Skip to main content

மறை சாட்சி - சிறுகதை



தேவாலயத்தினுள்ளே மரியதாஸ் நுழையும்போது திருப்பலி ஆரம்பித்துவிட்டிருந்தது. அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்து இறைவாக்கினைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மரியதாஸ் ஓசை ஏதும் எழுப்பாமல் பின்னாலே ஒரு ஓரமாகப் போய் நின்றுகொண்டான். அவன் அப்படித் தயக்கத்தோடு நிற்பதைக் கவனித்த கடைசி வாங்கிலில் உட்காந்திருந்த பெண்மணி ஒருவர், அருகில் வந்தமருமாறு அவனுக்கு நகர்ந்து இடங்கொடுக்க, மரியதாஸ் அவரைப்பார்த்து சங்கடமாகப் புன்னகைத்தபடி மெதுவாக அங்கு சென்று உட்கார்ந்தான்.

இத்தாலிய மொழியிலே பிரார்த்தனை இடம்பெற்றுக்கொண்டிருந்தது. வழக்கம்போலவே பாதர் டொல்டோ திருப்பலியை ஒப்புவித்துக்கொண்டிருந்தார். வானவர் கீதம் ஆரம்பித்திருக்கவேண்டும். பிரார்த்தனையின் நடுவே அவ்வப்போது சொல்லப்பட்ட ‘ஆமென்’ வார்த்தையைத் தவிர வேறெதுவும் மரியதாசுக்கு விளங்கவில்லை. அவன் வேண்டியதும் அதனைத்தான். மொழி புரியாதது அவனுக்கு வசதியாக இருந்தது. அவன் எந்தச்சலனமுமில்லாமல் தேவாலயத்து விதானத்திலிருந்த இயேசுவின் ஓவியத்தையே வெறித்துப்பார்த்தபடி அங்கே அமர்ந்திருந்தான்.

அடைக்கலராசா பாதர் தன் மென்மையான குரலில் கடவுளின் புகழைச் செபித்துக்கொண்டிருந்தார்.

உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக.

பூவுலகில் நல் மனத்தோருக்கு அமைதியும் ஆகுக.
உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம். உம்மை மகிமைப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சிமையின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.

நிற்செலாவுக்குப் பொறுமை கெட்டுக்கொண்டிருந்தது. அவள் அவனது கையைப்பிடித்துத் தொங்கியபடியே ‘போயிடுவம் அப்பா, வாங்க’ என்று தொந்தரவு பண்ணிக்கொண்டிருந்தாள். ‘சத்தம்போடாம கும்பிடு’ என்றால் இரண்டுமுறை சொல்வழி கேட்பாள். கொஞ்சம் உறுக்கினால் போதும், அழ ஆரம்பித்துவிடுவாள். தேவாலயத்துக்கு வெளியே அவளை ஒத்த சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். இவன்தான் மனம் கேளாமல் அவளைக் கையோடே கூட வைத்திருந்தான். இனி அவளைச் சமாளிக்கமுடியாது. அவன் ஒருமுறை வாசலுக்கு வெளியே எட்டிப்பார்த்துவிட்டு, ‘றோட்டுப்பக்கம் போகக்கூடாது’ என்று அவளை எச்சரித்து அனுப்பிவைத்தான். இனியாவது கொஞ்சம் நிம்மதியாகப் பிரார்த்தனை செய்யலாம் என்று நினைத்தால், ம்ஹூம், முடியவில்லை. சிந்தனை எல்லாம் நிற்செலாமீதே இருந்தது. அவள் வீதிப்பக்கம் போய்விடுவாளோ என்று அச்சமாக இருந்தது. நான்கு வயதுகூட ஆகாத பிள்ளை. யாராவது சிறுவர்கள் அவளைச் சின்னதாகத் தள்ளிவிட்டாலே விழுந்துவிடுவாள். ஊரியில் முழங்கால் தேய்பட்டு இரத்தம் வடிந்தபடி ‘அப்பா…’ என்று கத்திக்கொண்டு ஓடி வருவாள். ஆலயத்தில் பிரார்த்தனை இடம்பெறுகிறது என்ற சுரணைகூட அவளுக்கு இருக்காது.

ஆண்டவராகிய சர்வேசுரா. வானுலக அரசரே.
ஏக சுதனாய் செனித்த ஆண்டவரே.
சர்வேசுரனின் செம்மறியே. பிதாவின் சுதனே. உலகின் பாவங்களைப் போக்குபவரே.
எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.
ஏனெனில் இயேசுக்கிறிஸ்துவே நீர் ஒருவரே பரிசுத்தர்.
நீர் ஒருவரே ஆண்டவர். நீர் ஒருவரே உன்னதர்.

வெளியில் நிற்செலாவின் பேச்சு, சந்தடி ஏதும் கேட்கிறதா என்று மரியதாஸ் காது கொடுத்துப்பார்த்தான். லோஞ்சி ஒன்று கரையை அண்மித்துக்கொண்டிருந்த சத்தம் கேட்டது. காகங்கள் இடைவிடாது கரைய ஆரம்பித்திருந்தன. யாரோ மீன் பொரித்துக்கொண்டிருந்த வாசம் வந்தது. பக்கத்தில் எங்கேயோ ஆட்டுக்குட்டி ஒன்று ‘மே..’ என்று சத்தமாகக் கத்திக்கொண்டிருந்தது. கோயில் வளவின் கதியால் வேலிப்பொட்டுக்குள் அதன் கழுத்தில் கட்டியிருந்த முக்காலி மாட்டுப்பட்டிருக்கவேண்டும். பயத்தில் அது அலறியது. அருகில் இன்னொரு ஆட்டினுடைய கத்தலும் கேட்டது. தாய் ஆடாக இருக்கவேண்டும். வெகுதூரத்தில் ‘புக்’ என்று ஒரு குண்டுச்சத்தம் சன்னமாகக் கேட்டது. வெள்ளாங்குளம் கடல் பக்கமாக இருக்கலாம். அல்லது இரணைதீவாகவும். இலையான்கள் இரண்டு மாறிமாறி அவனின் காதடியில் இரைந்தபடியே இருந்தன.

கடல் சன்னமான அலைகளோடு கரையை இடையறாது மோதிக்கொண்டிருந்தது. அலைகள் எழுப்புகின்ற ஓசை எங்கே போனது என்று மரியதாஸ் கூர்ந்து தேடிப்பார்த்தான். பாறைகளோடு மோதும்போது ஒரு ஓசை. மோதிச் சலியும்போது இன்னொரு ஓசை. திரும்பிவரும் அலையோடு நெரிபடும்போது ஒரு ஓசை. மணலோடு சேர்ந்து கரைசலாகும்போது ஒரு ஓசை. மீளவும் மணலைச் சுருட்டியபடி அது கரையைவிட்டுத் திரும்பும்போது ஒரு ஓசை. எதுவுமே அவனுக்குக் கேட்கவில்லை. எதையுமே அவனால் நினைவுகூர முடியாமலிருந்தது. கடல் மணலைச் சிறிது சிறிதாக அரித்து எடுத்துச்செல்வதுபோல காலமும் தொலைவும் அவன் நினைவுகளை அவனிடமிருந்து அரித்து எடுத்துக்கொண்டிருக்கின்றன என்று தோன்றியது. எவ்வளவுக்கு அணை கட்டினாலும் நினைவுகள் அவனிலிருந்து நீங்கி, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்தே போகின்றன. அவன் தன் அப்பாவின் குரல் ஞாபகத்திற்கு வருகிறதா என்று யோசித்துப்பார்த்தான். சலனமற்றுக்கிடந்த அவருடைய உடல்தான் கண்முன்னே வந்தது. இடதுபக்க நெஞ்செலும்புக்கூடு கிழிக்கப்பட்டு. வேறு காயங்கள் ஏதுமில்லை. மனிதர் இன்னமும் ஒரு முப்பது வருடங்களாவது வாழ்ந்திருக்கவேண்டியவர். அப்பாவின் மரணத்தின்போது அவன் ஏன் அழவேயில்லை என்று யோசித்தான். குழிக்கு ஆழம் போதாதோ என்று எண்ணித் தயங்கியதுதான் ஞாபகம் வந்தது. ‘ஐயோ என்ர ஏசுவே’ என்று அம்மா தொடர்ந்து அரற்றிக்கொண்டிருந்ததும், ‘மரியதாஸ்.. மெனக்கடேல்லா, வெள்ளன முடி’ என்று பாதர் அவசரப்படுத்தியதும். அப்பாவுக்காக சின்னதாகப் பிரார்த்தனை செய்யக்கூட அன்றைக்குச் சமயம் கிட்டவில்லை. பின்னாலே அவனுக்கு அது என்றைக்கும் தோற்றவுமில்லை. பத்தோடு பதினொன்றாக கூட்டாக இறந்துபோனதால் அப்பாவின் இழப்பு அவனைப் பெரிதாகத் தாக்கவில்லையோ என்று அவன் யோசித்தான்.

அவன் எவ்வளவு விரட்டினாலும் இலையான்கள் காதுகளை விட்டு நகராமல் தொந்தரவு பண்ணிக்கொண்டிருந்தன. அந்த ஆட்டுக்குட்டி இப்போது ஈனசுரத்தில் ஓலமிட ஆரம்பித்திருந்தது. போய் அதன் முக்காலியை விலக்கிவிட்டு வந்தால் ஒழிய தொடர்ந்து அவனால் பிரார்த்தனையில் ஒன்றுபடமுடியாது என்று தோன்றியது. கையோடு நிற்செலாவையும் உறுக்கிக் கூட்டிவந்துவிடவேண்டும். மரியதாஸ் சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லோரும் ஆழமாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார்கள். அவன் அரவம் ஏதும் எழுப்பாமல் அங்கிருந்து மெல்லமாக வெளியேறினான்.

அடைக்கலராசா பாதரின் மென்மையான குரல் அவனைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.

ஒரே கடவுளை விசுவாசிக்கின்றேன்.
வானமும் பூமியும் காண்பவை காணாதவை
யாவும் படைத்த எல்லாம் வல்ல பிதா அவரே.
நமக்காக அவர் போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையில் அறையுண்டு,
பாடுபட்டு அடக்கம் செய்யப்பட்டார்.
வேதாகமத்தின் படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
அவரை நான் விசுவாசிக்கிறேன்
மரித்தோர் உத்தானத்தையும்
வரவிருக்கும் மறு உலக வாழ்வையும்
நான் எதிர்பார்க்கின்றேன்.

மரியதாஸ் ‘ஆமென்’ சொல்லிக்கொண்டான். திருப்பலி முடிந்து அனைவரும் வெளியேற ஆரம்பித்திருந்தார்கள். சற்றுநேரம் முன்புவரை அந்த இடத்தில் நிறைந்திருந்த அமைதியை இத்தாலிய உரையாடல்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தன. அவர்களின் குரலைப்போலவே அவர்கள் உடல்மொழியும் உரத்துச் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் கடந்துசெல்லும்போது அவனிடம் ஒரு பரிச்சயமான புன்னகையை உதிர்த்தபடியே சென்றார்கள். அவர்களில் எவரேனும் அவனோடு நின்று பேச ஆரம்பித்துவிடுவார்களோ என்று அவனுக்குப் பயமும் சங்கடமும் ஏற்பட்டது. அவன் கண்களை மூடியபடி மீண்டும் பிரார்த்தனையில் ஆழ்ந்தான். அடைக்கலராசா பாதரின் சன்னமான குரலை அவன் மனம் தேட ஆரம்பித்தது.

தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன். அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்.
என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக்கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன்.
உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு;
அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் அதிகாரம் உண்டு.
என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்.

மரியதாசுக்கு அச்சம் உடலெங்கும் குளிர்போல பரவ ஆரம்பித்தது. மலை அட்டை ஒன்று சப்பாத்துக்குள்ளால் ஏறிக்கொண்டிருப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. திடுக்கிட்டவனாய் அவன் கால்களை உதறிக்கொண்டான். எதையோ தேடினான். இலக்கு ஏதுமின்றி அவன் கண்கள் எங்கனும் அலைய ஆரம்பித்தன. தேவாலயத்தின் விதானத்தை நுணுக்கமாக ஆராய்ந்தான். தூண்களின் உச்சிகளை. சாண்டிலியர் விளக்குகளின் தொடிசல்களை. கதவு நிலைகளின் விளிம்புகளை. எல்லா இடங்களையும் இண்டு இடுக்கு விடாமல் அவன் தேடினான். திடீரென்று எங்காவது குண்டு வெடித்துவிட்டால் என்னாகும் என்ற பயம் வந்தது. மரியாள் சிலைக்குப்பின்னாலே கிளைமோர் வைக்கப்பட்டிருந்தால்? முதலில் எந்தப்பகுதி சிதறத்தொடங்கும்? ஆலயத்தில் எத்தனை கதவுகள் இருக்கின்றன? அவற்றில் எத்தனை திறாங்குகள் போடப்பட்டு இருக்கின்றன. நெரிசலில் எத்தனைபேர் மிதிபடுவார்கள்? எத்தனை குழந்தைகள் உள்ளனர்? எத்தனை வயோதிபர்கள்? சக்கர நாற்காலி முதியவர்களுக்கு யார் உதவக்கூடும்? பாதர் என்னவாவார்? கர்த்தர் சிலைக்கு என்ன நிகழும்? ‘வெளியே ஒடிப்போங்கள்’ என்று கத்தவேண்டும் போலிருந்தது. முடியவில்லை. ஆழ்துயிலில் எழும் கொடுங்கனவின்போது நிகழ்வதுபோல அவனுக்கு மூச்சு எடுக்கவே சிரமமாக இருந்தது. வேர்த்தது. நா வறண்டு தாகம் எடுத்தது. இப்படியான சமயங்களில் வெளியே சென்று சிறிதுநேரம் காற்று வாங்கினால் பதட்டம் குறையும் என்று வைத்தியர் சொல்லியிருந்தார். அதற்கும் அடங்காவிட்டால், கையோடே கொண்டு திரியும் அவர் கொடுத்த மருந்தினைக் குடிக்கவேண்டும். அவ்விடமிருந்து வெளியேறலாம் என்றால், ஒவ்வொருத்தராக அவனைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். எப்போது எழுந்து நகரலாம் என்பதைத் தீர்மானிக்கமுடியாமலிருந்தது. ‘எக்ஸ்கியூஸ் மி’ என்ற வார்த்தையைப் பிழையில்லாமல் உச்சரிக்கமுடியுமா என்ற சந்தேகமும் வந்தது. அவன் மீண்டும் கண்களை மூடிப் பிரார்த்தனையில் மனதை ஒன்றுபடுத்த முயற்சிசெய்தான்.

ஆண்டவரே, என்னுடைய முடிவுகள் சரியானவை என்பதை உறுதி செய்யுங்கள். எனக்கும் என் குடும்பத்துக்கும் எந்தச்சிக்கலும் வராவண்ணம் காத்தருளும். வாழ்நாளெல்லாம் எங்களுக்கு உமது அமைதியைத் தந்து, முடிவில்லா அழிவிலிருந்து எங்களைக் காப்பாற்றி , நீர் தேர்ந்து கொண்டவர்களின் கூட்டத்தில் எம்மைச் சேர்த்தருளும்.

கூட்டம் முற்றாக வெளியேறி ஆலயத்தின் அமளி அடங்கும்வரை மரியதாஸ் கால்கள் நடுங்க, கைகளைக் குறுக்கி மடித்தபடி அமர்ந்திருந்தான். ஈற்றில் அவன் போகலாம் என்று எழுந்தபோது பாதர் டொல்டோ சிரித்த முகத்துடன் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தது தெரிந்தது. அந்தத் திருப்பலிக்கு வருகின்ற அனைவருமே இத்தாலியர்கள் என்பதால் எல்லோருமே அவனைத் தெரிந்து வைத்திருந்தார்கள். வெள்ளைச் செம்மறிக்கூட்டத்தின் ஒரே கறுப்பு ஆடு என்று அவர்கள் அவனை ஞாபகப்படுத்தக்கூடும் என்று அவன் எண்ணுவதுண்டு. இரண்டாவது திருப்பலியின்போதே பாதர் அவனைப்பற்றி விசாரித்து அறிந்துவிட்டார். அவன் அங்கு வருவதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியையும் தெரிவித்தார். நண்பர்களையும் குடும்பங்களையும்கூட பிரார்த்தனைக்கு அழைத்துவரச்சொன்னார். பழகுவதற்கு மிக இனிமையான மனிதர்.

அவன் சிறு பதட்டத்துடன் அவரைப்பார்த்துப் புன்னகைத்தான்.

"ஹலோ மர்யதாஸ்… ஹவ் ஆர் யு?"

பதிலுக்கு அவன் ‘குட்மோர்னிங் பாதர்’ என்றான். அதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. இந்த நாட்டுக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் ஆங்கிலம் சுட்டுப்போட்டாலும் அவனுக்குக் கைவருவதாயில்லை. சிறுவயதில் பள்ளியில் படித்த சில ஆங்கில வார்த்தைகளே இன்னமும் வாய்க்குள் உழல்கிறதே தவிர புதிதாக எந்த வார்த்தையையும் அவனால் பழகிக்கொள்ளமுடியாமலிருந்தது. சிங்கள மொழியைக்கூட அவன் இலகுவாகப் பேசப்பழகிவிட்டிருந்தான். ஆனால் பேச முனையும்போதெல்லாம் ஆங்கிலமொழி எப்படியோ அவனை ஒருவித தாழுவுமனப்பான்மைக்குள் தள்ளிவிடுகிறது. என்னைப்பேச உனக்கு எந்தத் தகுதியுமில்லை என்று அது அவனை மலினம் செய்கிறது. தேவாலயத்தின் ஆங்கிலப்பிரார்த்தனையில் அவன் கலந்துகொள்ளாமல் விட்டமைக்கும் அதுவே காரணம். அந்த மேட்டிமை மொழியில் இறைவனைப் பிரார்த்திப்பது இயலாத காரியமாகிறது. அந்தக்கூட்டத்தில் அவனுடைய பிரார்த்தனைகள் இறைவனால் புறக்கணிக்கப்பட்டுவிடலாம் என்றும் தோன்றியது. அந்த மனிதர்களும் இயல்பாகப் பழகுவதில்லை. புன்னகை செய்வதில்லை. அகதி என்பதாலோ என்னவோ, அவனிலிருந்து அவர்கள் எப்போதும் எட்டியே இருக்கிறார்கள். அல்லது கழிவிரக்கம் காட்டுகிறார்கள். அல்லது அவர்களது மொழி அவனை அப்படி நினைக்கவைக்கிறது. இத்தாலியர்கள் மத்தியில் ஏனோ அவன் அதை உணருவதில்லை. அவர்களுக்கு அவன் யார், எங்கிருந்து வந்தவன் என்ற எண்ணங்கள் பெரிதாக உறுத்துவதில்லை. இத்தாலியர்கள் ஆங்கிலம் பேசும்போது ர, ட போன்ற ஒலிகளைத் தமிழர்களைப்போலவே அழுத்திப்பேசுகிறார்கள். அது அவனுக்கு அவர்களிடத்தில் ஒரு பரிச்சயத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர்கள் அவனைக் கட்டியணைக்கும்போது அவர்களின் மேல்கோட்டிலிருந்து எழும் நாற்றத்தில் எப்போதும் ஒரு அன்னியோன்னியத்தையே அவன் உணருகிறான். அவனுடைய சொந்த நாற்றமும் அதில் எப்படியோ கலந்துவிடுகிறது என்று நம்பிக்கொள்கிறான்.

“குட் நியூஸ் மர்யதாஸ். வி ஆர் ஸ்டார்டிங் எ டமில் மாஸ் ஸூன் ஹியர்”

பாதர் அவனுக்கு விளங்கும்வண்ணம் ஆங்கிலத்தை ஆறுதலாகவே பேசினார் என்று தோன்றியது. எப்படிப் பதில் சொல்வது என்றுதான் அவனுக்குத் தெரியவில்லை. தமிழில் திருப்பலி ஆரம்பித்தாலும் அவன் தொடர்ந்து இத்தாலியத் திருப்பலிக்கே விரும்பி வருவான் என்பதை எவ்வாறு அவருக்கு விளக்குவது? இங்கேதான் குழப்பமில்லாமல், அடைக்கலராசா பாதரின் குரலில், அவன் கிராமத்துச் சூழலில் திருப்பலியில் பங்கெடுக்கமுடியும் என்பதை எப்படி இவருக்குச் சொல்லுவது? இங்கே தமிழர்களோடு சேர்ந்து பிரார்த்தனை செய்வது ஆகவே ஆகாது. கணநேரம் இடைவெளி கிடைத்தால் குசுகுசுப்பார்கள். எப்போதும் யாரோ ஒருவரது தொலைபேசி நாராசமாய் இடைநடுவே ஒலித்தபடியே இருக்கும். எல்லோரும் அவனை ஒரு கண்காட்சிப்பொருள்போல பார்ப்பார்கள். அவனில்லாத சந்தர்ப்பங்களில் அவன் பெயர் ‘கப்பல்ல வந்த பெடியன்’ என்றே விளிக்கப்படும். அந்த விளிப்பில் அவன் ஏழ்மை, அவன் கையறு நிலை, கல்வியறிவு, சாதி, அகதி விண்ணப்பம், உடை எல்லாமே பிசின்போல ஒட்டி இழுபடும். ‘இந்தக் கப்பல்ல வந்தவங்கள்தான் இப்ப எங்கட வீடுகளில பூந்து களவெடுக்கிறது’ என்று முன்வாங்கிலில் இருந்து குசுகுசுப்பவர்களைச் செவிமடுக்கவேண்டியிருக்கும். பிரார்த்தனை முடிந்ததும் தெரிந்தவர்கள் வந்து அவனிடம் புல்லு வெட்டுவதற்கும் பெயிண்ட் அடிப்பதற்கும் அறா விலைக்குக் கூலி பேசுவார்கள். முன்னர் வேலை வாங்கிவிட்டு அவனுக்கு கூலிப்பணத்தைக் கொடுக்காதவர்கள் அவனை ஒரு தீண்டத்தகாதவன்போல ஒதுக்கி, திரும்பிக்கூடப்பார்க்காமல் நடப்பார்கள். சிலர் பழைய உடுப்பு வேண்டுமா என்று கேட்பார்கள். எல்லோரும் எப்போதும் அவன் ஒரு அகதி என்பதை உணர்த்திக்கொண்டே இருப்பார்கள். இத்தாலிய திருப்பலியில் இந்தச் சிக்கல்கள் எதுவுமே இருப்பதில்லை. அங்கே அவன் மொழிகளையும் கடந்த, சாதி சமூக நிலை கடந்த, இறை நம்பிக்கைகொண்ட ஒரு சக பக்தன் மட்டுமே. இதை எல்லாம் அவன் இந்த டொல்டோ பாதருக்கு விளக்கமுடியாது. எப்படி விளக்குவது என்றும் தெரியாது. விளக்கவேண்டிய தேவையும் இனிமேல் வரப்போவதில்லை.

“ஐ கோ டு ஶ்ரீலங்கா பாதர்”

“வாவ்.. நைஸ்… ஹவ் லோங்?”

அவன் தயங்கினான். நிரந்தரமாகவே போகப்போவதை எப்படி அவருக்குச் சொல்லுவது?

“நோ கம் பாக் பாதர்.. கோ பேர்மனண்ட்.. விசா ரிஜெக்டட்”

பாதர் சற்று அதிர்ச்சியடைந்தவர்போலத் தெரிந்தார். அவரும் ஒரு அகதிக்குடும்பத்திலிருந்தே வந்திருக்கக்கூடும். இங்குள்ள அனேகமான இத்தாலியர்கள் இரண்டாம் உலக யுத்தத்தின்பின்னர் குடியேறியவர்கள்தாம். அதனாலேயே இத்தாலியர்கள் அத்தனை சினேகத்துடன் பழகுகிறார்கள் என்று அவன் எண்ணிக்கொள்வதுண்டு. அப்படியாயின் அந்தக்குணம் ஏன் தமிழர்களிடம் இல்லை என்ற சிந்தனையை ஒதுக்கிவைக்கவேண்டியிருந்தது.

“ஓ.. சொறி டு ஹியர்.. பிளீஸ் ஆஸ்க் மி இப் ஐ கான் பி எனி ஹெல்ப்.”

“தாங்யூ பாதர். ஸீ யு”

“மே கோட் பிளஸ் யூ அண்ட் யுவர் பஃமிலி”

வேறு எதையும் பாதர் கேட்கவில்லை. ஏன்? என்னாயிற்று? விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டதா? மேல் முறையீடு செய்யவில்லையா? லோயர் சரியில்லையா? மொழிபெயர்ப்பாளரின் பிழையா? நேர்முக விசாரணையில் அவன் தடுமாறிவிட்டானா? அவனோடு ஒரே படகில் வந்தவனுக்குக் கிடைத்துவிட்டதே, அவனுக்கு ஏன் கிடைக்கவில்லை? இயக்கத்தில் பொறுப்பாளராக இருந்ததால் இருக்குமோ? தலையில் காயம் இருப்பதால் இருக்குமோ? ஏதும் பொய் சொன்னானா? திரும்பிப்போனால் ஏர்போர்ட்டில் பிடிக்கமாட்டார்களா? இப்போது எல்லோரையும்தான் திருப்பி அனுப்புகிறார்கள். லிபரல் கட்சி இருக்குவரையில் இப்படித்தான். ஶ்ரீலங்காவில் இப்போது நிலைமை நன்றாகவே இருக்கிறது. நாங்களே அங்க வந்து செட்டில் ஆகலாமா எண்டு யோசிக்கிறம். எம்மைவிட ஊரில் இருப்பவரிடம் அதிகம் காசு புழங்குகிறது. நீ இருந்த மட்டுக்கும் நன்றாக விறாண்டிவிட்டாய்தானே, அங்குபோய் ஒரு தென்னங்காணியை பராமரித்தால்கூட போதும், பிழைத்துவிடலாம். அடிக்கடி கோல் பண்ணு. நாங்கள் வரும்போது விசிட் பண்ணுகிறோம். மன்னாரில் நல்ல கட்டாக் கருவாடு கிடைக்கும் அல்லவா? எப்போது போவதாகச் சொன்னாய்? இந்தக் கிழமை வீட்டுப்பக்கம் வா. சாப்பிட்டுப்போகலாம். அப்பிடியே பத்தியில் ஒரு கொட்டகை போடவேண்டும். நீ வந்தியெண்டாத்தான் இந்த மனுசனும் அசையும்.

பாதர் அவனுக்குக் கைலாகுகொடுத்து அனுப்பிவைத்தார். தேவாலயத்தை விட்டு வெளியே வந்ததும் அவன் போனை எடுத்துப்பார்த்தான். வீட்டிலிருந்து வைபர் அழைப்பு வந்திருந்தது. திருப்பி அழைத்தான். பஸ்திதான் எடுத்தான்.

“அப்பா.. எழும்பிட்டிங்களா?”

“ஓமடா குட்டியன்.. இஞ்ச மத்தியானம் ஆகப்போகுது”

“இங்க ஏழுமணிதான்.. அம்மாதான் எல்லாரையும் எழுப்பீட்டா…”

“அப்பாவா?.. இஞ்ச குடு…”

ரெஜினா பஸ்தியிடமிருந்து போனைப்பறிக்க அவன் கத்தும் சத்தம் கேட்டது.

“இங்க அப்பா.. லோயரோடை பிறகு பேசினிங்களா? திருப்பி ஏதாவது கேஸ் போடலாம்னு சொன்னவரோ”

அவனுக்கு எங்கோ ஒரு மூலையில் சுருக்கென்றது. அவன் வீடு திரும்புவதை அவன் மனைவிகூட அதிகம் விரும்பவில்லை.

“அவர்ட வீட்டதான் இப்ப போய்க்கொண்டிருக்கிறன். ஒரு அப்பீல் வேணுமெண்டால் போட்டுப்பார்க்கலாமாம். ஆனாக் கஷ்டம் எண்டுறார்”

“உங்களுக்கு அந்த வருத்தம் எண்டு கடிதம் குடுத்ததுதானே. சரி வரேல்லையா?”

பி.டி.எஸ்.டி எனப்படும் அதிர்ச்சியான சம்பவங்களுக்குப் பின்னர் ஏற்படும் மன உளைச்சல் நோய் அவனுக்கு இருப்பதை உறுதிசெய்து வைத்தியர் சேர்ட்டிபிகட் கொடுத்திருந்தார். அதைத்தான் அவள் கேட்கிறாள். அவனுக்கு ரெஜினாமீது கோபமே வரவில்லை. அவள் ஒன்றும் அவனைக் காயப்படுத்தவேண்டும் என்று கூறவில்லைதானே என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். எல்லாம் இயலாமையில்தான்.

“இல்லையாம்.. அப்பிடி கடிதத்தை எல்லாரும் எடுத்து வச்சிருக்கிருக்காங்களாம்”

“அப்ப என்ன பண்ணுறது? உடனேயே வெளிக்கிடனுமா?”

“வேணுமென்னா, இன்னொரு ஆறு மாசம் இழுக்கலாம் எண்டுறார். ஆனா எனக்குத்தான்..”

மரியதாசை பேசி முடிக்கவிடாமல் அவள் இடைமறித்தாள்.

“ஆறு மாசம் எண்டாக்கூட பறுவாயில்லைத்தானே.. இன்னும் கொஞ்சம் உழைச்சிடலாம்”

அவன் பதில் சொல்லவில்லை. ரெஜினாவின் சிந்தனை முழுதும் இப்போது பணத்திலேயே குவிந்திருந்ததுபோலத் தெரிந்தது. அல்லது அவள் எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கவேண்டும். அவனுக்குத்தான் தெரியவில்லை. அவளோடு அவன் மொத்தமாக ஒரு ஐந்து வருடங்களாவது கூடவே இருந்து முழுமையாகக் குடும்பம் நடத்தியிருப்பானா? அதுகூட குழந்தை பெறுவதிலும் வளர்ப்பதிலுமே ஓடிவிட்டது. முதல் வருசமே நிற்செலா பிறந்துவிட்டாள். இரண்டே வருடங்களில் எஸ்தர். பஸ்தி வயிற்றில் இருக்கும்போதே இவன் புறப்பட்டுவிட்டான். அந்த நாள் இன்றும் ஞாபகம் இருக்கிறது. சிவா அண்ணரின் கடையடியில் அவன் நின்றபோது. ஜெயமணிதான் ரகசியமாக வந்து சொன்னான். மரியதாசுக்கு நாட்டை விட்டுப் போகும் சிந்தனையே இருக்கவில்லை.

“அண்ணை ஆருக்கும் சொல்லாதீங்கோ, ராவு வெளிக்கிடுவம். வீட்டகூட சொல்லவேண்டாம். எல்லாம் போட்டில ஏறினாப்பிறகு பாத்துக்கொள்ளலாம்.”

அவனுக்கு விருப்பமே இல்லை. ரெஜினா பிள்ளைத்தாய்ச்சி. அறுப்புக்காலம். வருமானமும் அப்போதுதான் ஓரளவுக்குச் சீராக வர ஆரம்பித்திருந்தது. அவனே சொந்தமாக சிறுபோகம் வயலும் விதைத்திருந்தான். எதற்காக இந்த வயதில் இப்படி ஒரு ஆபத்தான வேலையைச் செய்யவேண்டும்? செய்தது எல்லாம் போதும். இனிமேலாவது நிம்மதியாக, சந்தோசமாக, பிள்ளைகளைக் கவனமாகக் கூடவே இருந்து வளர்த்தெடுத்து. விசயத்தைச் சொன்னதுமே ரெஜினா ஒற்றைக்காலில் நின்று துள்ளியது ஞாபகம் வந்தது.

“நாங்கள் இப்பிடியே கிடந்து சீரழியிறதா? இவன் சுதா போய் ஆறுமாசம்கூட இல்லை. கேஸ் முடிஞ்சு வெளியில விட்டிட்டாங்களாம். மனிசி பிள்ளையளையும் அவன் இனிக் கூப்பிடலாமாம். நீங்க அங்க போனா ஒரு வருசத்திலயே நாங்களும் வந்திடலாம். இங்கை என்ன கிடக்கெண்டு பின்னடிக்கிறிங்க?... இந்த பிள்ளையளை வச்சு எப்பிடி வளக்கிறது? ஒருக்கா பட்டது போதாதா?”

ரெஜினா அவுஸ்திரேலியாவில் வாழவே ஆரம்பித்துவிட்டிருந்தது அவனுக்கு விளங்கியது. அவன் போகாமல் விட்டால் வாழ்நாள் முழுதும் அவள் அவனைக் கரித்துக்கொட்டிக்கொண்டே இருந்திருப்பாள். பயணத்துக்கு எவ்வளவு செலவாகும் என்பதைக்கூட ஜெயமணி அவனிடம் சொல்லவில்லை. ரெஜினா அவளிடம் கிடந்த ஓரிரு நகைகளையும் அறுப்புக்கு என்று சேர்த்துவைத்திருந்த பணத்தையும் அவனிடம் கொடுத்து அன்றிரவே அனுப்பிவைத்தாள். எவருக்கும் சந்தேகம் வராவண்ணம் சின்னப் பையோடு புறப்படும்படி ஜெயமணி அறிவுறுத்தியிருந்தான். அம்மாவிடம்கூட அன்றைக்கு மரியதாஸ் சொல்லிக்கொள்ளவில்லை. அன்றைக்கு வீட்டைவிட்டுப் புறப்பட்டதற்கு இன்று மொத்தமாக எட்டு வருடங்கள் ஓடிவிட்டன. இன்று அவனோடு கூட வந்த ஜெயமணிக்கு விசா கிடைத்து, ஊரில் திருமணத்துக்கு அவன் பெண்ணும் பார்த்துவிட்டான். இவனுக்கு மட்டும் ஏனோ தெரியாது, விசா கொடுக்கமுடியாது என்று தீர்த்துவிட்டார்கள். ஒரே லோயர்தான். ஒரேமாதிரியான கேள்விகள்தான். காரணம் எதுவும் சொல்லவில்லை. இத்தனை வருடங்களில் அவனுடைய அவுஸ்திரேலிய வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தோன்றியது. இதுநாள்வரை அகதியாகவாவது இருந்தான். இப்போது அந்த அந்தஸ்தும் மறுக்கப்பட்டுவிட்டது. ஊர் திரும்பினாலும் திருப்பி அனுப்பப்பட்டவன் என்ற முத்திரை அவன்மீது நிரந்தரமாகவே குத்தப்படப்போகிறது. அவன் கொஞ்சம் பணம் சேர்த்துவிட்டான். கடன் எல்லாம் அடைத்தாயிற்று. குத்தகை வயலைச் சொந்தமாகவே வாங்கிவிட்டான். கல்லு வீட்டுக்கு அத்திவாரமும் போட்டாயிற்று. ஆனால் ரெஜினா இது எதையுமே நினைவுபடுத்தப்போவதில்லை. இனி எப்போதாவது வீட்டில் அவன் குரல் உரத்து ஒலிக்கும்போது பொசிப்பில்லாதவன் என்றுதான் புறுபுறுக்கப்போகிறாள். அவளுக்கு இஷ்டமில்லாத இரவுகளில் அவன் கை அவள்மேல் படரும்போதெல்லாம் சுருக்கென்று அதைச் சொல்லியே ஏளனம் செய்யப்போகிறாள். அவளே இசைந்து கூடினாலும்கூட அடுத்த பகலின் சண்டையில் ‘வக்கில்லை, ஆனா மாடுமாதிரி வந்து விழுந்திடுவார்’ என்று எள்ளி நகையாடத்தான் போகிறாள். தோற்றுப்போனவன் வீடு திரும்பும்போது அவன் வீட்டு நாய்கூட குரைத்து வரவேற்பதில்லை. வீடுதான் அப்படியென்றால் ஊர் அதைவிட மேலாக, மோசமான ஒரு விலங்கைப்போல அவனைக் கடித்துக்குதறப்போகிறது என்று தோன்றியது. போய் சிறிது நாள்களுக்குக் குசலம் விசாரிப்பார்கள். கொண்டுபோய்க்கொடுக்கும் சாமான்களும் சொக்கலட்டுகளும் தீரும் வரைக்கும் அன்பு பாராட்டுவார்கள். கையிருப்பு கரையாமல் இருக்கும்வரைக்கும் அவன் சாதியும் அவர்களுக்குத் தோற்றப்போவதில்லை. கொஞ்சநாளிலேயே மரியதாஸ் என்ற பெயர் மறைந்து சாதிப்பெயர் நிரந்தரமாகவே தங்கிவிடப்போகிறது.

தூரத்தில் பேருந்து வந்துகொண்டிருந்தது தெரிந்தது.

“சரி.. இஞ்ச பஸ் வந்துட்டு.. நான் உனக்கு பிறகு கோல் தாறன்..”

மரியதாஸ் பேருந்தில் ஏறி ஒரு மூலை சீற்றாகப் பார்த்து உட்கார்ந்தான். நன்றாகச் சாய்ந்திருந்தபடி கண்களை மூடிக்கொண்டான். ஐந்து விநாடிகள்கூட கடந்திருக்காது. மெதுவாக அந்த மலையட்டை கணுக்காலிலிருந்து மேலே ஏற ஆரம்பித்தது. அவன் திடுக்கிட்டு விழித்தான். அவன் கண்கள் பேருந்தின் மூலை முடுக்கு எங்கும் துலாவ ஆரம்பித்தன. பேருந்தின் யன்னல் கண்ணாடிகள் எல்லாம் இறுக்கப்பூட்டப்பட்டிருந்தன. அவன் அருகேயிருந்த யன்னலைத் திறக்க முயன்றான். முடியவில்லை. பேருந்தின் வெளிக்கூரையில் எவரேனும் குண்டை வைத்திருக்கலாம் என்று அவனது உள்ளுணர்வு எச்சரித்தது. அல்லது போகும்போது ஏதாவது ஒரு தரிப்பிடத்தில். அவன் பேருந்து நிற்கும் ஒவ்வொரு தரிப்பிடத்தையும் கவனமாகக் கண்காணிக்கலானான். மலை அட்டை இப்போது முழங்காலை எட்டியிருந்தது. அவன் தன் கால்களைக் கைகளால் தடவி எங்காவது இரத்தம் கசிகிறதா என்று பார்த்தான். ‘இந்தப்பயம் தேவையற்றது, நீ இந்த நாட்டில் பாதுகாப்பாகவே இருக்கிறாய்’ என்று வைத்தியர் சொன்னது ஞாபகம் வந்தது. அதை எவ்வளவு தடவைகள் தனக்குள் சொல்லிக்கொண்டாலும் மனம் நிம்மதியடைவதாக இல்லை. நிற்செலா எங்கு போனாள் என்று தேடிப்பார்த்தான். சென்ற தரிப்பிடத்தில் பிள்ளை இறங்கியதை அவன் கவனிக்கவில்லையோ?

மரியதாஸ் வைத்தியர் சொன்னபடி நன்றாக மூச்சை இழுத்துவிட்டான். நான்கைந்து தடவைகள் அப்படி செய்யவும் சற்று ஆசுவாசம் வந்தது. சிந்தனையைத் திசை திருப்பி அவன் அங்கிருந்தவர்களைக் கவனிக்க ஆரம்பித்தான். பேருந்தின் வாசற்பக்கமாக ஒரு வயோதிப வெள்ளையின தம்பதியர் அருகருகே கைகளைக் கோர்த்தபடி அமர்ந்திருந்தார்கள். அந்தப்பெண்மணி அடிக்கடி பேருந்தின் ஓட்டுநருடன் பேசிக்கொண்டிருந்தார். ஓட்டுநர் வெள்ளையர் என்றாலும் அவருக்கு ஆங்கிலம் அவ்வளவாக வரவில்லை. ஆனாலும் எந்தக் கூச்சமுமில்லாமல் அந்தப் பெண்மணியுடன் உரத்தகுரலில் பேசிக்கொண்டிருந்தார். இன்னொரு இருக்கையில் ஒரு சீன இளைஞன் காதில் ஹெட்போன் செருகி பாட்டுக்கேட்டபடி வந்தான். ஒரு சீக்கியர் போனில் சத்தமாகப் பஞ்சாபியில் பேசிக்கொண்டிருந்தார். அவனுக்கு முன் இருக்கையில் ஒரு சிறுமியும் தாயும் அமர்ந்திருந்தார்கள். பேருந்தில் பல இருக்கைகள் வெற்றிடமாக இருந்தன. நான்கு இளைஞர்கள் வாசலில் நின்றபடி சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருத்தி அவர்கள் அருகேயே தரையில் அமர்ந்திருந்து செல்போனை நோண்டியபடி இருந்தாள். அன்றைய உதைபந்தாட்டப்போட்டி ஒன்றுக்கு அவர்கள் போய்க்கொண்டிருக்கவேண்டும். எல்லோரும் ஒரே அணியின் சீருடையை அணிந்திருந்தார்கள்.

அங்கிருந்த எல்லோரும் எந்தக்கவலையுமின்றிய வாழ்க்கையை வாழக் கொடுத்துவைத்திருப்பவர்கள் என்று அவன் எண்ணிக்கோண்டான். அவனுக்கு மாத்திரம் ஏன் அப்படியொரு வாழ்க்கை அமையவில்லை? இங்கு வந்த ஆரம்பத்தில் எல்லாவற்றிலும் அவனுக்கு ஒரு விட்டேற்றித்தனம் இருந்தது. எதிலுமே அவனுக்கு ஒரு ஈடுபாடு இருக்கவில்லை. இந்த ஊர் வெக்கை. குளிர். கடல். மனிதர்கள். பருவத்துக்குப் பருவம் நிறம்மாறி, இலை கொட்டி, மீளத்துளிர்த்து எழும் வீதியோர மரங்கள். அவற்றின் பழங்களைத் தின்னும் பஞ்சவர்ணக் கிளிகள். மக்டொனால்ட்ஸ் உணவகங்கள். திறந்தவெளிப் பயணங்கள். தொழிற்சாலையில் நட்பு பாராட்டும் வியற்நாமியர்கள். தேவாலய இத்தாலியர்கள். டொல்டோ பாதர். வார இறுதி சீட்டாட்ட நண்பர்கள். பார்ட்டிகள். சாராயம். எல்லாவற்றிலும் அவன் ஒரு பிடிப்பு இல்லாமலேயே இதுநாள்வரை இருந்துவிட்டான். இனி இந்த நாட்டு வாழ்க்கை அவனுக்கு இல்லை என்று ஆன பின்னர் இவற்றின்மீது திடீரென்று ஒரு பிடிப்பு ஆரம்பித்துவிட்டிருந்தது. கூடவே அதன்மேல் ஒரு வெறுப்பும். ஒரு மிகப்பிரமாண்டமான சொகுசுக்கப்பலிலிருந்து அவன் தள்ளிவிடப்படுவதுபோல உணர்ந்தான். அவன் மாத்திரம் இந்த உலகில் நிர்க்கதியாகத் தனித்துத் தத்தளிப்பதுபோல. கப்பல் மிக மெதுவாக, அவனை விட்டுவிட்டு விலகிச்சென்றுகொண்டிருந்தது. அந்தக்கப்பலில் இருப்பவர்கள் எல்லோரும் கொடுமைக்காரர்களாகவும் பெரும் கொள்ளைக்காரர்களாகவும் அவனுக்குத் தெரிந்தார்கள். அவன் எங்கே போனாலும் அவனை வரவேற்க ஆள் இருப்பதில்லை. இதுநாள்வரை ஒரு ஊரிலிருந்து கலைபட்டு இன்னொரு ஊருக்குச் சென்றிருக்கிறானே ஒழிய, அவனாக விரும்பி எந்த ஊரையும் அவன் தேர்ந்தெடுத்ததில்லை. அதை அறிந்தோ என்னவோ, அவன் செல்லும் ஊர்கள் யாவுமே அவனை அழையா விருந்தாளியாகவே புறக்கணித்திருக்கின்றன. அவனுடைய சொந்த ஊர்கூட, திரும்பும்பொழுதுகளில் எல்லாம் அவனைக் கடித்து அலட்சியமாக இன்னொரு ஊருக்கு மீளத் துப்பிவிடுகிறது. இப்போதுகூட அதற்கான தயார்படுத்தல்களை அவனது ஊர் ஆரம்பித்துவிட்டிருந்தது.

லோயர் வீட்டு வாசல் மணியை மரியதாஸ் அழுத்தியபோது யன்னலுக்குள்ளால் அவர்கள் வீட்டு நாய் அவனைப்பார்த்துக் குரைத்தது. அந்த வீட்டுக்கு முன்னமும் இரண்டு தடவைகள் அவன் வந்திருக்கிறான். ஒவ்வொருமுறையும் அந்த நாய் அவனைக் குதறி எடுத்துவிடுவதுபோலவே குரைக்கும். நல்ல முசுட்டைக்கணக்காய் உடம்பு முழுதும் மயிர் வளர்ந்து, நன்றாகத் தின்று, திமிர் எடுத்துத்திரியும் நாய் அது. திரும்பிச்சென்றதும் தானும் ஊரில் இப்படி ஒரு நாய் வளர்க்கவேண்டும் என்று மரியதாஸ் எண்ணிக்கொண்டான். நலமடித்து, அக்கம்பக்கத்து நாய்களோடு அண்டவிடாமல், அவனே அதனை மலம் கழிப்பதற்கு காலையிலும் மாலையிலும் கூட்டிச்சென்று, எந்நேரமும் அதனை வீட்டுக்குள்ளேயே உலாவவிட்டு, அதனோடு தூங்கி எழுந்து, வெளியூர்ப்பயணத்திற்கும் அதனைக் கூட்டிச்சென்று, அதனோடு அவ்வப்போது கயிறு இழுத்து, ஒரு நாயை வெளிநாட்டில் எப்படி வளர்ப்பது என்று அவன் ஊர்க்காரர்களுக்குக் காட்டவேண்டும் என்று தோன்றியது.

“குயட் ஸ்பார்டன், கோ எவே.. மரியதாஸ்.. வா வா.. இது இப்பிடித்தான் சும்மா எந்த நேரமும் குலைச்சுக்கொண்டு..”

மரியதாஸ் முன்ஹோலில் சென்று அமர்ந்தான்.

“நான் பக்கென்று ஷேவ் எடுத்து குளிச்சிட்டு வரட்டே.. அதுவரைக்கும் இவள் ரிஷிகாக்கு ஒரு பேச்சுப்போட்டி இருக்காம்.. பிரக்டீஸ் பண்ணிக்கொண்டிருக்கிறாள்… கேக்கிறியா?”

அவன் பதிலுக்கு காத்திராமல் அவர் ‘ரிஷி’ என்று மகளை அழைக்க அவளிடமிருந்து பதில் வரவில்லை. அவர் மீண்டும் அழுத்தமாக ‘ரிஷி’ என்று உறுக்கவும் ரிஷிகா தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டே முன் ஹோலுக்குள் வந்தாள். கூடவே அந்த நாயும் அவள் பின்னே வந்தது. ரிஷிகா டீசேர்ட், காற்சட்டை அணிந்திருந்தாள். தலை முடி ஸ்டெரியிட் செய்யப்பட்டிருந்தது. ஒரு காதில் மாத்திரம் சிறு தோடு குத்தியிருந்தாள். நிற்செலாவும் இப்படித்தான் வளர்ந்து நின்றிருப்பாள் என்று தோன்றியது. இவளைவிட அவளுடையது சற்று நீளமான முகம். கொஞ்சம் கறுப்பு. ஆனால் அவளிடம் இத்தனை பெரியபிள்ளைத்தனம் இருந்திருக்காது என்று தோன்றியது.

“ஐ காண்ட் டு இட் டு எவ்ரிபொடி அப்பா… ஐ டோண்ட் நோ ஹு இஸ் திஸ்…?”

அவள் வசனத்தை முடிக்காவிட்டாலும் அதிலிருந்த ஏளனம் அவனுக்கு நன்றாகவே புரிந்தது. பதினொரு வயதுகூட இருக்காது. சிறு பிள்ளை. அதுகூட அவனைக் குறைத்தே மதிப்பிடுகிறது. அவன் கால்களை ஒடுக்கிவைத்து சங்கடத்துடன் அவளைப்பார்க்காமல் லோயரைப்பார்த்தான். இதுவே ஒரு படித்த, நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் மனிதனாக இருந்திருந்தால் அந்தச் சிறுமி அப்படி முகம் சுழித்திருக்கமாட்டாள் என்று தோன்றியது. நிற்செலா நிச்சயம் இப்படி வேறு மனிதர் முன்னே பேசியிருக்கமாட்டாள். மேட்டிமைகள் எப்படியோ குழந்தைப்பருவத்திலேயே பிறரை எடைபோட்டு ஏளனம் செய்யும் கலையையும் கற்றுத்தேர்ந்துவிடுகின்றன.

“ஷ்ஷ்… நோ எக்ஸ்கியூஸ், திஸ் இஸ் ஹவ் யு லேர்ன்”

லோயர் அவளைப் பேசச்சொல்லிவிட்டு பாத்ரூமுக்கு ஷேவ் செய்யச் சென்றுவிட்டார். ரிஷிகா அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் தலையைக் குனிந்தபடியே முசுமுசு முகத்தோடு சுவரோரமாகப் பேசாமல் நின்றாள். அந்த நாய் நடுஹோலில் தன் முன்னங்கால்கள் இரண்டையும் நீட்டி, அவற்றின்மேல் அதன் தலையை முன்நீட்டி வைத்தபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தது. அவன் ஒருவன் இருப்பதை இரண்டும் சட்டை செய்ததாகவே தெரியவில்லை.

“என்ன சத்தத்தையே காணேல்ல…”

உள்ளிருந்து லோயரின் குரல் கேட்டது. ரிஷிகா பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொண்டாள். தன்னுடைய போனை எடுத்து, உரையாக இருக்கவேண்டும், சரிபார்த்துக்கொண்டாள். அது ஒரு புது ஐபோன். மரியதாசின் விலை குறைந்த சைனா போன் பொக்கட்டினுள் குறுகுறுத்தது. அந்தச்சமயத்தில் தனக்கு அழைப்பு ஏதும் வந்துவிடக்கூடாது என்று அவன் பிரார்த்தித்தான்.

ரிஷிகா பேச்சை ஆரம்பித்தாள்.

“தமிழ் எங்கள் மூச்சு.

அனைவருக்கும் வணக்கம். நம் தாய்மொழியாம் தமிழ் உளகின் மிக மூத்த மொழி ஆகும். இது கள்தோன்றி மண் தோன்றாக் காளத்து முன் தோன்றிய மொழியாம். தமிழ் வெறும் மொழி மாத்திரமள்ள, அது எமது அடையாலமும் கூட. நம் களாச்சாரமும் அதுவேயாம். பண்டைய தமிழர்கல்..”

மரியதாசுக்கு அந்தப்பேச்சை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. ஊரில் இருக்கையில் பல இயக்கப்பிரச்சாரங்களில் அவன் பங்கெடுத்திருந்தாலும் பேச்சுகள் இடம்பெறும்போது அவன் பொதுவாக வெளியிலேயே போய் நிற்பான். பயிற்சிகளின்போது இடம்பெறும் உரைகளையும் அவன் பெரிதாக செவிமடுத்ததில்லை. ரிஷிகாவின் பேச்சை எப்படி உள்வாங்கவேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை. அதன் அர்த்தத்தைக் கவனிக்கவேண்டுமா? அல்லது உச்சரிப்பையா? அல்லது உடல்மொழியையா? பேச்சு முடிந்ததும் என்ன செய்ய வேண்டும்? கை தட்டவேண்டுமா? பாராட்டவேண்டுமா? தமிழில் பாராட்டினால் இந்தப்பிள்ளைக்கு விளங்குமா? லோயர் கேட்டால் என்ன சொல்லவேண்டும்? அவனுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. ஆனால் அந்த நாய் எந்தக்குழப்பமும் இல்லாமல் அவள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது. அதற்கு இப்படியான பேச்சுகள் பரிச்சயமானவையாக இருக்கலாம். பேச்சு எப்படி ஆரம்பிக்கும், எங்கெங்கெல்லாம் ஏறி இறங்கும், எந்த இடத்தில் அவள் கைகளை வீசி முழக்கமிடுவாள், எந்த இடத்தில் வாலாட்டவேண்டும் என்றெல்லாம் அதற்குத் தெரிந்திருந்தது. அவள் பேசி முடித்து ‘நன்றி வணக்கம்’ என்றபோது அது சிலிர்த்துக்கொண்டு எழுந்து அவளருகே சென்று வாலாட்டியது.

அவன் மிகுந்த தயக்கத்துடன், ‘நல்லா இருந்தது.. வெரி குட்’ என்றான்.

ரிஷிகா திரும்பியேபார்க்காமல் ‘தாங்ஸ்’ என்றுவிட்டு உள்ளே சென்று மறைந்துவிட்டாள். அந்த நாயும் அவள் பின்னே ஓடிவிட்டது. ஊருக்குத்திரும்பியதும் பஸ்தியையும் எஸ்தரையும் நன்றாகப் படிக்கவைக்கவேண்டும் என்று அவன் எண்ணம் ஓடியது. ஆங்கிலப்பள்ளியில் சேர்க்கவேண்டும். மன்னார் ரவுனில் பல ஆங்கிலப்பள்ளிகள் வந்துவிட்டதாக ரெஜினா கூறியிருந்தாள். அல்லது யாழ்ப்பாணம் அனுப்பிப் படிப்பித்தால் இன்னமும் திறம் என்று தோன்றியது. அவன் அந்த வீட்டுச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். லோயரின் திருமணப்படம், ரிஷிகா பிறந்தபோது பிரசவ அறையில் எடுத்த படம். அவளுடைய ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் எடுத்த படங்கள். அவளுடைய சாமத்தியவீட்டுப்படம். அதைப் பார்க்கையில் மகள் எஸ்தரும் குமராகிவிட்டது ஞாபகம் வந்தது. ஆறுமாதமாகியும் இன்னமும் பிள்ளைக்குத் தண்ணி வார்க்கவில்லை. சதா நிற்செலா பற்றிய ஞாபகத்தில் பஸ்தியையும் எஸ்தரையும் இரண்டாம்பட்சமாகவேப் பார்த்துப்பழகிவிட்டானோ என்று அவனுக்குத் தன்மேலேயே சந்தேகம் வந்தது. நிற்செலாமீது வைத்த பாசத்தை மற்றைய பிள்ளைகள் இரண்டின்மீதும் அவனால் வைக்கவேமுடியவில்லை. அவன் பிள்ளைகள்தான் என்றாலும் அவர்கள் வளர்வதை நேரில் பார்த்து அனுபவிக்க அவனுக்குக் கொடுப்பினை இல்லை. அவர்கள் முகங்களைக்கூட வைபரினூடாகவே அவனால் பார்க்கமுடிகிறது. அவர்களுக்கும் அப்பா என்ற பாசத்தைவிட வெளிநாட்டில் இருப்பவன் என்ற பெருமை கலந்த ஈர்ப்பே அதிகம் இருப்பதுபோல அவனுக்குப் பட்டது. அதற்கு அவர்களைக் குற்றம் சொல்லிப்பயனில்லை. எஸ்தருக்கு சாமத்தியவீடு செய்தே ஆகவேண்டும் என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான். பத்து லட்சம் இல்லாமல் சாமத்தியவீடு செய்யமுடியாது என்று ரெஜினா ஒற்றைக்காலில் நிற்கிறாள். வேதக்காரர் சாமத்தியவீடு. ஆரத்தியும் பிடிக்கவேண்டும். சட்டை போட்டும் படம் எடுக்கவேண்டும். சைவச்சாப்பாடும் வேண்டும். கிடாயும் அடிக்க வேண்டும். விசா கிடைத்தபின்னர் அவன் அங்கு வரும்போது செய்யலாம் என்று சொல்லிச்சொல்லியே ஆறு மாதங்களைக் கடத்திவிட்டான். இப்போது விசா இல்லாமல் நிரந்தரமாகத் திரும்பவேண்டிய நிலை. ஒரே சாமத்தியவீட்டில் அவனுடைய கையிருப்பு முழுதும் தீர்ந்துபோகப்போவது அவன் கண்முன்னே தெரிந்தது.

லோயர் வந்து அவனை அலுவலக அறைக்குள் கூட்டிச்சென்றார்.

“எப்பிடி.. ரிஷி நல்லா பேசிறாளா? பிரக்டீஸ் காணாது என்ன? பர்ஸ்ட் அடிக்காட்டி எனக்கு மரியாதை இல்லை”

மரியதாஸ் பதில் பேசாமல் இருந்தான். லோயர் இலாச்சிக்குள் குடைந்து அவனுடைய பைலை வெளியே எடுத்து, ஒரு கடிதத்தை ஆங்கிலத்தில் வேகமான முணுமுணுப்புடன் வாசித்தார்.

“இஞ்ச பார் மரியதாஸ்.. உன்ர கேஸில திருப்பி அனுப்பிறதெண்டு முடிவெடுத்திட்டாங்கள்… இவங்கள் இளம் ஆக்கள் எண்டால் இப்ப குடுக்கிறாங்கள். குடும்பம் குட்டி எண்டு இருக்கிற ஆக்களை திருப்பி அனுப்பிறாங்கள்”

“கேஸ் போடேக்க இந்தமுறை எப்பிடியும் கிடைச்சிடும் எண்டு சொன்னீங்கள் சேர்”

“அப்ப நிலைமை அப்பிடி.. ஆனா கொஞ்சக்காலமா எல்லாத்தையும் இறுக்கிட்டாங்கள்”

“என்ர வருத்தத்தைப்பற்றி வடிவா ஒரு கடிதம் எழுத ஏலாதா சேர்?… இண்டைக்குக்கூட சேர்ச்சில வேர்த்துக்கொண்டு.. வரவர சனம் கூடுற இடத்தில நிக்கவே பயமா இருக்கு… அண்டைக்கு மாவீரர் தினக்கூட்டத்தில போய் நிக்கேக்கயே நடுங்க வெளிக்கிட்டிட்டு.. எங்கையாவது குண்டு வச்சிருப்பாங்களோ எண்டே சிந்தனையா இருக்கு.. கொடியேத்தேக்கையே நான் வெளிய ஓடிவந்திட்டன்… பஸ்ஸிலகூட போகேலாமாக் கிடக்கு.. கண்ணை மூடினா மூத்தவளிண்ட முகம்தான் முன்னால வந்து நிக்கு… ஒவ்வொருநாளும் குளுசை குடிச்சும்.. இதெல்லாத்தையும் விளங்கப்படுத்தேலாதா சேர்…”

மரியதாசுக்கு சொல்லவே கூசியது. அவனுடைய உளச்சிக்கலை எவரும் புரிந்துகொள்வதில்லை. குறிப்பாகத் தமிழர்கள் அதனை ஒரு சிக்கலாகவே கருதுவதில்லை என்று தோன்றியது. எல்லாம் கொஞ்சநாளில் அகன்றுவிடும் என்றே அவனும் ஆரம்பத்தில் நினைத்துவந்தான். ஆனால் எங்கே சிறிய சனக்கூட்டம் இருந்தாலும் அவனுக்குள்ளே பயம் ஒரு மலை அட்டையைப்போல உடலில் ஏற ஆரம்பித்துவிடுகிறது. எந்த நிகழ்வுக்குப்போனாலும் அது அவனைத் துரத்துகிறது. சேர்ச், பஸ், ரயில் என்று எதையும் அது விட்டுவைப்பதில்லை. அதனாலேயே அவன் கூட்டங்களுக்கும் பார்ட்டிகளுக்கும் செல்வதைத் தவிர்க்க ஆரம்பித்திருந்தான்.

“உன்ர நிலைமை விளங்குது மரியதாஸ், ஆனா இவங்கள் அதை எல்லாம் கணக்கே எடுக்கமாட்டாங்கள். இஞ்ச பி.டி.எஸ்.டி எல்லாருக்கும் இருக்கு. வேணுமெண்டால் ஒரு அப்பீல் போட்டுப்பார்க்கலாம். ஆனால் அப்ளிகேசனுக்கே பத்தாயிரம் டொலர்ஸ் கட்டோணும். ஒரு ஆறு மாசம் போட்டு இழுக்கலாம்.. அதுக்குப்பிறகு மினிஸ்டருக்கு ஒரு பேர்சனல் ரிக்குவஸ்ட் வச்சால் இன்னொரு மாசம்.. எல்லாமா ஒரு ஏழு மாசம் இழுத்தடிக்கலாம்… என்ன சொல்லுற?”

மரியதாஸ் யோசித்தான். ஓய்வில்லாமல் டபிள் ஷிப்ட், ஓவர் டைம் என்று செய்தாலும் மாசம் அவனுக்கு கையில் ஐயாயிரம் டொலர்தான் கிடைக்கிறது. வீட்டு வாடகை, ஊருக்கு அனுப்பும் காசு, அவனின் செலவு என்று கழித்துப்பார்த்தால் ஏழு மாசத்தில் ஒரு இருபதினாயிரம் சேர்த்தாலே பெரிய காரியம். அதில் சுளையாகப் பத்தாயிரத்தை அப்பீலுக்குக் கொடுக்கவேண்டும். இனி லோயர் செலவு, அந்தப் படிவம், இந்தக் கையெழுத்து, பயணங்கள் என்று எல்லாவற்றையும் கூட்டிக்கழித்தால் கையில் ஒரு ஆயிரம் கூட எஞ்சாது என்று தோன்றியது. விசாவும் கிடைக்கப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. எதற்காக இங்கே கிடந்து உழலவேண்டும்? இருபதாயிரத்துக்கு ஒரு சீட்டுக்கட்டிக்கொண்டிருந்தான். அடுத்த கூறில் எவ்வளவு கழிந்தாலும் பரவாயில்லை, அதை ஏலத்தில் எடுத்துவிடவேண்டும். மீதித்தவணைகளுக்கு ஜெயமணியிடம் காசைக் கொடுத்துவிட்டுப்போகலாம். போவதென்று ஆகிவிட்டது. இனிமேல் காலங்கடத்தி என்ன பயன்? எட்டு வருடங்கள் தினமும் வைபரில் குடும்பம் நடத்தி சீ என்று போய்விட்டது. குழந்தைகள் அவன் தொட்டுத்தூக்கி கொஞ்சும்வரைக்கும் காத்திராமலேயே வளர்ந்துவிடப்போகின்றன. ரெஜினாவும் அவனில்லாமலேயே வாழப்பழகிக்கொண்டுவிட்டாற்போலத் தோன்றியது. எல்லோரும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ அவன் மட்டும் எதற்காக உடல் வருத்தி உழைக்கவேண்டும்? உலகமே சேர்ந்து அவனில் குளிர்காய்ந்துகொண்டு கூடவே அவனுக்கு ஏமாளிப்பட்டமும் கட்டுகிறது. எவருமே சக மனிதனாகத்தன்னும் அவனை மதிப்பதில்லை. அவன் உணர்வுகளைக் கணக்கே எடுப்பதில்லை. அவன் அருகாமையை வேண்டி எவருமே ஏங்குவதில்லை. அவன் உழைக்கும் ஒவ்வொரு டொலருக்காகவும்தான் அவர்கள் அவனைத் திரும்பிப்பார்க்கிறார்கள். அவன் எப்படி இருக்கிறான் என்று விசாரிக்கிறார்கள். அவனிடம் சிரித்துவைக்கிறார்கள். ஊர் திரும்பிக் கொஞ்சநாளிலேயே அந்தச் சிரிப்பு எல்லாமே ஒளிந்துவிடப்போகிறது. மரியதாசுக்குக் குழப்பமாக இருந்தது. அவன் திரும்பவும் போகத்தான்வேண்டுமா? வேறு வழி என்னதான் இருக்கிறது? அவனுக்கு மாத்திரம் ஏன் இப்படி நிகழவேண்டும்? இங்கு இருக்கும் எல்லோருமே அகதிகளாக வந்தவர்கள்தானே? இந்த லோயர்கூட ஒரு அகதிதானே. இன்றைக்கு இரட்டை மாடி வீடு, சொகுசு வாகனம், மனைவி, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் குழந்தை, வீட்டுச் செல்ல நாய். எல்லாமே அகதியாக வந்து சேர்த்ததுதானே? அவன் மட்டும் எதற்காகத் திரும்பவேண்டும்? அவன் மட்டும் எப்படி இவர்களைவிடத் தாழ்ந்தவன் ஆவான்? எப்போது அவன் அப்படி ஆனான்? அல்லது எப்போதுமே அவன் நிலைமை இதுதானா?

“மரியதாஸ்.. என்ன யோசிக்கிறாய்? அப்பீல் ஒண்டைப்போடுவமா? எண்ட பீஸை நான் பார்த்துச் செய்யுறன்”

அவனுக்கு இப்போது அவர்மீதே சந்தேகம் வந்தது. உண்மையிலேயே அப்பீலுக்கு பத்தாயிரம் டொலர்தான் கட்டவேண்டுமா? அல்லது இவருக்கும் அதில் கொமிசன் ஏதும் உண்டா? எட்டு வருடங்களாக இவரையே நம்பியிருந்தது தவறோ என்று தோன்றியது. உழைப்பில் கால்வாசி இவருக்கே கொட்டவேண்டி வந்துவிட்டது. ஒருத்தன் எல்லாவற்றையும் தொலைத்து, தனியே உயிரையும் உடலையும் தூக்கிப்பிடித்தபடி கடல் கடந்து ஓடி வந்தால் அவனிடம்தான் பிடுங்குவார்களா? அவனை ஏய்த்துத்தான் பிழைக்கவேண்டுமா? அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளிலும் அவன் தொழிற்சாலையில் சிந்திய வியர்வை ஒட்டியிருந்ததுபோலத் தோன்றியது. என்ன ஒன்று, அவனை ஏய்த்துப் பிழைப்பவர்கள்கூட தம்மை அவனின் சகாயர் என்றே எண்ணிக்கொள்கிறார்கள். அவன் அவர் கண்களையே கூர்ந்துபார்த்தான்.

“என்ன தம்பி.. நீ வேண்டாம் எண்டால் விடுவம். ஒரு கடிதம் குடுத்தால் போதும். ஒரு மாசத்தில டிக்கட் போட்டு அனுப்பிடுவாங்கள்.. ”

“திரும்பிப்போறது எண்டால் காசு ஏதும் தருவாங்களா சேர்?”

மரியதாசுக்கு இப்படியெல்லாம் இறைஞ்சுவதில் ஏற்படுகின்ற கூச்சம்கூட வர வரக் குறைந்துபோவதுபோல உணர்ந்தான்.

“ம்ம்ம்.. ஒரு மூவாயிரம் டொலர்ஸ் குடுப்பாங்கள். அதுவும் அங்கபோனாப்பிறகுதான். எனக்கெண்டா நீ இன்னொரு ட்ரை போடலாம். அதுக்குள்ள லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தா உங்களுக்கெல்லாம் சான்ஸ் இருக்கு…”

“ஆனா எலக்சனுக்கு இரண்டு வருசம் இருக்கே சேர்”

அவர் அதனை எதிர்பார்த்திருக்கவில்லை என்று தோன்றியது. அவனைப்போன்று அகதிகளாக வருபவர்களுக்கு உள்ளூர் அரசியலில் என்ன நடக்கிறது என்றே தெரிவதில்லை. தெரிந்து வைத்திருக்கவும் சந்தர்ப்பங்கள் அமைவதில்லை. அவனுக்குக்கூட இந்த தேர்தல் விடயம் தொழிற்சாலையில் சக தொழிலாளிகள் பேசியபோதே காதில் விழுந்திருந்தது. மற்றும்படி அவன் போன்றவர்கள் வாரம் ஏழு நாட்களும் வேலை செய்பவர்கள். பகல் முழுதும் ஏதேனும் தொழிற்சாலை வேலைக்குச் செல்வார்கள். மாலையில் கிளினிங் வேலைக்குப் போவார்கள். சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஊபர் டக்ஸி ஓடுவார்கள். யாராவது வீடு திருத்தவேலை, பெயிண்டிங், தோட்டம் செப்பனிடவேண்டும் என்று கூப்பிட்டால் போவார்கள். எப்போதாவது ஓய்வு நாள் வரும்போது தமிழ்ப்படம் பார்ப்பார்கள். அல்லது இறைச்சி சமைத்துச் சாராயம் குடிப்பார்கள். இதில் உள்ளூர் செய்திகளை அறிய அவர்களுக்கு நேரம் எங்கே இருக்கப்போகிறது? இவர்களின் இந்த அறியாமையைத்தான் எல்லோரும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். லோயர்கள். தொழிற்சாலை முதலாளிகள். தமிழ் அமைப்புகள். தெரிந்தவர்கள். தூரத்து உறவினர்கள். நண்பர்கள். மரியதாசுக்கு தலை வெடித்தது. இந்த ஊரே வேண்டாம். போய்விடவேண்டும் என்று தோன்றியது.

“ஒரேயடியா வெளிக்கிடப்போறன் சேர்.. நிண்டு இழுபட்டுப் பிரயோசனம் இல்லை”

“அதுவும் சரிதான்… எவ்வளவு காலத்துக்குத்தான் நீ இஞ்ச தனிய கிடந்து சில்லுப்படுறது.. போய் மனிசி பிள்ளையளோட இரு.. கனகாலம் பிரிஞ்சிருந்தா அதுகளுக்கும் விட்டுப்போயிடும்… இப்பத்த பெண்டுகளையும் நம்பேலாது… இப்ப அங்க கன பிரச்சனைகள் வாறதாக் கேள்விப்பட்டன்”

மரியதாசுக்கு எழுந்து அவருக்கு ஓங்கி ஒரு அறை விட்டால் என்ன என்று தோன்றியது. அடக்கிக்கொண்டான். அவனுக்கு ஏன் அப்படி கோபம் வருகிறது? ஒருவேளை அடிமனதில் அவன் நினைத்துவைத்திருப்பதை அவர் அப்படி வெளிப்படையாகச் சொன்னதால் இருக்குமோ? இல்லை, ரெஜினா அப்படிப்பட்டவள் இல்லை என்று மனதுக்குள் உறுதிப்படுத்திக்கொண்டான். அவளை அவனுக்கு எவ்வளவுகாலம் தெரியும்? அவர்களின் திருமணம்கூட அவசர அவசரமாக நடந்த திருமணம்தானே. படுக்கையைத்தவிர வேறு எங்காவது அவர்கள் அன்னியோன்னியமாக இருந்ததுண்டா? ரெஜினாவை அவன் எப்போதாவது காதலித்திருக்கிறானா? அவள் முகத்தை பகல் வெளிச்சத்தில் நெருக்கமாக அமர்ந்திருந்து ரசித்திருக்கிறானா? மரியதாஸ் வலுக்கட்டாயமாக எண்ண ஓட்டங்களைப் புறந்தள்ளினான்.

“சேர் நீங்கள் கடிதத்தை ரெடி பண்ணிட்டுச் சொல்லுங்க.. அப்பிடியே உங்க பீஸையும் சொன்னீங்க எண்டால்..”

“பீஸை பார்த்துச் செய்யலாம் மரியதாஸ்…ரெண்டு நாளில நான் மெசேஜ் பண்ணுறன். நீ வந்து காசைக் கட்டீட்டு கடிதத்திலயும் சைன் வச்சிட்டுப்போ”

எவ்வளவு இலாவகமாகத் தொழில் செய்கிறார்கள். பீசை அவனிடமிருந்து மொத்தமாகக் கறக்காமல் அவர் அவனுக்கு அந்தக்கடிதத்தைச் செய்து கொடுக்கப்போவதில்லை. பீஸ் எப்படியும் மூவாயிரத்துக்குமேலே வரும் என்று தோன்றியது. கையிலிருக்கும் காசு ஊர் திரும்பமுதலேயே தீர்ந்துவிடுமோ என்ற பயம் வந்தது.

மரியதாஸ் புறப்படலாம் என்று எழுந்தான்.

“இரு, அவ தேத்தண்ணி போடுறா, இருந்து குடிச்சிட்டுப்போ…போகமுதல் எங்கட மெயின் பாத்ரூம் ஒழுகிக்கொண்டு இருக்கு.. ஒருக்கா பாத்து வாஷரை மாத்திவிடு”

அன்றைக்கு லோயர் வீட்டிலிருந்து மரியதாஸ் புறப்படும்போது மதியம் தாண்டிவிட்டிருந்தது. பாத்ரூம் வாஷரை கடைக்குப்போய் வாங்கிவந்து, பைப்பைக் கழட்டி மாற்றிவிட்டு நிமிர்கையில், இன்னொரு பைப்பும் ஒழுகுவதாக லோயரின் மனைவி சொன்னார். அதையும் திருத்திவிட்டு, அவர்கள் வாங்கிவைத்திருந்த மான்டரின் பழமரத்தையும் பின் தோட்டத்தில் நட்டுக்கொடுத்துவிட்டுத்தான் அங்கிருந்து அவனால் புறப்பட முடிந்தது. அவனுடைய சேர்ட்டு, லோங்ஸ் எல்லாம் ஈரமாகி, சப்பாத்தும் சேறாகியிருந்தது. கடுமையாகப் பசித்தது. காலையில் லோயர் வீட்டில் குடித்த தேநீரைத்தவிர வேறு எதையுமே அன்றைக்கு அவன் சாப்பிட்டிருக்கவில்லை என்பது ஞாபகம் வந்தது. வீட்டுக்குப்போனாலும் சாப்பாடு இருக்கப்போவதில்லை. அந்த வீட்டில் அவனோடு கூடத்தங்கியிருக்கும் ஆறுபேரும் வார இறுதியில் வேலை செய்பவர்கள். வீடு அன்றைக்கு வெறிச்சோடிப்போய் இருக்கும்.

மரியதாஸ் வழியில் இருந்த மக்டொனால்ட்ஸ் உணவகத்தில் ஒரு பேர்கரை வாங்கிச்சாப்பிட்டான். அது பசியை மேலும் கிளப்பிவிடவே நேராகத் தமிழ்க்கடைக்கு நடந்து சென்று ஒரு ஆட்டிறைச்சி புரியாணியும் இஞ்சிச்சோடாவும் வாங்கிக்கொண்டு அருகிலிருந்த பூங்காவில் போய் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான். பூங்காவிற்குப் பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். முன்பின் அறியாத குழந்தைகள் பல திடல்களில் ஒன்றாகக்கூடி விளையாடிக்கொண்டிருந்தன. பெரியவர்கள் பியர் அருந்தியபடி சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார்கள். பாபிகியூ போட்டார்கள். சிலர் தம் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தார்கள். சில குழந்தைகள் தத்தித் தத்தி நடை பயின்றுகொண்டிருக்க, அவற்றின் தாயோ, தந்தையோ காவல்போல மெதுவாக அவர்களைப் பின்தொடர்ந்துகொண்டிருந்தார்கள். குழந்தைகள் இடறும்போது அவர்களும் இடறினார்கள். விழுவதற்குமுன்னர் போய்ப்பிடித்தார்கள். வெள்ளை இனத்தவர்கள். இந்தியர்கள். சீனர்கள். ஆபிரிக்கர்கள். முஸ்லிம்கள். எல்லோருக்கும் அந்தப்பூங்காவில் இடம் இருந்தது. பெரியவர்கள் தத்தமது குழுக்களோடு மாத்திரம் பேசித்திரிந்தாலும் குழந்தைகள் இன, மத, மொழி பேதமின்றி ஒன்றாகவே கூடி விளையாடின. விசா கிடைத்திருந்தால் அவனும்தான் இப்படி ரெஜினா, பிள்ளைகளோடு அந்தப்பூங்காவுக்கு வந்திருப்பான். பஸ்தியன் மற்றப்பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடியிருப்பான். எஸ்தர் அவளுடைய நண்பிகளையும் அழைத்து வந்திருப்பாள். நிற்செலா மாத்திரம் வளராமல் அப்படியே இருந்தாள். குழந்தை புல்வெளியில் தத்தித்தத்தி நடக்க, அவள் தடக்கி விழுந்திடுவாளோ என்று இவன் எக்கணமும் விழுந்து எழும்பியபடி, அவள் பின்னாலேயே திரிந்து. அவள்போலவே நடந்து. மரியதாசுக்கு கண்களை முட்டிக்கொண்டு வந்தது. அவளை அன்று தேவாலயத்தில் அப்படி வெளியே செல்ல விட்டிருக்கக்கூடாது என்ற எண்ணம் வந்தது. சாப்பிடமுடியவில்லை. அதற்குமேல் அங்கே இருந்தால் மலை அட்டை அவன் இரத்தத்தைக் குடிக்க ஆரம்பித்துவிடும் என்று தோன்றியது. அவன் பார்சலை அங்கிருந்த குப்பைக்கூடைக்குள் போட்டுவிட்டு பூங்காவைவிட்டு வெளியேறினான்.

மரியதாஸ் கலங்கிய கண்களுடன் இலக்கின்றி நடந்துகொண்டேயிருந்தான். யாருடனாவது பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ரெஜினாவுக்கு அழைப்பு எடுப்போமா என்று யோசித்தான். வேண்டாம். அவளுக்கு இது எதுவுமே புரியப்போவதில்லை. லோயர் என்ன சொன்னார் என்று கேட்பாள். அப்பீல் போடச்சொல்லி ஒற்றைக்காலில் நிற்பாள். இந்த பாழாய்ப்போன விசா கிடைத்துத் தொலைந்திருக்கக்கூடாதா? அவனுக்கு மட்டும் ஏன் இந்த உலகம் ஓரவஞ்சனை செய்கிறது என்று புரியவேயில்லை. அவனுக்குப்பிறகு வந்தவர்களுக்குக்கூட விசா கிடைத்துவிட்டது. இவனோடு கூடவே படகில் வந்த ஒருத்தன். அவன் சிலாபத்திலேயே பிறந்து வளர்ந்தவன். வாழ்க்கையில் துவக்குச்சன்னத்தையோ, எறிகணைச் சத்தத்தையோ கேட்டே அறிந்திராதவன். அவனுக்குக்கூட விசா கொடுத்துவிட்டார்கள். இன்னொருவன், மரியதாசுக்குத் தெரிய, அவன் கண் முன்னேயே வீடு வீடாக நுழைந்து சிறுவர்களை இயக்கத்துக்குப் பிடித்துக்கொண்டு சென்றவன். அவனுக்கும் விசா கிடைத்து, அவன் மனைவி பிள்ளைகளுக்கும் விசா கிடைத்து, இன்று பென்ஸ் வாகனத்தில் அவன் ஓடித்திரிகிறான். தாயக மக்களின் துயர் துடைக்கவென இசை நிகழ்ச்சிகள் செய்துகொண்டிருக்கிறான். எந்த மன உளைச்சலும் குற்ற உணர்ச்சியும் அவனுக்கு இருப்பதாகவே தெரியவில்லை. எல்லோருக்குமான இந்த உலகத்தில் மரியதாஸ் மாத்திரம் எப்படி சபிக்கப்பட்டவன் ஆனான்? ஞாயிறு ஆனால் குளிரோ, மழையோ, எரிக்கும் வெயிலோ, அவன் தேவாலயத்துக்கு போவதற்குத் தவறியதேயில்லை. இத்தனை வருடங்களில் உடல் சபலப்பட்டு சென்கில்டாப்பக்கம் ஒதுங்கியதில்லை. மனத்தால்கூட அவன் ரெஜினாவுக்குத் துரோகம் இழைத்தானில்லை. அவ்வப்போது பார்ட்டிகளில் கொஞ்சம் குடிப்பான். ஆனாலும் எக்காலத்திலும் நிறைவெறியில் உளறிக்கொட்டியதில்லை. மயங்கிச் சரிந்ததுமில்லை. மரியதாஸ் அவன் மனமறிந்து எப்போதுமே கர்த்தருக்கு விசுவாசமாகவே இருந்திருக்கிறான். ஆனாலும் என்ன வாழ்ந்துவிட்டது? எல்லோரும் அவனுக்கு வஞ்சம் செய்தபடியே இருக்கிறார்கள். தேவை முடிந்தபின்னர், நாவிடுக்கில் சிக்கிக்கிடக்கும் தேங்காய்ப்பூத் துகளைப்போல அவனைத் ‘து’ எனத் துப்பிவிடுகிறார்கள். இந்த நாடு வேண்டவே வேண்டாம். கொஞ்சம்கூடத் தாமதிக்காமல் ஊர் திரும்பிவிடவேண்டும். அப்படியே ஊர் திரும்பினாலுமே அவன் வாழ்க்கையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுவிடப்போகிறது. எதுவுமே மாறப்போவதில்லை.

மரியதாஸ் நேராக வீட்டுக்குச்சென்று கட்டிலில்போய் விழுந்தான். தலை சுள்ளென்று வலித்தது. ஏதும் சாராயம் குடித்தால் மனது சீராகும் என்று தோன்றியது. குசினி அலுமாரியில் இருந்த ஒரு சிவப்பு லேபிளை எடுத்து கிளாசில் மடமடவென்று ஊற்றினான். கட்டிலில் வந்து அமர்ந்திருந்தபடி குடிக்க ஆரம்பித்தான். இரண்டு மிடறு குடித்திருக்கமாட்டான்.

தொலைபேசி அடித்தது. சீட்டுக்காரனிடமிருந்து.

“அண்ணை சொல்லுங்கோ…”

“என்ன மரியதாஸ், ஊருக்குத் திரும்பப்போறியாமே, மெய்யா?”

அதற்குள் எப்படி சீட்டுக்காரனுக்கு விசயம்போனது என்று அவன் யோசித்துப்பார்த்தான். லோயர்தான் சொல்லியிருக்கவேண்டும். லோயரும் அந்தச்சீட்டில் இருப்பது ஞாபகம் வந்துது.

“ஓமண்ணை, விசாவையும் இழுத்தடிக்கிறாங்கள்.. சும்மா இங்கன இருந்து என்னெய்யிறது.. பிள்ளையும் குமராயிட்டுது.. அதான் போகலாம் எண்டு…”

“அதுதாஞ்சரி மரியதாஸ். இஞ்ச என்ன இருக்கு.. உழைச்சு ஒரு சதம் மிஞ்சப்போறதில்லை”

அவன் அமைதியாக இருந்தான். அந்த சீட்டுக்காரனுக்கு நான்கு வீடுகள் இருப்பது அவனுக்குத்தெரியும். இரண்டு கடைகள் வைத்திருக்கிறான். வருடத்துக்கு நான்கு வீடுகள் கட்டி விற்று லாபம் பார்ப்பான். மொத்தமாக எட்டு சீட்டுகள் பிடிக்கிறான். பிசினஸ் கிளாஸ் இருக்கையிலேயே விமானப்பயணம் செய்வான். அவன் சொல்வதும் ஒருவகையில் உண்மைதான். உழைத்து ஒரு சதம் மிச்சம் பிடிக்காமல் எல்லாவற்றையும் மறுமுதல் இட்டுவிடுவான் அவன்.

“சரி.. மரியதாஸ்… உண்ட சீட்டை என்ன செய்யப்போறாய்?”

“அதான் அண்ணை, உங்களுக்கு நானே அடிக்கலாம் எண்டிருந்தனான்.. இந்தக் கூறை எனக்கு எடுத்துத்தாங்கோவன்.. கனக்க கழிவு இல்லாம..”

“உனக்குத்தான் கூறோணும் மரியதாஸ்.. ஆனா இவன் சிவாவுக்கும் கலியாணவீடாம்… தனக்குத்தான் கூறவேணும் எண்டு முதலே சொல்லி வச்சிட்டான்… அதான் யோசிக்கிறன்”

“அண்ணை.. அப்பிடியெண்டா ஜெயமணிட்ட கை மாத்திடுவமா?”

“ஆரு ஜெயமணியா.. அவன் தன்ர தவணையையே கட்டேலாமத் திரியிறான்.. எதுக்கும் நானும் சிவாவிட்ட பேசிப்பாக்கிறன். ஏலாக்கட்டத்தில ஏலந்தான் விடவேண்டிவரும்.”

மரியதாசுக்கு விளங்கிவிட்டது. இவன் ஊருக்குத்திரும்புவதால் எப்படியும் சீட்டு எடுத்தே ஆகவேண்டும் என்பதால் இம்முறை நன்றாகக் கழிவை ஏற்றிவிடப்பார்க்கிறான். சிவாவை வைத்து போட்டிக்கு கூறச்செய்து. யோசிக்கையில் இருபதாயிரம் சீட்டில் கழிவு, மீதித்தவணைக்காசுகளும்போக இரண்டாயிரம் டொலர்கள்கூடத் தேறாது என்று தோன்றியது. கொஞ்சம்கூட ஈவு இரக்கம் இல்லாத மனிதர்கள். சிதறிக்கிடக்கும் உடலில் தாலிக்கொடியைத் தேடும் ஈனப்பிறவிகள்.

“சரியண்ணை.. எனக்காக ஒருக்கா பாத்து செஞ்சுதாங்கோ. நான் கூறை எப்பிடியும் எடுக்கோணும். மீதித்தவணைக்காசை ஜெயமணிட்ட குடுத்திட்டுப்போறன்”

“உனக்கில்லாமலா மரியதாஸ். ஆனா மிச்சத்தவணையை நானே பிடிச்சிட்டுத்தாறன்.. ஜெயமணி நல்லவந்தான். ஆனா இந்த பிசினசில ஆரையும் நம்பேலாது பாரு”

மரியதாஸ் போனை கட் பண்ணிவிட்டு கிளாஸை அப்படியே கவிழ்த்துக்குடித்தான். அரை மணிநேரத்தில் இன்னொரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவனை அந்த வீட்டில் வாடகைக்கு இருத்திய தமிழர் நலவாழ்வு அமைப்பிலிருந்து வந்த அழைப்பு. அவர்களுக்கு அவன் போகப்போவது தெரிந்துவிட்டது. அவன் அறையில் இன்னொருவரை இருத்தப்போவதாக அவனுக்குச்சொன்னார்கள். அவன் புறப்படும்வரை காத்திருக்கும் பொறுமைகூட அவர்களுக்கு இருக்கவில்லை. மரியதாஸ் கோபம் கொள்ளவில்லை. இதையும் லோயர்தான் போட்டுக்கொடுத்திருப்பார். அவன் இனிமேல் இந்த ஊரவருக்கு வேண்டப்படாதவன் ஆகிவிட்டான் என்பது புரிந்தது. அவன் என்றைக்குமே வேண்டப்படாதவனாகவே இருந்திருக்கிறான். இருக்கும்வரைக்கும் எல்லோரும் அவனில் இலாபம் பார்க்க முனைந்தனர். அவ்வளவே.

போவதென்று தீர்மானமானமாகிவிட்டதால் மரியதாஸ் அன்றே அவசர அவசரமாகக் காரியங்களில் ஈடுபட ஆரம்பித்தான். தொழிற்சாலைக்கு அழைப்பு எடுத்து வேலையை விடப்போவதாக அறிவித்தான். இலங்கைக்கு பார்சல் அனுப்பும் கடையில் பெரிதாக மூன்று பெட்டிகளை வாங்கிவந்து தன்னிடமிருந்த பொருட்களை அடுக்க ஆரம்பித்தான். அவன் வீட்டில் கூடத்தங்கியிருக்கும் ரமணனின் உதவியுடன் வங்கியின் கிரெடிட்கார்ட் வரையறையை உயர்த்தினான். எஸ்தர் தனக்கு ஒரு மொபைல்போன் வேண்டுமென்று கேட்டிருந்தாள். கடைக்குச் சென்று கிரெடிட்கார்டில் ஒன்றுக்கு இரண்டாய் ஐபோன்களை வாங்கினான். டீவி, பிரிட்ஜ், சமையல் இயந்திரம் என்று பல பொருட்களையும் கார்டில் வாங்கிவந்து வீட்டில் போட்டான். வீட்டில் கூடத்தங்கியிருக்கும் ரமணன் அவற்றை உள்ளூர் இணையக்கடையில் விற்பதற்கு விளம்பரம்போட்டான். நண்பருக்கு விலைகூடிய கணினி ஒன்றை கார்டில் வாங்கிக்கொடுத்து அரைவாசிப்பணத்தைப் பெற்றுக்கொண்டான். கிரெடிட் கார்டில் இப்படி ஏமாற்றுவதுபற்றி சற்று உறுத்தல் இருந்தாலும் இந்த நாடு அவனுக்குச் செய்த வஞ்சத்துக்கு அது ஒரு பரிகாரம் என்று அவன் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டான். இரண்டே நாளில் லோயரிடம் சென்று அவரின் கணக்கையும் தீர்த்துவிட்டான். இரண்டு வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் டிக்கட் போடுவார்கள் என்று சொன்னார்கள். அவன் வாங்கி வைத்திருந்த பார்சல் பெட்டிகள் நிரம்பமாட்டேன் என்று அடம்பிடித்தன. சொக்கலட்டுகள், சோப்பு, சம்போ வகைகள், டூனா மீன் டின்கள், உடுப்புகள் என்று எவ்வளவு வாங்கி நிரப்பினாலும் பெட்டிகளில் இடம் மீதமிருந்தது. ஆற்றாக்குறையில் அவன் சில பாசுமதி அரிசிப்பக்கற்றுகளையும் அவற்றுள் வாங்கிப்போட்டான். பெரிய பெட்டிகள் ஊரை அடைந்ததும் சிறிய பெட்டிகளாக ஆகிவிடும்போலத் தெரிந்தது. எவ்வளவு போட்டாலும் நிரம்பாத பெட்டிகள், ஊர் சென்று உடைக்கப்பட்டதும் உடனடியாகவே காலியாகிவிடுகின்றன. எவ்வளவு கொடுத்தாலும் வாங்குபவர்களுக்கு அது தோற்றுவதேயில்லை. பெட்டிகளை ஒருவாறு நிரப்பி, மூடிக்கட்டி கடையில் கொண்டுபோய்க்கொடுத்தான். பின்னர் தனது பயணப்பொதியையும் அடுக்க ஆரம்பித்தான். பெரிதாக அவனிடம் பொருட்கள் ஏதுமில்லை என்பது அப்போதுதான் விளங்கியது. எட்டு வருடங்களுக்கு முன்னர் படகில் வரும்போது கொண்டுவந்திருந்த டெனிம் ஜீன்சுகளையும் டீசேர்ட்டுகளையும்தான் அவன் இப்போதும் போட்டுத்திரிகிறான். பிறந்தநாள் வைபவங்களுக்கு போடவென இரண்டு சேர்ட்டுகள் மாத்திரம் அவனிடம் புதிதாக இருந்தன. ஓரிரு நண்பர்களும் தத்தமது குடும்பங்களிடம் கொடுக்கவென்று சிறு சிறு பார்சல்களைக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

ஐந்து நாள்களிலேயே குடிவரவு அமைச்சிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அடுத்த திங்களே டிக்கட் போடலாமா என்று கேட்டார்கள். உதவிப்பணம் பற்றி விளக்கினார்கள். இலங்கை விமானநிலையத்தில் போய் இறங்கியதும் ஐ.ஓ.எம் அமைப்பினர் அவனை வரவேற்பார்கள் என்று சொல்லி விசயங்களை விவரித்தார்கள். மொழிபெயர்ப்பாளரின் குரல் பரிச்சயமானதாக இருந்தது. யாராக இருக்கும் என்று அவன் யோசித்துப்பார்த்தான். அவனுடைய லோயரே வாயில் துணியை வைத்துக்கொண்டு பேசினார்போலத் தோன்றியது. அவர்கள் சொல்லியது எல்லாமே அவனுக்கு ஏலவே தெரிந்ததுதான். போயிறங்கியதும் ஐ.ஓ.எம் வந்து குடிவரவு விடயங்களைக் கவனிப்பார்கள். அவன் இலங்கையை விட்டு சட்டவிரோதமாக வெளியேறியமைக்காக ஒரு நாள் சிறையில் இருக்கவேண்டும். அதன்பிறகு ஐ.ஓ.எம் பிரதிநிதி அவனைப் பிணையில் விடுவிப்பார். ஊர் போனதும் உள்ளூர் விதானையிடமோ அல்லது காவல் நிலையத்திலோ அவன் அடிக்கடி சென்று கையெழுத்துவைக்கவேண்டும். அவன் காலத்துக்கு போயிறங்கியதும் ஊரில் ஏதும் பிரச்சனை அவனைத்தான் வந்து பிடிப்பார்கள். எங்காவது கோப்புகளில் அவன் பெயர் அடிபட்டால் தேடி வருவார்கள். இதெல்லாம் தேவையில்லாத வேலை என்று முன்னர் போனவர்கள் அவனுக்குச் சொல்லிவிட்டிருந்தார்கள். விமானநிலையத்தில் ஐந்நூறு டொலர்களை அதிகாரிகள் கையில் கொடுத்தால் அவனை சக இலங்கையராக உள்ளே எந்தச்சிக்கலும் கொடுக்காமல் அவர்கள் அனுமதிப்பார்கள். அவன் ஏற்கனவே ஒரு கடித உறையில் பணத்தை எண்ணி ஹாண்ட் லக்கேஜில் தயாராக வைத்துவிட்டிருந்தான்.

ரெஜினாக்கு பயணத்தேதியைச் சொன்னபோது அவளது பதில் பெரிதாக ஆச்சரியத்தை அளிக்கவில்லை.

“அப்ப.. மெய்யாலும் வரத்தான் போறிங்க… அப்பீல் குடுத்துப்பார்க்கேலையா?”

“வீண் காசு.. வாறதெண்டு முடிவெடுத்திட்டன்… நீ ஏர்போட்டுக்கு வாறியா?”

“… வரத்தான் வேணும்.. அண்டைக்கு பஸ்திக்கு பள்ளிக்கூடத்தில சோதிணை இருக்கு.. சுந்தரமண்ணைண்ட வேனை அனுப்பிவிடட்டா”

அவன் அமைதியான இருந்தான். இதுவே விசா கிடைத்து விடுமுறையில் அங்கு போகிறான் என்றால் நிலைமையே வேறு என்று எண்ணத்தோன்றியது. இப்போது ஒன்றுக்கும் வேண்டப்படாதவன் ஆகிவிட்டான். விமானநிலையத்திற்கு வந்து வரவேற்பதற்குக்கூட அவனுக்கு ஆள் இல்லை.

“இல்ல விடு.. சுந்தரத்துக்கு வீணா காசு கொட்டேலாது.. நான் ஒரு பஸ்சை பிடிச்சு வர்ரன்”

“அதுவுஞ்சரிதான்.. இப்ப பஸ் அடிக்கடி நீர்கொழும்பில இருந்து இருக்கு.. டவுனுக்க வந்திட்டா இங்கால ஒரு ஆட்டோவை பிடிச்சு வந்திடலாம்”

சனிக்கிழமை இரவு வீட்டு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அவனுக்குப் பார்ட்டி வைத்தார்கள். அன்றைக்கு வேறு பல இடங்களிலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தார்கள். புட்டும் இடியப்பமும் கடையில் வாங்கி வீட்டில் செம்மறி ஆட்டுக் கறி சமைத்தார்கள். இவன் இரண்டு சிவாஸ் ரீகல் போத்தல்களை அவர்களுக்கு வாங்கிக்கொடுத்தான். இரவிரவாக எல்லோரும் குடித்துக்கொண்டிருந்தார்கள். அங்கிருந்த பலரும் விசாவுக்காக காத்திருந்தவர்கள்தான். சிலருக்கு ஓரிருமுறை விசா ஏலவே ரிஜெக்ட் செய்யப்பட்டுவிட்டது. சிலருக்கு இன்னமும் வழக்கு நடந்துகொண்டிருந்தது. விசா கிடைத்தவர்கள் சிலரும் அங்கிருந்தார்கள். எல்லோரும் அவரவர் காரணங்களுக்காகக் குடித்தார்கள் என்று தோன்றியது. மரியதாசை ஒரு அற்புதமான மனிதன் என்று அவர்கள் புகழ்ந்தார்கள். அவன் திரும்பிச்செல்ல எடுத்த முடிவு சரியானது என்றார்கள். அது அவனது முடிவல்ல என்று அவன் அவர்களைத் திருத்த முயலவில்லை. விடுமுறைக்கு அவன் குடும்பத்தை இங்கு அழைத்துவரவேண்டும் என்று ஒருவர் அபத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார். விசா கிடைத்து அவுஸ்திரேலியக் குடியுரிமையும் பெற்றுக்கொண்டவர் அவர். எல்லோரும் ஊருக்கு வரும்போது மரியதாசை வந்து சந்திப்பதாகச் சொன்னார்கள். சற்று நேரத்தில் பேச்சு சீமான், ரஜினி அரசியல் வருகை என்று திரும்பி ஒரு நடிகையின் வீடியோவில் போய் முடிந்தது. எல்லோரும் சேர்ந்து மரியதாசுக்கு ஆயிரம் டொலர்கள் பணம் சேர்த்துக்கொடுத்தார்கள். கொஞ்சநேரத்தில் பலர் சொல்லிக்கொண்டு புறப்பட்டுப்போனார்கள். ஒரு சிலர் நிறைவெறியில் ஆடிக்கொண்டிருந்தார்கள். வெளியில் சிகரட் பிடிக்கப்போனார்கள். ஒருத்தன் பாத்ரூமில் சத்தி எடுத்துக்கொண்டிருந்தான். ஊரில் அப்போது எட்டு மணி என்பதால் பலர் தெருவோரம் ஆளுக்கொரு திக்கில் வீட்டோடு பேசிக்கொண்டிருந்தார்கள். மரியதாஸ் ரெஜினாவுக்குக் கோல் பண்ணலாம் என்று வைபரைத் திறந்தான். வெள்ளைத்தங்கத்தில் ஒரு நெக்லஸ் வாங்கிவருமாறு அவள் மெஸேஜ் பண்ணியிருந்தாள். மரியதாசுக்கு கோபம் கோபமாக வந்தது. அவன் நன்றாகக் குடித்துவிட்டிருந்தான். கோல் எடுத்தால் ஏதாவது ஏடாகூடமாகப் பேசி போகமுதலே சண்டை பிடித்துவிடுவான்போலத் தோன்றியது. அவன் போனை சார்ஜில் போட்டுவிட்டு கட்டிலில் போய்ப்படுத்தான். பசித்தது. அவன் இன்னமும் சாப்பிடவில்லை என்பது அப்போதுதான் ஞாபகம் வந்தது. குசினிக்குள் போய்ப்பார்த்தால் கறிச்சட்டி வழிச்சுத்துடைக்கப்பட்டிருந்தது. வெறும்புட்டு மாத்திரம் எஞ்சியிருந்தது. அவன் அதை சீனிபோட்டுக் குழைத்து இரண்டுவாய் சாப்பிட்டுவிட்டு போய்க் கட்டிலில் விழுந்தான்.

மறுநாள் காலை மரியதாஸ் எழுந்தபோது தலை தெறித்துவிடுமாப்போல வலித்துக்கொண்டிருந்தது. போனை எடுத்துப்பார்த்தால் பஸ்தியும் எஸ்தரும் ஆளுக்கு தனித்தனியாக சாமான் லிஸ்ட் அனுப்பியிருந்தார்கள். எல்லாவற்றையும் வாங்குவதற்கு ஆயிரம் டொலர்கள் தேவைப்படும் என்று தோன்றியது. ரெஜினாவின் வெள்ளைத் தங்க நெக்லசுக்கு இன்னொரு ஆயிரம் முடியலாம். சீட்டுக்காரன் இன்னமும் இந்தா அந்தா என்று மீதிக்காசு கொடுக்காமல் ஏய்த்துக்கொண்டிருந்தான். மொத்தமாக ஆயிரத்து எண்ணூறு டொலர்கள். மீதித்தவணைக்காசுகளை கழிவுகளின்றிப் பிடித்துக்கொண்டுவிட்டான். அவன் கழிவுகளை உறுதியளித்தபடி பின்னர் அனுப்பி வைக்கப்போவதுமில்லை. அவ்வளவும் அறா நட்டம். ஆனால் அந்தக்காசைக்கூட அவன் தராமல் சுத்தப்போகிறான் என்பதை நினைக்கையில் மரியதாசுக்கு வயிற்றினுள் அமிலம் கரைந்தது. ஆரம்பத்தில் நிறையக் கணக்கு போட்டிருந்தவன், இப்போது கையில் வெறும் நான்காயிரம் டொலர்கள் மாத்திரம் அவனிடம் எஞ்சியிருந்தது. கிரெடிட்கார்டில் வாங்கிய டிவியை இணையத்தில் விற்றிருந்தாலும் பிரிட்ஜும் சமையல் இயந்திரமும் விற்படாமல் இழுபட்டுக்கொண்டிருந்தன. விற்பட்டதும் காசை அனுப்பிவைப்பதாக ரமணன் சொல்லியிருந்தான். ஊரிலிருந்து படகேறும்போது அவனிடம் அதிகம் காசு இருந்ததுபோலத் தோன்றியது. பேசாமல் ரெஜினா சொன்னதுபோல அப்பீல் செய்து பார்த்திருக்கலாமோ என்று வந்த எண்ணத்தை வலிந்து கலைத்தான். கடைசியாக ஒருமுறை தேவாலயத்துக்குப்போய் வந்தால் மனது நிம்மதி அடையும்போலத் தோன்றியது.

மரியதாஸ் தேவாலயத்தை அடையும்போது நன்றாகத் தாமதமாகிவிட்டிருந்தது. திருப்பலியில் நற்கருணை மன்றாட்டம் செய்துகொண்டிருந்தார்கள். அவன் பின்னாலேயே போய் நின்று பிரார்த்தனையில் ஈடுபட ஆரம்பித்தான்.இத்தாலிய மொழியில் மிக மென்மையாக பாதர் டொல்டோ இறைவனை மன்றாடிக்கொண்டிருந்தார். ஆண்டவர் விண் நோக்கி, இறைவருக்கு நன்றி சொல்லிவிட்டு, திருவிருந்தில் கூடியிருந்த சீடர்களுக்கு அப்பத்தைப் பிரித்துக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவன் கண்களை மூடிக்கொண்டான்.

அடைக்கலராசா பாதரின் குரல் சாந்தமாக ஒலிக்க ஆரம்பித்தது.

இயேசுபிரான் அப்பத்தை தன் சீடர்களுக்குக் கொடுத்தபடியே சொல்கிறார்.
இதைப் பெற்று உண்ணுங்கள்;
இது எனது உடல். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்.
எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்;
மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.
எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.
எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்”

கண்மூடி செபித்துக்கொண்டிருந்த மரியதாஸ் திடுக்கிட்டு விழித்தான். கைகளைப்பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த நிற்செலா எங்குபோனாள் என்று தேடினான். அவள் பெயர் சொல்லிக் கூப்பிட்டுப்பார்த்தான். பதில் வரவில்லை. அவளை வெளியே விளையாட அனுப்பியது ஞாபகம் வந்தது. வெளியில் அவளுடைய குரல் கேட்கிறதா என்று காதுகளைக் கூர்மைப்படுத்திப் பார்த்தான். எல்லாமே அமைதியாக இருந்தது. தூரத்தில் லோஞ்சிச்சத்தம் ஏதும் கேட்கிறதா என்று கவனித்தான். காகங்கள், கடலலைகள், மீன் பொரிக்கும் நாற்றம், மனிதர்களின் உரத்த பேச்சொலிகள், சிறுவர்கள் விளையாடும் சத்தம். எதையுமே உணரமுடியவில்லை. வழக்கத்துக்கு மாறான ஒரு மயான அமைதி நிலவியது. திடீரென்று அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு ‘மே…’ என்ற கதறல் கேட்க ஆரம்பித்தது. கதியால் வேலியில் சிக்குண்ட அந்த ஆட்டுக்குட்டியின் கதறல். கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கதறல் பெரிதாகி, ஓலமாக வெளிப்பட ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் அது இறைஞ்சலாக உருமாற ஆரம்பித்தது. அருகிலேயே நின்ற குட்டியின் தாய் ஆடும் இப்போது கத்த ஆரம்பித்திருந்தது. நிற்செலா அந்த ஓலத்தைக் கேட்டால் பயந்துபோவாள். மரியதாஸ் ஆட்டுக்குட்டியை விடுவிக்கவென அங்கிருந்து ஓடினான். வெளியில் போனால் அங்கே நிற்செலாவைக் காணவில்லை. ஏனைய சிறுவர்களும் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. ஆட்டுக்குட்டியின் கதறல் மாத்திரம் பெரிதாகிக்கொண்டே இருந்தது. மேற்கு வேலிப்பக்கமாகத்தான் அதன் சத்தம் வந்துகொண்டிருந்தது. அவன் அங்கே ஓடினான். முட்கிழுவை வேலிப்பொட்டுக்குள் குட்டியின் முக்காலி சிக்கிப்போய் ஈனசுரத்தில் அது அலறிக்கொண்டிருந்தது. இவனைக் கண்டதும் அதன் தாய் ஆடு இன்னமும் பெரிதாகக் கத்த ஆரம்பித்தது. மரியதாஸ் விரைந்துசென்று பொட்டில் சிக்கியிருந்த ஆட்டுக்குட்டியை விடுவித்தான். அப்படி விடுவித்த பின்னரும் தாயும் குட்டியும் தமது ஓலத்தை நிறுத்தாமல் தொடர்ந்து கத்திக்கொண்டேயிருந்தன. அவன் அந்த ஆட்டுக்குட்டியைத் தூக்கி வாஞ்சையுடன் அதன் தலையைத் தடவிவிட்டான். நிற்செலா எங்கு போயிருப்பாள்? அவன் தேவாலயத்தின் வளவு எங்கிலும் அவளைத் தேடத்தொடங்கினான். அவளைக் காணவில்லை. ‘நிற்செலா நிற்செலா நிற்செலா’ என்று கத்தியபடி மீண்டும் தேவாலயத்தின் முற்றத்துக்கு ஓடிப்போனான். அவள் வீதிக்குப்போயிருக்கலாம் என்ற எண்ணம் வந்தது. வீதிக்கு ஓடினான்.

‘நிற்செலா…’

திடீரென்று பெரும் அதைப்போடு குண்டு ஒன்று தேவாலயப்பக்கம் வெடித்துச் சிதறியது. அதிர்ச்சியில் மரியதாஸ் அங்கேயே சரிந்தான். உலோகத்துண்டு ஒன்று அவனது பின் மண்டையை சாதுவாகக் கிழித்துக்கொண்டுபோனது. அவனுக்கு தலையில் சுடுதண்ணீர் கசிவதுபோல இருந்தது. சுதாகரித்துக்கொண்டு அவன் நிமிர்ந்து பார்த்தால், கோபுரப்பக்கமிருந்து பெருத்த புகைமண்டலம் எழுந்துகொண்டிருந்தது. அடுத்தகணமே அவன் ‘நிற்செலா’ என்று கத்திக்கொண்டு தேவாலயத்தை நோக்கி ஓடினான். புகை எல்லாவிடமும் பரவியிருந்தது. அந்தக் ஆட்டுக்குட்டியினது சத்தம் இப்போது அடங்கியிருந்தது. தாய் ஆட்டினுடைய சத்தமும் கேட்கவில்லை. ஆலயத்தினுள்ளேயிருந்து மனிதர்களின் அவலக் கதறல்கள் எழத்தொடங்கியிருந்தன. இரத்தம் மரியதாசின் பிடறிவழியே கசிந்து அவன் கழுத்தில் வடிய ஆரம்பித்திருந்தது.

“நிற்செலா… நிற்செலா… நிற்செலா…”

அவன் தேவாலயத்தின் உள்ளே, ஒவ்வொரு வாங்கில் வாங்கிலாக நிற்செலா பெயரை அரற்றியவாறு அலைந்துகொண்டிருந்தான். உள்ளே எங்கேயும் அவளைக் காணவில்லை. ஆலயத்தின் உடைந்து கிடந்த சிதிலங்களை விலக்கித் தேடிப்பார்த்தான். எல்லாத் திசைகளிலிருந்தும் இப்போது ஓலங்கள் கேட்கத்தொடங்கியிருந்தது. பிள்ளைக்கு ஒன்றும் ஆகியிருக்காது. கர்த்தரே. எங்குதான் போயிருப்பாள்? எங்கென்று அவளைத் தேடுவது?

“நிற்செலா...”

“ஆர் யு ஓல்ரைட் மேட்?”

அருகிலிருந்தவர் தோள்களைத்தட்டிக் கேட்கவும் மரியதாஸ் சுயநினைவுக்கு வந்தான். அவன் முகமெல்லாம் வியர்த்திருந்தது. நிற்செலாவின் பெயரைக் கொஞ்சம் சத்தமாகவே அவன் அரற்றியிருக்கவேண்டும். திருப்பலி முடியுந்தறுவாயில் இருந்தது. மரியதாஸ் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறி, பேருந்துத் தரிப்பிடத்திற்கு வந்து தலையைப்பிடித்தபடி உட்கார்ந்தான். பிடறிக்குள்ளே ஊசி குத்தினாற்போல வலித்துக்கொண்டிருந்தது. போனை எடுத்துப்பார்த்தால், ரெஜினா அவளுக்குப்பிடித்த நெக்லஸ் டிசைன் படங்கள் பலவற்றை அனுப்பியிருந்தாள். பஸ்தியும் எஸ்தரும்கூட மேலும் புதிதாகச் சில பொருட்களை லிஸ்டில் இணைத்திருந்தார்கள். அவன் சீட்டுக்காரனுக்குக் மீண்டுமொருமுறை கோல் எடுத்துப்பார்த்தான். கட்டாகியது. வீட்டுக்குத்திரும்பி கொஞ்சநேரம் படுத்தெழும்பினால் நன்றாக இருக்கும்போலத் தோன்றியது. பின்னர் அந்தச் சிந்தனையை உதறிவிட்டு நகைக்கடை எங்கே இருக்கும் என்று யோசித்தான். பேரங்காடியில் ஒரு நகைக்கடை இருப்பது ஞாபகம் வந்தது.

மரியதாஸ் மெதுவாக எழுந்து, தேவாலய உச்சியிலிருந்த சிலுவையை வணங்கிவிட்டு, பேரங்காடியை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

*****

-புதிய சொல் - 2019

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?