Skip to main content

நீளிரா



சோமிதரனுடைய இயக்கத்தில், பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவு செய்ய வெளியாகியிருக்கும் திரைப்படமான நீளிரா பற்றி நண்பர்கள் எழுதும் கட்டுரைகளை வாசிக்க ஆர்வமும் கொஞ்சம் குற்ற உணர்வுமே மேலிடுகிறது.

நீளிராவை இங்கே மெல்பேர்னில் இரண்டே இரவுகள் மட்டும் ஒன்பதரை மணிக்குக் காட்சிப்படுத்தினார்கள். அந்தத் திரையரங்கும் ஒரு மணி நேரப் பயணத் தூரத்தில் இருக்கிறது. அதனால் அதனைத் திரையில் பார்த்து அனுபவிக்கும் சந்தர்ப்பம் கை நழுவிப்போய்விட்டது. இப்போது திரைப்படம் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதால் மீண்டும் விநியோகஸ்தர்கள் மெல்பேர்னில் இதனைத் திரையிடக்கூடும். பார்க்கலாம்.

நீளிராவின் ஒளிப்பதிவாளரான பிரதீபனோடு எனக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு. பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் அவர் என்னைத் தொடர்புகொண்டு ‘பங்கர்’ புனைவுக்கட்டுரையை குறும்படமாக்கும் ஆர்வத்தைத் தெரிவித்தார். அவர் பூனே திரைப்படக்கல்லூரியில் அப்போது படித்துக்கொண்டிருந்தார் என்பதாக ஞாபகம். சில வாரங்களில் மிக அழகான திரைக்கதை ஒன்றையும் எழுதி அனுப்பினார். சில வசனங்களை யாழ்ப்பாண சொல்வழக்குக்கு மாற்றித்தரக் கேட்டார். சில காட்சிகளைப் படமாக்கியும் அனுப்பியதாக ஞாபகம். ஆனால் திடீரென்று ஊரில் இவர்கள் குறும்படத்துக்காக பங்கர் வெட்டியது சிக்கலை உருவாக்கிவிட்டது. அதன் பின்னர் நாட்டின் அரசியல் சூழல், பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது என்று நினைக்கிறேன்.

ஆனாலும் நாம் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தோம். பிரதீபன் இலக்கிய வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவர். வேறு இலகுவான கதைகள் எதையாவது குறும்படமாக எடுக்கலாமா என்று ஒருநாள் அவர் கேட்டபோது மருதூர்க்கொத்தனின் ‘மரையாம் மொக்கு’ என்ற சிறுகதையை குறிப்பிட்டேன். ஒரு தனித்துவ நிலம், மொழி, மனிதர் என்று சுற்றக்கூடிய கதை அது. அதிகம் செலவாகாது என்றும் சொன்னேன். ஆனால் அதுவும் ஏனோ கைகூடவில்லை.

சில ஆண்டுகள் கழித்து, ‘சமாதானத்தின் கதை’ தொகுப்பில் வருகின்ற ‘வெம்பிளி ஒஃப் ஜாப்னா’ சிறுகதையை முழு நீளத் திரைப்படமாக்கலாம் என்று பிரதீபனும் சில நண்பர்களும் திட்டம் போட்டார்கள். ஒரு சில கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. பின்னர் கோவிட் வந்துவிட்டது. ஆனாலும் அவ்வப்போது கூட்டம் போட்டு திரைக்கதையை உரையாடினார்கள். அதுவும் இன்ன பிற காரணங்களால் சாத்தியமின்றிப்போனது.

எப்போதோ ஒரு முறை எழுத்தாளர் சயந்தனோடு உரையாடியபோதும் அவர் சோமிதரன்பற்றி இந்த வகையிலேயே தகவல்களைச் சொன்னார். சோமிதரனும் பிரதீபனும் இன்று கண்டடைந்திருக்கும் நீளிரா என்ற புள்ளிக்குப் பின்னே மிக நீண்ட, பயனுள்ள உழைப்பும் பயிற்சியும் இருக்கின்றது. கடின முயற்சி உண்டு. பல பின்னடைவுகளும் விரக்திகளும் அவற்றுள் உள்ளடக்கம். இவை எல்லாவற்றையும் கடந்து அவர்கள் தொடர்ந்து இயங்கியதால்தான் நீளிராவை இன்று கண்டடைய முடிந்தது. இனியும் அவர்கள் தொடர்ந்து இயங்குவார்கள். கலையின் பல சாத்தியப்பாடுகளை அவர்கள் முயற்சி செய்வார்கள். அதற்கான ஓர்மமும் திறனும் செயலும் அவர்களிடம் உண்டு.

எழுத்து போன்றது அல்ல திரைக்கலை. அங்கே வணிக வெற்றியும் புகழடைதலும் கொஞ்சம் அவசியம். மதிசுதா, சோமிதரன், பிரதீபன் என்று ஒரு தலைமுறை தம் கதைகளை செவ்வனே திரையில் கொண்டுவர இடையறா முயற்சியில் இயங்கிக்கொண்டேயிருக்கிறார்கள். இயலுமானவரை சமரசங்கள் செய்வதையும் தவிர்க்கிறார்கள். அவர்கள் வெற்றியடைவதும் கொண்டாடப்படுவதும் அவசியம்.
நீளிரா குழுவினருக்கு அன்பான வாழ்த்துகள்.


Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.