இன்று காலை இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது. சிறு வயதில் இப்பாட்டை அடிக்கடி நான் முணுமுணுப்பதுண்டு. ஊரின் ஒவ்வொரு சந்தி மூலைகளிலும் எஞ்சி நின்ற மின்சாரக் கம்பங்களில் ஒலி பெருக்கிகள் பூட்டப்பட்டு இயக்கப்பாடல்கள் இசைக்கப்பட்ட காலம் அது. ஒரு பக்கம் ‘கனலில் கருவாகி’, ‘பிள்ளையார் சுழி போட்டு’ என்று கோயில் கோபுரங்கள் பாடல்கள் இசைக்க, இன்னொரு பக்கம் ‘மக்களெல்லாம்’ என்று இசை கேட்க, சைக்கிளில் சுற்றித்திரிந்த சிறுவர்களுக்கு இவ்விரண்டு வகைப் பாடல்களும் மண்டைகளுக்குள் ஏறியது ஆச்சரியமில்லை. எப்படி மதங்களினூடாகப் பல தலைமுறைகளில் கலை முகிழ்ந்தெழுந்ததோ அதுபோலவே போராட்ட காலத்தின் கலையும். மதங்களையும் அவற்றின் எதேச்சதிகாரங்களையும் நிராகரிக்கும்போது நாச்சியார் திருமொழியையும் சுந்தர காண்டத்தையும் நாம் புறந்தள்ளினோமானால் இழப்பு நமக்குத்தான். அதுபோலவே போராட்டங்கள்மீது நாலு பேருக்கு நாலு விதமான எண்ணம் சிந்தனைகள் இருக்கலாம். அதனாலேயே அக்காலத்துக் கலையை மறுதலித்துவிடக்கூடாது. அந்தக் காலத்தின் ஈழத்து இசையும் அவ்வகையானதுதான். மிக அற்புதமான இசைத்தொகுப்புகள் அக்காலப்பகுதியில் வந்திருக்கின்றன. அப்பாடல்களின் வ...