Skip to main content

Posts

பழைய வீடு

எங்கள் குடும்பம் சற்றுப்பெரியது. நான் பிறக்கும்போது ஏற்கனவே குடும்பத்தில் பதின்மூன்று, ஒன்பது, எட்டு, ஆறு வயதுகளில் சிறுவர்கள் வரிசைகட்டி நின்றார்கள். மூன்று அக்காமார். அண்ணா. தமக்கெல்லாம் ஒரு தம்பி வந்துவிட்டான் என்பதை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள். பொறுப்பு, பொறாமை, சினேகம், விளையாட்டுக்கு ஒரு துணை. எத்தனை எண்ணங்கள் வந்து போயிருக்கும். எழுபத்தேழு கலவரத்தில் நுகேகொடவிலிருந்து அடித்துக்கலைப்பட்டு யாழ்ப்பாணம் திரும்பியிருந்த குடும்பம் அப்போதுதான் ஓரளவுக்குச் செட்டில் ஆகிக்கொண்டிருந்த சமயம். கம்பஸடியில் வாங்கிப்போட்டிருந்த காணியில் ஒரு கொட்டில் வீடு போட்டுக் குடியேறியிருந்தார்கள். வீடு என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு வரவேற்பறை. ஒரு படுக்கையறை. ஒரு பத்தி. பத்தியில்தான் சமையல் எல்லாம். பின்னர் அங்கிருந்தபடியே அம்மாவும் அப்பாவும் காணிக்குள் இப்போதிருக்கும் புது வீட்டினைக் கட்ட ஆரம்பித்திருந்தார்கள்.

பதற்றப்படாதே!

இன்று ஊடகங்களிலும் அலுவலகத்திலும் வானொலி, தொலைக்காட்சிகளிலும் “Space X” பற்றியே கதையாக இருக்கிறது. மீளவும் பூமிக்குத் திரும்பக்கூடிய மூன்று பூஸ்டர்களின் உதவியுடன் எலன் மஸ்கினுடைய சொந்த டெஸ்லா காரை விண்வெளியில் துப்பிவிடும் இந்தத்திட்டம் திட்டமிட்டபடி நடந்தேறியிருக்கிறது. மூன்றாவது பூஸ்டர் பிழைத்துப்போனாலும் ஏனைய இரண்டும் திரும்பிவிட்டன. டெஸ்லா கார் செவ்வாய்க்கிரகத்தின் சுற்றுப்பாதையை நோக்கிய தன் பயணத்தை ஆரம்பித்துவிட்டது. இந்தத்திட்டத்தின் நோக்கங்கள், இது அடியெடுத்துக்கொடுத்திருக்கும் அடுத்தடுத்த சாத்தியங்கள் பற்றியெல்லாம் இணையத்தில் ஏராளம் கட்டுரைகள் இருக்கின்றன. தமிழ் ஊடகங்களிலும் எப்படியும் இரண்டொரு நாள்களுக்குள் அவை வந்துவிடும். சிலதில் வரப்போகின்ற கூகிள் மொழிபெயர்ப்பை நினைக்கத்தான் அச்சமாக இருக்கிறது. “Musk” என்ற சொல்லை கூகிள் “கஸ்தூரி” என்று மொழிபெயர்க்கிறது. நம்மட ஆளுகள் “நடிகை கஸ்தூரி தன்னுடைய மின்சார வண்டியை விண்வெளிக்கு அனுப்பினார்” என்று தலைப்புச்செய்தி இட்டாலும் இடுவார்கள். நான் சொல்லவந்தது வேறு.

கீழடி

தொல்லியல் படிமங்களிலிருந்து வரலாற்றை அறிதல் என்பது கிளிஞ்சல்களினின்று ஆழ்கடலை அறியமுற்படுவது போன்றது. அவை ஆழ்கடலை வியப்புடன் நோக்கவும் அதனுள் பரந்து விரிந்து கிடக்கும் உலகை மேலும் அறியவும் உத்வேகம் கொடுக்கும். அதன் சாத்தியங்கள் நம்மை மிரட்டும். காற்சட்டையை மேலும் இழுத்துவிட்டு கடலினுள் இறங்கி இன்னும்பல கிளிஞ்சல்களைப் பொறுக்குவதற்குத் தூண்டும். முன்னொருமுறை எழுதியதுபோல, வரலாறு ஒரு சாகசக்காரிக்கேயுரிய கொஞ்சலுடன் நம்மிடம் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கிறது. ஆங்காங்கே சிறு வெளிச்சங்களைக்காட்டி, நம்மை அருகே இழுத்து, வசீகரித்து, கிளர்ச்சியை உண்டுபண்ணி ஈற்றில் அதுவாகவே நம்மையும் மாற்றிவிடும் வல்லமை கொண்டது.

சண்முகத்தின் கதை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் முருங்கை மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த வேதாளத்தை மீண்டும் பிடித்துத் தோளில் போட்டபடி நடக்க ஆரம்பித்தான். அப்போது வேதாளம் அவனைப்பார்த்துச் சற்று எள்ளலுடன் கூறியது. “ஏ விக்கிரமாதித்தியா, நானும் பார்த்துக்கொண்டே வருகிறேன், நீயும் கடமை துஞ்சாது சதா என்னை முருங்கை மரத்திலிருந்து பிடித்துக்கொண்டு செல்கிறாய். நானும் எப்படியோ தப்பி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிவிடுகிறேன். இப்படியே உன்னுடைய காலம் கழிகிறது. நீ பிழைக்கத் தெரியாதவனாக இருக்கிறாய். உனக்கு நான் ஒரு கதை சொல்லி இறுதியில் சில கேள்விகளைக் கேட்கப்போகிறேன். அந்தக்கேள்விகளுக்கு உனக்குச் சரியான பதில் தெரிந்தும் சொல்லாவிடில் உன் தலை சுக்கல் நூறாக வெடித்துச் சிதறிவிடும்” விக்கிரமாதித்தன் அதற்கு ஆமோதித்துத் தலையாட்டவும், வேதாளம் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தது.

படலை 2017

செய்யும் தொழில் எனக்குப் பிடித்தமாதிரி அமையவேண்டுமென்பதில் மிகக் கவனமாக இருப்பதுண்டு. கடந்த பதினைந்து வருடங்களாக அப்படியே அது அமைந்தும்விட்டமை வெறும் தற்செயல் என்று கருத இடமில்லை. நடப்பு வேலையினுடைய நேர்முகத்தேர்வின்போது நிர்வாக இயக்குனருக்குக் கூறியது ஞாபகம் இருக்கிறது. “Programming is my passion. So long as you let me do what I love to do, I will deliver what you need, not what you ask, but what you need” இந்தப் புள்ளியில் நான் எப்போதுமே கவனமாக இருப்பதுண்டு. அலுலகத்தின் அன்றாட சில்லறைப்பிரச்சனைகள் என்னை அண்ட ஒருபோதும் விட்டதில்லை. அவசரக்கோலத்தில் அள்ளித்தெளிக்கும் டிசைன்களையோ தீர்வுகளையோ கொடுப்பதில்லை. அப்படியான சந்தர்ப்பங்களில், அவர்கள் என்னை நாடி வராதபோதும் தேடிச்சென்று தடை போடுவதுண்டு. இந்தவருடம் நான் என்னுடைய சக புரோகிராமர்களோடு அதிகம் செலவிடவேண்டிவந்தது. இரண்டு விடயங்களை அவர்களுக்குத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருந்தேன். முதலாவது “Telling a story via programming”. இரண்டாவது, “Slow Programming”. இவ்விரண்டு விடயங்கள் பற்றிய விரிவான கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிக்கொ