கடந்த இருவாரங்களாக தாஸ்தாயேவ்ஸ்கியின் “இடியட்” என்ற நாவலை ஒலிப்புத்தகமாகக் கேட்டுவருகிறேன். ரயில் யன்னலோரமாக உட்கார்ந்து, அதன் மிதமான தள்ளாட்டத்தோடு கதைகளை வாசித்து வந்தவனுக்கு மகிழூந்திலே பயணம் செய்யும்போது ஒலிப்புத்தகத்தைக் கேட்பது என்பது புது அனுபவம். முன்னால் செல்லும் வாகனம் பாதை மாறும்போதும், சிக்னல் நிறம்மாறும்போதும், பின்னால் வரும் வாகனத்திலுள்ள பெண் மூக்கு குடையும்போதும் புத்தகத்திலிருந்தான நம்முடைய கவனம் தவறும். புத்தகத்தை வாசிப்பதற்கும் ஒலிப்புத்தகத்தைக் கேட்பதற்கும் பாரிய வித்தியாசம் உண்டு. ஒலிப்புத்தகத்தில் நமக்கும் புத்தகத்துக்குமிடையே வாசிப்பவர் எப்போதுமே விளக்குப்பிடித்துக்கொண்டு நிற்பார். அது வாசகருக்கும் புத்தகத்துக்குமான நெருக்கத்தையும் ஆழமான அமைதியையும் குலைக்கிறது. கூடவே வாசிப்பவரின் வேகத்துக்கும் குரல்மொழிக்கும் நம்முடைய மனவேகம் இயைவாக்கப்படவேண்டும். நாமே வாசிக்கும்போது எங்கோ ஒரு ஆழத்தில் ஒலிக்கின்ற நம்முடைய தனித்த குரல் இங்கே ஒலிக்காது. எழுத்துநடை போன்று ஒவ்வொரு வாசகருக்கும் ஒரு தனித்த நடை உண்டு. வாசகருக்கேயுரிய எள்ளல், சிரிப்பு, ஆண், பெண் முதியவர