என் கொல்லைப்புறத்து காதலிகள்: யாழ்ப்பாணத்து கிரிக்கட் - பாகம் 1

 

Centrl0309_03_51764_200

இன்னும் ஐந்து ரன் அடித்தால் வெற்றி. நன்றாக இருட்டிவிட்டது.  தீயிடப்பட்டு நிர்மூலம் ஆக்கினாலும் கம்பீரமாக நிற்கும் யாழ் நூலகத்துக்கு பின்னாலே சூரியன் மறைந்துகொண்டிருக்க, எங்கே வெளிச்சம் இல்லை என்று சொல்லி ஆட்டத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் எங்களுக்கு. மணிக்கூண்டு கோபுர முனையில் இருந்து பிரபா அண்ணா பந்துவீச தயாராக, பூங்கா முனையில் எதிர்கொள்வது காண்டீபன் அண்ணா. மொத்த மைதானமே ஆர்ப்பரிக்கிறது. பந்து மட்டிங் பிட்ச்சில் லெந்தில் விழ, காண்டீபன் அண்ணா லோங் ஓனில் இழுத்து அடிக்க… பந்து பறக்கிறது. அத்தனை பேரும் ஆவென்று வாய் பிளந்து நிற்க, அது மைதானத்தை தாண்டி, வீதியை தாண்டி மணிக்கூண்டு கோபுரத்தின் உச்சியில் இருந்த சேவல் கொண்டையில் பட்டு…. சேவல் கூவும் சத்தம். எழும்பிப்பார்த்தால் இன்னமும் விடியவில்லை. காலை நாலு மணி. இன்னும் நான்கு மணித்தியாலங்களில் ஆரம்பித்துவிடும். வடக்கின் பெரும்போர் என்று அழைக்கப்படும் சென்றல் சென்ஜோன்ஸ் பிக் மேட்ச். நித்திரை அதற்கு பிறகு வரவில்லை.

“கடவுளே காண்டீபன் அண்ணா எப்பிடியும் செஞ்சரி அடித்து அஞ்சு விக்கட்டும் விழுத்தோணும்.”

1992ம் ஆண்டு. மாசி மாதத்து இறுதி வெள்ளிக்கிழமை. அம்மா நேற்றே சுட்டு வைத்திருந்த ரோல்ஸ் ஐந்தாறை வாழை இலைக்குள் சுற்றி, அதற்கு மேல் உதயன் பேப்பரை சுற்றி ஒரு பாக்கினுள் போட்டுத்தர தயக்கத்தோடு வாங்கினேன். “பெடியள் பார்த்தால் நக்கலடிப்பாங்கள்” என்று தெரியும். அக்காவின் பேர்த்டேக்கு செய்த ரோல்ஸ். அருமையாய் கிடைப்பது, பின்னேரம் வீடு திரும்பும் போது  ஒன்று கூட மிச்சம் இருக்காது என்று தெரியும். வெட்கத்தை பார்த்தால் வேலைக்காகாது என்று வாங்கி அதை ஸ்டைலாக ஒரு PP பாக்கிற்குள் வைத்துக்கொண்டு, அப்பா என்றைக்கோ சவுதியில் இருந்து கொண்டுவந்த கீறல் விழுந்த கூலிங் கிளாஸை எடுத்து மாட்டிப்பார்த்தால், எல்லாமே மங்கலாக தெரிந்தது. இருக்கட்டும் லஞ்ச் பிரேக்கின் போதாவது போட்டுக்கொண்டு திரியலாம் என்று அதுவும் PPக்குள். ட்ரிங்க்ஸ் போத்தலுக்குள் தேசிக்காய் தண்ணி, சென்ஜோன்ஸ் இலச்சினை பொறித்த தொப்பி, சிவப்பு டீசேர்ட் எல்லாமே அணிந்து, அம்மாவிடம் திரும்பிவந்தேன்.

“… ஒரு இருபது ரூவா தாறீங்களா? கச்சானும் ஐஸ் கிரீமும் வாங்கிறதுக்கு”

கேட்டதும் தான் தாமதம் அம்மா தொணதொணக்க ஆரம்பித்தார்.

“அதான் தேசிக்காய்த்தண்ணி .. ரோல்ஸ் எல்லாம் தந்திருக்கிறனல்லோ .. உண்ட அப்பர் இங்க உழைச்சு கொட்டிக்கொண்டு தானே இருக்கிறார் .. ஐஸ் கிரீமுக்கும் கச்சானுக்கும் காசு தர…. இந்த தரித்திரம் பிடித்த “ஊனா” கார்ட்டால வேற ஐஞ்சியத்துக்கும் பிரயோசனமில்ல. நாலு பெடியள வெளிநாட்டுக்கு அனுப்பீட்டு அவனவன் சங்கக்கடையில அவ்வளவு நிவாரணத்தையும் அள்ளிக்கொண்டு போறான் .. எங்களுக்கு அதுவும் கிடைக்காது .. அரைக்கிலோ சீனி .. ஆருக்கு காணும்? ”

அம்மா ஏன் விடியக்காலமை எனக்கு இதை சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்று புரியவில்லை. அப்பா அனுராதபுரத்தில் உள்ள நொச்சியாகம காட்டுக்குள் மகாவலி அபிவிருத்தி திட்டத்தில் நில அளவையாளராக பணி புரிந்துகொண்டிருந்த காலம்.  அரசாங்க உத்தியோகம் என்று பெயர், ஆனால் சம்பளம் என்னவோ ஐயாயிரம் ரூபாய் தான். போதாக்குறைக்கு உத்தியோகத்தர் என்று சங்கக்கடையில் எங்களுக்கு உலர் உணவு நிவாரணமும் குறையத்தான் கிடைக்கும். பாதை எப்போதாவது திறந்தால் மட்டுமே யாரிடமாவது சம்பளத்தையும், வேறு ஏதாவது குட்டி சாமான்களையும் அனுப்பிவைப்பார். கொஞ்ச காலமாகவே தாண்டிக்குளம் பக்கம் அடிபாடு. பாதை மூடிக்கிடந்த கடுப்பு அம்மாவுக்கு. எனக்கும் காசு அனுப்பாத அப்பா மீது அர்த்தமில்லாமல் கோபமும் வந்தது.

“என்னட்ட ரெண்டு ரூவா இருக்கு .. ஒரு எட்டு ரூவா தந்தீங்கள் எண்டா கோன் வாங்கி குடிக்கலாம் .. ஐஸ் சொக் கூட பத்து ரூவா .. ப்ளீஸ் .. சிநேகிதங்கள் எல்லாம் இண்டைக்கு காசு கொண்டு வருவாங்கள்”

“சின்னப்பெடியனுக்கு காசைக்குடுத்து பழுதாக்காதீங்க நீங்க” என்ற அக்காவின் முறைப்பாட்டையும் மீறி அம்மாவுக்கு என்னை பார்க்க இரக்கம் வந்திருக்கவேண்டும். பத்து ரூபாய் தாளை எடுத்து நீட்ட மேசையில் இருந்து படிக்கும் அக்காவின் முகத்தை திரும்பிப்பார்க்காமலேயே சைக்கிளுக்கு போனேன். “பத்துரூபாய் சுளையாக வாங்கிவிட்டேன்; எப்படியும் தாங்கமாட்டாள். சென்ஜோன்ஸ் தோற்கவேண்டும் என்று நேர்த்தி வைத்தாலும் வைத்திருப்பாள். சொல்ல முடியாது”

வீட்டுக்குள் நிறுத்திவைத்திருந்த சைக்கிளை சன்ஹூடுக்குள் இறக்கும்போது தான் வாசலில் கீர்த்திராஜ். ஆளையும் தோரணையையும் பார்க்க சிரிப்பாக இருந்தது. பிரேமதாசா தந்த அந்தக்காலத்து ஒருவித காக்கி நீலத்து துணியில் தைத்த காற்சட்டை, அது பாட்டுக்கு பொங்கிப்போய் பாவாடையாட்டம், சம்பந்தமேயில்லாமல் மேலுக்கு ஒரு சிவப்பு டீஷர்ட், அவன் மூன்றாவது பிறந்தநாளுக்கு வாங்கியதாக இருக்கவேண்டும், உடம்பை இறுக்கிப்பிடித்துக்கொண்டு, கட்டை டீஷர்ட் மேலெழும்பி வயிறு வேறு தெரிந்தது. முகத்தில் கூலிங்கிளாஸ், சென்ஜோன்ஸ் தொப்பி, லுமாலா சைக்கிளில் சிவப்பு கறுப்பு கொடி என்று ஆள் இன்றைக்கு ஒரு முடிவோடு தான் வந்திருந்தான். பிக்மட்ச் என்றால் சும்மாவா? அதுவும் நாங்கள் சென்ஜோன்சில் இணைந்தபின் நடக்கும் முதல் பிக் மட்ச். ஏதோ இந்தியா பாகிஸ்தான் மட்ச் ஆட்டம் போன்ற பீலிங்கை கொடுத்தது!

“டேய் … நல்லதா காஞ்ச ரெண்டு தடியும் ஒரு எண்ணை பரல் கேனும் தேடோணும் .. இண்டைக்கு கிரவுண்டடில அதுகள காணக்கிடைக்காது”

கீர்த்தி கேற்றடியில் இருந்து கத்த, நான் கள்ளமாக பத்தியடிக்கு போய், சத்தம் போடாமல் அம்மா எண்ணை வைத்திருக்க பாவிக்கும், இந்தியன் ஆர்மி விட்டுச்சென்ற தகர கேனை எடுத்தேன். கால்வாசிக்கு பொரித்த எண்ணை கிடந்தது. அதை எடுத்து ஒரு சட்டிக்குள் ஊற்றிவிட்டு தேங்காய் பொச்சை சன்லைட்டில் தேய்த்து எண்ணை கேனை கிணற்றடியில் வைத்து கழுவினேன்.

என்னடா வெள்ளனயே பெரிய கவர்மென்ட் உத்தியோகம் பார்க்கபோறவன் மாதிரி நேரம் போயிட்டு எண்டு துள்ளிக்கொண்டிருந்த .. இப்ப கிணத்தடில என்ன செய்து கொண்டிருக்கிற?”

“ஒண்டுமில்லை சிலிப்பர் முழுக்க சேறு .. கழுவிக்கொண்டிருக்கிறன்”

சத்தம்போடாமால் குசினி யன்னலுக்கு கீழாக பதுங்கி கேட்டடிக்கு போக, கீர்த்தி, ஏற்கனவே பழைய தும்புத்தடியை ரெண்டாக உடைத்து தயாராக வைத்திருக்க, டபிள்ஸ் ஆரம்பமாகியது. நான் சைக்கிள் உழக்க, அவன் பார்த்தடியில் இருந்துகொண்டு, தகர டின்னை வைத்து தாளம் போட தொடங்கினான். சைக்கிள் சவாரி பிரஷாந், குகன், மக்கர் சுட்டா என்று ஒவ்வொருவர் வீடுகளுக்கும் போய், நல்லூரடியில் “சென்ஜோன்ஸ் வெல்லவேண்டும், காண்டீபன் அண்ணே சென்சரி போடோணும்” என்று தேங்காய் உடைச்சு, சொட்டை எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டே ஆரிய குளத்தடிக்கு போகும்போது பிரியா, குணாலதாஸ் குரூப்பும் இணைந்துகொள்ள, இப்போது பதினைந்து பேர், பத்து சைக்கிள், பத்து சிவப்பு கறுப்பு கொடிகள், நாலைந்து தகர டின்கள் என தாளம் அந்த ஏரியாவையே அதகள படுத்தியது.

“கொலிஜ் கொலிஜ் .. சென்ஜோன்ஸ் கொலிஜ்”
“எங்கட கொலிஜ் .. சென்ஜோன்ஸ் கொலிஜ்”
central“அப்பே கொலிஜ்.. சென்ஜோன்ஸ் கொலிஜ்”
“வாட்ஸ் த கலர்? ரெட் அண்ட் ப்ளக்”
“ஹூ இஸ் த கப்டின்?” காண்டீபன்”
“தீபன் தீபன் .. காண்டீபன்”
“எங்கட தீபன் … காண்டீபன்”
“செஞ்சரி தீபன் … காண்டீபன்”
“அடியுங்கோ அண்ணா பவுண்டரி சிக்ஸர்”
“போடுங்கோ அண்ணா .. பொல்லுப்பறக்க”
“சென்றலால ஏலாது”
“ஏலுமெண்டா பண்ணிப்பார்”
“ஏலாட்டி விட்டிட்டு போ”

தகர சத்தமும் கூச்சலும் சிவப்பு கறுப்பு கொடியுமாக போகும்சமயத்தில் தூரத்தில் “தமிழீழ காவல் துறை” வேதாளர் கொமிக்ஸில் வரும் படையினரின் யூனிபோர்மில் நிற்பதை கண்டவுடன் கப்சிப். பலாலி ரோட்டையே மறித்தபடி சைக்கிளில்  பரலளாக வந்துகொண்டிருந்தவர்கள், திடீரென்று ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் வீதியோரமாக போக ஆரம்பித்தோம். வேம்படி சந்தியில் ஒரு காவல்துறை அண்ணா தெரியாத்தனமாக எம்மைப்பார்த்து சிரித்துவைக்க, தாளம் மீண்டும் ஆரம்பித்தது.

“எங்கட துறை காவல் துறை”
“மக்களின் துறை காவல் துறை”
“எங்கட துறை காதல் துறை”

பதிலுக்கு அவர் ஏதோ சொல்லி எங்களை அழைக்க போகும்முன்னரேயே நெக் காட்டிவிட்டு திரும்பிப்பார்க்காமல் வேகம் பிடிக்க, மைதானத்தருகில் தாளச்சத்தமும் விசிலும், கூச்சலும் விண்ணை கிழித்துக்கொண்டிருந்தது.

கொல்லைப்புறத்து காதலிகளில் கிரிக்கட்டை பற்றி எழுதுவது என்று தீர்மானித்தபோது, எந்த எல்லைக்குள் எழுதுவது என்று குழப்பம். மீட்டும்போது சும்மா ஜிவ்வென்று எனக்கு சுருதி ஏறும் கிரிக்கட் எது என்றால், அது தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் ஆடப்பட்ட கிரிக்கட் தான். வெறும் ஆறு மணித்தியாலம் டிவி முன் இருந்து பார்த்துவிட்டு நண்பர்களுடன் டிஸ்கஸ் பண்ணும் ஆட்டங்கள் அல்ல அவை. அது ஒரு வாழ்க்கை. அந்த ஆட்டங்கள், இடம்பெற்ற மைதானங்கள், அந்த காலப்பகுதி, அரசியல் நிலை எல்லாமே கூடிக்கலந்த வாழ்க்கை. அதை எழுதலாம் என்று ஒரு ஐடியா. ஒரு சிறுவனாக அந்த கிரிக்கட் ஏற்படுத்திய ஆர்வம். அதை எப்படி பார்த்தோம் என்று பகிரலாம். அதுவும் தொண்ணூறுகளின் முதற் பாதி. இந்திய இராணுவம் திருப்பி அனுப்பப்பட்டு, புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் வந்து, மக்கள் புதிய ஒரு சூழ்நிலைக்கு தயாராகிக்கொண்டிருந்த சமயம்.  ஊருக்கு வந்துகொண்டிருந்த லக்ஸபான மின்சாரம் பிரேமதாசா-புலிகள் தேனிலவு முடிந்து கொஞ்சநாளில் கட் ஆகி, கூடவே பொருளாதார தடைகளும் வந்து சேர டிவியில் பார்க்கும் கிரிக்கட்டையும், நரேந்திர கிர்வாணியையும், சச்சின், விவியன் ரிச்சர்ட்ஸ், இம்ரான், மியன்டாட் போன்ற பெயர்களையும் மறந்து யாழ்ப்பாணம் தன்னுடைய சொந்த ஹீரோக்களை கொண்டாட தயாராகிக்கொண்டிருந்தது. 

யாழ் மத்திய கல்லூரி மைதானத்தின் மூலை முடுக்கெங்கும் சிவப்பு கறுப்பு நீலம் பிரவுண் என கொடிகள். செவிப்பறை வெடிக்கும் அளவுக்கு மண்ணெண்ணெய் பரல்களில் போடும் தாளச்சத்தம். ஆங்காங்கே டோலக்குகள். கூலிங் கிளாசஸ். அந்த வெயிலிலும் சப்பாத்து போட்டு, ஸ்டைலாக திரியும் மாணவர்கள். மைதானத்தின் வடக்கு பக்கம் மணிக்கூண்டு கோபுரம், இயங்காத கடிகாரம், அதன் உச்சியில் ஒரு சேவல் சிலை இருந்ததாகவும் சுரேன்குமார் அண்ணா அடித்த சிக்ஸரால் தான் அது உடைந்தது என்றும் அவசர அவசரமாக மைதானத்திலே ஒரு ஐதீகம் பரவியது! இதையே சென்றல் மாணவர்களிடம் கேட்டால் வேறு ஒருவரின் சிக்ஸ் என்பார்கள்!

கிழக்குப்பக்கம் யாழ் மத்திய கல்லூரி. மைதானத்தை பார்த்துக்கொண்டே இரண்டு வகுப்பறை கட்டடங்கள்.  ஒன்றில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் நின்றுகொண்டு, மத்திய கல்லூரி அணிக்கு சப்போர்ட் பண்ண மற்றயதில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி பெண்கள், எங்களுக்கு..  சென்ஜோன்சுக்கு சப்போர்ட் பண்ண வந்திருப்பார்கள்! ஆட்டத்தின் சியர் கேர்ள்ஸ்! அதிகமாக கூலிங் கிளாஸ் போடுவதாலோ அல்லது இயற்கையாகவே தானோ தெரியாது. சுண்டுக்குளி பெண்கள் இருக்கும் பக்கம் கொஞ்சம் குளிர்ச்சி அதிகமாகவே இருக்கும். யாழ்ப்பாணத்தில், சைக்கிளில்  எதிர்பட்டால் அட்லீஸ்ட் ஒரு சிரிப்பாவது சிரித்துவிட்டு போகும் பெண்கள் இந்த பெண்கள் தான். அழகும் திமிரும் அதிகம் இருக்கும், எங்கள் ரேஞ்சோடு ஒப்பிடுகையில் அவர்களுக்கு ஷேக்ஸ்பியர் லெவலுக்கு இங்கிலீஷ் தெரியும். சும்மா வெட்டி ஆடுவார்கள், நாங்கள் எங்களுக்கு தெரிந்த இங்கிலீஷ் புத்தகத்தில் இருந்த “Me and my TV” ஐ வைத்து சமாளிப்போம். ஆனால் வேம்படி அப்படியல்ல. பார்த்தால் தலை குனிவார்கள். குவிஸ் போட்டி என்றால் சிக்ஸர் பவுண்டரி அடிப்பார்கள். படிப்பில் சுட்டிகள். அதில் கவனம் அதிகரித்ததால் கண்ணாடியை பல நாட்களில் பார்த்து டச்சப் பண்ண மறந்து விடுவதால் சின்ன வயதில் பெரிதாக அவர்கள் என்னை டச் பண்ணவில்லை. ஆனால் பதினெட்டு வயதில் டச்சப் பட்ச்அப் பாக்கப் எல்லாமே பண்ணியது வேம்படி நண்பிகள் தான் என்று இந்த இடத்தில் சொல்லியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் Facebook இல் இருக்கும் என் வேம்படி மகளிர் கல்லூரி நண்பிகள் அடிக்கவருவார்கள்!

Jaffna Library

கிரிக்கட்டை பற்றி எழுத வந்து சியர் கேர்ல்ஸ் பக்கம் போயிட்டன் போல. தெற்காலே போனால் பாழடைந்த சுப்பிரமணிய பூங்கா. நின்ற ஓரிரு மரங்களிலும் மாணவர்கள் ஏறி இருந்து வசதியாக ஆட்டத்தை பார்க்க ரெடியாக இருக்க ஆங்காங்கே ஐஸ் கிரீம் வான், சுண்டல் கச்சான் கடை என்று பரப்பப்பட்டு .. மேற்கே திரும்பினால் யாழ் நூலகம். அப்போது எரிந்த நிலையில் இருந்த கம்பீரம், சந்திரிகா பின்னாளில் மீண்டும் திருத்தி தந்தபின்  தொலைந்துபோய் இருந்தது. அவனே எரித்து அவனே கட்டி தருகிறான். மீண்டும் அவனே எரிப்பான் .. உன்னால் என்ன செய்யமுடியும்? என்று அது என்னை பார்த்து பல தடவை கேட்டிருக்கிறது. “நீங்கின் அரிதால் புணர்வு” என்று வள்ளுவன் காமத்துக்கு சொன்னது சம்பந்தமில்லாமல் எனக்கு இந்த இடத்தில் மனதில் வந்துபோகும். வேண்டாம்.

92ம் ஆண்டு முதல் 95ம் ஆண்டு இடம்பெயர்வு வரை யாழ்ப்பாணத்து கிரிக்கட்டுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது.  ஏககாலத்தில் எல்லா பாடசாலைகளிலும் திறமையான வீரர்கள் அப்போது இருந்தார்கள்.  முதலில் ஞாபகத்துக்கு வருபவர் காண்டீபன் அண்ணா. சென்ஜோன்ஸ் கப்டின். ஆறரை அடி உயரம், நடக்கும் போது ஒரு பக்கம் சரிந்து அவருக்கென்றே ஒரு ஸ்டைல். ஓபன் பவுலிங், லோங் ரன் அப் எடுத்துக்கொண்டு வந்தாரே என்றால் விக்கட் கீப்பர் பீஷ்மன் அண்ணா வழமையான தூரத்துக்கு இரண்டு மீட்டர் பின்னாடி போய் நிற்பார். பந்தை வீசிவிட்டு அரை பிட்ச் தாண்டியும் பலோ அப் இருக்கும். நெருக்கமாக போய் பட்ஸ்மனை சாய்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் நடப்பார். அதே காண்டீபன் அண்ணா தான் சென்ஜோன்சின் டூ டவுண் பட்ஸ்மன். சச்சின் போல. ஒரே சீசனில் மூன்று செஞ்சரிகள் அடித்ததாக ஞாபகம். அதிலும் ஒன்று 151 ரன்ஸ்.  அத்தோடு பீஷ்மன், கேர்ஷன், யோகதாஸ் என்று சென்ஜோன்சின் தூண்கள். இங்கே கதை இப்படி என்றால் சென்றல் பக்கம் மணிவண்ணன், பிரபாகரன், ரகுதாஸ், ஆகாஷ், சுரேஷ்(கோழி சுரேஷ்), லட்டு என்றும் யாழ் இந்துவில் சின்ன வரதன், நரேஷ், கொக்குவில் இந்துவில் பண்டா, யாழ்ப்பாணக்கல்லூரி சிவசுதன் என்று யாழ்ப்பாணத்தில் பாடசாலை கிரிக்கட் உச்சத்தில் இருந்த சமயம். வில்ஸ் கிரிக்கட் ரேட்டிங் போல உதயனிலும் அப்போது ரேட்டிங் போகும். சிறந்த துடுப்பாட்டவீரர், பந்துவீச்சாளர், சகலதுறை ஆட்டக்காரர் என்று, அதற்கு ஒரு போட்டியும் நடக்கும், எழுதிப்போடலாம். காண்டீபன், சிவசுதன், ரகுதாஸ் நரேஷ் பெயர்கள் எல்லாம் அப்போது முன்னிலையில் இருந்தது இப்போதும் ஞாபகம் இருக்கிறது.

யாழ் இந்துக்கல்லூரி மைதானம், யாழ் நகரின் சென்டர் பீஸ். அந்த நேரங்களில் கோட்டை அடிபாடு முடிந்திருந்தாலும் ஆர்மி பண்ணைப்பாலத்துக்கு அப்பால் நிலை கொண்டிருந்ததால் முத்தவெளி, துரையப்பா அரங்கு, மத்தியகல்லூரி திடல்கள் பெரும்பாலும் பிரபலமாக இருக்கவில்லை. அதே நேரம்,  சின்ன கிரவுண்டாக இருந்தாலும் யாழ் இந்துக்கல்லூரி மைதானம் தான் எங்களுக்கு ரோமானிய கொலோசியம். மணி ரியூஷனில் வில்வரின் கொமேர்ஸ் வகுப்புக்கு பீஸ் கட்டுவதே கட் பண்ணுவதுக்கு தான்.  காலையிலேயே உதயனில் “இன்றைய ஆட்டங்கள்” பார்த்துவிடுவேன். வகுப்பை கட்பண்ணி யாழ் இந்து மைதானத்துக்கு போய், அப்பிடியே கஸ்தூரியார் ரோட்டில் சைக்கிளை மதிலோரமாக சரித்துவிட்டு சீட்டில் இருந்தவாறே மேட்ச் பார்க்கலாம். சிலநேரங்களில் மதிலில் ஒட்டியிருக்கும் முள்ளு முள்ளு கல்லுகள் குத்தும். சுவரில் தேய்த்திருக்கும் சுண்ணாம்பு கையில் படும். வெயில் கொளுத்தும், ஆட்டத்தில் கண் இருக்கும் போது வீதியிலும் கண் இருக்கவேண்டும். அந்தநேரம் யாராவது பெண்கள் கூட்டம் சைக்கிளில் வந்தால், எவனாவது சிக்ஸ் அடித்து மண்டையில் வந்து பந்து பட்டாலும் எங்களுக்கு தெரியாது. அப்போது பதினாலு வயசு தான். எங்கட மக்ஸிமம் லொள்ளு என்றால், இவ்வளவு தான்.

sri_lanka_2005_1111678200_main_transport_in_jaffna_town“அக்கா .. பின் சில்லுக்கு காத்து போயிட்டுது”
“மஞ்சள் சட்டை .. .. பாக் காரியரில சரியுது”
“கண்ணாடி நல்லா இருக்கு? எங்க வாங்கினீங்க?”
“கொண்டையில் தாழம்பூ கூடையில் வாழைப்பூ நெஞ்சிலே என்ன பூ?”
“டேய் .. நடுவில போற ஏசியா சைக்கிள் .. எண்ட ஆள்டா”
“என்ன நடை, சின்ன இடை, கையில் என்ன குடை? சிங்கார குடை, சிங்க மார்க் குடை!”

அனேகமாக கணக்கெடுக்கமாட்டார்கள். எப்போதாவது அதிஷ்டம் அடித்தால் பார்த்து முறைப்பார்கள். அவ்வளவு தான். இதுவே தனியாக நின்று மேட்ச் பார்த்தால், வாலைச்சுருட்டிக்கொண்டு நல்ல பெடியன் போல, அவர்கள் கவனித்தாலும் கவனிக்காதது போல, மட்ச்சை கவனமாக பார்ப்போம். சில நேரங்களில் சொந்தக்காரர் யாராவது அந்த பாதையால் போனால், வீட்டில் போய் போட்டுக்கொடுத்துவிடுவினம். அப்புறம் என்ன, வீடு போனதும் போகாததுமாக காவல்துறை விசாரணை ஆரம்பமாகும்.

பாடசாலை கிரிக்கட் எல்லாம் வெள்ளி மதியம் ஆரம்பித்து சனியும் நடைபெறும். சென்றல்- சென்ஜோன்ஸ் அணிகளின் வடக்கின் பெரும்போரும், சென்பற்றிக்ஸ்-யாழ்ப்பாண கல்லூரிகளுக்கு இடையில் நடைபெறும் பொன் அணிகள் போரும் வெள்ளி சனி என இரண்டு நாட்களும் திருவிழா போல நடைபெறும். பொதுவாகவே சென்றல் அணி தரமான அணியாக மிளிர்வதுண்டு. வெல்லவேண்டும் என்ற வெறி உள்ள ஆஸ்திரேலியா போன்ற அணி தான் சென்றல். சென்ஜோன்ஸ் பல நட்சத்திர வீரர்களை கொண்டிருந்தாலும் பிக் மட்ச் என்று வரும்போது தடுமாறிவிடும். இந்திய அணி போல. யாழ் இந்து, கொக்குவில் இந்து இரண்டும் ஏனைய இரு முக்கிய பாடசாலை அணிகள். இதைவிட ஸ்கந்தா, ஸ்டான்லி என்றும் அணிகள் இருந்தாலும் அவைகள் எல்லாம் பிரபல அணிகள் வெளுத்துவாங்குவதற்கு களம் அமைத்து கொடுக்கும் சிம்பாப்வே, பங்களாதேஷ் ரக அணிகள். இந்த அணிகளுள் டார்க் ஹோர்ஸ் என்றால் அது பற்றிக்ஸ் தான். சத்தம்போடாமல் சில நேரங்களில் பெரும் ஜாம்பவான்களை சாத்தி அனுப்பும். அதில் பலதடவை அடிவாங்கி செத்தது நம்மட சென்ஜோன்ஸ் அணி தான்!

அப்போதெல்லாம் பல கிண்ணங்களுக்கு போட்டி நடக்கும். KCCC கிண்ணம்,  உதயன்-ஷப்ரா கிண்ணம், ஜோலிஸ்டார்ஸ் கிண்ணம் என பல. போட்டிகள் மத்திய கல்லூரி, இந்து கல்லூரி, கொக்குவில் இந்து, யாழ் பல்கலைக்கழக மைதானங்களில் நடைபெறும். சென்றலைட்ஸ், ஜோனியன்ஸ், பற்றீசியன்ஸ், ஜோலிஸ்டார்ஸ், KCCC, ஷப்ரா, அரியாலை சனசமூக நிலையம், வட்டுக்கோட்டை, ஸ்டான்லி என பல கிளப் அணிகள். சென்றலைட்ஸ் என்றால் சண்முகலிங்கம்(இரும்பன்), ஜோனியன்ஸ் என்றால் சூரியகுமார்(சூரி), ஜொலிஸ்டார்ஸ் என்றால் தயாளன் என ஐம்பது வயதுக்காரர்கள்( தயாளன் கொஞ்சம் இளமை) தான் அணியில் முக்கிய ஆட்டக்காரர்கள். இரும்பன் ரன்அப் எடுத்து பவுலிங் போட்டால் பந்து எகிறிக்கொண்டு போகும். அதுவே யாழ் இந்து மைதானம் என்றால், கீப்பர் விடுவதெல்லாம் பின் மதிலில் பட்டு மதிலுக்கு மேலால் எம்பி விழும். அத்தனை வேகம் அந்த வயதிலும்.

கொக்குவில் இந்து இன்னொரு முக்கிய மைதானம். அதை மைதானம் என்று சொல்லுவதை விட வளவு என்று சொல்வதே பொருத்தம். இரண்டு பக்கங்களும் முப்பது மீட்டர் கூட வராது என்று நினைக்கிறேன். மதில் சுவர் தான் பவுண்டரி லைன்.  சுவரில் புல்லாக போய் பட்டாலும் பவுண்டரி தான். சிக்ஸுக்கு மதில் தாண்டவேண்டும். அப்படி ஒரு ரூல் அங்கே. ஒரு முறை மட்ச் பார்த்துக்கொண்டிருக்கிறேன். யாழ் பல்கலைகழகத்துக்கும் ஜொலிஸ்டார்ஸ் அணிக்கும் மட்ச். ஓபன் பட்டிங் திலக் என்று நினைக்கிறேன். நான் நேரே கீப்பருக்கு பின்னால் பவுண்டரி லைனில், சுடுமணலில் செருப்பை போட்டு அதற்கு மேல் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். நரேன் பந்து வீசுகிறார். சீறிக்கொண்டு வந்து பந்து விக்கட்டில் பட்டு தெறிக்க, பெயில்ஸ் அப்பிடியே ஆகாயத்தில் சரக்கென்று பறந்து வந்து என் காலடியில் விழுந்தது. அவ்வளவு சைஸ் அந்த மைதானம்!

ஒருமுறை ஆறுபேர் அணிகொண்ட ஐந்து ஓவர் சுற்றுப்போட்டி இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்தது.  யாழ் செயலக-கச்சேரி அணி என்று ஒரு கனவு அணி உருவாகியது. அந்த அணியில் ரகுதாஸ், காண்டீபன், பிரஷாந்தன் என எல்லோருமே அதிரடி ஆட்டக்காரர்கள். சென்றல், சென்ஜோன்சில் எதிரும் புதிருமாக மோதியவர்கள் ஒரே அணியில். ஒரு ஆட்டத்தில் ரகுதாஸ் அண்ணா ருத்திரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார். போட்டதெல்லாம் கஸ்தூரியார் ரோட்டில் இருந்த பஸ் ஸ்டொப்புக்கு மேலால் பறந்து ஒவ்வொரு வீடுகளிலும் விழுந்துகொண்டிருந்தது. கூடவே காண்டீபனும் சேர்ந்து பந்தை அக்கம் பக்கத்து வளவுகளுக்குள் அனுப்பிக்கொண்டிருக்க… அப்போது ஒரு நிறைவேறாத ஆசை. எமக்கென்று ஒரு அணி, அதிலே காண்டி, ரகுதாஸ், பீஷ்மன், சுரேஷ், லட்டு, நரேஷ், பிரபா, கிருபா, சின்ன வரதன், பெரிய வரதன் எல்லோரும் சேர்ந்து ஒரு அணி. உலக கிண்ணத்தில், பாகிஸ்தான் இங்கிலாந்து ஆஸ்திரேலியா, இலங்கை என  எல்லோரையும் துவம்சம் செய்து இறுதிப்போட்டி இந்தியாவுடன். அந்த பக்கம் சச்சின், காம்பிளி, இந்தப்பக்கம் பௌலிங் போடுவது காண்டீபன். எப்படி இருந்திருக்கும்? ப்ச் ..எல்லாமே ..  பெருமூச்சு தான்.

எங்கள் வீடு பல்கலைக்கழகத்துக்கு முன்னால் இருந்ததால் அதிகமான கம்பஸ் ஆட்டங்கள் பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது. அப்போது கம்பஸ் அணியில், சின்ன/பெரிய வரதன், திலக், சுதேசன் தொட்டு பின்னாளில் பீஷ்மன் என முக்கிய பலர் விளையாடினார்கள். அருமையான அணி. இப்போது பூங்காவாக மாற்றப்பட்டிருக்கும் பரமேஸ்வரா கோயிலின் முன் மைதானத்தில் பல ஆட்டங்கள் நடக்கும். அந்த மரங்களுக்கு கீழே இருக்கும் பெஞ்சுகளில் இருந்து மட்ச் பார்க்கலாம். சிலநேரங்களில் முதல் வருட அக்காமாரை சீனியர்கள் கூட்டிக்கொண்டுவந்து செய்யும் ராக்கிங் கூட ப்ரீ ஷோவாக பார்க்கலாம். அந்த “என்ன கலர்? என்ன கலர்? என்ன கலர்?” என்று வெறும் ஈர்க்கை வைத்து ஒரு அக்காவை ஒரு சீனியர் நாதாறி மிரட்டி கேட்ட ராக்கிங் இன்னமும் நினைவு இருக்கிறது. விளங்கப்படுத்தினால் இன்னொரு மெக்சிகன் சலவைக்காரி ஜோக்காக போய்விடும். வேண்டாம்!

மீண்டும் வடக்கின் பெரும்போருக்கு வருவோம். 1992 ஆட்டம் நான் பார்த்த மிகச்சிறந்த பிக் மட்ச் என்று நினைக்கிறேன். முதலில் துடுப்பெடுத்தாடிய சென்றல் அணி முன்னூறுக்கு மேல் அடித்துவிட்டு மாலையில் டிக்ளேர் பண்ணியது. சென்ஜோன்ஸ் அணியில் யோகதாஸ் அண்ணா ஐந்து விக்கட்டும் காண்டீபன் அண்ணா நான்கு விக்கட்டும் நூற்றுச்சொச்ச ரன் கொடுத்து கைப்பற்றினார்கள். ஆகாஷ் அண்ணே கூட எழுபது ரன் அடித்திருக்கவேண்டும். அந்த ஆட்டத்தில் தான் லட்டு என்கின்ற லட்சுமிகரன் எட்டு விக்கட் எடுத்து சென்ஜோன்சை சரித்ததாக ஞாபகம். காண்டீபன் அண்ணா சமாளித்து ஆடி 74 ரன் அடித்து ஸ்லிப் கட்சில் அவுட் ஆனார். கேர்ஷன் அண்ணா வந்த வேகத்தில் கவர், பாயிண்ட் என்று எல்லா இடமும் சராமாரியாக அடித்து முப்பத்து சொச்ச ரன்னில் ஆட்டமிழக்க, பின்னுக்கு வந்த பிரதீபன் அண்ணா, எப்படிப்போட்டாலும் வழிச்சு துடைக்கும் பட்ஸ்மன். இரண்டு சிக்ஸர் இறக்கிவிட்டு அவரும் ஆட்டமிழக்க சென்ஜோன்ஸ் 230 சொச்ச ரன்களில் ஆட்டமிழக்க, இரண்டாவது இன்னிங்க்ஸ் சோபை இழந்து போரிங்காக டிரோவில் முடிந்தது வருத்தமே.

1992ம் ஆண்டு. மத்திய கல்லூரியில் under 15 ஆட்டம் ஒன்று. பாடசாலை முடிந்து வீடு போகும் வழியில் பார்த்துவிட்டு போகலாம் என்று நானும், கீர்த்தி, ரங்கன் என்ற எங்கள் வழமையான திருநெல்வேலி/கொக்குவில் குரூப் மைதானப்பக்கம் சைக்கிளில் போகிறோம். சென்ஜோன்ஸ்-சென்றல் ஆட்டம் தான். சென்ஜோன்ஸ் துடுப்பெடுத்தாடுகிறது. அறைக்காற்சட்டை போட்டு thigh pad கூட காற்சட்டைக்குள்ளால் வெளியே தெரியும். அவன் சூரியனை பார்த்து வணங்கியவாறே மைதானத்துக்குள் நுழைகிறான். பன்னிரண்டு வயது சிறுவன். எங்கள் வகுப்பு தான். நடையில் ஒரு கர்வம் எப்போதும் இருக்கும். சிங்கம் போல. பிட்ச்சுக்குள் வந்து, சோக்கட்டி எடுத்து லெக் ஸ்டம்ப் பார்த்து, நிலை எடுத்து அத்தனை பீல்டர்ஸ் பொசிஷனும் பார்தது பந்தை எதிர்கொள்ள தயாராகிறான். வேகப்பந்து. இவன் எப்படி பெரியவங்கள் போடுற பந்தை சமாளிக்கபோகிறான் என்றதில் பார்க்கும் எங்களுக்கு ஒரு அசிரத்தை. முதல் பந்து, ஷோர்ட் ஒப் த லெந்தில் விழும் பந்துக்கு, இயல்பாக ஆரம்பத்தில் பாக்புட்டுக்கு போய் பின் வேகமாக புஃரொண்ட் புட்டுக்கு சென்று எக்ஸ்ட்ரா கவரில் …. சடக்கென்று ஒரு டிரைவ்!

தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தை ஒரு கலக்கு கலக்கிய, இன்றைய திகதிக்கு தமிழர்களில் இருந்து பிறந்த மிகச்சிறந்த கிரிக்கட் வீரனனான, the best ever cricketer never to have represented a national team, ஏ.டி.கௌரிபாகன் சிம்பிளாக அந்த டிரைவை அடித்துவிட்டு அடுத்த பந்துக்கு தயாராகிறான். தன் வரவை சத்தம்போடாமல் அறிவித்தபடி!.

இதன் இறுதிப்பாகம் செவ்வாய் இரவு வெளிவரும்!

நன்றி,

படங்கள் இணையம்.


34 comments :

 1. /தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தை ஒரு கலக்கு கலக்கிய, இன்றைய திகதிக்கு தமிழர்களில் இருந்து பிறந்த மிகச்சிறந்த கிரிக்கட் வீரனனான, the best cricketer who never represented a national team, ஏ.டி.கௌரிபாகன் சிம்பிளாக அந்த டிரைவை அடித்துவிட்டு அடுத்த பந்துக்கு தயாராகிறான். தன் வரவை சத்தம்போடாமல் அறிவித்தபடி!.
  ///
  உணர்ச்சிபூர்வமான வரிகள் அண்ணா!!என்ன ஒரு பேட்ஸ்மேன் கௌரி...!!

  அத்துடன் பல பள்ளிக்கால நினைவுகளை ஞாபகப்படுத்திய பதிவு!கலக்கல்!!

  ReplyDelete
 2. றூபன்10/07/2012 3:04 am

  #அறைக்காற்சட்டை போட்டு thigh pad கூட காற்சட்டைக்குள்ளால் வெளியே தெரியும்.# பந்தி ஆரம்பிக்கும் போதெ ஊகிக்க முடிந்தது அது கெளரிபாலன்தான் என்று.

  #தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தை ஒரு கலக்கு கலக்கிய, இன்றைய திகதிக்கு தமிழர்களில் இருந்து பிறந்த மிகச்சிறந்த கிரிக்கட் வீரனனான, the best cricketer who never represented a national team, ஏ.டி.கௌரிபாகன்# எவரும் மறுக்க முடுயாத உண்மை. அருமையான பதிவு

  அது சரி ஜே.கே எங்கட கொன்வெண்ட் பெட்டயளில உங்களுக்கு என்ன வெறுப்பு? சுண்டுகுளிய மட்டும் தூக்கலா சொல்லுறியள்? ஹா ஹா

  ReplyDelete
 3. ஹாய் அண்ணா,

  பதிவில் நிறைய இடத்தில் சிக்ஸர் அடித்திருக்கிறீர்கள். Chris Gayleலே தோற்றான். எதை சொல்வது என்றே தெரியவில்லை.

  Facebookல் வேம்படி அக்காமார் "Dislike" optionஇனை அறிமுகப்படுத்தச்சொல்லி Mark Zuckerberg அண்ணைக்கு ஒரு மனு கொடுக்கப்போறாங்க பாருங்க :P

  நாளைய பைனலைவிட, உங்கள் பதிவை நிறைய எதிர்பார்க்கிறேன்..

  ReplyDelete
 4. நன்றி மைந்தன்!

  ReplyDelete
 5. நன்றி ரூபன் ..

  //அது சரி ஜே.கே எங்கட கொன்வெண்ட் பெட்டயளில உங்களுக்கு என்ன வெறுப்பு? சுண்டுகுளிய மட்டும் தூக்கலா சொல்லுறியள்? ஹா ஹா/
  பெண்கள் எங்கள் கண்கள் பாஸ் .. கொன்வென்ட் பெண்கள் அதிகம் நெருக்கம் என்பதால் நேருக்கு நேரே சொல்லிக்கொள்ளுவோம்!!!

  ReplyDelete
 6. நன்றி விமல் ... வேம்படி பெண்கள் என்னைய பற்றி தப்பா நினைக்க மாட்டினம் .. நாங்க அவ்வளவு க்ளோஸ்! அவ்வவ்!

  ReplyDelete
 7. இதை தான் சொன்னேன் பழைய ஜேகே எட்டி பார்க்கிறான் என்று .... சில நாட்களாக வந்த பதிவுகள் விமர்சனம் எழுதக்கூடிய மாதிரி கவரவில்லை .மீண்டும் சொல்கிறேன் இப்படி எல்லாராலும் எழுத முடியாது உங்களை போன்ற சிலரால் தான் முடியும் .சில வேளை நமது காலத்தை ஞாபகபடுத்துவதாலோ தெரியவில்லை .....

  ReplyDelete
 8. ஓஹ், உங்கள் காலத்திலும் அந்தப் pp bag இருந்ததா? நாங்கள் ஏ/எல் படித்த 1987/88 இல் அது பிரபலம். அதிலும் இலகுவில் கிழிந்துபோகாத ஒரு variety நான் வாங்கினேன். அதுக்குள்ள ஒரு வட்ட எவர்சில்வர் சாப்பாட்டுப் பாத்திரம், அதில் நாசமறுந்த சைவச் சாப்பாடு (யாழ் இந்துவில் அசைவம்?? சான்ஸ்ஸே இல்லை). இதுதான் என் ஏ/எல் காலம்.

  கிறிக்கட் பதிவிற்கு பின்னூட்டத்தில் pp bag, சாப்பாடு என்று போகிறேன். அடுத்து சவர்க்காரத்தைப் பற்றி எழுதமுன் சுய தணிக்கை...

  ReplyDelete
 9. நன்றி கீதா ... எல்லாமே ட்ரை பண்ணவேண்டும் என்பது தான் ஆசை .. இதுவும் வரும் .. அதுவும் வரும் :) .. மீண்டும் மீண்டும் நன்றிகள் உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு.

  ReplyDelete
 10. சக்திவேல் அண்ணே .. //அதில் நாசமறுந்த சைவச் சாப்பாடு (யாழ் இந்துவில் அசைவம்?? சான்ஸ்ஸே இல்லை). இதுதான் என் ஏ/எல் காலம்.//

  வெட்ககேடு .. யாழ் இந்துவில் மச்சம் கொண்டு போய் சாப்பிடுவதில் தானே ஒரு கிக் இருக்கு? அவனவன் வேலி பாஞ்சு படம் பார்க்க வருவான் ... இதுக்கெல்லாமா பயப்பிடுவாங்கள்?

  சவர்காரம் விஷயம் சிறுகதை எழுதுவதாக இருக்கிறேன் .. அப்போது பார்ப்போம் :)

  ReplyDelete
 11. Your writings always makes be grounded. Forget about the war and all, I strongly think we all had the best childhood. Thank you JK.
  Vani  ReplyDelete
 12. >“அக்கா .. பின் சில்லுக்கு காத்து போயிட்டுது”

  நாங்கள் "அக்கா பின் சில்லுச் சுத்துது" என்போம். (அது அந்தக் காலம் )

  >“கொண்டையில் தாழம்பூ கூடையில் வாழைப்பூ நெஞ்சிலே என்ன பூ?”
  அடப் பாவிகளா :-)
  இந்தளவு துணிச்சல் இருந்ததில்லை.

  ReplyDelete
 13. அருமையான பதிவு,
  உண்மையில் உங்கள் பதிவை/ இணைப்பை தந்தவர், எனது நண்பரான Bhishman ஆவர். உங்களது பதிவுகள்,90 களில் எங்கள் "நாளாந்த கடமைகளை" அழகாக சொல்லுகிறது.
  எனக்கு தெரிந்த சிறிய திருத்தம்.. இங்கே கண்டியும் பதில் போட்டி இருக்கிறார், அவருக்கு கூடுதாக தெரியும்..அந்த 6 பேர் கொண்ட அணி,அரியாலை சன சமூக நிலையத்தை சார்ந்தது அல்ல. அது செயலக- கச்சேரி- அணி.
  அதே மாதிரி அந்த காலத்தில் சென்ட்ரல் இல் இருந்த இன்னுமொருவர்- SJC படித்து கொண்டு இவ்வளவு, மத்திய கல்லூரி, இந்து கல்லூரி ஆட்களை ஞாபகம் வைத்திருப்பதே மிகக்கடினம்- எனக்கு ஞாபகமான இன்னுமொருவர்- பெஞ்சமின் என்கிற சதிஸ்/ சதிஸ்குமார். அவர் UK கவுன்டி ஒன்ரின்க்கு தெரிவிற்கு(?) சென்றதாக சொன்னார்கள். அந்தகாலத்தில் இருந்த நாங்கள் சொல்லுகிற/கருதுகிற "தேசிய அணிக்கு" உரிய தகுதியில் இருந்தவர் என்று சொல்லாம்.

  கோபாலன் மத்திய கல்லூரி A / L 93

  ReplyDelete
 14. இது ஒரு வெறும் நனைவிடை தோய்தல் பதிவல்ல. இது ஒரு மக்கள் கூட்டம் அதன் மீது சுமத்தப்பட்ட சுமைகளை சுமந்தபடியே புன்னகைத்திருந்த ஒரு காலத்தின் காட்சித்துளி. ஜேகே எங்கோ ஒரு நாட்டில் ஏதோ ஒரு கணனியின் இருக்கும் எங்களை, அந்த சீருடைத்துணி காற்சட்டை போட்ட, சில்லறைகளை சேர்த்துவைத்து தன் ஐஸ்க்ரீம் கனவுகளை நிறைவேற்றும் யாழ்ப்பான சிறுவனாக மீண்டும் மாற்றிவிடுகிறார். பதிவை வாசித்து முடித்தபின் உள்ளங்காலில் நெருஞ்சியும், கடைவாயில் காய்ந்த ஐஸ்பழமும், தலையெல்லாம் புழுதியும் ஓட்டிக்கிடக்கிறதாய் ஒரு உணர்வு. வகுப்பில்லை எண்டு விடுற கதை எடுபடுமா எண்ட பயம் கூட அடிமனதில் மெல்ல எழுகிறது. கதை சொல்லும் போது ஆங்காங்கே, நூலகத்தை பற்றியும், கனவு அணியை பற்றியும் சொன்ன விடயங்கள் இந்த கதை களத்தை விட ஆழமான தளங்களுக்கு வாசகனை இட்டுச்செல்கிறது. அற்புதமாக இழைக்கப்பட்ட ஒரு பட்டுத்துணிபோல பறந்து விரிகிறது இந்த பதிவு. ஒவ்வொரு இழையும் நேர்த்தியாக, உரிய நீளத்தில் இழைக்கப்பட்டு இதயம் வரை படர்கிறது. இதைப்பற்றி எங்களால கதைச்சுக்கொண்டே இருக்கலாம், உங்களால மட்டுமே எழுத முடியுது.

  ReplyDelete
 15. 1992 m aandu yalpanathil minsaram ilai eapadi manikutu kopura seval kuviyathu manikudee odalayee apaaa 90 aam aandu kotai sandayoodu antha kopuram velayee seiyaalayeee

  ReplyDelete
 16. மிகச்சிறந்த ஒரு அனுபவ கட்டுரை மிகுதியை வாசிக்க காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 17. How did you recollect this much of past memories?
  என்ன ஒரு ஞாபகசக்தி

  ReplyDelete
 18. Thanks a lot Vani ... Despite of going through immense pressure and struggle, it was still our childhood, the only childhood we could ever have and we all enjoyed it to its maximum. There is never a place for a foul-cry.. no denial what's so ever ... That's our life and we always love it with its goods and bads.

  Cheers,
  JK

  ReplyDelete
 19. சக்திவேல் அண்ணா .. அதான் அந்தா பெரிய பதிவில சத்தம்போடாம எழுதியிருக்கிறோம்ள .. நீங்க என்னெண்டா கவனிக்காதவனுக்கும் எடுத்து குடுப்பீங்க போல :)

  ReplyDelete
 20. நன்றி கோபாலன் அண்ணா ..

  நீங்கள் சொன்னதை திருத்தீட்டன் .. அது கச்சேரி அணி தான் .. அணிக்கு தலைவர் அற்புதராஜாவோ யாரோ .. சரியாக பெயர் ஞாபகத்துக்கு வரேல்ல .. அவர் ஜோனியன்ஸ் கப்டினா இருந்தவர்!

  சதீஸ் அண்ணாவை இப்ப தான் ஞாபகம் வருது. அந்த சீசன் பூரா நல்லா செய்து பிக் மட்சில் சோபிக்கவில்லை .. மிஸ் பண்ணிவிட்டேன்.

  நன்றி எடுத்துக்கொடுத்தமைக்கு

  ReplyDelete
 21. நன்றி கேதா ... இத எழுதவேண்டும் என்று கனநாளாகவே மைண்டில ஓடிக்கொண்டிருந்தது. சரியான knot கிடைக்காதபடியா பிற்போட்டுக்கொண்டு வந்து இப்ப தான் எழுதினது. மீண்டும் மீண்டும் உணர்ந்து நீ கொடுத்த விமர்சனத்துக்கு நன்றி.

  ReplyDelete
 22. நன்றி பெயரில்லா நண்பரே.
  //1992 m aandu yalpanathil minsaram ilai eapadi manikutu kopura seval kuviyathu manikudee odalayee apaaa 90 aam aandu kotai sandayoodu antha kopuram velayee seiyaalayeee//

  ஆ அது காலையில் பிக் மட்ச் என்ற நினைவிலேயே நித்திரை கொள்ளும் சிறுவனுக்கு வரும் கனவு. மீண்டும் முதல் பந்தியை வாசித்துப்பாருங்கள். நன்றி.

  ReplyDelete
 23. நன்றி சுகர்மன் ... இப்போது தான் பலர் இந்த பாகத்தை வாசித்துக்கொண்டிருப்பதால் மற்றைய பகுதியை நாளைக்கு நிச்சயம் பதிவிடுகிறேன். (ஏற்கனவே எழுதியாச்சு)

  ReplyDelete
 24. வாங்க தன்யா.

  //How did you recollect this much of past memories?
  என்ன ஒரு ஞாபகசக்தி//
  அது பன்னிரண்டு பதின்மூன்று வயசு .. பசுமரத்தாணி எண்டு சொல்லுவாங்களே அது .. இலேசில மறக்காது!

  ReplyDelete
 25. நன்றி J K,
  உங்களது அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் :)
  அதேநேரத்தில், எனக்குபட்டது ஒன்றையும் சொல்ல விரும்புகிறேன்.
  இந்தகைய பதிவுகள் காலத்தின் தேவை என்றும் சொல்வேன். இன்றைய உலகில், யாரும் தட்டச்சு தெரிந்த எல்லோரும் blog வைத்து, தனக்கு தெரிந்தபடி கருத்து, கதை எழுதிகொண்டிருக்கிறார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் தான் கொழும்பில்(?) உள்ள தமிழ் இலக்கிய/ விளையாட்டு யம்பவான்கள். அவர்கள் யாழ்ப்பாணம் பற்றி எழுதும் போது, ஓங்கி இரண்டு போட்டால் தான் சரிவரும் மாதிரி எழுதுவார்கள். அவர்களில் பார்வையில், மகிந்த ராசா பக்ச விடுவித்த பின்புதான், யாழ்பாணத்தில் சனம் காடுவெட்டி களனி செய்கிறது என்று எழுதுகிறார்கள். யாழ்பாணத்தில் 100 வருடம் விளையாடியும் தேசிய அணிகளில் யாரும் இல்லை என்றால், அதுக்கு ஆயிரத்தெட்டு காரணம் சொல்லுவார்கள்- தாங்கள்தான் தெரிவு குழுவில் இருப்பது போல. ...இதை பற்றி பெரிதாக கதைக்காமல் விட்டுவிடுவோம்.
  எங்களுக்கு தெரிந்தை இன்னுமொரு சந்ததிக்கு சொல்லக்கூடியவாறு பதிய வேண்டும். உங்களைபோன்ற பதிவாளர்களின் பதிவுகள் அதை செய்யும் என்று நம்புகிறோம்.
  இத்தகைய பதிவுகளை, போட்டி (Big match) நடக்கும் போது வெளியிடப்படும் புத்தகத்தில் பதிந்தால் நன்றாக இருக்கும்.
  வாழ்த்துக்கள்
  கோபாலன்.

  ReplyDelete
 26. றூபன்10/10/2012 2:21 am

  //Ketha சொன்னது…
  இது ஒரு வெறும் நனைவிடை தோய்தல் பதிவல்ல. இது ஒரு மக்கள் கூட்டம் அதன் மீது சுமத்தப்பட்ட சுமைகளை சுமந்தபடியே புன்னகைத்திருந்த ஒரு காலத்தின் காட்சித்துளி//
  உண்மை அந்த காலப்பகுதியில் இருந்த சுவாரசியமும், பிடிப்பும் இப்பொழுது இல்லவே இல்லை. அதை மீட்டி பார்க்க வைத்த ஜே.கே ற்கு நன்றிகள்.

  ReplyDelete
 27. நன்றி கோபாலன் அண்ணே ...

  //இத்தகைய பதிவுகளை, போட்டி (Big match) நடக்கும் போது வெளியிடப்படும் புத்தகத்தில் பதிந்தால் நன்றாக இருக்கும். //
  தாராளமாக செய்யலாம் .. கொல்லைப்புறத்து காதலிகளை கூட சந்தர்ப்பம் கிடைத்தால் புத்தமாக கொண்டுவரவேணும் எண்டு கூட ஒரு கனவு இருக்கு .. பார்ப்பம்.

  ReplyDelete
 28. நன்றி ரூபன் ... எங்களுக்கும் வயசு போய்ட்டுதோ தெரியாது .. கவலை என்ன எண்டால் அடுத்த சந்ததி எங்கட சொந்த வீரர்களை கொண்டாடாமல் டிவி முன்னே பழியாக கிடப்பது தான். அதில் தவறு இல்லை .. ஆனால் ஊர் கிரிக்கட் என்பது திருவிழா இல்லையா? மிஸ் பண்ணுகிறார்கள்.

  ReplyDelete
 29. This comment has been removed by the author.

  ReplyDelete
 30. Gopikrishna
  செயலக அணிக்கு தலைமை தாங்கியது மகேந்திரராஜா. அவரும் ஜொணியன்ஸ் அணிக்குத் தலைமை தாங்கியவர்

  ReplyDelete
 31. அருமையான‌ ப‌திவு ஜேகே, மிக‌வும் அனுப‌வித்து எழுதியிருக்கிறீர்க‌ள், ந‌கைச்சுவை அங்கங்கே சும்மா தெறிக்குது....

  ReplyDelete
 32. நன்றி கோபிகிருஷ்ணா அண்ணா .. ஓமோம் .. அது மகேந்திரராஜா தான் .. நன்றி ஞாபகப்படுத்தியமைக்கு.

  ReplyDelete
 33. நன்றி யசோ அண்ணா.

  ReplyDelete
 34. நன்றி இதனை ஷேர் பண்ணவில்லை என்றால் நான் ஒரு ஜோனியன் இல்லை

  ReplyDelete