Skip to main content

என் கொல்லைப்புறத்து காதலிகள் : சச்சின் & சச்சின் & சச்சின் & …

 

sachin-tendulkar-when-young

சனிக்கிழமை காலை பாணும் சம்பலும் இறக்கியபிறகு சரியாக ஒன்பது மணிக்கு ஆட்டம் ஆரம்பிக்கிறது.

வெட்டிக்கிடந்த வாழைமரத்தின்  அடித்தடலை எடுத்து, இரண்டு அடுக்கு சரிக்கட்டி, இரண்டு கால்களிலும் முழங்கால் வரைக்கும் வைத்து கட்டுவேன்.  இன்னொரு தடலை சின்னனா வெட்டி காற்சட்டையின் ஒருபக்கம் செருகினால் அது சைட் பாட். கயர் ஊறி, தோய்க்கும்போது அம்மா திட்டுவார் என்று தெரியும். அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம். போல் கார்ட் என்ற விஷயம் இருப்பது அந்த வயதில் தெரியாது. அப்பா அந்தக்காலத்தில யமாகா-350 மோட்டர்சைக்கிள் வச்சிருந்தவர். அதிண்ட பிஞ்சுபோன ஹெல்மட்டை எடுத்து தலையில் மாட்டி, பட்டி இழுத்து டைட் பண்ணியாயிற்று. லக்ஸ்பிறே பை இரண்டை கொளுவினால் கிளவ்ஸ். பிரவுன் கலருக்கு மாறியிருந்த பழைய லேஸ் தொலைந்த டெனிஸ் ஷூவை, கரப்பான் கலைத்து, போட்டுக்கொண்டு, தென்னைமட்டையில் சரிக்கட்டின பேட்டை கையில் தூக்கினால், ஐயா ரெடி.

இன்னிங்க்ஸ் ஆரம்பித்துவிட்டது. வீட்டு சன்ஹூட் படியில ஜம்மென்று ஹீரோ குந்தியிருக்கிறார்.

மூன்று விக்கட்டுகள் டவுன். அடுத்தது தலைவர். இரண்டுகால்களையும் ஸ்ட்ரெச் பண்ணியபடி முற்றத்துக்குள் இறங்கும்போது கிரவுண்ட் பூரா ஒரே சத்தம். சூரியனை பார்த்து கும்பிட்டுக்கொண்டே கேட்டடில போய் நின்று அம்பயர் லெக்ஸ்டொம் கேட்டு சுற்றும் முற்றும் திரும்பிப்பார்க்க வேண்டும். “அந்த ஏரியா”வில் கைவைத்து கொஞ்சம் மேலே இழுத்து விடவேண்டும். பின்னர் ஸ்டாண்ட் எடுத்து ரெடியாகியாச்சு.

தேசிக்காய் மரத்தடி முனையில் இருந்து பந்து போட அப்துல் காதர் தயார். அவன் பந்தை அரியண்டத்துக்கு நக்குவான். பந்தை கைகளால் அப்படி எந்தி எந்தி வந்து போட .. போடுவதாக நினைத்துக்கொண்டு தயாராக வைத்திருந்த சல்லிக்கல்லை எடுத்து கொஞ்சம் தூக்கிப்போட, அது ஒரு கூக்ளி! கண்கள் பிரகாசிக்கிறது. தடாலென்று டவுன் த ட்ராக் சார்ஞ் பண்ணி வந்து அந்தக்கல்லுக்கு ஓங்கி ஒரு அடி. சர்ர்ர்ர் என்று சன்ஹூட் தாண்டி, எழுமிச்ச மரம் தாண்டி, கிணற்றடி அன்னமுன்னா மரம் தாண்டி, சீமை கிழுவைக்குள்ளாள போயி முன்வீட்டு கமலராணி அக்காவீட்டு ஒட்டு கூரையில விழுந்து,

டக், டன், டிக், டின், டிங், டக் என்று பந்து ஒவ்வொரு ஓடாக உருண்டு உருண்டு உருண்டு ஒரு இடத்தில் செருகிநிற்கிறது.

அடுத்த கல்லு புரக்டர் வளவுக்குள். இடையில் ஒரு பந்தை ஸ்டைலாக புளோக் பண்ண அது ரோசா சாடிக்குள். நான்காவது சிக்ஸர் நம்வீட்டு புகைக்கூண்டுக்குள், அம்மாவிடம் இருந்து “டேய் கல்லு விளையாடாத” சத்தம் கேட்கும்.  அம்மா கிடக்கிறா. அடுத்த அடி கவர்ஸுக்கும் நொட்டிட்டு ஒரு சிங்கிள் எடுக்க ஐம்பது ஓட்டங்கள். பெருமிதமாக பூங்கன்று சுற்றுவட்டார மரத்தையல்லாம் பார்க்க, கரகோஷம் வானை பிளக்கும்.

ஸ்ட்ரைட் டிரைவ் எழுமிச்சையடி, பொயிண்ட் மாமரம், லெக்கிளான்ஸ் குருமணல் கும்பி, மிட் ஒன் வாழையடி என்று கல்லுகள் நாலாபக்கமும் விளாசியடிக்கப்பட இன்னிங்க்ஸ் முன்னேறிக்கொண்டே இருக்கும். நூறு இருநூறு, முன்னூறு நானூறு எல்லாம் அடித்திருக்கிறார். மத்தியானத்துக்குள் மனசு வைத்தால் தான் அவுட் ஆவார். அதுவும் கல்லை தூக்கிப்போடும்போது மூன்றாவது தடவையும் அடி படாமல் மிஸ் பண்ணினால் தான். ஆட்டம் இழந்து மீண்டும் வீட்டுக்குள் போகும்போது மீண்டும் கூட்டம் ஏகஸ்தாயியில் ஒரே பெயரை உச்சரிக்கும்.

சச்சின் … சச்சின் … சச்சின் …. சச்சின் … சச்சின்

**********

சச்சின். பெயரைக்கேட்டாலே ஒரு இளமை பீறிடும். “சச்சின் எண்டு ஒரு பெடியன், பதினாறு வயசிலேயே டீமுக்கு எடுபட்டிருக்கிறான்” என்று அண்ணா முதன்முதலில் அறிமுகப்படுத்தியபோது எனக்கு ஒன்பது வயது. இந்தியன் ஆர்மி யாழ்ப்பாணத்தில இருந்த டைம். கரண்ட் வந்துகொண்டிருந்தது. தூர்தர்ஷனில் அந்த பாகிஸ்தான் சீரிஸ் பார்த்த ஞாபகம் இன்னமும் சன்னமாய் இருக்கிறது. சஞ்ரே மன்ஜ்ரேகார் கலக்கிய சீரிஸ் அது. ஆனால் பெயர் என்னவோ சச்சின் தான். இவ்வளவு சின்னபையன் இம்ரான், வாசிம், வக்கார் என்ற புயல்களை சமாளிப்பானா? என்ற டவுட். ஆனால் தல இரண்டாவது ஆட்டத்திலேயே ஐம்பது அடித்தது.

92 உலககிண்ண டைம். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் எமக்கு கிரிக்கட் என்றால் அது உதயனும் ஸ்போர்ட்ஸ் ஸ்டாரும் தான். உதயனில் முன் பக்கத்தில் அணிகளின் நிலவரம் அட்டவணையாக வந்துகொண்டிருந்தது. நியூசிலாந்தும் இங்கிலாந்தும் முதல் இரண்டு இடத்தில் இருந்தன. அரையிறுதி நகைச்சுவை எல்லாம் அரங்கேறி இறுதியில் எங்கிருந்தோ வந்த பாகிஸ்தான் கடைசியில் கிண்ணத்தை வென்றது. அந்த சமயம் தலயின் முழுப்படம் ஒன்று டார்க் ப்ளு ஜெர்சியில் வெளிவந்தது. பட்டோடு சாய்ந்துகொண்டு ஒயிலாக நிற்கும் கிளாஸ் படம். என்வீட்டு புத்தக அலுமாரியில் ஒட்டி வைத்திருந்தேன்.

SACHIN_TENDULKAR_11208g

தொண்ணூறுகளில் கிரிக்கட் என்றால் எங்கள் மொத்த குடும்பமும் இந்தியா இந்தியா என்று அலறும். சாமியறையில் இருந்து ஹோல், கொரிடோர், குசினி வரைக்கும் அண்ணா ரன்அப் எடுத்து “கபில்தேவ் போலிங் ஓவர் த விக்கட்” என்றபடி வேகமாக ஓடிப்போய், குசினுக்கு முன்னாலே நின்று அக்சன் கொம்பிளீட் பண்ணிவிட்டு தான் பின்னாலே பாத்ரூம் போவார். உதயன் பேப்பர் வாங்கிவரும்போது, அதை உருட்டி குழாய் ஆக்கிவிட்டு இரண்டு ஸ்ட்ரைட் டிரைவ் அடிக்காவிட்டால் தூக்கம் வராது. சந்தைக்கு போகும்போது பாக்கை சும்மா விசுக்கி அடிப்பது, CR கொப்பியால் டிரைவ் அடிப்பது, மரத்தில் கிடக்கும் தேசிக்காய் எல்லாத்தையும் எடுத்து ஸ்பின் போல் போடுவது, என்று ஒவ்வொரு விஷயம் செய்யும்போது அடிமனதில் சச்சின் என்ற நினைப்பே இருக்கும். சச்சின் இல்லாமல் எங்களுக்கு கிரிக்கட் இல்லை. ஏன் விளையாட்டே இல்லை.

எப்போதுமே இலங்கை அணியை எங்களுக்கு கண்ணிலே காட்டக்கூடாது. அதுவும் அக்காமார்கள் எல்லாம் யாராவது இலங்கை அணிக்கு சப்போர்ட் பண்ணினால் செருப்பால் அடிப்பார்கள். அரவிந்தா நல்ல பாட்ஸ்மேன் என்றால் அடிவிழும். அவ்வளவு கோபம். ஒருமுறை கபில் தலைமையில் இலங்கை வந்தபொது, இலங்கை இந்தியாவை அலாப்பி வென்றது. சும்மா சும்மா காலில படாமலேயே எல்பி குடுப்பாங்கள். போகும்போது கபில், நியூட்றல் அம்பயர் இல்லாதவரைக்கும் இலங்கையை இலங்கையில் வெல்லவே முடியாது என்று சொல்லிவிட்டு போனார். அது விளையாட்டுக்கு மட்டும் உண்மை இல்லை, எல்லா விஷயத்திலும் தான் என்பது புரிய இருபது வருடங்கள் பிடித்தது! எங்கள் வீடு என்றில்லை. யாழ்ப்பாணத்தில் அனேக குடும்பங்களின் ஆதர்ச அணியும் இந்தியா தான். சோகம் என்னவென்றால் ஒருமுறை இந்தியா பாகிஸ்தான் மட்சில் இந்தியா தோற்றுவிட, எங்கே தமிழர்கள் இந்தியர்களின் தோல்வியை கொண்டாடுவார்களோ என்ற கடுப்பில் இந்தியன் ஆர்மி பலாலியில் இருந்து குடியிருப்புகளை நோக்கி செல் அடிக்க தொடங்கியது! அதில கூட யாரோ ரெண்டு மூண்டு பேரு செத்துப்போயிற்றினம்.

sachin95ம் ஆண்டு இடம்பெயர்வுவோடு இரண்டு வருடங்கள் வன்னிவாசம். அங்கே தான் 96ம் ஆண்டு உலக கிண்ணம் ஆரம்பிக்கிறது.  “அண்ணே எப்பிடியும் பாத்திடோணும்” என்று சுபாகரன் அண்ணாவிடம் சொல்ல அவர் ஒரு பிளான் போட்டார். வட்டக்கச்சில் நாமிருந்தவீட்டில் இரண்டு மிஷின்கள்(டிராக்டர்கள்) நின்றன. இடம்பெயர்ந்தபோது சுபாகரன் அண்ணே மறக்காம கொண்டுவந்த 12 இன்ச் கறுப்பு வெள்ளை டிவியும் இருந்தது. பழுதாய்ப்போய் கிடந்த அதை திருத்தி, நாமே அண்டனா சரிக்கட்டி, தடி கட்டி மிஷின் கொட்டிலுக்கு மேலே உயர்த்தி, மூன்று மூலைகளில் இழுத்துக்கட்டினால் சன்னமாக தூர்தர்ஷனில் ஒரு பழையபடம் போனது. “பிச்சுவா பக்கிரி கச்சிதமா அலுவல முடிப்பான்” என்று ஒருத்தன் சொல்லியபடி இருந்தான். பகல் என்றால் படம் கிளியர் ஆக தெரியாது. இரவில் பனி ஏற ஏற கிளியர் கிடைக்கும். அன்ரனா எந்நேரமும் திருப்பிக்கொண்டு இருக்கவேண்டும். ஒரு சின்ன அணுக்கம் என்றாலும் குழம்பிவிடும். இப்படியெல்லாம் செட் பண்ணி, மிஷின் போனட்டுக்கு மேலே டிவியை வைத்து தயார் பண்ணினால் மொத்த வட்டக்கச்சியும் கிரிக்கட் பார்க்க கூடியது. நானும் சுபாகரன் அண்ணாவும் படம் காட்டும் ஹீரோக்கள் ஆனோம். அதற்குள் வேறுபல சீன்களும் போனது. வேண்டாம்.

காலிறுதியில் பாகிஸ்தானை துவம்சம் பண்ணியாயிற்று. அரையிறுதி, என்னதான் நடுப்பிட்சில் நின்று ஜெயசூர்யா குரோஸ்பட்டோடு சுழன்றாலும், ஒரு சச்சினுக்கு முன்னே அதெல்லாம் சாதாரணம். சனத், களு, குருசிங்க எல்லாம் மார்ச்பாஸ்டில் பவிலியன் திரும்பியதால் சந்தோசம். இலங்கை அவ்வளவு அடிக்கவில்லை. சச்சின் இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கிறது. மரண அடி. மன்ஜ்ரேகாரும் சச்சினும் நின்று நிதானமாக விளையாடுகிறார்கள். தல ஐம்பது அடித்துவிட்டது. நான் ஒரு நெல்லுமூட்டையில் சாய்ந்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறேன். பாத்ரூம் வந்து ஒரு மணிநேரம் ஆகிவிட்டிருந்தது. ஆனால் எழுந்தால் விக்கட் விழுமோ என்ற பயத்தில் கம்மென்று அடக்கியபடி இருந்தேன். ஒரு கட்டத்தில் இதற்குமேல் இருந்தால் நெல்லுமூட்டை நாசமாக போகும் என்று தோன்றியதால், அவசரமாக எழுந்து ஓடினேன். மாட்டுக்கொட்டில் பக்கம் போய் மாட்டர் பண்ணிக்கொண்டு இருக்கும்போதுதான், “ஓ” என்று ஒரு முப்பது பெருமூச்சுகளும் “சிக்” என்று இன்னொரு இருபதும் ஏகசமயத்தில் மிஷின் கொட்டிலுக்குள் இருந்து வெளிவர ஒழுங்காக சிப்பை கூட இழுக்காமல் உள்ளே திரும்பி ஓடினேன். சிவப்பு விளக்கு எரிந்து சச்சின் ரன் அவுட்டில் ஆட்டமிழந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார். கண்டறியாத தேர்ட் அம்ப்யரால் வந்தவினை. சரி என்ன இப்ப. இரண்டு விக்கட் தானே. அசார், ஜடேஜா, கம்பிளி எல்லாம் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கைகள் தகர்ந்து, 120 ஓட்டங்களுக்கு இந்திய அணி கொட்டிண்டு போக, கல்கத்தாகாரர் ஸ்டேடியத்தை எரித்ததும், கம்பிளி அழுதுகொண்டு போனதும் இன்னமும் ஞாபகம் இருக்கிறது.

96 உலக கிண்ணத்துக்கு பின்னர் வந்த ஈழத்து தலைமுறைகள் இலங்கை அணியை ரசிக்கதொடங்கியதை ஒருவித பதட்டத்துடன் பார்க்கவேண்டியிருக்கிறது. அரசியலையும் விளையாட்டையும் போட்டு குழப்பவேண்டாம் என்ற பக்குவத்தையும் கூடவே அந்த தலைமுறை எமக்கு பாலபாடம் எடுப்பார்கள். இந்தியா செய்யாததா? என்று, இலங்கை இன்றைக்கு இங்கிலாந்தின் மனிதஉரிமை மீறல்களை தட்டிக்கேட்பது போல கேட்பார்கள். விளையாட்டு வெறும் விளையாட்டு அல்ல. அது அரசியலுக்கான ஒருவித தளமே. தென்னாபிரிக்க, சிம்பாப்வே நாடுகளில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்காக அந்த நாடுகளை தடை செய்ததும் புறக்கணித்ததும் நடந்தது. சிம்பாப்வேயில் இருக்கும் வெள்ளை இனத்தினர் அந்த அணியை பின்பற்றுவார்களா என்பது சந்தேகமே. நாடுகளும், அரசியல்வாதிகளும் ஏன் விளையாட்டுவீரர்களும் கூட அரசியலை விளையாடுக்கூடாக பயன்படுத்துவார்கள். விளையாட்டுவீரர்கள் இளைஞர்களின் ரோல் மொடலாக சிறுவயதில் இருப்பதால் விளையாடுவீரர்களின் பால் இருக்கும் அபிமானம், அந்த அணி, நாடு என்று முன்னேறும். அவர்கள் என்ன சொன்னாலும் கேட்க தொடங்குவோம். அது தெரிந்தே முரளியை இலங்கை அரசாங்கம் புத்திசாலித்தனமாக பயன்படுத்துகிறது. அதில் இரண்டு சிறுவர்கள் எடுபட்டால் கூட அவர்களுக்கு வெற்றி தான். அன்றைக்கு ஒருநாள் “எங்கள் நாட்டு அணியை நாங்கள் சப்போர்ட் பண்ணாமல் யார் பண்ணுவது” என்று ஒரு பெடியன் கேட்டான். ஆச்சர்யமாக பார்த்தேன். இலங்கை எங்கள் நாடு என்று மனதார பெருமையாக நினைக்கும் எந்தக்கணமும் எனக்கு எப்போதாவது வாய்த்ததாக ஞாபகம் இல்லை. புதிய தலைமுறை அப்படி நினைக்கிறது. அது சரியா தவறா என்று சொல்லதெரியவில்லை. தேவையும் இல்லை. இதுதான் நியதி என்றால் அது நிகழ்ந்தே தீரும். யாரும் யாரையும் தடுக்கமுடியாது.

***************

97, 98, 99, 2000 காலப்பகுதி, சச்சினின் பொற்காலம். சிம்பாப்வேயோடு ஒரு ஆட்டம். ஹென்றி ஒலங்கா என்று ஒரு நூடில்ஸ் தலையன். சச்சினை இரண்டு மூன்று பவுன்சர்கள் போட்டு திணற அடிப்பான். இறுதியில் சச்சின் பத்தோ பதினைந்தில் ஆட்டமிழந்துவிட எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி. என்னடா இது ஒரு சிம்பாப்வேகாரனுக்கு நம்ம தல திணறுவதா? விசர் பிடித்தது. இரண்டு நாளில் இறுதியாட்டம். கங்குலி தான் காப்பாற்றவேண்டும் என்று நினைத்துக்கொண்டோம். ஆட்டமும் வந்தது. டிவிக்கு முன்னால் நாங்கள். அம்மா வெள்ளனையே புட்டு அவித்து வைத்துவிட்டு ஈஸிசெயாரை பிடித்துவிட்டார். நாங்கள் ஐந்தடி முன்னே டிவிக்கு நெருக்கமாக இருந்து பார்க்கிறோம்.

முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே 194 ஆட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தது. இப்போது இருபெரும் தலைகளும் களத்தின் இறங்குகிறார்கள். நூடில்ஸ் தலையன் போடுறான், போடுறான், எப்பிடிப்போட்டாலும் அடி இடி என இறங்கியது. நாங்களெல்லாம் சச்சின் சச்சின் என்று டிவி முன்னாலே நின்று அலறுகிறோம். சச்சினின் ஒவ்வொரு அடியிலும் ஒரு கோபம் தெரியும். “மவனே எனக்காடா விளையாட்டு காட்டுற” என்ற ஒர்மத்தில் அடித்த அடிகளில் அந்த கிரிக்கட் பந்து பாடாய் படும். மறக்கமுடியாத ஆட்டம் அது. சச்சின் செஞ்சரி அடித்து, கங்குலி அறுபத்து சொச்சம் அடித்து பத்துவிக்கட்டுகளால் இந்தியா கிண்ணத்தை வென்றது. ஒருமுறை டாக்காவிலும், இந்தியா பாகிஸ்தான் பைனல். பாகிஸ்தான் 314 அடித்துவிட்டது. தல வந்து ஐந்தாறு ஓவர்கள் சதிராடிவிட்டு போய்விட, அப்புறமாக கங்குலியும் ராபின்சிங்கும் நின்று விளையாடி சேஸ் பண்ணினார்கள்.

அப்போது சார்ஜாவில் அடிக்கடி கிரிக்கட் நடக்கும். அனேகமா பாகிஸ்தானும் இந்தியாவும் இன்னொரு துக்கடா அணியும் விளையாடும். சிலநேரங்களில் அவுஸ்திரேலியா போன்ற சிறந்த அணிகளும் வருவதுண்டு. சச்சின் பாகிஸ்தான், சச்சின் அவுஸ்திரேலியா ஆட்டங்கள் சுவாரசியமானவை. சச்சின் ஷேன் வோர்னை துவம்சம் செய்த ஆட்டங்கள் பிரபலமானது. அப்போது சச்சின் களத்தில் இருக்கும்வரைக்கும் தான் இந்திய அணி வெல்லும் வாய்ப்பு இருக்கும். சச்சின் ஆட்டமிழந்தால், அடுத்து பத்துரன்கள் அடிக்க இருந்தாலும் கூட இந்தியா டென்சனில் துவண்டு தோற்றுவிடும். அப்படி தோற்ற ஆட்டம் தான் 99 இல் சென்னையில் நிகழ்ந்த இந்தியா பாகிஸ்தான் ஆசியக்கிண்ண டெஸ்ட் மாட்ச்.

நான்காம் நாள் ஆட்டம். வெல்லுவதற்கு 271 ஓட்டங்கள். 82 ஓட்டத்துக்கு ஐந்து விக்கட்டுகள் போய்விட்டது. ஆனால் சச்சின் களத்தில் நிற்கிறார். நல்லூர் முருகனுக்கு பல நேர்த்திகளோடு டைனமோ சைக்கிளில் மிதி மிதி என்று மிதிக்கிறேன். அப்போது யாழப்பாணத்தில் இரவில் தான் துளி துளியாக கரண்ட் வரும். பகலில் டிவி பார்ப்பது என்றால் டைனமோவில் சுற்றிப்பார்க்கும் பிளக் அண்ட் வைட் டிவி தான். சச்சினும் மொங்கியாவும் பார்ட்னர்ஷிப். 218 ஓட்டம் இருக்கையில் மோங்கியா ஆட்டமிழக்க ஸ்டில் சச்சின் களத்தில். பரபரவென்று மிதிக்கிறேன். அன்றைக்கு ஞாயிற்றுகிழமை. டியூஷன் எல்லாம் கட். வெல்லுவதற்கு வெறும் பதினேழு ஓட்டங்களே இருக்கும் நிலையில் சச்சின் ஆட்டமிழக்க, பின்னால் வந்த மூன்று எருமைகளும் வாசிம் அக்ரமை பார்த்து மிரள,  அடுத்த நான்கு ஓட்டங்களில் இந்தியா ஆட்டமிழந்துவிட்டது. எ ட்ராஜடி.

சச்சின் இருபத்திரண்டு வயதில் தன்னை விட ஏழு வயது மூத்தவரான அஞ்சலியை திருமணம் முடித்தது பரப்பரப்பாக பேசப்பட்டது. விஷயம் என்னவென்றால் பதினேழு வயதிலேயே இருவரும் சந்தித்திருக்கிறார்கள். அந்தகாலத்தில் வயது போன பெண்களை சைட் அடித்த அண்ணைமார்களுக்கெல்லாம் சச்சின் தான் ரோல்மொடல். இதைசொல்லியே நிறைய அன்ரிமாரி மடக்க ட்ரை பண்ணியிருக்கிறீனம். ஆனா நம்ம ஊரில, அப்பிடி நடக்க இவையள் சச்சினும் இல்ல. அவையள் அஞ்சலியும் இல்ல!

தொண்ணூறுகளில் வரும் சச்சினின் விளம்பரபடங்களில் ஒருவித கியூட்னஸ் இருக்கும். இளைஞர்களை கவருவது என்று சொல்லிக்கொண்டு நடிகைகளை சொறிஞ்சுகொண்டு சச்சின் நடிக்கமாட்டார். பெரும்பாலும் சிறுவர்களோடு தான் சேர்ந்து நடிப்பார். ஷாருக்கானோடு சேர்ந்து நடித்த பெப்ஸி விளம்பரங்கள் அந்நாளில் பிரபலம். “ஓ சச்சின் வந்தாரய்யா, ஓ சச்சின் வந்தாரய்யா.. மனதை தந்தேனய்யா” என்ற பாடல் எமக்கு தேசிய கீதம். யூடியூபில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. ஆனால் இது கிடைத்தது.

************

2000ம் ஆண்டுகளில் சச்சினின் ஆட்டத்தில் கூடுதல் பொறுப்பு சேர்ந்துகொண்டது. Calculated Aggression வந்தது. நல்ல பல திறமையான வீரர்கள் அணியில் வந்ததால் டென்ஷனும் குறைந்தது. கிரிக்கட்டின் கடவுளான சச்சின், கடவுள்களின் கடவுளாக மாறிய தொடர் தான் 2003 உலககிண்ண தொடர். அதுவும் அந்த காடிக்குக்கு எதிரான சிக்ஸர். எவன் மறப்பான்?

அந்த ஓவரின் முதல் போல் டொட் போல். இரண்டாவது பந்து ஓவர் பிட்ச்சாக போட்ட ஒரு ஹால்ப்வொலி. அதற்கு எக்ஸ்ட்ரா கவருக்குள் சச்சினின் ட்ரேட்மார்க் செக் டிரைவ் அடிக்கு பவுண்டரி கிடைத்தது. இதுவரைக்கும் ஓகே.  அடுத்த பந்து. காடிக் அந்த பந்தை ஷோர்ட் ஒப் த லென்த் தான் போடுவார் என்று சச்சின் கணிக்க, காடிக்கும் அப்படியே போட,  தல பக்புட்டில் நின்று முன்காலை ஒப் ஸ்டம்புக்கு வெளியே வைத்து அடிச்சுது ஒரு புள் ஷோட். சோய்ங்ங்ங்… என்று பந்து பறந்து ஸ்டேடியம் தாண்டிப்போய் தொலைந்துபோனது. நான், எழில், அனுசன், கஜன், ஆதவன் எல்லாம் ஏக நேரத்தில் எம்பிக்குதித்தோம். மறக்கமுடியாத அடி அது. இன்றைக்கும் யூடியூபில் அடிக்கடி அந்த ஷோட்டை பார்ப்பதுண்டு.

அது ஒரு ஷோட் தான். ஆனால் நாங்கள் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் படித்தபோது ஒரு இன்னிங்சையே ஒரிஜினல் டிவிடி வாங்கி தேய தேய பார்த்துகொண்டிருந்தோம். அது வேறொன்றுமில்லை. அதே 2003 உலககிண்ணத்தில் இடம்பெற்ற இந்தியா பாகிஸ்தான் ஆட்டம். சச்சின் ருத்ரதாண்டவம் ஆடிய ஆட்டம் அது.

வாசிம், வக்கார், அக்தர், ரசாக் என்று பாகிஸ்தான் அணி முழுக்க ஏவுகணை பந்துவீச்சாளர்கள். முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 273 ரன்கள் அடிக்க எமக்கெல்லாம் கலக்கம். சேஸ் பண்ணுவது சிரமமாயிற்றே. இவங்கள் வேறு உயிரைக்கொடுத்து பந்து போடுவாங்களே. அதுவும் சோயிப் அக்தர், இடம் கிடைத்தால்,  கிரவுண்டுக்கு வெளியே நின்று கூட ரன்அப் எடுத்து ஓடிவருவான். செம நடுக்கம். ஆளாளுக்கு அசையாமல் உயிரை கையில்பிடித்தபடி பார்த்துக்கொண்டிருக்க …. தல இறங்குகிறது.

வழமையாக ஒபினாக இறங்கும்போது சச்சின் முதல் ஸ்ட்ரைக் எடுப்பதில்லை. அம்பயர் பக்கம் போய்நின்று விடுவார். கங்குலி கூட இதை பேட்டி ஒன்றில்  சொல்லியிருப்பார். ஆனால் இந்த ஆட்டத்தில் தல நேரே ஸ்ட்ரைக் எடுக்கப் போய் நின்றது. அது எங்களுக்கு புதுசு. முதல் பந்து டொட். இரண்டாம் பந்து டொட். மூன்றாம் பந்து போயிண்டுக்குல்லால் சீறியது. அடுத்த ஓவர் அண்ணர் ஷோயிப் அக்தர். வழமை போல இரண்டு வைட் அது இது என்று மூன்று போல் போட்டுவிட்டார். நான்காவது போல்,  ஒப்ஸ்டோம்புக்கு வெளியே பவுண்ஸர். சீறிக்கொண்டு வந்தது. வந்தவேகத்துக்கு தல பட்டை கைட் பண்ணி விளாச, பந்து தேர்ட்மானுக்கு மேலாக பறந்துபோய் ஸ்டேடியத்துக்குள் விழுந்தது. அக்தர் கடுப்பாயிட்டாப்ள. அடுத்த பந்து, மிடில் அண்ட் லெக், தலய எல்பிடபிள்யூ ஆக்கும் ஐடியா. ஆனால் நடந்தோ சச்சினின் ஆஸ்தான பிஃளிக். சர்ரென்று ஸ்குயார்லெக் பவுண்டரி. அக்தர் முகத்தில் ஈயாடவில்லை. இறுதிப்பந்து, கிளாஸ் போல். இன் லைன். சரியான லென்த். ஆனால் சச்சின் அன்றைக்கு சச்சினாக விளையாடிக்கொண்டிருந்தது பாகிஸ்தானின் துரதிர்ஷ்டம். டிபிகல் செக் டிரைவ். ஸ்ட்ரைட். மிட்ஒன் காரன் கலைத்து களைத்துப்போனான். 6, 4, 4. பாகிஸ்தான் தோல்வி வாசிமின் முகத்தில் அப்போதே தெரிந்தது.

எனக்கு அந்த ஆட்டத்தில் பிடித்த இன்னொரு அடி, எட்டாவது ஓவர் முதல் பந்தில் சச்சின் அடித்த இன்னொரு எக்ஸ்ட்ரா கவர் பக்புட் செக் டிரைவ். அடிச்சிட்டு அப்படியே ஒரு ரெண்டு செக்கன்கள் போட்டோபோஸ் குடுத்து நின்றது இன்னமும் கண்களுக்குள் இருக்கிறது….

எங்கிருந்து வந்தாயடா? எமைப்பாடு படுத்த … நீ .. எமைப்பாடு படுத்த?

அன்றைக்கு சச்சின் ஐம்பது அடித்தபோது பொதுவாக congratulations என்று சொல்லும் வர்ணனையாளர், இப்படி சொன்னார்.

