Skip to main content

எங்கள் வீட்டில் இலக்கியம் - குளியலறை

 

அவை வணக்கம்.

180437_495364482381_6536877_nதமிழுக்குள் என்னை ஆட்கொண்ட
எழுத்துக்கு வேந்தர் சுஜாதா
எங்கள் கம்பவாரிதி ஜெயராஜ்
இருவரையும் மனதார பணிந்து வணங்கி.

கூழுக்கு ஆசை கொண்டு ஓடி வந்த தேசத்திலே
ஆளுக்கு அடித்து பிடித்து அரங்கமைக்கும் காலத்திலே
கேசியிலே உருவெடுத்து மொத்த ஆஸிக்குமே புகழ் சேர்க்கும்
மாசற்ற மன்றமிதை நடத்துவதோ வெட்டி பேச்சு இல்லே.

தமிழுக்கு பாடை சாய்த்து பாலை ஊத்தும் நேரத்திலே
ஆடிக்கு பிறப்பு எண்டு கூழை ஊத்தி கொண்டாடுவது
காலத்தின் தேவையிது; அதில் கவியரங்கம் அமைத்து
என்னையும் சேர்த்தது மட்டும் தேவையற்ற வேலையது.

 

 

அவைத்தலைவர் கும்மி

அரங்குக்கு தலைவர் எவர் என்றபோது
எங்கட தம்பி கேதா தான்
இருக்கப்போறான் என்றார்கள்.
ஐயோ கேதாவா? என்று திடுக்கிட்டு போனேன்..
சின்ன பெடியன் ஆச்சே. சில்மிஷம் செய்வானே.
இல்லாள் இருக்கும் நேரத்திலும் இலியானாவை ரசிப்பானே!
இவனை நம்பி ஏறுவது
பட்டி இல்லாத வேட்டியோடு சட்டசபை செல்வது போல.
எப்போ அவிழ்ப்பான்? எங்கே அறுப்பான்?
அவனுக்கே தெரியாது – ஆனால்
தக்க சமயத்தில் கட்டியும் கொடுப்பான்!  - என்
கற்பனைகளை நிஜமாக்கிய தோழன்.

ஆஸியிலே இருக்கின்ற ஒரே ஆசு கவி என் நண்பன்
பேசும் போதே வார்த்தையிலே சந்தம் பொங்கும்,
பேராற்றல் வயப்பட்ட சொல் வேந்தன்.
அவன் சந்தத்தில் புதைந்திருக்கும் பொருள் புரிய
1075890_480870192005290_1488855121_nஜென்மங்கள நான்கு எடுக்கவேண்டும்.
இதயத்தில் நல்லான்.
எம்மிலும் இளையான்.
இன்றைக்கு இம்மன்றில்
இவன் எமக்கு சுவாமி நாதன்.

இவன் எழுதிக்குடுத்த கவிதை எல்லாம்
சொல்லி இங்கு முடித்துவிட்டேன்.
இனி எண்ட கவி கொஞ்ச நேரம்
சொல்லிபுட்டு போயிடுறன்.

என் செய்வேன்?

இங்கே கவி புனையும் புருடர்களோ
தங்கள் இலக்கியங்களுக்கு சேலை கட்டி
அவர்கள் முன்னே
கையை கட்டி
வாயை பொத்தி
மேடையில் மட்டும் புருடா விடும்
இரும்பொறை ஏந்திழைகள்.
இவர்கள் மத்தியில் மாட்டிய நானோ
பாவம் ஒரு இலக்கணப்பிழை.
இலக்கணப்பிழையை கொண்டாடுகின்ற
புதுக்கவிதையின் காதலன்!
காதலியின் வரவுக்காய்
படலையிலே காத்திருக்கும்
பரிதாபத்துக்குரிய இலக்கிய ஏழை.
என்னைப்போய் இல்லத்து
இலக்கியம் இயம்பு என்றால்
என் செய்வேன்?

ஏனிந்த தலைப்பு?

நானொரு முற்றங்கள் தொலைத்த
ஈழத்து இளைஞன் - என்
சமையலறையோ பிஃரிட்ஜுக்குள் இருக்கிறது.
படுக்கையறையுள் நுழைந்தாலோ புத்தகங்கள் மட்டுமே
என்னை காதலாய் பார்க்கிறது.
பூஜையறையின் கடவுள்களோ
எப்போது நான் போனாலும்
ஏளனமாய் சிரிக்கிறார்கள்.
எதுவுமே செய்வதில்லை.
IPKF-Srilanka01_Smallஇல்லை இல்லை
செய்வது எதுவுமே
எனக்கு தெரிவதில்லை - என்
வரவேற்பறையின் வெறுமை
இருளிடை ஏறி துரத்துகிறது.
ஒளிந்து கொள்ள இடம் தேடி
ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
இன்றைக்கு வீட்டில்.
அன்றைக்கு நாட்டில்.

ஓட்டம் எனக்கு புதிதல்ல.
எமக்கு புதிதல்ல.
ஏழு வயதில் இந்தியன் ஆர்மி துரத்தையிலே
நல்லூரடியில் தடக்கி விழுந்த
நாலு சிராய்ப்பின் தழும்பு இன்னும்
எந்தன் காலில் இருக்கிறது.
பதினைந்து வயதில் நாலு எட்டானது.
இருபதில் கன்னம் பழுத்தது.
துரத்தும்போதெல்லாம்
விழுந்து எழுந்து தொடர்ந்து ஓடினேனே ஒழிய
ஒரு கணமேனும்
நின்று நிமிர்ந்து திரும்பி
நேர்கொண்டு பார்த்திலேன்.
அரும்பு மீசையை கூட மழித்து விட்டு
ஐஸியை காட்டி முழித்து நிற்கும்
பயந்தாங்கொள்ளி இளைஞன் நான்.
இறங்கு கண்ணினன்.
வெறுங்கை நாற்றினன்.
விரல் நிலம் கிளைந்திட நிற்கையிலே
மண்டை கிறுகிறுக்கும்.
கோபம் வரும்.
கொஞ்சம் வீரமும் வரும்
கூடவே உயிர் போய்விடுமோ
என்ற பயமும் சேர்ந்துவரும்.

இன்றைக்கு மேடை ஏறி
வீட்டில் இலக்கியம் பேசுகிறேன்.
இப்போது புரிகிறது
ஏனிந்த தலைப்பு என்று!
துணிந்தவர்கள் இறந்தபின்னே பயந்தவர்கள் ஒன்று கூடி
படம் காட்ட வேணுமானால் வேறு தலைப்பு இங்கு ஏது?

எந்தன் அறை.

எங்கள் வீட்டு இலக்கியத்தை இட்டு கட்ட சொன்னவேளை
கற்பனைகள் வறண்டு நானும் ஒளிந்து கொண்ட ஒரே அறை.
அந்த சிறை போனபோது வாரி அணைத்து வாசம் கொடுத்து.
தண்ணீர் தெளித்து கூட எனக்கு ஐடியாவும் கொடுத்த அறை.
அந்த அறை? எந்த அறை?
அது எங்கள் வீட்டின் குளியலறை!

அறிமுகப்படலம்

சின்னவயதில் இந்த அறை
உயிர்காப்பான் உறவு முறை!
பொம்மர் வரும் ஷெல்லு வரும்
40039_420717221414_7043841_nபோது எல்லாம் பதுங்கும் அறை.
கள்ளன் பொலிஸ் விளையாட்டிலே
முதலில் லலியை போய் தேடும் அறை.
தவணை பரீட்சை ரிப்போர்ட் கார்ட்டு
அப்பா கையில் போகும்போது
அடிக்கு பயந்து நான் ஓடும் அறை.
இந்த அறை என்றைக்கும்
இருட்டாய் தான் எமக்கிருக்கும்.
வெளிச்சம் உள்ள நாட்களிலும்
உள்ள போயி உச்சி பார்த்தால்
லாம்பு விளக்கு புகை பிடித்து
கரி எல்லாம் படர்ந்திருக்கும்.

பாம்போடு மல்லுக்கட்டல்

எங்க ஊரில் குளியலறை கிணற்றுமேடை அருகிருக்கும்
அருகிருக்கும் நாவல்மர பழங்கள் விழுந்து பழுத்து கிடக்கும்
எம்மோடு குளிக்கவென்று கரப்பான் கூட்டம் கூடி இருக்கும் - உள்ளே
குடியிருந்த பாம்பு ஒன்று அரவம் கேட்டு படமெடுக்கும்.

படமெடுத்த பாம்ப பார்த்து எனக்கு ஒரு குலப்பன் வரும்
அடித்து பிடித்து அலறி ஓட கால் தடக்கி காயம் வரும்
அம்மா வந்து பார்த்திட்டு அம்மாளோட பாம்பென்று
அடிக்காம கலைக்கவெண்ணி அரிக்கன் லாம்பு எண்ணை ஊத்தும்.

நுழைவுப்படலம்

பாம்பு ஓடிப் போனபின்னே படத்தில் வரும் போலிஸ் போல
ஜிம்மி வந்து குலைத்துவிட்டு வீட்டை சுற்றி ஓடிவரும்
உள்ள போயி செக் பண்ணி டேஞ்சர் இல்லை எண்டபின்னே
கதவை தூக்கி சாய்த்துவிட்டு சரத்தை அதிலே கொளுவவேணும்.

குளிக்கும் போது என்னை பார்த்து பொட்டுப்பூச்சி வெட்கப்படும்.
புலிநகச்சிலந்தியோ எண்டு எனக்கு கொஞ்சம் டவுட்டு வரும்.
மறந்து போயி பைப்பை திறந்தா கரப்பான் பூச்சி வெளியே வரும்
வெளியே இருந்த காகம் வேறு சவுக்காரத்தை தூக்கிவிடும்!

குளியலறை யன்னல் தட்டில் சோப்பு ஷம்போ தட்டுப்படும்
சன்லைட்டும் லைப்போயும் இரட்டையர் போல் ஒட்டிக்கிடக்கும்
பற்பொடியும் ஊமல்உமியும் தரை பூரா விரவி இருக்கும்.
தீர்ந்து போன சிங்னல் பேஸ்டு கத்தரியால கடையப்படும்!

அம்மாவோடு சில்லெடுப்பு.

சில்லென்ற குளிரில வெள்ளன எழும்பி குளிப்பதெண்டா
சின்னனில எனக்கு பொல்லாத கள்ளம்.
நல்லெண்ணெய் கிண்ணத்தோடு அம்மா பின்னால் துரத்தும்போது
நெல்லிக்காய் மரத்தில் ஏறி ஒளிஞ்சுடுவன் கொப்பில் நானும்.

ஒரு கையில் கொக்கத்தடி,
மற்றக்கையில் விறகுக்கட்டை
கீழிருந்து அம்மா மேலே நோக்கி பார்க்கையிலே
மேலிருந்து சுப்பர் சொனிக் பதியிற ஒரு பீல் கிடைக்கும்!.

40039_420717326414_3334117_nமெல்ல நானும் இறங்கி வந்து
அம்மா கிட்டே நெருங்கி வந்து
காய்ச்சல் எண்டு கழுத்தை தொட்டு
காட்டுவேன் ஒரு தாளம்.

தென்னம் பொச்சு நூலை மூக்கில்
கொஞ்சம் நானும் ஓட்டிவிட்டு
ஹாச்சும் எண்டு தும்மி அம்மா
முட்டு வந்து விட்ட தென்று

முழுகினா இன்னும் கூடுமம்மா
மூண்டு நாளில் பரீட்சை அம்மா
இல்லாத நாட்டியம் எல்லாம்
ஆடி வேறு காட்டுவேன் அன்று!

எனக்கு முன்னே மூண்டு பெத்து
வளர்த்த அன்னை அவளல்லோ – எண்ட
அம்மாவை சுத்துவது
லேசுப்பட்ட வேலையில்லை.
பம்மாத்து காட்டாம
படலையை ஒருக்கா சாத்து எண்டு
ஊத்தை உடுப்பு கட்டோடு
கிணற்றடியில் வந்து நிப்பா.
தனக்கும் சேர்த்து இறை எண்டு
குறுக்குக் கட்டில் வந்து நிப்பா.
ஊத்தும் போது கொஞ்ச தண்ணி
கிணற்றுள் தெறித்து பறந்தாலோ
அப்பருக்கும் சேர்த்து – அஞ்சு
திட்டி வேறு தீர்த்திடுவா.

அம்மா பாசம்.

பத்து வாளி இறைச்சபின்னே திரும்பி நில்லு தம்பி எண்டு
பொச்சு மட்டை எடுத்து வந்து முதுகில் எனக்கு தேச்சிடுவா.
அம்மா
தேய்க்கும் போது சேர்த்த பாசம் – பசு
தன் குட்டியை நாக்கால் நக்கிடுமே
அந்த விலையற்ற தாய்ப்பாசம்!

இன்று
ஆஸி வந்து தேடி ஓடி உழைச்ச காசை எடுத்தபடி
ஊரு போய் பார்த்தாலே அங்கே எல்லாமே போயிட்டுது.

அம்மாவோட கிணற்றடியில் மல்லுக்கட்டும் தம்பி எங்கே?
அவ்வையும் முருகனுமாய் நாம் சில்லுக்கட்டிய நெல்லி எங்கே?
பாசத்தின் ஊற்றெல்லாம் தேசத்தில் தொலைத்துவிட்டு
பேஸ்புக்கில் அம்மாக்கு மதர்ஸ் டே விஷ் சொல்லும்
வேஸ்ட்டான இனமாக மாறிவிட்டோம் பார்த்தியளா!
இதுக்கு என்ன செய்வம் எண்டு கொஞ்சமேனும் யோசிப்பேளா?

 

கிணற்றடியில் கம்பன் விழா

வெட்ட வெளி, உச்சி வெய்யில்
உயரமான கிணற்று கட்டில்
தனிய நிண்டு குளிக்கும்போது –  எண்ட
கம்பன் விழா நடப்பதுண்டு.
இளையராஜா இசை விருந்தும்
பிற் போடாமல் இசைப்பதுண்டு!

காவாலி பயலோட கூத்தை நல்லா பார்த்தபடி
வேலியோர பனைகள் எல்லாம்
கைதட்டி குதூகலிக்கும்.
ஒரு பக்கம் நாய்க்குட்டி வாலாட்டாம தூக்கம் போடும்.
கழுத்துவெட்டி சேவல் கெக்கேன்னு கொக்கரிக்கும்.
மதில் மேல் பூனைகள் விழிகள் கெஞ்சி வீழும்.
கொய்யா மரத்தில் அணில்களோ - தன்பாட்டுக்கு
நெஸ்பிறே பைகளை பிரித்து கொறிக்கும்!
இந்த பக்கம் கம்பனோ
பாவம் தூக்கில் தொங்குவான்.

மிதிலைக்காட்சி!

முன் வீட்டு ராதா முற்றம் கூட்டையிலே
என் பாட்டு ராமனின் மிதிலை படலமாகும்.
அவள் கண்ணோடு கண்ணினை கவ்வ - கவ்வி
ஒன்றை ஒன்று உண்ணிட
உள்ளம் படபடக்கும்.
கால்கள் தகிட தகமி போடும்.
நிலை பெயராது உணர்வு ஒன்றிட
பூங்காற்று திரும்புமா எண்டு
ஒரு இசைப்பாட்டை எடுத்துவிடுவன்.

என்ன ஆச்சரியம்.
இவனுக்கும் எசப்பாட்டு கேட்கும்!
யாரது பூங்குயில் என்று ராதாவை தேடினால்
“கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க” எண்டு
புகைக்கூட்டு உச்சியிலே
வடை ஒண்டை கொறித்தபடி
அண்டங்காக்கா நிண்டு
என்ன பார்த்து சிரிக்கும்.
ராதாவோ முற்றம் கூட்டி ஒதுக்கி விட்டு
பத்தி கூட்ட சென்றுவிடுவாள்!

அரோகரா

கிணற்றடியில் குளிப்பு – அது
கின்னசு ரெக்கொர்டு.

கப்பி வாளி அள்ளி எடுத்து
கையில் பிடித்து வார்த்தபடி
மற்ற கையால் உடம்பு முழுதும்
ஊத்தை உலக்கும் விந்தையடி
அது ஒலிம்பிக்ஸில் வரவேண்டிய வித்தையடி!

வித்தையது விவரமாய் தெரியாது போனாலோ
கட்டிய இடுப்பு சாரம் அவசரத்தில் அவிழுந்துவிடும் - அந்தரங்கங்கள்
அடுத்தவீட்டின் விடுப்பு தேடும் ஆச்சிக்கு தெரிந்துவிடும்.
அக்கம் பக்கம் பூரா அரசல் புரசலா விஷயம் பரவிவிடும்.
அடுத்தநாள் டியூஷனிலே அபிராமி வேறு
அரோகரா எண்டு என்னை பார்த்து கும்பிடு போடும்.

குளியலறையில் காதலி

அந்த நிலை தாண்டி இந்த நாடு வந்த போது
கட்டிய வீட்டுக்குள்ளே குட்டியாய் குளியலறை.
நிலை கெட்ட மாந்தரின் நிர்வாணம் தாங்காமல்
எனக்கு நானே அடைத்துக்கொண்ட இனிய சிறை என் குளியலறை.

தினமும் நான் குளித்தபின்னே - முகத்தை
திரையில் பார்க்கையிலே இன்னும்
காணாத காதலி நின்று அங்கே கைகொட்டி சிரிப்பாளே.

அவளின் பெயரை கொஞ்சம் படிந்திருக்கும்
ஈரத்திலே எழுதையிலே
எனை அறியாமல் என் சிரிப்பு
வெட்கத்தோடு வெளிப்படுமே.

இவ்வறையில் நான் பேசும் பேச்சுகள் சொதப்புவதில்லை.
என்னோட பாட்டிண்ட சுருதி என்றும் பிசகியதில்லை
எந்தன் வீட்டு குளியலறை ஏர்டேல் சுப்பர் சிங்கரிலே
எந்த சீசன் என்றாலும் எனக்கு தான் வீடு வரும்!

அன்று பிறந்த குழந்தை.

குளியலறை
எனக்கொரு போதிமரம்.
குளித்து முடித்து அனுதினமும்
புத்தனாகவே நான் வெளிவருகிறேன்.
நிர்வாணா எனக்கு இங்கேயே கிடைக்கிறது.
என் கேள்விக்கு பதில்கள்
கேள்விகளாய் விரிகிறது.
நீர்த்திவலைகள் என்னை தழுவும்போது
அன்று பிறந்த குழந்தை ஆகிறேன்.

knifeநான் யார்? என்று கேட்கும் கேள்விக்கு
யாருமே இல்லடா என்று அது கழுவித்துடைக்கும்.
நான் நானாக இருக்க வைக்கும்.
நல்லவனாக வெளியே நடிக்க வைக்கும்.

குளியலறை
எனக்கொரு கோயில்- என்
கடவுள்கள் குடியிருக்கும் சுவாமியறை
என் தவறுகள் பலதினை தடுத்தாட்கொண்ட
தயாவான தத்துவன்களின் இருப்பிடம் - அவர்கள்
நான் குளிக்கும்போது என்னோடு குளிக்கிறார்கள்.
தலை துவட்டும்போது
துவாயை பார்த்துக்கோ என்கிறார்கள்!

குளியலறை
கடவுளும் மனிதனும் நிர்வாணமாய் இருக்கும் ஒரே அறை
இந்த அறையில் அரக்க பறக்க ஒருநாளும் குளிக்காதீர்கள்
அழுக்கு போனால் போதும் என்று நிறுத்தாதீர்கள்.
அலையும் மனம் அடங்கும் மட்டும்,
அகத்தூய்மை அடையுமட்டும்,
தண்ணி பில்லை யோசியாமல்,
தவமாய் தவமிருங்கள்!

உங்களை நீங்கள் உணர்வீர்கள்.

நன்றி வணக்கம்

**********************

அவுஸ்திரேலிய கேசி தமிழ் மன்றம் நடத்திய ஆடிக்கூழ் 2013 நிகழ்வின் போது வாசிக்கப்பட்ட கவிதை. “எங்கள் வீட்டில் இலக்கியம்” தலைப்பில் என்னையது “குளியலறை”. மொத்த கவியரங்கத்தையும் இங்கே காணலாம்.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக