Skip to main content

தீத்துது


நாலடியார் எழுதப்பட்டது சங்கமருவிய காலத்தில் (கி.பி 250) என்பார்கள். தமிழ் நிலங்களில் சமணம் கோலோச்சிய காலம் அது. இந்தத் தொகைகூட சமண முனிவர்களால் எழுதப்பட்டிருக்கலாம் என்றுதான் கருதப்படுகிறது. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதியில் வருகின்ற ‘நாலு’ என்பது நாலடியாரைக் குறிப்பது என்பதை பலர் அறிந்திருக்கலாம். அந்த 'இரண்டு' எது என்று தெரியாவிடில் அடுத்த பத்தியை வாசிக்காதீர்கள்.
ஒரு கட்டுரைக்காக வெள்ளை யானையின் வாலைப்பிடித்துத் தொங்கிக்கொண்டு திரிந்ததில் இந்த இரண்டு பாடல்களும் கண்களின் மாட்டின. ஏலவே அறிந்தவைதான். ஆனால் இப்பாடல்கள் பலவும் ஒவ்வொரு வாசிப்பின்போதும் அப்போதைய மனநிலை சார்ந்து புதிய அனுபவங்களைக் கொடுப்பவை.
முதலாவது பாடல் அறிவுடைமையில் வருகிறது.
“உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரின் புணருமாம் இன்பம் - புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்”
எத்தனை அழகு. அதிலும் ஈற்றடிதான் மேலும் கவர்ந்தது. எந்த அளவுக்கு அறிவுடையோருடன் கொண்ட நட்பு கூடில் இன்பமோ அதுபோல சொல்லும் சேதியைப் புரிந்துகொள்ளமுடியாத அறிவிலாரைப் பிரிந்தாற்தான் எம் துன்பமும் அகலுமாம். Do not stay in the toxic relationship! இப்பாடலில் எது sub text என்பதுதான் புதிரானது. அது அறிவுடைமையா? கலவியா?
அடுத்தபாடல் ஒரு கிளாசிக். எனக்கென்னவோ இப்பாடலைப் படிக்கும்போது விரிகின்ற காட்சிதான் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.
“யானை எருத்தம் பொலிய குடை நிழல் கீழ்

சேனை தலைவராய் சென்றோரும் ஏனை

வினை உவப்ப வேறு ஆகி வீழ்வர் தாம் கொண்ட

மனையாளை மாற்றார் கொள”
ஒரு சமணத் துறவி வீதியோரமாக தன்பாட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து அந்நாட்டின் அரசன் தன் சேனையோடு நகர் வலம் வருகிறான். அரசனின் சேனை வருகிறது என்றால் சும்மாவா? காவல் வீரர்கள் வீதியில் நின்ற மக்களை ஒதுங்குமாறு ஏய்த்திருக்கக்கூடும். பலரை முழுந்தாளிட்டு வணங்கச்சொல்லியிருப்பார்கள். கழுத்தில் கிடந்த துண்டுகள் அரைக்கு இடம் மாறியிருக்கலாம். கடைக்காரர்கள் முன்னே மேசை போட்டு கும்பம் வைத்து அரசனை வரவேற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டிருப்பார்கள். இந்தக் கொடுமையை எல்லாம் அந்தத் துறவி கவனித்திருப்பார். நால்வகைச் சேனையின் வருகையால் நிலம் அதிர்ந்து புழுதி பறக்கிறது. துறவியின் கண்களுக்குள்ளும் புழுதி பறந்திருக்கக்கூடும். அவர் எரிச்சலோடு கண்களைக் கசக்கியபடியே விழித்துப்பார்த்தால் முன்னே அரசனின் யானை நெருங்கியிருக்கும். யானையின் மேலே அதன் பிடரியின்மீது அமர்ந்தபடி, அந்தப் பிடரியே தான் அமர்ந்ததினால்தான் அழகு பெற்றது என்ற திமிரோடு அரசன் இறுமாப்பாக அப்பால் செல்கிறான்.
இதனைப்பார்த்த துறவி என்ன நினைத்திருப்பார்? அவர் படித்த இலக்கியங்களும் அறிந்த வரலாறுகளும் திரும்பத் திரும்பச் சொல்வதுதான் ஞாபகம் வந்திருக்குமல்லவா? இப்படியெல்லாம் ஆடிக்கொண்டு திரிந்தவர்கள் எல்லோரும் அட்ரசே இல்லாமல் அழிந்து போவார்கள் என்று மனதுள் திட்டியிருப்பாரா இல்லையா? அதுதான் அந்த ‘ஏனை
வினை உவப்ப வேறு ஆகி வீழ்வர்’ ஆகிற்று. அதிலும் ‘ஏனை வினை உவப்ப’ என்றனர். அதாவது முன்னர் செய்த வினை வந்து நமக்கு ‘இந்தா தின்னு’ என்று தீத்திவிடுமாம்.
தீத்துது.