1998ம் ஆண்டு தீபாவளி. காலையிலேயே பொதிகையில் புதுப்பட பாடல்கள் நிகழ்ச்சி ஆரம்பித்தது. அம்மாவிடம் ஏச்சு வாங்கிக்கொண்டு டிவி முன் உட்கார்ந்த போது, முதல் பாடல் ஒரு சுலோகத்துடன் ஆரம்பித்து, “பச்சை மா மலை மேனி” என்று தொடர, தேவாவுக்கே உரிய வயலின் ரீங்காரத்துடன் கோரஸ் சஞ்சாரிக்க, ஹரிஹரன் கணீரென்று பாடத்தொடங்கினார். எனக்கோ ஒன்றுமே புரியவில்லை. ஒரு வித பரவசத்தில் பார்த்துக்கொண்டு இருந்ததில் எந்த படப்பாடல் என்றும் கவனிக்கவில்லை. பாடல் முடிந்த கையோடு, மிகுதி நிகழ்ச்சியை பார்க்காமல், நண்பன் பார்த்தியிடம் ஓடிப்போய் என்ன படம் என்று விசாரித்தபோது தான் தெரிந்தது அது "உன்னுடன்” என்று. வானம் தரையில் வந்து ! இந்த பாடலில், ஹரிகரனை ஷேவாக் மாதிரி அடித்து ஆட தேவா அனுமதித்திருப்பதாக தெரிகிறது. தலை சும்மா பின்னி எடுத்து இருப்பார். இன்றைக்கு வரைக்கும் யாரும் இந்த பாடலை மேடையிலோ வேறு நிகழ்ச்சியிலோ நன்றாக பாடியதாய் தெரியவில்லை. அத்தனை கடினம் இது. ஒருமுறை ஹரிஹரன் கூட மேடையில் பாடி சொதப்பி இருப்பார்! வைரமுத்துவுக்கு மெட்டை கேட்டவுடனேயே இது ஒரு கோகினூர் என்று தெரிந்து விட்டது. ஆரம்ப வரிகளே அம...