Skip to main content

சச்சின்!

 

100s

Toy Story வெற்றியை தொடர்ந்து PIXAR அடுத்த படத்தை எடுக்கவேண்டும். Second system effect என்று சொல்லப்படும் இரண்டாவது அடி சறுக்கல் என்ற விஷயத்தை தவிர்க்கவேண்டும். எப்போதுமே முதல் ஹிட் கொடுப்பது இலகு. ஆண்டாண்டு காலமாக யோசித்து வைத்திருப்பதை, சக்தியை முதலாவது சிஸ்டத்தில் கொடுத்து வென்றுவிடலாம். ஆனால் தொடர்ந்து வெல்வது என்பது கடினம். Apple2 வின் வெற்றிக்கு பிறகு வந்த Apple3 அட்ரஸ் இல்லாமல் போனதுக்கு இந்த சிண்ட்ரோம் தான் காரணம். ஒரு சில இயக்குனர்கள் முதல் படத்தோடு காணாமல் போவதும் அதனால் தான். ஸ்டீவ் ஜோப்ஸ் முதல் வெற்றியை தொடர்ந்து PIXAR இயக்குனர்களுக்கு சொன்னது ஒன்றே ஒன்று தான். Toy Story செய்யும் போது எப்படி குழந்தைகள் போல வேலை செய்தீர்களோ அதை போலவே மீண்டும் குழந்தைகள் ஆகுங்கள். இந்த உலகத்தில் குழந்தைகள் அளவுக்கு புதுவிஷயங்களை கண்டுபிடிப்பவர்கள் வேறு எவரும் இல்லை.

220px-Movie_poster_toy_story“A Bug’s Life”, PIXAR இன் இரண்டாவது படம் வெளிவந்து ஹாலிவுட்டையே ஒரு கலக்கு கலக்கியது. சமகாலத்தில் Toystory 2 எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். படம் ஓரளவுக்கு முடியும் தருவாயில் எல்லோரும் போட்டு பார்க்கிறார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ், ஜோன் ஹாசென்கர் போன்ற பலருக்கும் படத்தில் மாற்று சற்றே குறைந்தது போல தோன்றியதால் படத்தை மீண்டும் டிசைன் பண்ணசொல்லிவிட்டார்கள். மில்லியன் கணக்கில் செலவு செய்து முடியும் தருவாயில் உள்ள படத்தை கிடப்பில் போடவேண்டாம், வெளியிட்டால் எப்படியும் லாபம் பார்க்கலாம் என்று டிஸ்னி சொல்ல ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன பதில், “PIXAR இன் யன்னலால் செல்லும் காற்று கூட தரமாக இருக்கவேண்டும்” என்று. மீண்டும் வடிவமைக்கப்பட்ட Toystory II, அப்புறமாக வந்த Cars, The Incredibles, Finding Nemo என்று, வரிசையாக ஹிட்ஸ் அடித்து இரண்டு வருடங்களுக்கு முன் வெளிவந்த Toy Story 3 ஹாலிவுட்டையே ஒரு ஆட்டு ஆட்டியது.

 

Ar Rahman Rare (3)1993ம் ஆண்டு ஏ ஆர் ரகுமானை பேட்டி எடுக்கிறார்கள். திருடா திருடா இசைக்கு ஆறுமாதங்கள் எடுத்திருக்கிறீர்களே, ஏன்? என்று கேட்டதுக்கு ரகுமான் சொன்னதும் அதே பதிலே. பஞ்ச தந்திரன் ஸ்டூதியோவிற்குள்ளால் இருந்து செல்லும் ஒரு சின்ன ஜிங்கில் கூட தரமானதாக இருக்கவேண்டும். இன்றைய தேதி வரைக்கும் ரகுமான் ஸ்டுடியோவினூடாக வெளியே செல்லும் ஒரு சின்ன ஷார்ப் நோட் கூட கிறங்கடிக்கும்.

