Skip to main content

புலம்பெயர் எரிபொருள் கியூ



இன்று வீட்டிலிருந்துதான் வேலை. அடுத்த அரை மணி நேரத்தில் ஆரம்பிக்க இருக்கும் அலுவலகக் கூட்டத்துக்கான தயார்ப்படுத்தல்களைச் செய்துகொண்டிருந்தேன். புதிய திட்ட வரைபு ஒன்று அது. நான்தான் அதனை அறிமுகம் செய்து உரையாடவேண்டும். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், பிரதானத் தொழில்நுட்ப இயக்குநர், சைபர் பாதுகாப்பு நிபுணர் எனப் பல முடிவெடுக்கும் புள்ளிகள் பங்கெடுக்கும் கூட்டம் அது. காலையில் குடித்த கோப்பி வயிற்றைக் கலக்கிக்கொண்டிருந்தது.

அப்போதுதான் யாழ்ப்பாணத்திலிருக்கும் கௌரியிடமிருந்து வாட்ஸப் தகவல் ஒன்று மின்னியது. திறந்தேன். அவுஸ்திரேலியாவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் முண்டியடிக்கும் படம் அது.
அக்கணமே என் பனங்கொட்டை மூளை விழித்துக்கொண்டது. என்னுடைய மகிழுந்தில் எரிபொருள் அரை டாங்க்தான் இருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் முழு டாங்க் அடித்தேன். ஆனால் வார இறுதியில் ஒரு புத்தக வெளியீட்டுக்குப் போய் வந்ததில் அரைவாசி புகைந்துவிட்டது. மீதி இருப்பது இந்த வாரம்கூட தாங்காது. அதற்குள் நம் நாட்டின் பனி அமைச்சர் டிவியில் தோன்றி மக்களைப் பனிக் ஆகவேண்டாம் என்று திருவாய் மொழிந்ததில் சும்மா இருந்த நாடு பக்கென்று பனிக் ஆகிவிட்டது. அப்போதுகூட நான் என் பாட்டில்தான் இருந்தேன். ஆனால் இனியும் பொறுக்கமுடியாது.
அலுவலகக் கூட்டத்துக்கு இருபத்தைந்து நிமிடங்கள் இருந்தன. மூன்று நிமிடத்தில் அருகிலிருக்கும் நிலையத்துக்குப் போய்விடலாம். எரிபொருள் நிரப்பி, காசு கொடுக்க ஒரு பத்து நிமிடம். எப்படியும் இருபது நிமிடங்களுக்குள் வீடு திரும்பிவிடலாம். நான் அவசர அவசரமாகக் கிளம்பினேன். காரை எடுக்க கராஜுக்குள் நுழைந்தபோது அருகில் கிடந்த ஐந்து லீட்டர் கேன் கண்ணில் பட்டது. பிரிட்ஜிலிருந்த மூன்று லீட்டர் பால் கேனைக் காலியாக்கி அதற்குள் கேனில் கிடந்த பெற்றோலை இட்டு நிரப்பினேன். அப்படியும் கால் லீட்டர் மீதமிருந்தது. அதனை ஒரு கோக் போத்தலுக்குள் விட்டேன். பின்னர் காலி ஐந்து லீட்டர் கேனோடு வீட்டிலிருந்து புறப்பட்டால், இரண்டாவது நிமிடமே நிலைமை மோசமென்று புரிந்துவிட்டது. எரிபொருள் வரிசை வீதிக்குள் நீண்டு, வட்டச்சந்தியால் திரும்பி பிரதான வீதிக்குள்ளும் நுழைந்திருந்தது.

வெளிநாட்டுக்காரர் எண்டால் எந்த வரிசையிலும் ஒழுங்காக நிப்பினம், எங்கட ஆக்கள்தான் மோசம் என்று ஒரு ஐதீகம் நம்மிடையே புழங்குகிறது அல்லவா? எம் புலம்பெயர் தமிழரும் ஊர் திரும்பும்போது அங்கு நிற்கும் வரிசைகளைப் பார்த்துக் குறை சொல்லி அங்கலாய்ப்பார்கள். எங்கட சனத்தைத் திருத்தவே ஏலாது என்பார்கள். ஆயினும் வளம் தாராளமாக அமைந்து, பொருளும் சேவையும் நமக்கு விரைவிலேயே கிடைத்துவிடும் என்ற நிலை இருக்கும்போது வரிசையில் ஒழுங்காக நிற்பதை யாரும் செய்யலாம். ஆனால் முதல் பத்துபேருக்குத்தான் எண்ணெய் கிடைக்கும், அந்த முதல் பத்துப்பேரும்கூட தத்தமது பதினைந்து சொந்தக்காரருக்கும் சேர்த்து வாங்குவார்கள் என்ற நிலை உருவாகையில்தான் தெரியும் வெளிநாட்டுக்காரரின் வண்டவாளம். இங்கும் அதுதான் நடந்தது. எரிபொருள் நிரப்ப வந்தவர்கள் எல்லோரும் எக்ஸ்றாவாக ஒரு கேனையும் எடுத்துவந்து நிரப்பினார்கள். பின்னால் வரிசையில் காத்திருந்தவர்கள் கடுப்பில் ஹோர்ன் அடித்தார்கள். சிலர் குறுக்கே புகுந்தார்கள். நடு விரல்கள் நாலா பக்கங்களிலும் காட்டப்பட்டன. நான்கெழுத்து கெட்ட வார்த்தைகள் அத்தனைக்கும் அடை மொழிகளாகின. குதம் சார்ந்த கெட்ட வார்த்தைகள் ஒன்றிரண்டு கேட்டன. அவற்றுள் சில எரிபொருள் குதத்துக்குள் விழுந்து வெடித்தால் என்னாகும் என்ற அச்சம் எழுந்தது.
கூட்டத்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. இவ்வளவு நேரம் வரிசையில் நின்றுவிட்டு வெறுங்கையோடு வீடு திரும்புவது என்பது ஒரு யாழ்ப்பாணத்தானுக்கு பெரும் இழுக்கு. பொம்மர் அடிக்கும்போதுகூட அசையாமல் கம்மென்று இரண்டு வொண்டர் லைட் வாங்கி வந்து வீட்ட குடுத்தவன் ஒரு சாதாரண எரிபொருள் வரிசையைப் பார்த்து அஞ்சுவானா?

நான் உடனே என் செல்பேசியில் திட்ட வரைபைத் தரவிறக்கினேன். கூட்டத்துக்கான இணைப்பில் அதனை அனுப்பி என் அலுவலக நண்பரிடம் அவருடைய கணினியூடாக அதை எல்லோருக்கும் பகிரச்சொன்னேன். மகிழுந்தினுள் இருந்தவாறே கூட்டத்தை ஆரம்பித்தேன்.

வணக்கம் நண்பர்களே. நான் இப்போது எரிபொருள் வரிசையில் நிற்கிறேன். ஆனாலும் பேச முடியும்.

அப்படியா? நாங்கள் வேண்டுமானால் வெயிட் பண்ணுகிறோம். எரிபொருள் முக்கியம். அதைப்போய் நிரப்புங்கள்.

இல்லை. வரிசை மெதுவாகத்தான் நகருகிறது. நாம் ஆரம்பிக்கலாம்.

நல்லது. அங்கு என்ன விலை போகிறது?

இரண்டு டொலர் இருபது செண்ட்ஸ். என்னிடம் நாலு செண்ட்ஸ் வவுச்சர் இருக்கு. கூடுதலாக ஆர்.ஏ.சி.வி வவுச்சர் ஒரு மூன்று செண்ட்ஸ் வரலாம். ஆக இரண்டு டொலர் பதின்மூன்று செண்ட்ஸ் முடிகிறது. நாளைக்கு விலை மூன்று டொலரைத் தாண்டலாம் என்கிறார்கள்.

சும்மாதான் அடித்துவிட்டேன். என் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு, நும் செயலுக்காக நீவிரும் தவித்தால்தான், நிறைவு பெறும் என் எண்ணம்.

ஐயய்யோ. ஆர்.ஏ.சி.வி வவுச்சர் மூன்று செண்ட்ஸ் வருமா? எனக்கு இந்த விசயம் தெரியாதே?

கேட்டவர் அவுஸ்திரேலியாவின் பல பில்லியன்கள் பெறுமதியான நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர்களில் ஒருவர். நான் கசவாரங்களுக்குப் பதில் சொல்வதில்லை.

ரெக்கோர்டிங்கை ஆரம்பித்துவிட்டு திட்ட வரைவை விளக்க ஆரம்பித்தேன்.

என் வாகனம் நிலையத்தை நெருங்கிவிட்டது. முன் வாகனத்திலிருந்து ஒரு பாட்டியும் மகளும் இறங்கினார்கள். உடல்வாகையும் வீட்டு உடையோடு வெளியே வந்ததையும் வைத்து அவர்கள் கிரேக்கர்கள் என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். மிஞ்சிப்போனால் மாஸிடோனியர்கள். அவர்கள் மொத்தமாக நான்கு கேனுகளை எடுத்து வந்திருந்தார்கள். உடனே உள்ளே நிலையத்தில் பணி புரியும் வட இந்திய இளைஞன் ஓடி வந்தான். ஆளுக்கு ஒரு கேன் மட்டுமே அனுமதி என்று அவர்களிடம் சொன்னான். பாட்டி தனக்கு மூன்று கேன் வேண்டுமென்று அவனோடு சண்டை போட்டது. அவன் இல்லை, இது கம்பனி பொலிசி என்று சொல்ல, இரு பகுதியும் இழுபறிப்பட்டார்கள். நேரமும் இழுபட்டுக்கொண்டேயிருந்தது. வரிசையில் நின்றவர்கள் சத்தமாக ஹோர்ன் அடித்தார்கள். நான் அலுவலக நண்பரிடம் மீதி வரைபை விளக்குமாறு சொல்லிவிட்டு என்னை மியூட் பண்ணினேன். இதற்குள் யாரோ காவல் துறையை அழைத்துவிட்டார்கள். பாட்டி அவர்களோடும் சண்டை போட்டபடி அங்கேயே சக்கப்பணியாரம் குந்திவிட்டது. எண்ணெய் நிரப்பாமல் அங்கிருந்து கிளம்பமாட்டேன் என்றது. காவல் துறையினர் வேறு வழியில்லாமல் நான்கு கேன்களையும் எடுத்து அவர்களே நிரப்ப ஆரம்பித்தார்கள்.

எனக்கு இருப்புக்கொள்ளவில்லை. உடனே மனைவிக்கு அழைப்பெடுத்தேன். அவள் என்னவென்று கேளாமலேயே ஆரம்பித்தாள்.

எங்க எருமை பரதேசம் போனமாதிரி போயிட்டாய்? மீட்டிங் கான்சலா?

அத விடு. இஞ்ச ஒரு மனிசி பொலீசோட சண்டை பிடிச்சு நாலு கேன் நிரப்புது.

அதுக்கு?

பத்தி டின் ஷெட்டுக்க இரண்டு அஞ்சு லீட்டர் கேன் எக்ஸ்றாவா கிடக்கு. நான் மறந்துபோயிட்டன். 

அச்சாப்பிள்ளை. எடுத்துக்கொண்டு ஓடி வாறியா?

அவளிடமிருந்து ஒரு வசை ஓடி வந்தது. அதனை இங்கே பதிய வேண்டாம். மரியாதை இல்லை. இப்போது என்ன செய்வது? வேண்டுமானால் ஓடிப்போய் பக்கத்திலேயே இருக்கும் பால் கடையில் இரண்டு ஐந்து லீட்டர் பாலை வாங்கி எங்காவது மைல் கல்லுக்கு அபிசேகம் செய்துவிட்டு அவற்றுள் பெற்றோலை நிரப்பினாலும் இலாபம்தான் என்று தோன்றியது.

இதற்கிடையில் அலுவலகக் கூட்டத்தில் யாரோ கேள்வி கேட்டார்கள். நான் அழைப்பைத் துண்டித்துவிட்டுக் கூட்டத்தை அன்மியூட் பண்ணிப் பதில் சொன்னேன்.

இது மொத்தமுமே GenAI first அணுகுமுறைதான். வழமையாக ஆறு மாதங்கள், இரண்டு மில்லியன் டொலர்கள் செலவாகக்கூடிய திட்டம் இது. இப்போது இரண்டு 10X பொறியியலாளர்களையும் அன்லிமிட்டட் டோக்கன்களும் கொடுத்தால் இரண்டு மாதங்களில் முடித்துவிடலாம். மீதி எல்லாவற்றையும் சேர்த்தால்கூட அரை மில்லியன் செலவாவதே சந்தேகம்தான்.
நான் சொல்லிக்கொண்டே இருக்கையில், வெள்ளை மகிழுந்து ஒன்று எனக்கு முன்னாலே மூக்கை நுழைக்க முயன்றது. வந்ததே எனக்குக் கோபம்.

அடேய் பரதேசி. நாசமாய்ப் போவாய். டம்மி பொம்மி.

நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் கெட்ட வார்த்தைகளைக் கொட்டியபடி என் மகிழுந்துக் கதவைத் திறந்தேன்.

செல்பேசியில் என்னை மியூட் செய்ய மறந்தவனாய்.

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.