“Thank you Sachin for the entertainment”

சச்சினின் பல இன்னிங்க்ஸ் அப்படிப்பட்டவை. ஆனால் ஒரு வித்தியாசமான டெஸ்ட் இன்னிங்க்ஸ் ஒன்றும் இருக்கிறது. அது தான் சிட்னியில் அவர் அடித்த 241. அந்த தொடர் முழுதும் இந்தியா பிரகாசித்தாலும், சச்சின் அடிக்கடி அவுட்சைட் ஒப்ஸ்டம்பில், கீப்பரிடமோ, இல்லை ஸ்லிப், கலியிடமோ பிடிகொடுத்து ஆட்டமிழந்துகொண்டிருந்தார். ஆக சிட்னியில் ஒரு முடிவு எடுத்தார். “மவனே நீ எப்படி வெளியே போட்டாலும் நான் அடிக்கமாட்டேன். என்னை அவுட் ஆக்கவேண்டுமேன்றால் ஸ்ட்ரைட் ஆக பந்துவீசு” என்ற சொன்ன ஆட்டம் அது. ஆஸிக்காரரும் என்னவெல்லாம் ட்ரை பண்ணிப்பார்த்தார்கள். ஐம்பது, நூறு, நூற்றைம்பது, இருநூறு தாண்டியும் சச்சின் வெளியே போன பந்தில் கைவைக்கவில்லை. இறுதிவரைக்கும் சச்சினை அந்த இன்னிங்க்ஸில் ஆட்டமிழக்க வைக்கமுடியவில்லை. டெஸ்ட் கிரிக்கட்டை ட்வென்டி ட்வென்டி போன்று விளையாடி, மூன்று நாட்களில் ஆட்டமிழந்து, அதன் அழகியலை குறைக்கும் ஒரு தலைமுறைக்கு மத்தியில், determination என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள சச்சினின் அந்த ஆட்டம் பார்க்கவேண்டிய ஒன்று.

sachin_tendulkar_2732720b

சென்னையில் அண்மையில் இடம்பெற்ற இங்கிலாந்து டெஸ்டிலே நான்காவது இன்னிங்க்ஸில் அடித்த செஞ்சரி, ஆஸியை ஒருநாள் போட்டி ஒன்றில் கலைத்துக்கொண்டு போய், 175ரன்கள் அடித்தும் கூட பின்னாலே வந்த ஆசாமிகளால் இந்தியா தோற்றது, 99 உலக கிண்ணத்தில், தந்தையின் மரணத்துக்கு இரண்டுநாட்களுக்கு பிறகு அடித்த செஞ்சரி, என்று ஏகப்பட்ட ஆட்டங்கள், சொல்லிக்கொண்டே போகலாம். எழுதவும் அலுக்காது. வாசிக்கவும் அலுக்காது. சச்சின் என்றால் எதுவுமே அலுக்காது.

இந்த ஆதர்ச நாயகனின் ஆட்டத்தை நானும் நேரடியாக கண்குளிர பார்த்து ரசித்திருக்கிறேன். 2011ம் ஆண்டு MCG இல், பொக்ஸிங்டே ஆட்டம். இரண்டாம் நாள் சச்சின் பட் பண்ணலாம் என்று, கூட இருந்த தவாவையும் இழுத்துக்கொண்டு போனபோது கூட்டம் அள்ளியது. உள்ளே போய் ஆஸ்திரேலியர்களுக்கு மத்தியில் அம்மிக்கொண்டு இருக்க, மதியத்துக்கு பிறகு சச்சின் களம் இறங்க ஆட்டம் சூடு பிடிக்கிறது. அன்றைக்கு சச்சினுடையது ஒரு அசத்தல் ஆட்டம். அடிக்கடி பவுண்டரிகள் தாண்டிக்கொண்டிருந்தன. என்ன ஒன்று, மாலை ஆனால் அவுஸ்திரேலியர்களுக்கு சுதி ஏறிவிடும். மைதானத்திலேயே பியர் ஆறாய் ஓடி, நாலு மணிக்கெல்லாம் அவனுகளுக்கு சச்சின் யாரு பொண்டிங் யாரு என்று தெரியாத குழப்பம் வந்துவிடும். எல்லோரையும் நாலெழுத்து கெட்டவார்த்தையால் சகட்டு மேனிக்கு திட்டுவார்கள். இந்த வண்டவாளத்தில் சச்சினின் ஒரு பவுண்டரிக்கு தெரியாமல் உணர்ச்சிவசப்பட்டு எழுந்து கைத்தட்டிவிட, பின்னால் இருந்த ஒரு பெட்டை, தேவையே இல்லாமல் என் அம்மாவை அங்கே இழுத்து கெட்டவார்த்தையால் திட்டினாள். நான் திரும்பி அவளை இழுத்திருந்தால், இருந்தவங்கள் சேர்ந்து எனக்கு இழுத்திருப்பாங்கள்! சச்சினின் அடுத்த பவுண்டரிக்கு நானே பேசாமல் சச்சினின் அம்மாவை இழுத்துவிட்டேன். தமிழண்டா! சச்சின் மன்னிப்பாராக.

**************

சச்சின். இந்த சொல்லு எம்மோடு கூடிப்பிறந்து வளர்ந்த ஒன்று. அதை இலகுவில் எம்மிடமிருந்து பிரிக்கமுடியாது. என்வயசுக்கார்கள் எல்லோருமே மனதளவில் சச்சின்கள் தான். நாம் எல்லோருமே ஷோயிப்அக்தர் பந்துகளை மனசளவில் துவம்சம் செய்திருக்கிறோம்.  எங்களுக்கு இந்திய அணியை தெரியாது. தெரிந்தது எல்லாமே சச்சின், கங்குலி, டிராவிட், கும்ளே, லக்ஸ்மன் தான். எப்போது தோனியும் இன்னொரு தலைமுறையும் அணியை சுவீகாரம் செய்ததோ, அன்றிலிருந்து இந்திய அணியும் எங்களுக்கு இலங்கை அணியாகிப்போனது. நண்பர் மயிலன் அடிக்கடி சொல்லும்விஷயம். சச்சின் இளைப்பாறுவது கிரிக்கட் இளைப்பாறுவதற்கு சமம். RIP கிரிக்கட் என்பார். எப்படி ரோஜர் பெடரரின் உச்சிக்காலம் அடங்கியபின்னர் டெனிஸில் இருக்கும் ஆர்வம் குன்றியதோ, அதேபோல சச்சின், எங்கள் இளமையின் கடைசி சின்னம், போனபின்னர் எமக்கும் கிரிக்கட் இல்லை என்றாகிறது.

காலையில் எழுந்தபோது சச்சின் இனி விளையாடமாட்டார் என்பதை மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. சுஜாதா மறைந்ததுக்கு மறுநாளும் இதே எண்ணம். மைக்கல்ஜாக்சன் இறப்புக்கு மறுநாளும். பதினாறுவயதில் சச்சின் இந்திய அணியில் விளையாடிய போது, ஒன்பது வயதான நான் இன்னமும் ஏழு வருடங்களில் சச்சின் போன்று வருவேன் என நம்பினேன். என்வயது சிறுவர்கள் எல்லோரும் நம்பினார்கள். சச்சின் எங்களுக்கு அப்போது ஒரு ஹீரோ. இன்றைக்கு சச்சின் நாற்பது வயதில் அப்படி ஒரு அழகான இன்னிங்க்ஸ் விளையாடி ஓய்வுபெற்று பாரதரத்னா வாங்கும்போது, அடடே இன்னமும் ஏழு வருடங்களில் நமக்கும் நாற்பது ஆகிவிடுமே. என்ன கிழிக்கப்போகிறோம் என்ற பதட்டம் வருகிறது. இத்தனை வருடங்களுக்கு பிறகும் நமக்கு செக் வைத்து நீ எவ்வளவோ சாதிக்க இருக்கிறது என்று சொல்லுவதால் தான் சச்சின் இப்போதும் ஹீரோ. உலகத்துக்கு ஒன்றும் கிழிக்கத்தேவையில்லை. மனசுக்கு பிடித்த வாழ்க்கையையாவது வாழவேண்டாமா? வாழு என்பது தான் சச்சின் எமக்கு சொல்லுகின்ற பாடம். உனக்கு எது பிடிக்கிறதோ அதை சமரசங்கள் இல்லாமல் முழுமுயற்சியோடு செய் என்கிறார். மற்றவன் கூக்குரலிட்டான் என்று ஓய்வுபெறவுமில்லை. தனக்கு எப்போது தோன்றியதோ அப்போதே செய்தார். அது தான் சச்சின்.

“உன்னுடைய கனவுகளை துரத்து, ஆனால் குறுக்குபாதையால் அதை அடைய முயலாதே, பாதை கடினமாக இருந்தாலும் முயற்சியை கைவிட்டுவிடாதே, எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல மனிதனாக இரு”

இது சச்சினின் தந்தை சொன்ன அறிவுரைகள். சச்சினின் வாழ்க்கை இந்த அறிவுரைகளின் குவியல் தான். அவர் முயற்சியும், உழைப்பும், எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய நெறியான வாழ்க்கையும் நம் எல்லோருக்குமே ஒரு பாடம். விளையாட்டோடு மட்டுமில்லாமல் தன்னை பின்பற்றுவர்களுக்கு ஒரு சிறந்த ரோல்மொடலாக வாழ்பவர் தான் நம்ம சச்சின்.

இனியும் கிரிக்கட் ஆட்டம் நடக்கும். ஹீரோக்கள் வருவார்கள். விறுவிறுவென்று ஆட்டங்கள் போகும். இருநூறு, முன்னூறு ஏன் ஐநூறு கூட அடிப்பார்கள். ஆனால் அவுட்சைட் ஒவ்ஸ்டம்பில் சரியான லெந்தில் விழும் பந்தை கூட, மினிமம் புட் மூவ்மண்டுடன் சடக்கென்று ஒரு செக் டிரைவ் அடித்துவிட்டு இரண்டு செக்கன்கள் நாங்கள் ரசிக்கவென்று ஆடாமல் அசையாமல் நிற்கும் அந்த அழகு … ச… ச்…. சி…..ன்.

ஓ சச்சின் வந்தாரைய்யா .. ஓ சச்சின் வந்தாரையா .. மனதை தந்தேனய்யா!

M_Id_434030_Sachin_Tendulkar

&&&&&&&&&&&&&

தொடர்பான பதிவுகள்

யாழ்ப்பாணத்து கிரிக்கட் பாகம் 1
யாழ்ப்பாணத்து கிரிக்கட் பாகம் 2
என் கொல்லைப்புறத்து காதலிகள்

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட