Skip to main content

பொப் டிலான்







பொப் டிலானுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

ஆங்கில இசை உலகில் “பாடல் எழுதுவது (song writing)” என்பதன் அர்த்தம் அதன் வரிகளை எழுதி, இசையமைத்து பாடுவது வரை நீளும். இவற்றை வேறுவேறு நபர்கள் சேர்ந்து ஒரு பாடலுக்குச் செய்தால் எல்லோரையும் பாடலாசிரியர்கள்(Song writers) என்று அழைப்பார்கள். அநேகமான சமயங்களில் ஒருவரே எல்லாவற்றையும் செய்வதுமுண்டு. மைக்கல் ஜாக்சன் கூடுதலாக நடன அமைப்பையும் தானே பார்த்துக்கொள்வார். பொப் டிலானும் தானே பாடலை எழுதி இசையமைத்து பாடவும் செய்பவர். பொப் பற்றிய தகவல்களை இணையத்திலேயே பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் இங்கே அவை தேவையற்றவை. 

பொப் டிலான், மைக்கல் ஜாக்சன் போன்றோ, போல் மக்கார்டினி போன்றோ ஒரு தனித்துவ அற்புதக்குரலுக்கு சொந்தக்காரர் என்று சொல்லமுடியாது. ஆனால் அவருடைய பலம் அவர் எழுதும் பாடல் வரிகள். அந்த வரிகளைக் கடத்துவதற்குத் தேவையான இசையை மாத்திரம் பெரும்பாலும் கிட்டாரின் உதவிகொண்டு அவர் நிகழ்த்திவிடுவார். ஐம்பது வருடங்களுக்கு மேலாக இன்னமும் அது நிலைத்து நிற்பதற்கு அவருடைய இந்த எளிமையான minimalist பாணியே காரணம் என்பார்கள். “Music & Lyrics” என்ற திரைப்பட நாயகி கூறுவதுபோல இசை என்பது காம இச்சைபோன்றது. அது நம்மைக் கவரவே பயன்படும். ஆனால் அதற்குமேலே உள்ளார்த்தங்களை அறிந்து நீடித்து நிலைக்க பாடலின் வரிகளே ஆதாரம் ஆகும். இதனை என்னால் இளையராஜாவின் திருவாசகம் கேட்கும்போதே ஆத்மார்த்தமாக உணரமுடிந்தது.

பொப் டிலானுக்கும் எனக்கும் ஒரு பூர்வஜென்ம பந்தம் உண்டு. ஒருவகையின் அவருக்கு நான் நன்றிக்கடனும் பட்டவன். பொப் டிலானுடைய ஒரு கவிதை எங்களுடைய சாதாரண தரத்து ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்தில் இருந்தது. தொண்ணூற்றைந்தாம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னி சென்றதும் ஆங்கில இலக்கியத்தை லிப்கொ அகராதி உதவியுடன் படிக்கவேண்டிய சூழ்நிலை. அப்போது குறிப்பிட்ட ஒரு கவிதை சார்ந்த கேள்வி பரீட்சைக்கு வரவேண்டுமென்று நான் நேர்த்திக்கடன் வைத்திருந்தேன். காரணம் அந்தக்கவிதையை வெறுமனே பாடத்திட்டம் என்பதையும் தாண்டி நடைமுறை வாழ்வோடு தொடர்புபடுத்தலாம். பலமுறை வாசிக்கும்போது அதன் உள்ளர்த்தம் எங்கேயோ ஒரு மூலையில் சிறு சலனத்தை நிகழ்த்தியே செல்லும்.  அதுவும் பதினாறு வயது இளைஞனுக்கு நிகழ்த்தியது. நான் விரும்பியதுபோலவே கவிதை சார்ந்த கேள்வி பரீட்சைக்கு வந்தது. என்னைப் பாஸ் பண்ண வைத்தது. அந்தக்கவிதை பொப் டிலான் எழுதிய “Blowing In The Wind”

எனக்கு அப்போது பொப் டிலான் ஒரு பாடகர் என்பதெல்லாம் தெரியாது. ஆன் ரணசிங்க, ரொபேர்ட் புரோஸ்ட்மாதிரி தனிக் கவிஞர் என்றே நினைத்திருந்தேன். இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது நம்முடைய சாதாரண தரத்து ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தை. பொப் டிலான், ரொபேர்ட் புரோஸ்ட் போன்றோரின் கவிதைகள், "The Sacred Land", "Madam Curie" போன்ற அற்புத கட்டுரைகள், Necklace என்று சிறுகதை இலக்கியத்தின் வரைவிலக்கணம் என்று சொல்லக்கூடிய கதை, மடல் டூவா, சுவாமி அண்ட் பிரண்ட்ஸ் போன்ற நாவல்கள் என்று அந்தப் பாடத்திட்டம் பல நூற்றாண்டு இலக்கியங்களை சிறப்பாகக் கோடிகாட்டியது. ஆங்கில இலக்கியங்களை மேலும் மேலும் வாசிக்கத் தூண்டியதும் அதுவே. ஆனால் நம் தமிழ் இலக்கியப் பாடத்திட்டம் பெரும்பாலும் பழந்தமிழ் இலக்கியங்களோடும் மரபுக் கவிதைகளோடும் தன்னை மட்டுப்படுத்திக்கொண்டது மகா சோகம். செல்லம்மாளும், மரையாம் மொக்குவும் நிச்சயம் தமிழிலக்கிய பாடத்திட்டத்தில் இருந்திருக்கவேண்டாமா?

பாடல் வரிகள் இலக்கியம் ஆகா என்கின்ற ஒரு விமர்சனப்போக்கு நம்மில் பலருக்கு இருக்கிறது. பொப் டிலானுக்குக் கிடைத்த இந்தப்பரிசு அந்த எண்ணத்தை அவர்கள் மீள் பரிசீலனை செய்ய உதவட்டும்.

இப்போது பொப் டிலானின் கவிதை.

Blowin' in the Wind
How many roads must a man walk down
Before you call him a man?
How many seas must a white dove sail
Before she sleeps in the sand?
Yes, and how many times must the cannon balls fly
Before they're forever banned?
The answer, my friend, is blowin' in the wind
The answer is blowin' in the wind
Yes, and how many years can a mountain exist
Before it's washed to the sea?
Yes, and how many years can some people exist
Before they're allowed to be free?
Yes, and how many times can a man turn his head
And pretend that he just doesn't see?
The answer, my friend, is blowin' in the wind
The answer is blowin' in the wind
Yes, and how many times must a man look up
Before he can see the sky?
Yes, and how many ears must one man have
Before he can hear people cry?
Yes, and how many deaths will it take 'till he knows
That too many people have died?
The answer, my friend, is blowin' in the wind
The answer is blowin' in the wind




Comments

  1. நண்பரே.. பொப் டிலானின் அந்தப் பாடலையும் மொழி பெயர்த்துப் பதிவிட்டிருந்தால் மகிழ்ந்திருப்பேன்... படித்துக் கேட்டு புரிந்து கொள்ள முடிகிறது.. ஆனால் பாடலை முழுமையாக உள்வாங்கிக் கொண்டேனா என்பது சந்தேமே.. முடிந்தால் மொழியெர்த்துக் தாருங்கள். நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட