Skip to main content

ஜேன் ஓஸ்டினின் படைப்புலகம் - podcast


இந்த உரையாடலைச் செய்யும் எண்ணம் தற்செயலாகத்தான் உருவானது.
 

ஜேன் ஓஸ்டினின் நாவல்களைப் பற்றி கலா அக்காவும் நானும் நம்முடைய வாட்ஸப் குழுமத்தில் அடிக்கடி கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருப்போம். ஒரு கட்டத்தில் அதையே பொட்காஸ்டாக செய்தால் என்ன என்று தோன்றிய எண்ணத்தின் விளைவுதான் இந்தக் காணொளி.


ஜேனின் “Sense and Sensibility” என்ற நாவலைப் பிரதான இழையாகக்கொண்டு இந்த உரையாடலை நாம் அமைத்துள்ளோம்.  இந்நாவலைத் தழுவியே ராஜீவ்மேனன் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” என்ற திரைப்படத்தின் இயக்கினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜேனை வாசித்திருக்காவிட்டாலும் கண்டுகொண்டேன் திரைப்படத்தை விரும்பிப் பார்த்தவர் எனில் இந்த உரையாடலை உள்வாங்குவது உங்களுக்கும் எளிதாக அமையும் என்று நம்புகிறேன். 


இந்த உரையாடலைச் சாட்டாக வைத்து மறுபடியும் ஜேன் ஓஸ்டினின் மாந்தரோடு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. அதையே கலா அக்காவோடு இணைந்து செய்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.


கலா அக்கா புத்தகங்களின் காதலி.


புத்தகங்களை அவர் பேச ஆரம்பிக்கையிலேயே கூட இருக்கும் நமக்கும் ஒரு குழந்தையின் பரவசம் தொற்றிவிடுவதுண்டு. இந்த ஒரு மணி நேர உரையாடல் முடிந்தும் பல மணி நேரங்கள் அந்தப் பரவசம் என்னை விட்டகலாமல் அருகேயே ஒட்டிக்கொண்டு நின்றது. அவருக்கும் அஃதே நிலை. ஐயோ தம்பி, இன்னமும் பேசுவதற்குப் பல குறிப்புகள் வைத்திருந்தேன். அப்படியே மறந்துபோனேன் என்று அடுத்த நாள் செய்தி அனுப்பினார்.  


இருநூறு வருடங்களுக்கு முன்னர், “written by a lady” என்று, ஜேன் ஓஸ்டினின் பெயரைக்கூடப் பதிப்பிடாமல் வெளியான நாவல் “Sense and Sensibility”. ஒரு பெண் நாவல் எழுதுவதும் வெளியிடுவதும் தகாத செயலாகப் பார்க்கப்பட்ட காலம் அது. இத்தனை வருடங்கள் கழித்து நானும் கலா அக்காவும் அந்த மனிசியின் படைப்புகளை இப்படிப் பேசுகிறோம் என்பது உன்மத்தம் அல்லவா? இதனைச் சாத்தியப்படுத்தியமைக்கு கலா அக்காவுக்கு மனங் கனிந்த நன்றி.


பார்ப்பவருக்கும் கேட்பவருக்கும் இது சென்று சேரும் என்று நம்புகிறேன்.

Apple Podcast Link


Spotify Podcast Link


YouTube Podcast Link


Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.