Skip to main content

கீழடிதொல்லியல் படிமங்களிலிருந்து வரலாற்றை அறிதல் என்பது கிளிஞ்சல்களினின்று ஆழ்கடலை அறியமுற்படுவது போன்றது. அவை ஆழ்கடலை வியப்புடன் நோக்கவும் அதனுள் பரந்து விரிந்து கிடக்கும் உலகை மேலும் அறியவும் உத்வேகம் கொடுக்கும். அதன் சாத்தியங்கள் நம்மை மிரட்டும். காற்சட்டையை மேலும் இழுத்துவிட்டு கடலினுள் இறங்கி இன்னும்பல கிளிஞ்சல்களைப் பொறுக்குவதற்குத் தூண்டும். முன்னொருமுறை எழுதியதுபோல, வரலாறு ஒரு சாகசக்காரிக்கேயுரிய கொஞ்சலுடன் நம்மிடம் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கிறது. ஆங்காங்கே சிறு வெளிச்சங்களைக்காட்டி, நம்மை அருகே இழுத்து, வசீகரித்து, கிளர்ச்சியை உண்டுபண்ணி ஈற்றில் அதுவாகவே நம்மையும் மாற்றிவிடும் வல்லமை கொண்டது.
நிற்க.
சமூகச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான திரு அ. முத்துக்கிருஷ்ணன் வரும் ஞாயிறு மாலை அன்று மெல்பேர்ணில் “கீழடி” பற்றிப் பேசப்போகிறார்.
“கீழடி” அகழ்வாராய்வு மையம் பற்றி ஓரளவுக்கு நாமெல்லோரும் கேள்விப்பட்டேனும் இருப்போம். மதுரைக்கருகே கண்டறியப்பட்ட இந்தத் தொன்மை மையம் முதற்சங்க காலத்தையது (அல்லது அதற்கும் முன்னையது) என்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அக்காலத்து மக்களின் நாளாந்த வாழ்வு, நகரக் கட்டுமானம், வியாபாரம், மொழி என்று பலதையும் இதனூடாக அறியக்கிடைக்கிறது. யவனிகர்கள் என்று நம் இலக்கியங்கள் குறிப்பிடும் கிரேக்கர்களின் தொடர்பு பற்றிய சான்றும் இங்கு உளது. இன்னும் ஏராளம் விடயங்கள். முத்துக்கிருஷ்ணனிடம் கேட்டு, படித்து, மேலும் மேலும் தேடுவதற்கு ஆவலாக இருக்கிறது.
மாதிரிக்கு ஒன்று.
‘கீழடி’யில் கண்டறியப்பட்ட பல மட்பாத்திரங்களில் அக்காலத்தவரின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. திருமணத்துக்குப் பரிசாகத் தரும் சில்வர் தட்டுகளில் “அன்பளிப்பு பொன்னுச்சாமி குடும்பம்” என்று அச்சடிப்பதுபோல, “இந்த சில்வர் இலச்சுமி விலாஸில் திருடப்பட்டது” என்று வார்ப்பதுபோலத்தான் இதுவோ தெரியாது. எது எப்படியோ, அவற்றிலிருக்கும் பெயர்கள் ரசிக்கும்படியானவை. ஆதன், உதிரன், சேந்தன், திசன், இயணன். இதில் ‘திசன்’ பல வெள்ளி, தங்க மோதிரங்களிலும் எழுதப்பட்டிருக்கிறது (திசன் ஓதலன், நெல்வேல் திசன்). இந்தத் திசன் மற்றும் பூதன் போன்ற பெயர்கள் ஈழத்தில் கண்டெடுக்கப்பட்ட பல கல்வெட்டுகளிலும் பதிக்கப்பட்டிருக்கின்றன. ‘திசன்’ என்பது ஒரு தனிப்பெயர்ச்சொல் (திசை என்பதன் காரணப்பெயர் அல்ல). ஈழத்தில் பௌத்தம் கொண்டுவரப்பட்ட காலத்தில் அங்கு ஆட்சிசெய்த மன்னனின் பெயர் தேவநம்பியதிசன். அவன் அப்பன் பெயர் மூத்தசிவன். மூத்தசிவனின் அப்பன் பெயர் பண்டுகாபயன். பண்டுகாபயனுடைய பெயருக்குப்பின்னால் பாண்டிய ஆட்சியாளர்களின் தொடுப்பு இருக்கலாம் என்கின்ற ஊகங்களும் இருக்கின்றன. விஜயன் பாண்டிய இளவரசியை மணம் முடித்ததாகவும் ஒரு கதை உள்ளது. மகாவம்சம், இல்லையில்லை பண்டுகாபயனின் அப்பா, அம்மா இருவருமே ஆரியர்கள்தாம் என்று அடித்துவிடுகிறது. இவையெல்லாம் வரலாறு துப்பிவிட்ட வெறும் கிளிஞ்சல்கள்தான். புள்ளிகள்தான். மொழி என்பது ஒரு ஊடகமெனில் அது பல்வேறுகாலங்களில் பல்வேறு வடிவமெடுத்து பல்வேறு இடங்களில் பரவியிருக்கும். பரவினால்தான் அது மொழி. தேங்குமேயானால் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. பிராமியின் வடிவங்களும் பரம்பல்களும் பற்பல. இனக்குழுக்களுக்கான தொடர்புகளும் அப்படித்தான். அவற்றுக்கு ரிஷி மூலம், நதிமூலம் பார்த்தால் எல்லாமே கொண்ட்வானா நிலத்திலேயே சந்திக்கவேண்டிவரும். விடுவோம்.
நம் இனம் தொன்மை நிறைந்தது. நம் மொழி பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. நமக்குப் பெரும் வரலாறு உண்டு என்ற உண்மைகளிலிருந்து நாங்கள் எதனை அடையப்போகிறோம் என்பது பட்டவர்த்தனமாகப் பேசப்படவேண்டிய விடயம். பண்டுகாபயன் தமிழ் மன்னன் என்று சொல்வதன்மூலம் சிங்களவர்களை விட நாம் மூத்தகுடிகள் என்று பறையடித்தோம் எனில் அதைவிட முட்டாள்தனம் வேறொன்றிருக்கமுடியாது. ஐந்திணைகளும் புலன்களும் இயற்கையும் எவையும் அங்கு வாழும், வாழவிரும்பும் எவருக்கும், எவற்றுக்கும் சொந்தமானது. இது, முதலில் வந்தவருக்கு முன்னிடம் என்கின்ற சாப்பாட்டுப்பந்தி வரிசை கிடையாது. “இங்கு நானே முதலில் இருந்தேன், இது எனக்கே சொந்தம்” என்று சொல்பவரிடம் “இல்லை, உனக்கு முன்னரேயே நான் வந்துவிட்டேன், எனக்கே இது சொந்தம்” என்று பதிலுக்கு நிரூபிப்பது சிறுபிள்ளைத்தனம். இது உனக்கும் எனக்குமான இடம். இதில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை. எம் வாழ்வைத் தீர்மானிக்கும் உரிமை எமக்கானது. இந்தப்புள்ளிகளிலிருந்து விலகாமலேயே அதிகாரத்தைக்குயும் பேரினவாதத்தையும் நாம் எதிர்கொள்ளவேண்டுமே தவிர அதிகாரம் தன்னை நிலைநிறுத்தப்பயன்படுத்தும் காரணிகளையே நாமும் பதிலுக்குப் பயன்படுத்தி அந்த முடியா சிக்கலில் வீழ்ந்துவிடலாகாது. அதே சமயம் வீட்டைவிட்டு அதிகாரம் நம்மை இழுத்துத் துரத்தி அடிக்கும்போது கதவுப்பிடியை மிக இறுக்கமாகப் பிடித்தபடி கதறி அழும் மனிதரின் முகமும் ஞாபகத்துக்கு வந்துபோகிறது.
முத்துக்கிருஷ்ணன் இவற்றையெல்லாம் தன் பேச்சில் கோடிகாட்டி விளக்கினால் தன்யனாவேன். நேரம் போதுமானதாக இருந்தால், “கீழடி” தாண்டியும் பல விடயங்களை அவரோடு பேசவும் ஆவலாக இருக்கிறது. “தொன்மங்களை அறிதல்” என்பது நம்மை அறிதலுக்கும், நம் இருத்தலுக்கும், நீட்சிக்கும் எவ்வளவு அவசியமாகிறது? குறிப்பாக, சமகாலத்தில் இடம்பெறுகின்ற மிக நுணுக்கமான அடையாள அழிப்பு முயற்சிகளை எதிர்கொள்ளத் தொன்மங்களை அறிதலும் அவற்றைப் பரப்புதலும் எவ்வகையில் உதவி செய்யும்?
ஞாயிறு மாலை நான்கு மணிக்குச் சந்திப்போம்.

Comments

  1. புத்துணர்வை கொடுக்கும் செய்திகளை இன்று அறியும் போது .....தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

    ReplyDelete
  2. த என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு தமிழ் பெயர் கூறவும் ...ஆண் குழந்தை
    panarvin@gmail.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட