ஜே ஜே: சில குறிப்புகள்

Nov 3, 2012

“ஜோசப்ஸ் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5ம் திகதி, தனது 39வது வயதில், அல்பர் காம்யு விபத்தில் இறந்ததுக்கு மறு நாள் இறந்தான்”

100-00-0000-053-3_b

அங்கே ஆரம்பித்தது “சனியன்”. இப்போது அல்பர் காம்யு யார் என்று அறியவேண்டும். அவரை ஏன் நாவலின் ஆரம்பத்திலேயே கொழுவினார்? அல்பர் காம்யு ஒரு பிரெஞ்சிய எழுத்தாளர். நோபல் பரிசுபெற்றவர் என்ற அளவுக்கு மேல் அவரை வாசித்தேன் என்று கெத்தாக எழுதுவதற்கு அட்லீஸ்ட் அவர் நாவலின் முன் அட்டைப்படமாவது நான் பார்த்திருக்கவேண்டும். ஆனால் இந்த நாவல் ஒரு எழுத்தாளரை பற்றி தான் என்பது அந்த வரிகளில் புரிந்துவிட, கொஞ்சம் கவனமாகவே ஜே ஜே சில குறிப்புகளை புரட்ட தொடங்கினேன்.

இதை நாவல் என்பதா, குறிப்புகள் என்பதா … என்ன வடிவம் என்றே சொல்லமுடியாத ஒரு வடிவம். பாலு ஒரு வளர்ந்து வரும்தமிழ் எழுத்தாளன். அவனுக்கு ஜேஜே என்ற மலையாள எழுத்தாளன் கம் சிந்தனைவாதி (இதை கேட்டால் ஜேஜே விழுந்து விழுந்து சிரிப்பான் இல்லை என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுவான்) ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஜேஜேயை இவன் தூர இருந்தே காதலிக்கிறான். எதை செய்யும்போதும் ஜேஜே எப்படி இதை அணுகியிருப்பான் என்று சிந்திக்கிறான். ஜேஜே பின்னால் திரிகிறான். ஜேஜே என்பவன் பற்றி ஒரு கோட்டை கட்டி அங்கே ஜேஜேயை சக்கரவர்த்தியாக நியமித்து, பகிடி என்னவென்றால் கோட்டைக்கு கொத்தனாரும் ஜேஜே தான். ஜேஜே அழகாக தச்சு வேலை செய்வான். அவன் அப்பாவிடம் இருந்து பழகிய பழக்கம். அதிலும் நேர்த்தி, தத்துவம் தேடி செதுக்குவான். ராணிக்கு சரிக்கட்டிய கட்டில் பிடியில் ராணியின் நிலை பற்றி செதுக்கியவன், அதை யாருக்கும் சொல்லவில்லை. உதைபந்தாட்டக்காரன். ஓவியன் … இந்த விவரங்களை ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை. எனிவே!

“நான் ஒரு காரியத்தை மன ஒப்புதலோடு செய்யவேண்டும், இல்லையேல் இறந்துவிடவேண்டும், இரண்டுமே என்னால் முடிவதில்லை, அது தான் என் பிரச்சனை” என்கிறான் ஜேஜே. ஓமனக்குட்டியை காதலித்து கரம்பிடித்து இரண்டுபேரும் ரயிலில் தேனிலவுக்கு போய்க்கொண்டு இருக்கிறார்கள். விஷயம் தெரியாத ஓமணக்குட்டி ஜேஜேயிடம் தான் எழுதிய கவிதைத்தொகுப்பை நீட்டுகிறாள். ஜேஜே வாசித்துவிட்டு சிரிக்கிறான். கவிதைத்தொகுப்பை பெட்டிக்குள் கவனமாக வை என்கிறான். அவள் அத்தோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. “என் கவிதை எப்பிடி இருக்கு, சொல்லு” என்று அவனை தொணதொணக்க,  “அந்த கவிதைகளை பேசாமல் யன்னல் வழியாக தூர எறிந்துவிடு” என்கிறான். சண்டை. அடுத்த ஸ்டேஷனிலேயே பிரிகிறார்கள்.

பாலுவும் ஜேஜேயும் இந்த நூலில் ஒரே ஒரு இடத்தில் தான் சந்திக்கிறார்கள். ஒரே ஒரு வார்த்தை. “சிவகாமி அம்மாள் தன் சபதத்தை நிறைவேற்றிவிட்டாரா?” என்று ஜேஜே கல்கியை ஒரு கடி கடிக்கிறாரன். இவ்வளவு தான். மற்றும்படி சந்தர்ப்பங்கள் அமைந்தாலும் பாலு ஜேஜேவை தூர இருந்தே ரசிக்கிறான். ஜேஜே பற்றி அவனோடு நெருங்கி பழகியவர்களிடம் குறிப்பெடுக்கிறான். மும்பை கூட போகிறான். இறுதியில் ஜேஜே சில குறிப்புகள் என்று ஒரு தொடர் டயரி குறிப்புகளை எழுதுகிறான். இது தான் நாவல்.

Sundara_ramasamy7_400
ஒரு கட்டத்தில் பாலு தன் தந்தையிடம் இருந்தே ஜேஜே பற்றி கேட்டறிகிறான். மீண்டும் மீண்டும் ஒரே கதையை அவரும் விரும்பி விரும்பி சொல்லுவார். அப்போது தான் நம் சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாக புலர தொடங்கும். பாலு தான் அந்த ஜேஜே. இன்னும் கொஞ்சம் மேலே போனால், நாவலின் எழுத்தாளர் சுந்தர ராமசாமியே தான் அந்த ஜேஜே. ஒரு எழுத்தாளனின் சிந்தனை ஒட்டங்கள், தத்துவ விசாரங்கள், விண்டாவாதங்கள், craziness, ஒருவரையும் கணக்கெடுக்காத குணம், தன்னை ஒருவருமே கணக்கெடுக்கிறார்கள் இல்லையே என்ற ஏக்கம் எல்லாமே சேர்ந்த ஒரு நிழல் பிரதியாக தன்னையே வடித்து சுரா எழுதிய நாவல் தான் ஜேஜே சில குறிப்புகள்.

இந்த நாவல் கொஞ்சம் மிரட்டலான நடை. மலையாள நெடி அதிகம் உள்ள நாவல். அதுவும் என் போன்ற தமிழறிவு டைப்படிக்கும் வாசகர்களுக்கு வாசித்து முடிப்பதற்குள் மூச்சு முட்டிவிடும். அதைவிட சொல்லும்விஷயம் இன்னமும் மண்டை காயவைக்கும். திரும்ப திரும்ப வாசித்தால் மாத்திரமே இந்த மக்கு மண்டைக்கு புரியக்கூடிய பக்கங்கள் தான் ஏராளம். எடுத்தவுடனேயே புரிந்த ஒரே ஒரு பகுதி முன்னுரை மாத்திரமே. நான் முதலில் எல்லோரும் அட்வைஸ் பண்ணுவது போல, தமிழ் படிக்கவேண்டும்.
ஜே ஜே சிலகுறிப்புகள், வாசித்தால் வாசிப்பவர்களை எழுத்தாளர் ஆக்கிவிடும் அபாயங்கள் நிறைந்த புத்தகம். சிந்தனாவாதிகளை தற்கொலை செய்ய தூண்டும். Bluffs கூட வாசிக்கலாம். அட்லீஸ்ட் நான்கு வாரங்களுக்கு facebook இல் புரியுதோ இல்லையே ஸ்டேடஸ் போட்டு கலக்குவதற்கு புத்தகம் நிறைய கிளிஷே வசனங்கள் குவிந்துகிடக்கின்றன. உதாரணத்துக்கு.
“மாட்டுக்கு சொறிந்து கொடு, அது நல்ல காரியம். மனிதனுக்கு ஒரு போதும் சொறிந்து கொடுக்காதே, சக மனிதனை ஏமாற்றாதே”
இந்த நாவலை ஒரு கிளாசிக் என்று ஜேஜே தவிர்ந்த மீதி எல்லோருமே சொல்வார்கள்.

Contact form