Skip to main content

ஊபர் ஈட்ஸ்




நேற்று ஊபர் ஈட்ஸ் விநியோகத்துக்கான பொதியை எடுப்பதற்கு இலங்கை உணவகம் ஒன்றுக்குச் செல்லவேண்டியிருந்தது. பொதியில் ஒட்டியிருந்த பெயரைப்பார்த்ததும் அது ஒரு ஈழத்தமிழரின் ஓர்டர் என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். கொத்துரொட்டியும் அப்பமும் ஓர்டர் பண்ணியிருந்தார்கள். அரைக்கட்டை தூரத்தில் உள்ள கடையின் கொத்து ரொட்டிக்கு ஊபர் ஈட்ஸ் ஓர்டர் பண்ணும் தமிழர்களும் இருப்பார்களா என்ற ஆச்சரியத்துடன் பொதியை வாங்கிக்கொண்டு அந்த வீடு நோக்கிப்புறப்பட்டேன்.

வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கவில்லை. இரண்டு மாடியில் பிரமாண்டமான வீடு. வாசலில் நாவூறு பூசனி தொங்கியது. அண்மையில்தான் கட்டியிருக்கவேண்டும். ஏலவே வாழ்ந்த வீட்டை இப்போது முதலீட்டு சொத்தாக மாற்றியிருக்கலாம். வாசலில் நின்ற பிஎம்டபிள்யூவைப் பார்த்தால், இது அவர்களுக்கு மூன்றாவது நான்காவது வீடாகக்கூட இருக்கக்கூடும். தயக்கத்துடன் காரை விட்டு இறங்கினேன். எப்போதுமே வசதி படைத்தவர்கள், படித்தவர்கள், இலக்கியவாதிகள், சமூக ஆளுமை நிறைந்தவர்கள் அருகாமை எனக்கு ஒத்துவருவதில்லை. அவர்கள் அருகில் போனாலேயே தோஸ்தாவஸ்கிக்கு வருவதுபோல வலிப்பு வர ஆரம்பித்துவிடுகிறது. ஒருவித PTSD வியாதி அது. போய்ப் பேசாமல், அழைப்புமணியை அடித்துவிட்டு, வாசலிலேயே பொதியை வைத்துவிட்டுத் திரும்பலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் என் கெட்ட காலம், வீட்டுக்குப் பூசனிக்காயைத் தொங்கவிட்டு, கதவுக்குப் பட்டையடித்து, ஐயருக்கு முந்நூறு டொலர் அழுத அலுக்கோசு, நூறு டொலருக்கு வீட்டுக்கு அழைப்பு மணி வாங்கிப்பூட்டப் பஞ்சிப்பட்டிருக்கிறது. அல்லது அந்த வீட்டுக்கு எவர் வரப்போயினம் என்ற எண்ணமாகவும் இருக்கலாம். இப்போது வெறுமனே சும்மா கதவைத்தட்டி, சாப்பாட்டை வைத்துவிட்டும் போகமுடியாது. என் ஊபர் ரேட்டிங் குறைந்துவிடும்.
‘டொக் டொக்’, தட்டிவிட்டு உள்ளே காது கொடுத்தேன். உள்ளிருந்து டிவி சத்தம் வந்தது. இன்னமும் பலமாக ‘தட் தட்’.
‘Yes, Coming…’, அந்தப் பெண் குரலுக்கு பதினைந்து வயதை மதிப்பிடலாம். குரலை வைத்து வயதை மதிப்பிடலாமா என்று எப்போதுமே எனக்கொரு சந்தேகம் உண்டு. குரலுக்கு மெதுவாகவே வயது ஏறுகிறது. எனினும் என் பள்ளிக்கால நண்பியின் குரலை இப்போது கண்டுபிடிப்பேனா என்பது சந்தேமே. கொஞ்சம் கரகரப்பு, தயக்கத்துடன்கூடிய, பிஞ்சுப் பயத்தங்காய்போன்ற ஒரு குரல் கோகிலவாணியுடையது. ஆனால் அவள் குரல் இன்றைக்கு எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. எங்கள் சுண்டுக்குளி வகுப்பின் நாற்பதாவது வயது ஒன்றுகூடலின் ஓடியோ ஒன்று நண்பர்கள் குழாமில் ஷெயார் பண்ணுப்பட்டிருந்தது. கேட்டுப்பார்த்தால் யார் குரலையும் மட்டுக்கட்ட முடியவில்லை. கண்களை மூடியடி, ஏ ஆர் ரகுமான் பாடல்கள் கேட்பதுபோல சின்னச் சின்ன ஒலிகளையெல்லாம் செவி மடுத்தேன். ம்ஹூம். எல்லோருடைய குரல்களும் உருமாறியிருந்தன. குரல்கள் என்றில்லை. ஆட்களையும்தான் மட்டுக்கட்ட முடிவதில்லை. ஊருக்குப் போயிருந்த சமயம், கார்கில்ஸில் ஒரு பெண்மணி என்னைக் கண்டு ‘என்ன என்னை மறந்திட்டீரா?’ என்று கேட்டபோது முழித்தேன். ‘நான்தான் ராதிகா’ என்றாள். ‘அம்பிட்ட படிச்சனீரா?’ என்றேன். ராதிகா ஐந்தாம் ஆண்டு அம்பிகைபாகன் சேரின் வகுப்பில் ஒன்றாகப் படித்தவள், என் சிட்டைக் கணக்கை பார்த்தடித்த ஒரே பெண் என்ற பெருமைக்குரியவள். அவளைக்கூட மறந்துவிட்டேன். ‘ஓமோம், என்ர பெயரைக்கூட ஒரு கதையில எழுதியிருந்தீரே’ என்றாள். எந்தக் கதை என்று நானும் கேட்கவில்லை. அவளுமே சொல்லவில்லை.
கதவு இன்னமும் திறந்தபாடில்லை. டிவி சத்தம் தொடர்ந்துகொண்டிருந்தது. டிவியில் போனது பிகிலா மெர்சலா என்பதைக் கணிக்கமுடியவில்லை. இரண்டு பட அப்பன்களில் ஒருத்தன் கொல்லப்படும் காட்சி. மீண்டும் கதவைத் தட்டிவிட்டுக் கத்தினேன்.
‘It’s Uber eats delivery’, விஞ்சிய பகுதியான ‘you assholes’ என்பதை விழுங்கிவிட்டேன்.
டிவி சத்தம் மியூட்டானது.
‘Shami, it’s arrived, go get it’, இது ஒரு ஐம்பது வயது ஆண் குரல், ஷமியின் அப்பாவாக இருக்கலாம். சொன்னாப்போல, ஆண் குரல்களுக்குள் பள்ளி நண்பர்களின் குரல்கள் மாறுவதேயில்லை. அதே ஏற்ற இறக்கங்களுடனும் நெளிவு சுளிவுகளுடனும், அபசுரங்களுடனும் அவை அப்படியே இருக்கின்றன. ஒருவேளை ஆண் நண்பர்களுடன் பழகியதுபோல நண்பிகளுடனும் நெருக்கமாகப் பழகியிருந்தால் அவர்களின் குரல்கள் ஞாபகத்தில் இருந்திருக்குமோ என்னவோ. பெரும்பாலான சமயங்களில் நண்பிகளின் குரல்களை கற்பனை செய்தே கேட்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. மற்றபடி எப்போதாவது ஆசிரியருக்குப் பதில் சொல்லும்போதும், கட்டுரை வாசிக்கும்போதும் கேட்பதுதான். ஒரு உடைந்த மட்பாண்டத் துண்டை வைத்துக்கொண்டு எப்படி ஒரு பண்டைய நாகரிகத்தையே நாங்கள் கட்டியமைக்கிறோமோ அதுபோல. ஆண் நண்பர்களின் குரல்கள் அப்படியல்ல. அவை சங்க இலக்கியங்கள்போல எப்போதுமே மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டே வந்தமையால் நீங்காமல் நிலைத்திருக்கிறது. அவர்கள் கொட்டும் தூஷணங்களும் இலக்கியங்கள்போலவே உயிர் வாழ வல்லது. ஊரில் நிற்கையில், சொந்தக்காரர்வீடுகளில் பம்மிக்கொண்டிருந்த தூஷணம் பள்ளி நண்பர்களைப்பார்த்ததுமே அவிட்டுவிட்ட நாய்போல பாய்ந்து விழுந்து உருண்டு பிரண்டது எங்கனம் என்று தெரியவில்லை. அதிலும் தண்ணிக்குத் தூஷணம் அளவுக்கு இன்னொரு சைட் டிஷ் அமைந்துவிடவுங்கூடுமோ?
டிவி மீண்டும் உயிர்த்தது.
‘I can’t ... Rayappan uncle is dying, you go get it Papa’ ஷமி அழுகைக் குமுறலுடன் சொன்னாள்.
பிகிலின் தந்தை மிக எளிதாக அந்தப்பெண்ணுக்கு மாமா ஆகிவிட்டதன் தாற்பரியத்தை வியந்தேன். பப்பா என்று தகப்பனை அழைப்பதைப்பார்த்தால் அவர்கள் மலேசியத்தமிழர்களோ என்ற சந்தேகமும் வந்தது. அங்கும் கொத்து ரொட்டி பிரபலம்தானே. அல்லது மலேசியாவில் வாழ்ந்த ஈழத்தமிழர் சந்ததியாகவும் இருக்கலாம்.
நான் இனி வேலைக்காகாது என்று பார்சலை வாசலில் வைத்துவிட்டுத் திரும்பினேன். கதவு திறந்தது. ஷமியின் அப்பாதான். இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேனே. உடனடியாக ஞாபகம் வரவில்லை. நேரில் பார்க்கையில் குரலுக்கு மதிப்பிட்ட வயதைவிட உடலுக்கு பதினைந்து ஆண்டுகள் அதிகம் இருக்கலாம் என்று தோன்றியது. இவருக்கு அறுபத்தைந்து என்றால் ஐம்பது வயதில் ஷமி பிறந்திருக்கவேண்டும். அதற்கு முன்னரான இவரின் இருபது வருடங்களுக்கு என்னானது? ஷமிக்கு அண்ணனோ அக்காவோ இருக்கலாம். உள்ளேயே அறைக்குள், அல்லது அமைதியாக செல்பேசியோடு, அல்லது வெளியே நண்பர்களோடு. அல்லது இவருக்குத் திருமணம் தாமதமாகியிருக்கலாம். மூன்று தங்கைகள் திருமணம், ஊரில் காணி, வீடு என்று தேடி நிமிர வயதாகியிருக்கும். இருந்தும் ஐம்பது வயதில் குழந்தை எனும்போது ஐம்பத்தைந்தில் உப்புமூட்டை சுமக்கும்போது மூச்சிரைக்காதா? நல்லூருக்குக் கூட்டிப்போனால் எப்படித் தோளில் தூக்கி முருகனைக் காட்டியிருப்பார்? இத்தனை நெருக்கடிகளுக்குள் இவர் எப்படி இத்தனை பெரிய வீட்டைக் கட்டியிருக்கக்கூடும்? அதுவும் மூன்றாவது வீடாக? இந்தாள் நேர்மையாக உழைத்துச் சம்பாதித்திருக்கச் சாத்தியமேயில்லை. ஊரை ஏமாற்றியிருக்கலாம். இயக்கத்தின் காசாக இருக்கும். த பொயிண்ட் இஸ், இந்த சிந்தனைகள் எனக்குத் தேவையில்லாதது. ஆனாலும் தடுக்கமுடிவதில்லை. எப்படியோ பொறாமை வந்துவிடுகிறது. ஒரு வெள்ளைக்காரர் பணக்காரராக இருப்பதில் எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை. ஆனால் கூட இருப்பவர்கள், நண்பர்கள், சொந்தக்காரர்கள், ஒரே இனத்தவர் எம்மைவிட பணக்காரராக இருக்கையில் மனம் புழுங்கிப்போகிறது. அவர்களை எப்படியும் மட்டம் தட்ட மனம் காரணம் தேடுகிறது. அவர்கள் முட்டாள்கள், எப்படியோ குருட்டு லக்கில் பணக்காரர் ஆகிவிட்டார்கள் என்பதை நிரூபிக்கவேண்டும்போல இருக்கிறது. அவர்கள் விழவேண்டும் என்று கடவுளுக்கு நேர்த்தி வைக்கிறது. இவ்வகை எண்ணங்களிலுள்ள மகிழ்ச்சிக்கு ஈடே கிடைப்பதில்லை. காதல் தோல்வியில் உழலும் நண்பிக்குக் கொடுக்கும் ஆறுதல் போன்றது அது. ஒருவகையில் பனங்கொட்டையும் பார்த்தினியம் போலத்தான். அதன் குணங்களை கண்டங்கள், தலைமுறைகள் தாண்டினாலும் அழிக்கவே முடியாது.
“Hey .... you Indian?”, அந்தப்பக்கம் பார்த்தினியம் நேரடியாக ஆட்டிலிருந்து விழுந்து வளர்ந்திருக்கவேண்டும். பலமாக இருந்தது.
“No, I am an Australian”
வேண்டுமென்றே சொன்னாலும் என் பதில் எனக்கே அபத்தமாக இருந்தது. ‘இல்லை நான் ஶ்ரீலங்கன்’ என்றே சொல்லியிருக்கலாம். ஆனால் எப்போதுமே மனமார என்னை ஒரு ஶ்ரீலங்கனாக நான் எண்ணியதில்லை. ஶ்ரீலங்கன் தமிழ் என்றால் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கும். வெறுமனே ‘தமிழ்’ என்றால் எந்த நாடு என்ற குறியீடு இல்லாமலாகிறது. ஈழத் தமிழர் எனலாம்தான். ஆனால் அதற்கும் ஶ்ரீலங்கன் தமிழுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மலையகத் தமிழர் தம்மை ஈழத்தமிழராக உணருவார்களா என்றும் ஒரு உடனடிக்குழப்பம் வருகிறது. நாடற்ற தமிழர் என்றால் எல்லாத்தமிழருக்கும் அது பொருந்துகிறது. ஒஸ்ரேலியன் டமில் என்றிருக்கலாமோ? என் அடிப்படைப் பிரச்சனை நான் எந்தத் தமிழன் என்பதில் இல்லை. அவரின் கேள்விக்குக் குதர்க்கமாகப் பதில் சொல்வதே என் நோக்கம். எந்தக் கேள்விக்கும் நான் ஏறுமாறாகவே பதிலளித்திருப்பேன். அதில் ஒரு குரூர சந்தோசம். உன்னை நான் வென்றுவிட்டேன் பார்த்தாயா? உன்னால் நான்கு வீடுகளும் பிஎம்டபிள்யூவும் வாங்க முடிகிறது, ஆனால் என் பேச்சுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை பார்த்தாயா? அதுதான் விசயம். மற்றபடி பேசாமல் ‘’இண்டியனா?” என்ற கேள்விக்கு “நோ” என்றுவிட்டு அவரின் அடுத்த கேள்விக்குக் காத்திருந்திருந்திருக்கலாம்.
‘Is it good?’
நான் அத்தனை யோசித்துக்கொண்டிருக்கையில், அவர் அலட்டிக்கொள்ளாமல் அடுத்த கேள்விக்குப் போய்விட்டார். இதுதான் பிரச்சனை. கேள்விகளைக் கேட்பவர்கள் பலருக்குப் பதில்கள் தேவைப்படுவதில்லை. அவர்கள் பொதுவாக பதில்களை வைத்துக்கொண்டே கேள்விகளைக் கேட்பார்கள். அல்லாவிடில் அடுத்தொரு கேள்வியை வைத்திருப்பார்கள்.
‘I mean this delivery thing, you making enough money?’
அன்னாரை இப்போது ஞாபகம் வந்துவிட்டது. ‘இரவில் எரிக்கும் சூரியன்கள்’ கவிதை நூல் வெளியீட்டில் முதற்பிரதிப் பெற்றவர் இவர். பிரதியைப் பெற்றதுடன் மாத்திரமின்றி ஒலிவாங்கியைப் பறித்து, கவிதைகள் பற்றியும் இரண்டு வார்த்தைகள் சொல்லியிருந்தார். வழமைபோல ‘கண்ணதாசன் பாடல்களுக்கு நிகராக இத்தலைமுறையில் யாரும் தரமாக எழுதுவதில்லை, ஆனால் இந்தத் தம்பியிடம் ஒரு பொறி தெரிகிறது’ என்றார். பக்கத்தில் நின்ற சூரியக் கவிஞர் மிகப்பெருமிதத்துடன் அதற்குக் கைதட்டினார்.
நாம் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பேசினோம்.
‘Not bad, I lost my job, my factory closed, this good pocket money’
என் ஆங்கிலம் மழைக்காலத்தில் விழுகின்ற அப்பிள் பழங்களைப்போல ஆங்காங்கே ஒற்றை ஒற்றை வார்த்தைகளாக வாயிலிருந்து விழுந்துகொண்டிருந்தது.
அவர் எதுவுமே பேசாமல் உள்ளே போனார். நான் என் காருக்குத் திரும்ப எத்தனிக்கையில் மீண்டும் வெளியே வந்தார். உள்ளிருந்து அவர் டிப்ஸ் எடுத்து வந்திருக்கவேண்டும். இங்கே பொதுவாக எவரும் டிப்ஸ் கொடுப்பதில்லை. கொடுத்தால் பதினைந்துவீதம் அளவுக்கு, அதாவது நாற்பது டொலருக்கு ஆறு டொலர் அளவில் கொடுப்பார்கள். ஊபர் டெலிவரிக்கு பொதுவாக அமெரிக்க, ஐரோப்பிய குடியேறிகள்தான் டிப்ஸ் கொடுப்பதுண்டு. இவரும் அமெரிக்காவில் பணிபுரிந்திருக்கவேண்டும். மாடி வீடு உள்ள பணக்காரர் என்பதால் பத்து டொலர்வரை டிப்ஸ் கொடுக்கக்கூடும். அது விநியோகக் கூலியைவிட அதிகமானது. எனக்கு உற்சாகம் மேலிட்டது.
அவர் என்னிடம் தொடந்து பேசினார்.
“You study a good course, electrical or carpentry. Don’t do this for ever. Uber is shit. Get a wife and settle in life soon. I am an accountant, look at my house here’
வீட்டைப் பெருமையோடு திரும்பிப்பார்த்தார். ஆகா, கணக்காளர் என்றால் டிப்ஸ் இன்னமும் அதிகமாகலாம். இருபது டொலர் என்றால் இன்னொரு டெலிவரி இன்று இனிச் செய்யத் தேவையில்லை.
‘’I try... I will... Sir..”
கைக்குள் எதையோ ஒளித்திருந்தார். நிச்சயம் இருபது டொலர்கள்தாம். எல்லாப்பணக்காரர்களும் ஒரேமாதிரியில்லை. நாற்பது டொலர் ஓர்டருக்கு இருபது டொலர்கள் டிப்ஸ் கொடுக்கவும் ஒரு மனம் வேண்டும். இவரைப்பார்த்தால் டிப்ஸ் கொடுப்பதற்காகவே ஓர்டர் கொடுத்தவர்போல அப்போது தோன்றினார்.
“You keep this, I can do your tax return”
சொல்லியபடியே என் கைகளில் தன்னுடைய பிசினெஸ் கார்டையும் ஒரு டொலர் குற்றியையும் அழுத்தினார். நான் சிரித்த முகத்துடன் அதை வாங்கி காருக்குள் வைத்துவிட்டு.
“Thank you”, என்றேன்.
தூஷணத்தின் சங்கிலியை இறுக்கிப்பிடித்தவாறே.

000

Photo Source : https://www.ubereats.com/

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக