கடற் கோட்டை - கிண்டிலில்

Dec 5, 2017

செங்கை ஆழியானின் நூல்களை அமேசன் கிண்டிலில் கொண்டுவரும் முயற்சியை நண்பர் தாருகாசினி ஆரம்பித்திருக்கிறார்.

முதல் நூலாக “கடற் கோட்டை” வெளிவந்திருக்கிறது.

தாருகாசினி முறையாக செங்கை ஆழியான் குடும்பத்தோடு காப்புரிமை ஒப்பந்தத்தைச் செய்து இதனை ஆரம்பித்திருக்கிறார். கிண்டிலில் நூல்களை வாசிக்கும் பழக்கம் இன்னமும் நம்மத்தியில் பெரிதாக இல்லை. இந்த சந்தை மிகக் குறுகியது. இப்போதைக்கு உழைப்புக்குப் பலன் கிடைப்பது சந்தேகமே. ஆனால் கிண்டிலில் இருப்பது நீண்ட காலத்துக்குப் பயனளிக்கக்கூடியது. பலர் இப்போதெல்லாம் சப்ஸ்கிரிப்சன் முறையில் கிண்டில் நூல்களை வாசிக்கிறார்கள். அப்போது செங்கை ஆழியான் அறிமுகமற்ற பலரையும் சென்றடையும் சந்தர்ப்பங்கள் அதிகம். காலப்போக்கில் இது இடம்பெறும். தாருகாசினி ஒரு கர்மவீரர்போல சலிப்படையாது தான் எடுத்துக்கொண்ட தன்முயற்சியைத் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். வற்றா நதி, வாடைக்காற்று, குவேனி என்று ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது. அடுத்த நூலுக்கான என்னுடைய பரிந்துரை “24 மணி நேரம்”.

“கடற் கோட்டை” கிண்டில் விலை இரண்டு டொலர்கள்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு பேச்சுப்போட்டி பரிசாக “கடற் கோட்டை” உட்பட சில நாவல்களைக் கல்லூரியில் தந்தார்கள். பொருளாதாரத் தடை இருந்த காலமது. இரட்டை ரூல் கொப்பி ஒற்றையில் அச்சடிக்கப்பட்ட புத்தகம். இப்போது கடற் கோட்டை கிண்டிலில் வெளிவருகிறது. இனிவருங்காலங்களில் அது ஒலிப்புத்தகமாகும். தொழில்நுட்பம் விருத்தியாகையில் தானியங்கி மொழிமாற்றங்கள்கூட சாத்தியப்படும்.

புத்தகங்கள் தம்மை உள்ளடக்கம் சார்ந்தும் வடிவமைப்பு சார்ந்தும் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன.

Contact Form