக முன்வைக்கக்கூடிய ஆற்றலும் என்னிடத்தில் இல்லை. அதனால் எடுத்துக்கொண்ட பொருளுக்கு நேர்மை சேர்க்க முடியாது என்ற எண்ணம் அனுபவத்தினூடே வந்து சேர்ந்தது. மூன்றாவது காரணம்தான் முக்கியமானது. பெரும்பாலும் கம்பன் மேடையில் பேசுபவர்களின் கருத்தியல்களோடு எனக்கு எப்போதும் பெரும் முரண் இருக்கிறது. மேடையில் சக பேச்சாளர் அப்படிப் பேசும்போது வாளாவிருத்தல் இயலாதது. கீழே அவையில் உட்கார்ந்திருக்கையிலேயே கால்கள் நெளிவதுண்டு. மேடையில் எப்படியிருக்கும்? அதே சமயம் இன்னொருவர் கடின உழைப்பில் கட்டிய மேடையில் ஏறி கலகம் செய்வதிலும் எனக்கு உடன்பாடில்லை. அது அநாகரிகம். அதனால்தான் கம்பன் மேடைகளைத் தவிர்க்கிறேன். ஆனால் பங்கெடுப்பதைத் தவிர்ப்பதில்லை. அதற்கு மூல காரணம் அன்பு. குமாரதாசன் அண்ணாமீதிருக்கும் அன்பு. கம்பவாரிதி அவர்கள் மீதிருக்கும் பேரன்பு. கம்பன் மீதிருக்கும் பெரும் பித்து. இன்னொரு காரணம், எத்தனை முரண்கள் இருந்தாலும் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் யாரோ ஒருவர் அற்புதமான கம்பன் பாட்டை நிகழ்வின்போது எனக்கு மீள நினைவூட்டிவிட்டுப் போய்விடுவார். சில சமயங்களில் மேடையில் இருப்பவர் செய்யாவிட்டாலும் அருகில் உட்கார்ந்திருப்பவர் அதனைச் செய்வார். நேற்றைய தினம்கூட அருகில் அமர்ந்திருந்த கலா அக்கா அற்புதமான இந்தக் கம்பன் பாடலை நினைவூட்டினார்.

சீதையைப் பிரிந்து கிடக்கும் இராமனின் வலியைப் பற்றி அனுமன் அவளுக்குச் சொல்லும் பாடல் இது.

மத்துறு தயிர் என வந்து சென்று, இடை
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து, நின்பிரிவினில் பிறந்த வேதனை,
எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ?

இந்த மத்துறு தயிர் என்ற ஆழமான உவமை தமிழ் இலக்கியங்கள் முழுதும் விரவிக்கிடக்கிறது. நளவெண்பாவில் தமயந்தியை விட்டுப் பிரியும் நளனுக்கும் இதே மத்துறு தயிர் வலி வந்துபோகிறது. மத்தார் தயிர்போன் மறுகுமென் சிந்தை என்பார் திருநாவுக்கரசர். மணி வாசகரும் பாடியிருக்கிறார். ஜெயமோகனின் அறம் தொகுப்பில் இத்தலைப்பில் ஒரு சிறுகதையே வெளிவந்திருக்கிறது. ஒரு உவமை காலத்தின் நீட்சியில் பல்வேறு இலக்கியங்களால் எப்படி எடுத்தாளப்படுகிறது என்பதை ஆராய்வதே அழகல்லவா? இப்படியான தேடல்களுக்கான புள்ளிகளை கம்பன் விழாக்கள் எப்போதும் எனக்குக் கொடுப்பதுண்டு.

முரண்களோடு வாழுதல் பற்றி நாம் தொடர்ச்சியாகப் பேசவேண்டிய சூழலில் இருக்கிறோம். இப்போதுள்ள சமூக ஊடக வாழ்வியலில் நம்மில் பலரும் பைனரி சிந்தனைகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். அல்லது ஏலவே நகர்ந்துவிட்டோம். நமக்கென்று ஒரு கருத்தியல் ஆழமாக உருவாகிறது. அதனைப் பொதுவெளியில் வேறு பகிர்ந்துவிடுகிறோமா, பின்னர் அதனையே கெட்டியாகப் பிடிக்கவேண்டிய தேவை வந்துவிடுகிறது. அத்தோடு அக்கருத்தியலோடு முரண்படுபவர்களை நாம் தள்ளி வைக்கிறோம். எள்ளி நகையாடுகிறோம். பகை பாராட்டுகிறோம். எதிர்க்கிறோம். பல சமயங்களில் வெறுக்கவும் தலைப்படுகிறோம். Paul Dolan இதனை Beliefism என்று குறிப்பிடுகிறார். அவருடைய Beliefism, How to stop hating the people we disagree with என்ற நூலை அண்மையில் வாசித்தேன். இப்படியான beliefism நிலைப்பாட்டில் இருப்பவர்களுக்கும் இன, மத, சாதி, மொழிவாதிகளுக்கும் பெரிதாக வேறுபாடில்லை என்கிறார் Paul Dolan. அந்த நூலிலிருக்கும் இவ்வரிகள் எனக்கு மிகப் பிடித்தமானது.

I am friends with people I like, and they need to like me too, of course. But here’s the thing: they don’t have to be like me. My friends don’t have to share the same beliefs as me. Some of them are quite like me, but many of them have very different beliefs.

இது முக்கியம் என்று நான் நம்புகிறேன். என்னுடைய நட்பு வட்டாரம் சிறிதுதான். ஆனால் ஏறத்தாழ அத்தனை பேரோடும் பல சமயங்களில் நான் கருத்தியல் ரீதியாக முரண்பட்டிருக்கிறேன். தலையைப் பிய்த்துக்கொள்ள வைத்திருக்கிறேன். அவர்களும் என்னை வெறுப்பேற்றியிருக்கிறார்கள். வெறுப்பேற்றுகிறார்கள். வெறுப்பேற்றுவார்கள். ஆனால் உள்ளூற அவர்களை நானும் என்னை அவர்களும் ஆழமாக நேசிக்கிறோம் என்பதை அனைவருமே அறிவோம். தவிர நமக்குள்ளே முரண்களைவிட உடன்பாடுகள்தான் அதிகம். ஆனால் உடன்பாடுகளை we take it for granted. சின்ன முரண் புள்ளியில் பிடித்துத் தொங்கியபடி, என்ன கையைப்பிடிச்சு இழுத்தியா வகை சண்டைகள்தாம் அதிகம். இது மனைவியோடும் நிகழும். அடுத்த வட்டத்திலிருக்கும் நெருங்கிய நண்பர்களோடும் நிகழும். வாசிக்கும்போது புத்தகங்களோடு நிகழும். கேட்கும்போது உரையாளரோடு நிகழும். பல சமயங்களில் ஜீவியோடு சண்டை முற்றி பாலிஸ்டிக் மிசைல் எல்லாம் பாய்ச்சப்படும். இங்கும் 99 சதவிகிதம் நாமிருவரும் ஒத்த கருத்தில்தான் இருப்போம். எங்கோ ஒரு புள்ளியில்தான் கருத்து வேறுபாடு இருக்கும். ஆனாலும் என் வாய் சும்மா இராது. I never argue, its a discussion என்பேன் நான். மிசைல் என் மூஞ்சியில் விழுந்து வெடிக்கும்.


முரண்படுதல் என்பது தேடலுக்கும் அறிதலுக்குமான ஆதாரப் புள்ளிகளுள் ஒன்று. நாம் புதிதாக அறிவதற்கும் நம்முடைய கருத்தியல் கூர்ப்படைவதற்கும் இப்போது மூளைக்குள் நாம் ஏற்றி வைத்திருக்கும் நம்பிக்கைகளோடும் தத்துவங்களோடும் முரண்பட்டால்தான் சாத்தியமாகும். ஆனால் இது இலகுவானதல்ல. ஒருவகையில் இதுகூட மத்துறு தயிர்நிலைதான். ஆனால் பயனாய் வெண்ணெய் பெருகிவருமல்லவா?

இதுவும் கம்பர் பாட்டுதான்.

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்,
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ?

அயோத்தியா காண்டத்தில் வசிட்டர் இராமருக்கு சொல்லும் அறிவுரை இது. ஆனாலும் இதன் பிறகே பெரும் போர் ஒன்றை இராமன் செய்ய நேரிடுகிறது என்பது முரண்நகையாகப் பலருக்குத் தோன்றலாம். எந்தப் போரையும் வெற்றி கொள்ளும் ஆற்றல் நிறைந்தவன் மனதில் வெற்றி வெறி ஏறிவிடலாகாது என்று அவர் அதனைக் கூறியிருக்கக்கூடும். தவிர, போர் ஒரு வகையில் இராமன்மீது திணிக்கப்பட்டது என்பதே கம்பராமாயணம் சொல்லும் கதை. அவன் வலிந்து எவரோடும் பகை கொண்டவன் கிடையாது. துட்டனைக் கண்டால் தூர விலகு என்ற நிலையும் இங்கு அவனுக்குப் பொருந்தாது. கவர்ந்து செல்லப்பட்ட துணையை மீட்க நினைப்பது என்பது அனிச்சைப் பண்பு. அதனையே இராமன் செய்தான் என்க. இதுதான் கம்பராமாயணம் சொல்லும் கதை. இப்போது கதையை மாற்றிவிட்டு யாரேனும் வாதாடினால் அது வேறு காப்பியம். அந்த ஆட்டத்துக்கு நான் வரப்போவதில்லை.

கம்பன் தன் பாட்டில் பகை கொள்ளலன் என்றானே ஒழிய முரண் கொள்ளலன் என்று சொல்லவில்லை. புகழுக்காகக் கருத்தியல் முரண்களை மறைத்து எல்லோரிடத்திலும் நல்லவர் பட்டம் சூடிக்கொள்வது ஒருவகையில் cowardice அன்றி வேறில்லை. கருத்தியல் ரீதியாக முரண்படுதலே நேர்மையானது. விஷ்ணுபுரம் நாவலின் பல நூறு பக்கங்கள் இந்தக் கருத்தியல் முரண்களுக்கே செலவிடப்பட்டிருக்கும். தத்துவமும் அறிவியலும் தம்மை மறுபடியும் மீளத் திருத்தியமைக்க முரண்களும் வாதங்களுமே உதவி புரிந்திருக்கின்றன. அவ்வியல்பைக் கொண்டாடுவதில் எத்தவறுமில்லை. ஆனால் அதற்காக அதனை நிகழ்த்துபவர்களிடையே அன்பு இல்லை என்று தீர்மானித்தல்தான் மிகத் தவறானது.

இவ்விடத்தில் ஒரு உண்மைச் சம்பவத்தைப் பகிர்ந்துகொள்ளவேண்டும். 2001ம் ஆண்டு வெளியாகிய, மல்லிகை ஜீவா நினைவுகள் என்ற நூலில் முருகபூபதி இதனைப் பதிவு செய்கிறார்.

ஜீவா மார்க்சியச் சிந்தனை வயப்பட்டவர். கோயில்களுக்கோ, தேவாலயங்கள் பக்கமோ மழைக்குச் சிலவேளை அவர் ஒதுங்கியிருக்கலாம். அப்படித்தான் ஒதுங்கியிருந்தாலும் அங்கே மழையைத்தான் அவர் இரசித்திருப்பார். ஒரு சமயம், ஜீவாவின் மூத்த மகளுக்கு இருதயத்தில் சத்திர சிகிச்சை செய்யவேண்டி வருகிறது. கொழும்பு ஆஸ்பத்திரியில் ஜீவா தன் மகளை அனுமதித்துவிட்டுத் திரும்பும்போது அவரது அக்கா, அருகிலிருக்கும் தேவாலயத்துக்குச் சென்று பிள்ளையின் சுகத்துக்குப் பிரார்த்தனை செய்து மெழுகுதிரி ஏற்றலாம் என்று ஜீவாவிடம் கேட்டிருக்கிறார். கூட இருந்த முருகபூபதியும் தேவாலயத்துக்குப் போகத் தயார். ஆனால் ஜீவா மறுத்துவிட்டார்.

டொக்டர் நற்குணம் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. அவர் என் மகளைக் குணப்படுத்துவார். சேர்ச்சில் மெழுகுவர்த்தி லஞ்சம் கொடுக்க நான் தயாரில்லை. வேண்டுமானால் நீங்கள் போய் வாருங்கள்.

அன்று ஜீவா தேவாலயத்துக்குள் சென்று கடவுளிடம் மகளை குணப்படுத்த வேண்டவில்லை.
இதே பத்தியோடு ஜீவா குறித்து கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் எழுதியதையும் முருகபூபதி பதிவு செய்கிறார். அதனை அப்படியே நான் இங்கு பகிர்கிறேன்.

எங்கள் கழகக் கவிஞர் அரியாலை வே. ஐயாத்துரை அவர்கள் சுகவீனமுற்றிருந்தது அறிந்து, அவர் நலத்திற்காய் அரியாலை சரஸ்வதி கோயிலில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்திற்கு ஒழுங்கு செய்திருந்தோம். கூட்டம் நடைபெற இருந்த அன்று காலை தாவடியில் பொம்பர்கள் தாக்குதல் நடத்தின. அதனால் கூட்டதிற்கு வருவார்கள் என நான் எதிர்பார்த்த பல அறிஞர்கள் வராமல் நின்றுவிட்டனர். எப்படியும் கூட்டத்தை நடத்தியே தீருவது என்ற முடிவுடன் வந்திருந்த அனைவரும் கூட்டம் நடக்க இருந்த கோயிலுக்குச் சென்றோம். என்ன ஆச்சரியம். அங்கே ஜீவாவும் அவர் அணியைச் சேர்ந்த ஓரிருவரும் நிற்கிறார்கள். இறைவன்மேல் நம்பிக்கையுள்ள பலபேரும் வராமல் நின்றுவிட, நம்பிக்கை இல்லாத இவர்கள் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்திருக்கிறார்களே என்று நான் ஆச்சரியப்பட்டேன். அன்றைய கூட்டத்தில் பேசிய ஜீவா, எங்களுக்கு இறைவன்மேல் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, எங்கள் மண்ணில் வாழும் ஒரு கவிஞனின் உடல் நலம் வேண்டிச் சில உள்ளங்கள் பிரார்த்தனை செய்யும்போது அதில் இணைந்துகொள்ள வேண்டியது எங்கள் கடமை என்று பேசியபோது தத்துவங்களையும் சம்பிரதாயங்களையும் மீறி ஒரு மனிதனாய் விசுவரூபம் கொண்டு நின்ற ஜீவா என் மனதில் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்துக்கொண்டார்.

கம்பவாரிதியின் இவ்வரிகளை வாசிக்கும்போது நமக்கும் அந்த அருட்பெருஞ் சோதி ஜீவாமீது பேரன்பு கூடுகிறதல்லவா? இதுவே இக்கட்டுரையின் ஆதாரமுமாம். என் வாழ்க்கையே பிருந்தாவனம், நானாகவே நான் வாழ்கிறேன் என்ற நிலையை எட்டியபின்னர் முரண்கள் பற்றியும் அன்பு பற்றியும் பெரிதான குழப்பங்கள் எனக்கில்லை. என் நண்பர்களிடத்திலும் அது இல்லை. இவன் இப்படித்தான் என்பதை உள்ளார்ந்து அறிந்தவர்தாம் என்னைக் காணும் பொழுதுகளிலெல்லாம் கட்டியணைத்து அன்பு மழை பொழிகிறார்கள். முரண்கள் வரும், போகும். ஆனால் இவர்களிடத்தில் அன்பைத்தவிர வேறெதையும் அறிந்திலேன்.

ஆதலினால்தான் அவர்தம் அன்பில் நாம் திளைப்போம். முரண்களை நயப்போம்.

Popular posts from this blog

அன்புள்ள கம்பவாரிதி ஐயாவுக்கு

  கம்பன் விழா நிகழ்வுகள் இனிதே நிறைவேறியிருக்கும் என்று நம்புகிறேன். விழாவிலே கலந்துகொள்ளமுடியாவிட்டாலும் விழா நாட்களை நானும் கம்பனோடே கழித்தேன். இம்முறை விழா நாட்களில் மிகச்சிரத்தை எடுத்து படிக்க முயன்ற பாடல்கள் வாலி வதை சார்ந்தவை. எனக்கு நீங்கள் அடிக்கடி சொல்லுவதொன்று ஞாபகம் வருகிறது. இராமனது அம்பு தோற்ற ஒரே இடம் வாலிவதை. “செம்மை சேர் இராம நாமம்” எனும் இடத்தில் கம்பன் கூட சற்றே சறுக்கினான் என்று சொல்வீர்கள். வாலிமீது மறைந்திருந்தேனும் கணை வீசும் தகுதியும் துணிச்சலும் எவருக்கும் கிடையாது. அதானாலே தன்மீது ஒரு சரம் பாய்ந்ததும் அவன் ஆச்சரிய மிகுதியில் குழம்புவான். யாரவன் என்று வினவுவான். 'தேவரோ?' என அயிர்க்கும்; 'அத் தேவர், இச் செயலுக்கு ஆவரோ? அவர்க்கு ஆற்றல் உண்டோ?' எனும்; 'அயலோர் யாவரோ?' என நகைசெயும்; 'ஒருவனே, இறைவர் மூவரோடும் ஒப்பான், செயல் ஆம்' என மொழியும். “ஒருவனே, இறைவர் மூவரோடும் ஒப்பான், செயல் ஆம்” எல்லாம் கம்பன் மாத்திரமே பண்ணக்கூடிய நுட்பங்கள். நீங்கள் சொல்லச்சொல்ல, தெரு மணலில் உட்கார்ந்து கேட்டதில் கையில் வைத்திருந்த கச்சான் பக்கற் இளகிப்ப...

டமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்!

  என் அன்புக்குரிய டமில் மக்களே, ஐ தின்க், எங்க பிரசிடெண்ட் செய்யுற அபிவிருத்தி இஸ் குட். என்னால ஸ்ரீலங்கன் கிரிக்கட் அணில லீடிங் ஸ்பின்னரா இருக்கமுடியுமின்னா ஏன் இந்த ஜனங்களால முடியாது? என்னால எய்ட் ஹண்ட்ரட் விக்கட்ஸ் எடுக்கமுடியுதுன்னா, வை கான்ட் அதர்ஸ்? தமிழ் சிங்களம் என்று யாரையும் பிரிச்சு பாக்காதீங்க. நான் டீமில இருக்கறப்போ பீஸ் இருந்தது. சமாதானம். ஒருதடவை ஏசியன் லெவன் டீமுல கப்டினாக இருந்தன் தானே. ஸ்ரீலங்கன் டீமுல வைஸ் கப்டினாவும் இருந்தன். கப்டினா ஆக முடியல்ல. பட் அதுக்கு வன் ரீசன் இருக்கி. நான் சிங்களம் மிச்சம் பேசுவேன். ஆல் டமில்ஸ் நிச்சயமா சிங்களம் படிக்கணும். பிரித் ஒதேக்க நூலைப்பிடிச்சுகிட்டு கும்பிடணும். நீங்க சிங்கள படிச்சா சிங்களீஸ் தமிழ் படிக்க தேவையில்ல தானே. எதுக்கு பிறகு அவங்களும் தமிழ் படிச்சு, அப்புறமா தமிழன் சிங்களத்திலயும் சிங்களவன் தமிழிலையும் பேசி குழம்பி போய், வேஸ்ட்டு. அச்சுவலி வி நீட் வன் பாஷா திட்டம்.

சப்புமல் குமாரயாவின் புதையல்

  குளித்துக்கொண்டிருக்கும்போது கிணற்றடிக்கு அம்மா வந்தார். "யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளை உன்னை தேடிக்கொண்டு வந்திருக்கு" கிணற்றடியில்  நின்றவாறே அடைப்பு வேலி விரிசலுக்குள்ளால் முற்றத்தைப் பார்க்கலாம். சொப்பர் சைக்கிள், கறுப்புப்பாவாடை, சிவப்புச்சட்டை, முகம் கிளியராக தெரியவில்லை. தேவையில்லை. இது தாரணிதான். காதருகே மச்சம், இரட்டைப்பின்னல், ஒருபக்க கண் இமை நீளம், கிறங்கடிக்கும் .. என்று வழமையான கதை என்றால் வர்ணனையிலேயே புங்குடுதீவு வரையும் போயிருப்பேன். அந்தளவுக்கு தாரணியை விடாமல் முன்னே பின்னே துரத்தியிருக்கிறேன். 143 சொல்லியிருக்கிறேன். அதான், I LOVE YOU. அவள் கொஞ்சம் ஒபின் டைப். திருப்பி 143 என்றாள். எனக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. அன்றைக்கே கல்யாணியில் பெடியளுக்கு ஸ்பெஷல் வாங்கிக்கொடுத்தேன். ஒருநாள்தான். அடுத்தநாள் வந்து விளக்கம் கொடுத்தாள். 143 என்றால் அவள் அகராதியில் I HATE YOU வாம். இப்படி நிறையச் சொல்லவேண்டும்.  ஆனால் இந்தக் கதையில் அதைச் சொல்ல முடியாது. காரணங்கள் இரண்டு. முதலாவது, இந்தக்கதையில் அடுத்த இரண்டு வரிகளில் "உம்மளை ஒருக்கா பி.கே சேர் வரச்சொன்னார்...