Skip to main content

தாயகம் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வெற்றிக்கிண்ணம்



கரப்பந்தாட்டத்தின் ‘over game’ வடிவம் தொழில்முறை விளையாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கு ஒழிந்து வந்தாலும் ஊர் மக்களிடையே அது மிகப்பிரபலமானது. நான் முதன்முதலாக இதனை விளையாடியது அத்தியடியில்தான். தொண்ணூறுகளில் அத்தியடிலிருந்த பிரியா வீட்டுக்குப் பின் வளவில் ஒரு பெருங்கூட்டமே அந்நாள்களில் கரப்பந்து விளையாட மாலை நேரங்களில் கூடிவிடும். பகல் முழுதும் வேலை செய்தவர்கள் எல்லோரும் வீட்டுக்குப் போய் ஒரு டீ குடித்துவிட்டு ஐந்து மணிக்குள்ளே திடலுக்கு வந்துவிடுவார்கள். அப்படி வருபவர்கள் பலரும் கரப்பந்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். அவர்கள் பந்தை உருட்டி, உருட்டி அடிக்கும் இலாவகத்தைப் பார்ப்பதே சுவாரசியமாக இருக்கும். விளையாட்டில் சுதி ஏறினால் தூஷணங்களும் பறக்கும். என்னைப்போன்ற பதின்மத்தவர்கள்தாம் அதிகம் வாங்கிக்கட்டுவார்கள். பந்துக்குப் பாயாவிட்டால், பந்து பறிக்க அடித்தால், மற்றவர் பந்துக்குப் பாய்ந்தால், ஏன் அவர்கள் பிழை விட்டால்கூட நமக்கே ஏச்சு விழும்.
 
அத்தியடி வெறும் வளவில் நாம் விளையாடியதுபோல ஊர் முழுதும் கோயிலடிகளிலும் சனசமூக நிலையங்களிலும் வெளிநாடு, கொழும்பு என்று புலம்பெயர்ந்தவர்களின் வெறும் வளவுகளிலும் இப்படிப் பல கரப்பந்தாட்ட குழுக்களின் மைதானங்கள் அமைந்திருந்தன. அவ்வப்போது இவர்களுக்கிடையே கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகளும் நிகழ்த்தப்படும். இக்குழுக்களின் பரம்பலும் அவர்களிடையேயான நட்பும் அவர்களின் கூட்டுச் செயற்பாடுகளும் ஒரு சமூகப் பண்பாட்டு வடிவம் என்பதும் குறிப்பிடப்படவேண்டியது.

புலம்பெயரும் ஈழத்தமிழர்கள் பலரும் தாம் செல்லும் நிலமெங்கும் இந்த ‘over game’ கரப்பந்தாட்ட வடிவத்தைக் கொண்டுசெல்லத் தவறுவதில்லை. கொழும்பிலிருந்த காலத்தில் நண்பர்கள் சேர்ந்து இதனை விளையாடியிருக்கிறோம். சிங்கப்பூரிலும் ஒவ்வொரு ஞாயிறும் இதற்காகக் கூடுவோம். அவுஸ்திரேலியாவில் கடந்த பத்தாண்டுகளாக வெள்ளி, ஞாயிறு என இரு தினங்களும் நண்பர்கள் நாம் தொடர்ந்து விளையாடி வருகிறோம். குளிர்காலம் வந்தால் உள்ளக அரங்கை வாடகைக்கு எடுத்து விளையாடுவோம். மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மலையகம் எனத் தத்தமது ஊர்களில் விளையாடியவர்கள் எல்லோரும் ஒவ்வொருத்தராக இன்று நம்மோடு வந்து இணைகிறார்கள். அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர்களும் இதனைப் பழகிக்கொள்கிறார்கள். எட்டு, பத்து என்று ஆரம்பத்திலிருந்த எண்ணிக்கை இருபது, முப்பது என்று ஆனதும் அதிலிருந்து NTSC என்கின்ற சமூகக் கழகமே உருவாகி, கரப்பாந்தட்டத்தோடு நில்லாது ஏனைய பல நிகழ்வுகளையும் அது முன்னெடுக்கத் தொடங்கிவிட்டது. கரப்பந்தினூடு இணைந்துள்ள இச்சமூகத்தின் பல்முகத்தன்மை என்பது மிக முக்கியமானது. இதுபோலவே மெல்பேர்னின் தென் கிழக்குப் பகுதியில் தாயகம் என்றொரு கழகமும் கரப்பந்தாட்டத்தில் ஆரம்பித்து வேறு பல முயற்சிகளையும் இப்போது செய்கிறது. எல்லோருமே விளையாட்டினூடு நண்பர்களானவர்கள்தாம்.

இப்படியான கழகங்களுக்கிடையே ஒரு பெரும் சுற்றுப்போட்டியைக் கடந்த இரண்டு வருடங்களாக நமது NTSC கழகம் நடத்தி வந்தது. இம்முறை அப்போட்டியைத் தென் கிழக்கை மையமாகக்கொண்ட தாயகம் விளையாட்டுக் கழகம் எடுத்து நடத்தியது. மொத்தமாக எட்டு கழகங்கள் கலந்துகொண்ட போட்டி இது. வெற்றி அணிக்குக் கேடயத்தோடு ஆயிரம் டொலர்கள் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டது.

இம்முறை அந்த ஆயிரம் டொலர்களை நமது அணியான ‘NTSC Rockets’ லபக்கென்று வென்றிருக்கிறது.

விச்சு, வைகுந்தன், சுகிந்தன் அண்ணா, சிவனியோடு ஐந்தாவதாக நானும் அந்த அணியில் விளையாடினேன். இவனுகளை சமாளிக்க ஒருத்தன் வேண்டுமென்று நினைத்தோ அல்லது இவனுடைய வாயை அடைக்க இதைவிட வேறு வழி இல்லை என்று நினைத்தோ தெரியாது, அனைவரும் சேர்ந்து என்னை அணியின் தலைவராக நியமித்தார்கள். உயிரைக்கொடுத்து விளையாடினார்கள். ஊரில் செய்வதைப்போல முக்கிய தருணங்களில் பரஸ்பரம் தூஷண மழை பொழிந்தார்கள். போட்டி முடிந்ததும் எல்லோரும் எல்லோரையும் சென்று கட்டியணைத்து அன்பு பாராட்டினோம். 

இறுதியாட்டத்தில் எம்மோடு விளையாடி இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டதும் எமது கழகத்தைச் சேர்ந்த அணியே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த அணிகளைச் செவ்வனே தெரிவு செய்தவர்களுக்கும் எம் நன்றிகள்.
 
ஒவ்வொரு வருடமும் இவ்வகையான சுற்றுப்போட்டிகளில் பங்கெடுப்பதுண்டு. கிண்ணங்களையும் பல தடவைகள் பெற்றுக்கொண்டதுண்டு. ஆனால் இந்தத்தடவை மொத்தச் சுற்றுப்போட்டியும் மனதளவில் திருப்தியைக் கொடுத்தது. தாயகம் கழகத்தினர் மிகச்சிறப்பாகப் போட்டியை ஒருங்கமைத்திருந்தனர். கரப்பந்தாட்டம், கிளித்தட்டு என்றாலே சண்டையில்தான் முடியும் என்ற நிலை மாறி, இத்தடவை போட்டிகள் சச்சரவு ஏதுமின்றி இனிமையாக நடந்தேறியது.

ஊருக்கேயான சில அனுபவங்களையும் என்னால் பெற்றுக்கொள்ளமுடிந்தது.

ஒன்பதுக்கு எட்டு, இன்னும் இரண்டு புள்ளிகள் எடுத்தால் கிண்ணம் என்ற கணம் ஒன்று வந்தது. காற்றுக்கு எதிரான திசையில் விளையாடுகிறோம். எல்லோருக்குமே பதற்றமிருந்தது. அப்போது ஒலி பெருக்கியில் ‘முந்தி எங்கள் பரம்பரையின் கடலம்மா’ என்ற பாட்டுச் சத்தமாகப் போகிறது. அருகில் நின்ற வைகுந்தன் ‘கரை முற்றும் நாங்கள் குடியிருந்த மடியம்மா’ என்று பாடிக்கொண்டே, வலப்பக்க தேர்ட் மூலையில் பந்தை ஓங்கி அடித்தான். பந்து திரும்பி என்னைத்தேடி வந்தது. ‘மச்சான் மற்ற வரியை பாடிடாதை, அது பிரச்சனைக்குரியது’ என்றபடி நான் அதை அடித்தேன்.

இன்னும் பத்தாண்டுகளில் அந்த ஆயிரம் டொலர் வெற்றியை மறந்துவிடுவேன். ஆனால் இக்கணத்தை நான் மறக்கப்போவதில்லை. இக்கணங்களால்தான் வாழ்க்கை அமையப்பெற்றது என்பதிலும் மறுபேச்சு இல்லை.

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.