மொத்தமாக ஆறுகாண்டங்கள், நூற்றி இருபத்து மூன்று படலங்கள், இருபத்திரண்டாயிரம் விருத்தங்கள். பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பிரித்து மெய்ந்துகொண்டிருந்தாலும் இன்றைக்கும்

Kambar Tamil Poetதாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;
சேய் ஒக்கும். முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால். அறிவு ஒக்கும்;- எவர்க்கும் அன்னான்.”

என்ற ஒரு பாடலை கம்பவாரிதி வாயால் சொல்லக்கேட்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறான் கம்பன். அவன் அத்தனை பாடல்களில் ஒரு வரி என்ன .. ஒரு சொல் சொதப்பி இருந்தால் கூட இத்தனை ஆண்டுகள் நிலைத்து நின்றிருக்கமுடியாது இல்லையா?

மன்மதகுஞ்சு ஸ்கைப்பில் பேசும்போது, “டேய் நீ தமிழில் எழுது, நல்லா வரும் .. வீணாக ஆங்கிலத்தில் எழுதி யாருமே இல்லாத கடையில டீ ஆத்தாதே” என்று சொன்னபோது இவ்வளவு விஷயங்களும் ஞாபகம் வந்தது. தமிழிலக்கியம் என்பது ஜாம்பவான்களால் ஆளப்படும் விஷயம். நான் இன்னமும் சுஜாதாவையே வாசித்து முடிக்கவில்லை. “கோபல்லகிராமம்” கேதா கொண்டுவருவான் என்று நம்பி ஏமாந்தது தான் மிச்சம். டெர்ரி பிரச்சட்டில் “Small Gods” இன்னமும் திறக்கப்படாமலேயே கிடக்கிறது. ஒரு மண்ணும் தெரியாதவன் எழுத ஆரம்பித்தால் bluff ஆகிவிடும். வேண்டாம் என்றே தோன்றியது. ஆனாலும் ஒரு நப்பாசை, சுஜாதா கணையாழியின் கடைசிப்பக்கத்தில் எழுதின விஷயம், எழுத விரும்புவர்கள் தயவு செய்து சந்தைக்கு வாங்கப்போகும் சாமான்கள் பட்டியலில் இருந்து உங்கள் எழுத்துலக வாழ்க்கையை தொடங்குங்கள். அப்புறம் தபாலட்டை கடிதங்கள், பஸ் டிக்கட்டின் பின்னாலே “ஆடிக்கு பின்னாலே ஆவணி, தாடிக்கு பின்னே தாவணி” ரக குப்பைகளை எழுதி எழுதி படிந்தபின் நான்கு பக்க நீளத்தில் சிறுகதை என்று நினைப்பதை எழுதி பக்கத்து தெரு கையெழுத்து சஞ்சிகைக்கு அனுப்புங்கள். திரும்பிவரும்! தளரவேண்டாம். ஐம்பதாவது கதை திரும்பிவரும்போது எழுத்தே இனி வேண்டாம் என்று திரும்பி வாசிப்புக்கு போய்விடுவீர்கள். மீண்டும் ஒரு வருடம் கழித்து முருங்கை மரம் ஏறினால், ஒருவேளை நூறாவது தடவையில் அந்த துன்பியல் சம்பவம் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் எழுத்தாளர் ஆகிவிடுவீர்கள்!

இது நூறாவது பதிவு!

எழுத வந்து இந்த எட்டு மாதத்தில் நான் சாதித்தது ஒன்றே ஒன்று தான். “நண்பர்கள்”! யாருமே என்னளவுக்கு நெருக்கமான நண்பர்களை எழுத்தின் மூலம் இத்தனை சீக்கிரம் பெற்று இருக்க மாட்டார்கள். அந்த திமிர் எனக்கு எப்போதுமே இருக்கிறது! ஆஸ்திரேலியா வரும்போது தனியனாக இருந்து அழுங்கபோகிறேன் என்று அக்கா படித்து படித்து சொன்னது. பேசாமல் என்னுடனேயே சிங்கப்பூர் இரு என்று சொன்னவளையும் கேட்காமல், சிங்கப்பூர் நண்பர்களையும் விட்டுவிட்டு ஆஸி வந்தமைக்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை. இருட்டு! துரத்தி வரும் இருட்டை பார்த்து மேகலாவில் கதையில் வரும் குமரன் ஓடுவானே ஒரு ஓட்டம். அந்த இருட்டு! ஆனால் மெல்பேர்ன் “வாடா ராஜா வா” இரண்டு கைகளாலும் -அரவணைத்துக்கொண்டது.  அதற்கு ஒரே காரணம் என்னுடைய அதிகபிரசிங்கித்தனமான கிறுக்கல்கள் தான். இன்றைக்கும், தான் வாசித்து, இது ஜேகேயும் வாசிப்பான் என்று நினைத்தால் அடுத்தகணமே பாலா அதை அனுப்பிவைப்பான். பதிவு பிடித்திருந்தால் பலர் வாசித்துவிட்டு போய்விடுவார்கள். சிலர் லைக் பண்ணுவார்கள். ஒரு சிலர் மனம் வைத்து கமெண்ட் போடுவார்கள். ஜூட் அண்ணா கோல் பண்ணி சூப்பர் என்று சொல்லுவார்.  கார் எடுத்தால் அரைமணி நேரத்தில் கேதா வீடு. வாரம் ஒருமுறை சந்திப்போம். ஸ்டில் நேற்று கேதா கோல் பண்ணி பேசி முடிக்கும் போது இரண்டு மணிநேரம் ஆகிவிட்டிருந்தது. வாலிபனும் நானும் சாட் பண்ணும் விஷயங்கள் பல பதிவுகளில் வருவதில்லை. சக்திவேல் அண்ணா, கீதா, நிரூபன், திலகன், மோகன், மயிலன் என்று பலர்.. எல்லா பெயர்களையும் குறிப்பிடமுடியவில்லை. கிர்வாணி அக்கா ஈமெயில் அனுப்பினால் என்னையறியாமலேயே பதட்டம் ஒன்று வரும். அவர் கேட்கும் கேள்விகள் அப்படி. பல நண்பர்கள், தொடர்ச்சியாக என் பதிவுகளை வாசிப்பவர்கள், சந்திக்கும்போது சொல்லுவார்கள். “நாங்கள் கமென்ட் போடாமல் இருப்பதால் வாசிப்பதில்லை என்று நினைக்காதே, ஒவ்வொரு பதிவும் எப்போது வரும் என்று பார்த்துக்கொண்டே இருப்போம்” என்பார்கள். பொய் சொல்லக்கூடாது காதலி! .. சொன்னாலும் நீயே என் காதலி!

H2G2_UK_front_coverநேற்று ஹர்ஷா Yarl IT Hub நிகழ்வில், இலக்கம் 42 பற்றி யாருக்கு தெரியும் என்று கேட்க, சின்னபிள்ளை போல இங்கிருந்து கை உயர்த்தினேன்! “The Hitchhiker's Guide to the Galaxy” வரும் பேபிள் மீன் பற்றி ஒருமுறை வியாழமாற்றத்திலும் வந்திருக்கிறது. வாசிக்கும் ஆயிரம் பேரில் ஒருவராவது நான் அவ்வப்போது சொல்லும் புத்தகங்களை  வாங்கி வாசிக்கிறார்கள். சின்னவயதில் எனக்கு புத்தகங்களை அறிமுகம் செய்ய என் அக்காமார்களும், யசோ அக்காவும் அப்புறம் சண்முகநாதன் மிஸ்கூட இருந்தார்கள். வளர வளர ஆட்களின் பெயர்கள் மாறினாலும் யாராவது எப்போதாவது ஒரு புத்தகம் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்கள். முகமே தெரியாத திலகன் ஆறாவடுவையும், பாலா “The Cage” ஐயும், மயூவும், ஹர்ஷாவும் .. அமுதாவும் .. புத்தகங்களை வாசிக்கும் நண்பர்கள் எனக்கு இயல்பாகவே அமைவதுண்டு. அந்த கடமை எனக்கும் இருக்கிறது இல்லையா? ஒரு சினிமா விமர்சனம் எழுதி ஹிட்ஸ் அள்ள முடியும். ஆனால் புத்தகம் விமர்சனம் எழுதும்போது வரும் மனநிறைவும் சந்தோஷமும், நானும் “அந்த புத்தகம் வாசிக்கபோகிறேன் ஜேகே” என்று  வரும் ஈமெயிலும் ....A divine feeling.

நூறு பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவுகள்? ஒவ்வொரு வியாழமாற்றமும் ஒரு தனி அனுபவம். சிறுகதை எழுதுவதை விட வியாழமாற்றம் எழுதுவது தான் கடினம். கொஞ்சம் சிக்கலான, வழமையான் பாணியில் எழுதினால் கவனிக்கப்படாமல் போகக்கூடிய விஷயத்தை சுவாரசியமாக சொல்லுவது பெரும் சவால். அதற்காக நிறைய மெனக்கடவேண்டி வரும். எனக்கு கவிதை எழுத கொஞ்சம் “அவா”. ஆனால் மற்றவர் கவிதையை நான் பிரித்து மெய்வதால் அடக்கியே வாசிப்பதுண்டு. கேதாவும் வாலிபனும் கவிஞர்கள் என்பதால் தேவையில்லாமல் மூக்குடைபடக்கூடாது. மன்மதகுஞ்சு தான் நிலைமையை சமாளிப்பான். அவன் நண்பன் என்ற உரிமையில் கைவைத்து சிகண்டி சில்மிஷங்கள் கூட செய்வேன். அவனுக்கு கோபமே வராது. நன்றி நண்பா!

சிறுகதைகளில் கக்கூஸ் பிடித்தது. பல மட்டங்களில் வாசித்தார்கள். சென்ஜோன்ஸ் பழைய மாணவர்கள் சிலர் வாசித்து ஆங்கிலத்தில் கக்கூசை டிஸ்கஸ் பண்ணினார்கள். “Is padalay a fence or a gate?” என்று வயோதிபர் ஒருவர் கேட்டபோது, பாலா என் கையில் இருந்த பியர் கானை பறித்து கிடு கிடுவேறு குடித்து முடித்துவிட்டான். முடியல! “மேகலா” நான் உயிரும் உணர்வும் கொடுத்து எழுதிய கதை. ஈழத்து போராட்டம் பற்றி எழுதாமல் இயல்பான காதல் கதையாக எழுதியதால் பாவம் அதற்கு இலக்கிய அங்கீகாரம் கிடைக்கவில்லை! இன்னமும் பலர் “உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசம்” கதையை தான் என்னுடைய பெஸ்ட் என்பார்கள். என்னை கேட்டால் “என்ர அம்மாளாச்சி” தான் ஓரளவுக்கு தகுதியான சிறுகதை என்பேன்! கொல்லைப்புறத்து காதலிகளில் “கடவுளும்”, “படிச்சதென்ன பிடிச்சதென்ன”வில் “The Namesake” உம் “உ ஊ ம ப த ப மா” வில் எனக்கு “திரைகடல் ஆடிவரும் தமிழ் நாதமும்” பிடிக்கும்.

 

IMG_20120115_053042என்பதிவுகள் நீளம் என்று ஒரு விமர்சனம் இருக்கிறது. பதிவுகள் குட்டி குட்டி பத்தியாக இருந்தாலே வாசிப்பார்கள். நீண்டு இருந்தால் ஸ்கிப் பண்ணிவிடுவார்கள் என்பார்கள். அது ஒரு ஜோக்!  பாவை விளக்கு நீண்டு கொண்டே இருக்கும். பொன்னியின் செல்வனை வாசிக்கதொடங்கிய எவருமே இரவு மூன்று மணி தாண்டியும் மனமில்லாமல் தான் படுக்கைக்கு போயிருப்பார்கள்.  வாசிப்பு என்பது ஒருவித தவம். அதில் மூழ்கும் போது அது நீங்களே சிருஷ்டிக்கும் உலகத்துக்கு உங்களை எடுத்துச்செல்லும். அங்கே எழுத்தாளன் மறக்கடிக்கப்பட்டு, உங்கள் நாடு, உங்கள் வீடு என உங்களை சுற்றியே சம்பவங்கள் நடக்கவேண்டும். அங்கே நீங்கள் தான் ஆர்க்கிடெக்ட். இன்செப்ஷன் போல நீங்களே உருவாக்கிய பாத்திரங்களோடு நடமாடுவீர்கள். அந்த அனுபவத்தை கொடுக்கமுடியாவிட்டாலும் முயற்சி செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். அட்லீஸ்ட் எழுதும்போது நானாவது ஒரு பயணம் செய்யவேண்டும். அது வியாழமாற்றமாக கூட இருக்கட்டும். அங்கேயும் ஓடிபசையும் கர்ணனையும் விக்கிரமாதித்தனனையும் ரஜனியுடன் இணைக்கும் முயற்சிகள் நடக்கும். எனக்கு ரக்பி பிடிக்காது. ஐபில் பிடிக்காது. லேடி காகா பாட்டு சுத்தம் … அதே போல தான் வாசிப்பும் எல்லோருக்கும் பிடிக்கவேண்டியதில்லை. எல்லோருக்கும் பிடிக்கும் படி எழுதவேண்டும் என்றும் இல்லை. நம்ம பந்தலுக்கு நாலு பேரு வந்து தண்ணீர் குடித்தால் போதும். நானும் பவர் ஸ்டார் தான்!

ஆரம்பித்தபோது திராணி இருக்கிறதா என்று என் பக்கத்தில் இருந்தவர்களே கேட்டபோது விஜயகாந்த் போல நடு நடுங்கிப்போனேன். “Man you got shit loads of time, don’t you?” என்று Facebook இல் கமெண்ட் போட்டவர்கள் கூட இருக்கிறார்கள். சிலநாட்களின் முன் ஒரு நண்பர் பேசும்போது, “நல்லா எழுதுகிறாய், வாசிக்கும் போது எனக்கும் எழுதவேண்டும் போல இருக்குது, நேரம் மட்டும் கிடைச்சால் ஒருக்கா எழுத்தத்தான் வேணும்” என்று சொல்லும்போது நல்லகாலம் அப்பாவின் ப்ரெஷர் செக் பண்ணும் கருவி வீட்டில் இருந்ததால் தப்பினேன். தம்பிகளா, காதலித்தால் கூட இவ்வளவு தூக்கம் தொலைக்கமாட்டேன்! ஐந்து மணிநேரம் தான் தூக்கமே. வாசிப்பு என்பது ரயிலில் மட்டுமே. கடைசியாக பார்த்தபடம் நண்பன்! டிவி சானல் நம்பர்கள் மறந்துவிட்டது. Yarl IT Hub இல் இரண்டு நாள் ஏதாவது செய்யாமல் இருந்தால் சயந்தன் ஸ்கைப்பில் காறித்துப்புவான். அம்மா வேறு இங்கே இல்லை. சமையலறையில் ஐபாடில் யூடியூபில் லெட்டர்மான் பார்த்துக்கொண்டு கறிவைத்து .. ஏண்டா சுயபுராணம் .. பிரயோசனமா எழுது தல .. என்ன சொல்லவருகிறேன் என்றால், எழுதுவதற்கு நேரம் தேவையில்லை. எழுதவேண்டும் என்ற ஆர்வமும் ஓர்மமும் இருந்தால் போதும். நான் எல்லாம் நத்திங். ஜாக்கி சேகர் ஒரு வருஷத்தில் முன்நூற்றைம்பது பதிவுகளை ஒரு வயது மகள் யாழினியை வளர்த்துக்கொண்டே எழுதுகிறார்!

 

இந்த பதிவை மேலோட்டமாக வாசித்தால் பிதற்றுவது போல தான் இருக்கும். முன்னே சொன்ன PIXAR, கம்பன், ரகுமான் விஷயங்கள் எல்லாம் என்னுடைய இன்ஸ்பிரேஷன்ஸ் தான். அதற்காக நானும் அவர்கள் போல என்று அர்த்தம் எல்லாம் இல்லை. அப்படி நினைத்தாலும் கூட தப்பில்லை. முதலாவது பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். என்னுடைய ஷவரில் நான் தான் ஹரிகரன்! Yarl IT Hub மூலம் யாழ்ப்பாணத்தை சிலிக்கன் வாலி ஆக்குவோம் என்று சொல்வதும் ஒரு கனவு தான். பாரதி செய்த Dream Big என்ற விஷயம் தான். அதற்காக நாங்கள் ஒன்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் என்றோ ஹெர்வ்லட் பார்க்கட் என்றோ சொல்லவரவில்லை. நாலு பேர் வாசிப்பதால் வரும் திமிர் என்று நினைத்தால் நல்ல 63001652எழுத்தை இன்னுமே நாங்கள் வாசிக்கவில்லை என்பதே உண்மை. எப்போதாவது அடடே நன்றாக தான் எழுதுகிறோம் என்று நினைத்தாலும் அடுத்த நாள் ரயிலில் கீராவோ அனிதா நாயரோ “அடிடா இந்த நாயை” என்று என்னை துரத்துவார்கள்! சுஜாதா சொல்லும் அந்த நூறாவது ஆக்கம் இன்னமுமே எனக்கு வசப்படவில்லை! அதற்கு நான் இன்னும் எத்தனை பதிவு எழுதவேண்டுமா தெரியாது. அப்படி  எழுதும்போது சிலவேளை என்னையும் பலர் வாசிக்கத்தொடங்கலாம். என்றாவது ஒரு நாள் என் எழுத்தும் அச்சில் வரலாம். அங்கீகாரங்கள் கிடைக்கலாம். அதற்காக எழுதவதில்லை .. ஆனால் கிடைக்கவில்லை என்பதால் அது sour என்று சொல்லும் டகால்டியும் கிடையாது. Tim Cook, இன்றைக்கு ஆப்பிள் நிறுவனத்தில் சீஇஓ. சிலவருடங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சியில் ஆபிரகாம் லிங்கனின் வரிகளை சொல்லியிருந்தார்.

“I will prepare, someday my chance will come”

எழுத ஆரம்பித்தபோது ஒரு வித எக்சாஸ்டிக் மனநிலை. அது வடியும் போது எழுதாமல் போய்விடுவேனோ என்ற பயம் முதல் பதிவிலேயே இருந்தது. சிலநேரங்களில் அயர்ச்சியாக இருக்கும். சென்ற வாரம் முழுதும் தூக்கமே இல்லை. வேலை முடியும் போது ஒன்பது மணியாகும். வீடு வர பத்து மணி. வியாழக்கிழமை Yarl IT Hum நிகழ்வு வேறு. சரி சும்மா ஒன்றை ஒப்பேற்றுவோம் என்று எழுத ஆரம்பித்த பின் .. அந்த எக்ஸ்டஸி எங்கிருந்தோ வந்தது. எவன் வாசிக்கிறான் இதெல்லாம் எழுதலாமா என்பதெல்லாம் மறந்து எழுதும் அனுபவம் இருக்கிறதே … !

என்னுடைய முதல்பதிவான அரங்கேற்ற வேளை யில் வந்தது..

Terry Prachet இன் “Mort” வாசித்து இருக்கிறீர்களா? அதிலே “இறப்பு"(Death) தன் பொறுப்பை Mort இடம் கொடுத்து விட்டு ஒரு ரெஸ்டாரன்டில் வேலை செய்ய வருகிறது(‘வருகிறது’ வா? இல்லை வருகிறானா? இல்லை வருகிறாரா? இறப்புக்கென்ன மரியாதை!). அப்போது இறப்பு அந்த ரெஸ்டாரன்ட் வெயிட்டரை பார்த்து கேட்கிறது.

“What is it called when you feel warm and content and wish things would stay that way?”

அதற்கு அந்த வெயிட்டர் சொல்கிறான்.

“I guess you'd call it happiness”

 

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக