Skip to main content

Posts

பீரை நினைச்சு மோரை அடிச்சும் ...

பீரை நினைச்சு மோரை அடிச்சும் போதை ஏறாது, புரிஞ்சுக்கோ. காரை நினைச்சு தேரை உருட்டியும் ஸ்பீடு ஏறாது, அறிஞ்சுக்கோ. கீரை கடைக்கு எதிர போட்டும் வாங்க ஆள்வேணும், உணர்ந்துக்கோ. கூரை பிரிச்சு அள்ளிக் கொட்டியும் சாமி இல்லை நீ, தெரிஞ்சுக்கோ ஒட்டகத்தை கூட்டிக்கொண்டு பெட்டிக்கடை போகாதே. வெட்டிப்பயல் லைக்குக்காக ஒட்டடைய போடாதே. சொட்டைப்பயல் படம் போட்டா தொப்பி கொழுவிப்பார்க்காதே. பிட்டு லிங்கை கிளிக்குப்புட்டு டக்கு பண்ணி மாட்டாதே.. கல்லாமையோட நிண்டு நீயேன் கட்டிப்பிடிச்சு உருளவேணும்? மல்லுப்பிடிச்சி ஆருக்கு என்ன லாபம் சொல்லு பார்ப்பம்? இல்லுக்கிட்ட வில்லுப்பிடிச்சி வெண்டவன காட்டு பார்ப்பம்? சொல்லாத சொல்லைப்போல நல்ல சொல்லு சொல்லு பார்ப்பம்? வண்ணாத்திப் பூச்சிபோல வாழுநாளு கொஞ்சக்காலம். எல்லாமே புரிய உனக்கு இல்ல காணும் ரொம்ப நேரம். உள்ளகாலம் கொஞ்சத்தையும் வெஞ்சினத்தில் கரைச்சுப்புட்டா இல்லாமப் போனபின்னும் கரையாது அண்டங் காகம்! *************  Photo : Peter Mueller

வீராவின் விதி

  “The present determines the past” -- Veera’s Theorem இன்றைக்கு மட்டும் இரண்டாயிரம் தடவைகள் இதனை வாசித்துவிட்டேன். தமிழில் இன்னொரு ஆயிரம் தடவைகள். “நிகழ்காலத்தின் எந்தவொரு அவதானிப்பும் கடந்தகாலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்” -- வீராவின் விதி. என்னாலேயே நம்பமுடியவில்லை. மீண்டும் மீண்டும் சரி பார்த்துவிட்டேன். நிறுவல்கள் எல்லாமே சரியாக இருக்கின்றன. உலகத்தில் அத்தனை விஞ்ஞானிகளாலும் கணித மேதைகளாலும் தீர்க்கமுடியாமல் தண்ணி காட்டிகொண்டிருந்த நிறுவல். உலகத்தையே புரட்டிப்போடப்போகின்ற சமன்பாடு. என் கைகளில். மொத்தமாக முன்னூற்றுப்பத்து பக்கங்கள். உலகமே வீராஸ் விதி என்று அலறப்போகிறது. யோசித்துப்பார்க்கவே ... உள்ளயிருந்து ஸ்ஸ்ஸ் என்று ஒரு பட்டாம்பூச்சி. “நீ சாதிச்சிட்டாய் வீரேயிங்கம்” வரும் வாரங்களில் எல்லாமே நான் நினைப்பதுபோல சரியாக அமைந்துவிட்டால் பேராசிரியர் வீரசிங்கம் என்ற பெயர் விஞ்ஞான உலகின் தவிர்க்கமுடியாத பெயராக அமைந்துவிடும். உலகின் அத்தனை மூலைகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலிருந்தும் உரையாற்ற அழைப்புகள், டெட் டோக், பட்டங்கள், கௌரவ பேராசிரியர் பதவிகள் தேடிவரும். முயன்றால் லூக்கேசியன்

தீரா உலா

ஒரு திரைப்படத்தை பார்த்து முடித்தபின்னர், கிளைமக்ஸுக்கு பிறகு என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கும் கிறுக்கு குணம் எல்லோருக்கும் இருந்திருக்கும். காதல்கோட்டை தேவயானியும் அஜித்தும் தாங்கள் தவறவிட்ட சந்திப்புக்களைப்பற்றி எத்தனைதடவை பேசியிருக்கக்கூடும்? யோசித்தால் சுவாரசியமாக இருக்கும். “காதல் கவிதை” படத்தில் கமலிக்கும் சூரியாவுக்கும் கல்யாணம் என்று சின்னி ஜெயந்த் சொல்லுகின்ற காட்சி ஒன்றுகூட இருக்கிறது. அலைகள் ஓய்வதில்லையில் கார்த்திக்கும் ராதாவும் ஓடிப்போய் சந்தோசமாக குடும்பம் நடத்தியிருக்கமுடியுமா? பள்ளிக்கூட மாணவர்கள். உழைப்பில்லை. பணக்கார வீட்டுப்பெண் ராதாவால் சமாளித்திருக்கமுடியுமா? அலைகள் ஓய்வதில்லை மீதிப்பாகம் “காதல்” படமாகவே மாறியிருக்கும் சாத்தியம் அதிகம். பாவம் அந்தப்பெடி.

நெடுங்குருதி

  மழைக்கு பிந்திய கோவிலின் பிரகார வெளியில் மரங்கள் நீர்கோர்த்துக்கொண்டிருந்தன. பூக்கள் உதிர்வதைப்போல மழைத்துளிகள் உதிர்ந்துகொண்டேயிருந்தன.  திருமால் ஈரக்கல்லை புரட்டி அதனடியில் மண்புழு  ஒளிந்துகொண்டிருக்கிறதா என்று தேடிப்பார்த்தான். மண்ணைத் துளைத்துக்கொண்டு ஒரு புழு எட்டிப்பார்த்தது. அவன் அதோடு பேச விரும்பியவனைப்போல கேட்டான். “மண்ணு ருசியாவா இருக்கு. அதைப்போயி திங்குறே?” மண்புழு சப்தமில்லாமல் ஊர்ந்து திரும்பியது. அவன் தன விரல்களால் மண்புழுவை தொட்டுப் பார்த்தான். அது உடலை நெளித்தது. “உன் வீடு எங்கேயிருக்கிறது … அங்கே மழை பெஞ்சதா?” மண்புழு மண்ணை உமிழ்ந்தபடி சுருண்டது. அவன் ஆத்திரத்துடன் சொன்னான். “பதில் சொல்றயா … இல்லை மண்டையைத் திருகிப் போடணுமா?” மண்புழு எதையும் பொருட்படுத்தாதது போல ஊர்ந்து போகத்துவங்கியது. ஆத்திரத்துடன் மண் புழுவைக் கையில் எடுத்துக்கொண்டுபோய் கோவில் கிணற்றில் போட்டுவிட்டு வந்தான். அதே இடத்தில் இன்னொரு மண்புழு ஊர்ந்துகொண்டிருந்தது. பயத்துடன் அதினிடம் கேட்டான். “உனக்கு நீஞ்சத்  தெரியுமா? எப்படி மேலே ஏறி வந்தே?”

முதற் துளி

கொழுத்தும் வெயில். வியர்வை ஈரத்தில் நனையும் இரவு. வெறிச்சோடிய படுக்கையறைகள். ஓலை கிழிந்த விசிறிகள். ஓயாத இலையான்கள். உப்பேறிய கிணறுகள். முள்ளாய்க் குத்தும் துவாலைகள். கானல் நீரை துரத்தும். உதடு வெடித்த சிறுவர்கள். ஈரம் தேடும் எறும்புகள். குட்டை நாய்கள். கோழிச்செட்டைகள். மீன் முள்ளுகள். மேற்சட்டையில்லா ஆண்கள். குறுக்குக்கட்டு வறண்ட குளத்து மதகுகள். புழுதிவாரிய கேசங்கள். கணவன் மனைவி சண்டைகள். நாற்றமடிக்கும் கொல்லைப்புறங்கள். நிழல் தேடும் குடை மரங்கள். சூடு மிதிக்கும் கோயில் புறாக்கள். காடு ஏகிய கடவுள்கள். கோடை கடைநாளில் விழுந்தது முதற் துளி. குளிர்ந்தது ஊர். .