கறுப்பின விடுதலைக்கான ஒரு போராளி. போராட்டத்தின் வடிவங்களை, கொள்கைகளை காலத்துகேற்ப மாற்றிய யதார்த்தவாதி. கம்யூனிசம், ஜனநாயகம், இனவாதம், பல்லினவாதம் என்று எல்லாமே இவர் வாழ்க்கையில், காலத்துக்காலம் வந்து போனது. இறுதியில் ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை வைத்து பயிற்சியும் எடுத்து சிறைக்கு சென்றார். இருபத்தேழு வருடங்கள் சிறைவாசம். அப்போதும் கூட ஆயுதப்போராட்டமே முன்னிலைப்படுத்தப்பட்டது. 2008ம் ஆண்டுவரை அமெரிக்க தீவிரவாத பட்டியலில் அவர் இருந்தாராம்.ஆனால் எழுபதுகளில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் அனைவருமே கைதுசெய்யப்பட நிலைமை மாறியது. போராட ஆட்கள் இல்லை. சிறையில் ஒத்துழையாமை நிகழ்ந்தாலும் அது பெரிதாக வெள்ளை ஆட்சியாளரை பாதிக்கவில்லை. ஆனால் இவர்களை சிறைவைத்ததால் போராட்டம் சர்வதேசமயப்படுத்தப்பட்டது. உலகம் இப்பொழுது போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்டது.