முற்குறிப்பு : இது 13-05-2012 ஆஸ்திரேலிய எழுத்தாளர் விழாவில் “புலம்பெயர் படைப்புகள் தமிழுக்கு வளம் செர்க்கின்றவனா” என்ற கருத்தரங்கில் வலையுலகம்(blogs) சார்பில் என்னுடைய உரை! எல்லோருக்கும் வணக்கம்! தமிழை இப்படியும் ரசிக்கலாம் என்று கற்றுத்தந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கும், கம்பவாரிதி இ.ஜெயராஜுக்கும் மானசீக வணக்கங்கள். காலை ஆறு மணி! தலையில் துவாய், கருத்தரங்கு தமிழில் துவாலை என்று சொல்லலாமா? யாழ்ப்பாணத்து பனியோடு முட்டி மோதி ஊமல் கரியில் பல் துலக்கி, கரண்டு போன மின்கம்பம் பிடுங்கிய பீங்கானில் கிணற்று கப்பி. டயர் வாரில் தேடா வலயம் ஆழக்கிணற்றில் வாரும்போது அரைவாசி தண்ணீர் ஓட்டை வாளியால் ஓடிவிடும். முகம் கழுவி சைக்கிள் எடுத்து சந்திக்கடையில் உதயனும் ஈழநாதமும், புதன்கிழமை என்றால் ஞாயிறு வீரகேசரியும்! அப்பாவுக்கு ஒன்று எனக்கொன்று வாசிப்பதில் தொடங்கும் அனுபவம்! பாடசாலை இடை வேளை, பரியோவான் நூலகத்தில் மகாபாரத சித்திரக்கதைகள்! அஞ்சாதவாசம் முடிகையில் மணியடிக்கும் வகுப்பில் இருப்புக்கொள்ளாத தவிப்பு. அது முடிந்த பின்னும் நூலகம் தாமதமாய் வீடு போனமைக்கு அம்மாவின் திட்டு திருட்டுத்தனமாய் கரையெல்