Skip to main content

ஆறா வடு


“ஆறா வடு” என்று ஒரு நாவல் வந்திருக்கு, இப்படி ஒரு எழுத்தை அண்மைக்காலமாக வாசிக்கவேயில்லை, நீங்க கட்டாயம் விமர்சனம் எழுதோணும் -- sayanthan-1திலகன்
தம்பி, நீர் மட்டும் சிட்னி வந்தா, “ஆறா வடு” புத்தகத்தை தருவன், வாசிச்சு பாரும். --சக்திவேல் அண்ணா
3 more stories...When I finished the stories I thought I should have born as an Australian-and live with no knowledge about it at all! -- தன்யா
ஜேகே, நான் உடுமலை.காம் இல இருந்து வாங்கி வைச்சிருக்கிறன். வாசிச்சு முடிச்சு இப்ப மனிசி வாசிச்சுக்கொண்டு இருக்கு. கதை நல்லா இருக்கு. ஆனா அவர் மற்ற கோஷ்டியா? -- சுகிந்தன் அண்ணா
ஜேகே, நீங்க கட்டாயம் வாசிக்கோணும். சயந்தனில இருக்கிற லிபரல் நக்கல் எப்பவுமே கலக்கும்.  -- கேதா
அண்ணா, நீங்க வாசிச்சிட்டு விமர்சனம் போடுங்க. யாரு வாசிக்காட்டியும் நீங்க வாசிக்கோணும். அப்ப தான் “எழுத்து” என்றால் உங்களுக்கு என்னவென்று விளங்கும்! – வீணா
சயந்தன் எழுதிய “ஆறாவது வடு” நூல் ஆஸ்திரேலியாவில் எவ்வளவு பிரபலம் என்பதற்கு இதைவிட வேறு எதை சொல்லமுடியும்? சுகிந்தன் அண்ணா, மனைவி வாசிக்க முதலேயே, கேட்டேன் என்பதற்காக பறித்து எனக்கு வாசிக்க தந்தார். இதையெல்லாம் ஏன் எழுதுகிறேன் என்றால், ஈழத்தில் இருந்து ஒரு எழுத்தாளர் வெளிவரும்போது, அதை எப்படி எங்கள் ஆட்கள் கொண்டாடுகிறார்கள் என்று சுட்டிக்காட்டத்தான். இந்திய மிமிக்ரி கலைஞர்களின் கலைவிழா ஒழுங்கமைப்பாளரிடம் “அடுத்த நிகழ்ச்சிக்கு சயந்தனை கூப்பிடுவோமா? நிறைய வரவேற்பு இருக்கிறது இங்கே” என்று சொல்ல, “யாரு தம்பி சயந்தன்? விஜய் டிவியா?”!

கதை என்ன? எங்கள் கதையின் ஒரு பகுதி தான். இந்திய அமைதிப்படை காலத்து சம்பவங்கள் தொட்டு 2002ம் ஆண்டு சமாதான காலம் வரை நடந்த பல சம்பவங்களின் தொகுப்பு. Non linear வடிவில், ஒரு பக்கம் வெளிநாட்டுக்கு கப்பலால் போக எத்தனிக்கும் அனுபவம், அமைதிப்படை காலத்தில் யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவமும், தமிழ் ஆயுதக்குழுக்களும் அடிக்கும் கூத்துகள். பின்னர் புலிகள் காலத்தில், அதன் உறுப்பினரின் பார்வையில் வரும் அனுபவங்கள் இப்படி, …. அமுதன் என்ற Narrator(கதை சொல்லி?) பார்வையில் போகும் கதை ஆங்காங்கே தாவி மற்றையவர்கள் கதைகளையும் சொல்லுகிறது. அந்த யுக்தி மூலம் சமாந்தரமாக சம காலத்தில் நடந்த பல சம்பவங்களை தொகுக்கக்கூடிய வாய்ப்பு சயந்தனுக்கு ஏற்பட்டிருக்கிறது. புது யுக்தி. இதுக்கு மேலே கதையை சொல்லுவது அழகில்லை. இது தான் கதையின் அடிநாதம் என்றும் ஒன்றை சொல்லவும் முடியவில்லை. இது ஒரு அனுபவக்குவியல், மீட்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் மனதை திடப்படுத்திக்கொண்டு வாசியுங்கள். ரமணிச்சந்திரன், லக்ஷ்மி வகையறா feel good வாசகர் என்றால் “ஆறா வடு” வை மறந்துவிடுங்கள்.
நாவலின் தனித்து தெரியும் விஷயம், வெற்றிபெறும் விஷயம் சந்தேகமே இல்லாமல் சயந்தனின் அங்கதம் தான். அடித்து விளையாடியிருக்கிறார். யார்? என்ன? என்று பார்க்காமல், “what the hell?” என்ற ஒருவித அலட்சிய ஆனால் ஆழமான, சும்மா இரண்டு வரிக்கு ஒரு முறை வந்து விழும் நையாண்டிகள் உடனே சிரிக்க வைத்தாலும் அப்புறம் பெருமூச்சு விட வைக்கும். சில நேரங்களில் முகம் சுழிக்கவும் செய்யும். எங்கள் வாழ்க்கை தானே!
சோறு ஒன்றை தருகிறேன். அமுதன் இயக்கத்தில் அடிபாட்டு குரூப்பில் இருந்தபோது எல்லாமே நன்றாக போய்க்கொண்டு இருந்தது. சண்டையில் ஏற்பட்ட காயத்தில் கால் போக, சொல்ல சொல்ல கேட்காமல் அரசியல் பிரிவில் சேர்த்துவிட்டார்கள்.
அரசியல் வகுப்பின் முதல்நாள், “யுத்தம் என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன?” என்றொரு கேள்வியை படிப்பிக்கவந்தவர் என்னை பார்த்து கேட்டார். நான் எழுந்து யோசித்தேன். பிறகு “யுத்தம் என்றால் அடிபடுறது, அரசியல் என்றால் அடிபாட்டை நிப்பாட்டிப்போட்டு பேச்சுவார்த்தைக்குப் போறது” என்று சொன்னேன்.
பதிலுக்கு அவர் இப்படிச்சொன்னார். “யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது இரத்தம் சிந்தா யுத்தம்.”
அந்தக்கணத்தில் அளம்பிலில் என் காலுக்குக் குண்டெறிந்த ஆமிக்காரன் மேலே எனக்கு ஆத்திரம் பத்திக்கொண்டு வந்தது. ‘உன்னால தாண்டா இந்த கோதாரியெல்லாம்’ என்று நான் பற்களை நறுமினேன்.
இது சும்மா சிங்கிள் தான். இதை விட டபில்ஸ், பௌண்டரி .. ஐந்தாறு சிக்ஸர் கூட இருக்கிறது. சயந்தன், எதுக்கும் நீங்கள் கதவுக்கு இரண்டு பூட்டு போடுங்கள். உடைத்தாலும் எவன் உடைத்தான் என்று கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு பரந்துபட்ட பார்வை!
சயந்தனின் இந்த வகை புட்டு புட்டு வைக்கும் அங்கத நடை வெறும் வசனங்களோடு முடியவில்லை. சம்பவங்களிலும் அடிச்சு சாத்தியிருக்கிறார்! உதாரணத்துக்கு அந்த சோலாபுரி சம்பவம், பண்டாரவன்னியன் கதை … ஆனால் இந்த வகை அங்கதம் மொத்த நாவலுக்குமே இருக்கிறதா என்றால் இல்லை. அந்த முடிவு அது வேறு தளம். Sattire ஐ வசனங்களுக்கும் சம்பவங்களுக்கும் மட்டுமே மட்டுப்படுத்திவிட்டார்.
அந்த கப்பல் பயணம். என்ன ஒரு விவரணம்! ஒரு முறை லங்கா முடித்த சரக்கு கப்பலில், கொழும்பு போன போது, ஆயிரத்து ஐநூறு பேர் ஒரே கப்பலில். ஐந்தாறு, கடலுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கழிப்பறைகள்! அவசரத்துக்கு ஒண்ணுக்கு வந்துவிட, கியூ நீளம் என்பதால், நானும் நண்பனும் கப்பலில் கயிறுகள் குவித்திருக்கும் பகுதிக்குள் ஒதுங்கியபோது அங்கே பத்து பேர் ஏற்கனவே இரண்டாம் உலகத்தில் இருந்தனர்!  உங்கள் கதையில் வரும் கப்பல் பயண அனுபவங்களோடு ஒப்பிடும்போது என்னுடையது நத்திங். ஆனாலும் ரிலேட் பண்ணி பயணிக்கமுடிந்தது. அருமை.
நாவல் செய்யும் அரசியல் தனிவகை. சயந்தனுக்கு எந்த வித அரசியல் சித்தாந்தங்களும் இல்லை. அல்லது அது எல்லாவற்றையும் கடைப்பிடித்து, ஏமாந்து, விரக்தியடைந்ததாலும் இருக்கலாம். அதனால் ஒன்றை கொண்டாடி, இன்னொன்றை மறைத்து, சிலதை புனைவுபடுத்தும் முயற்சிகள் எங்கும் இல்லை. எல்லாமே எதிர்ப்பு அரசியல் தான். இந்திய ராணுவம், இலங்கை ராணுவம், EPRLF, புலிகள், சந்திரிக்கா, சாதாரண பொதுமக்கள் என எல்லோரும் வசமாக வாங்கிக்கட்டுகிறார்கள். வாசிக்கும் போது ஒரு வித எரிச்சல் வருகிறது, ஒரு கோபம், ஒரு விரக்தி வருகிறது என்றால், வாசகர் நாங்கள் “ஆறா வடு” நாவல் பாத்திரங்களில் எங்களுக்கு தெரிந்தவர்களை வைத்து பார்க்கிறோம் என்று அர்த்தம். இதனால் சில தெரிந்தவர்களை சயந்தன் எள்ளி நகையாடும் போது கோபம் வருகிறது! சிலவேளைகளில் சில பாத்திரங்களை வாசிக்கும்போது “அடிடா அந்த நாயை” என்று நாங்களும் சேர்ந்து கூவவேண்டும் என்று மனம் சொல்லுகிறது. எங்கள் மன விகாரங்களை ஏற்றுக்கொள்ளும் தைரியம் எங்களுக்கு இன்னும் வரவில்லை சயந்தன்!
இலக்கியத்தில் Transgressive writing என்று ஒன்று இருக்கிறது. வதைகள், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை, நிகிலிசம்(Nihilism) என்று சொல்லக்கூடிய ஒரு அழகான, சாதாரண வாழ்க்கையின் முழுமையான எதிர்மறை வாழ்க்கை, இவற்றை பாசாங்கு இல்லாமல் எழுதுவது தான் transgressive literature. தமிழில் சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் இதை வெறும் தனி மனித உளவியல் பிரச்சனை, செக்ஸ் என்ற விஷயத்துக்குள் அடக்கி விடுவார்கள். சுஜாதா லைட்டாக எழுத நினைப்பார். ஆனால் ஒரு ஆயுதப்போராட்டம், இன ஒடுக்குமுறை சார்ந்த சமூகத்தில் இருந்து இந்த வகை எழுத்து வரும்போது தான் அது உண்மையான transgression.  ஒரு மனநோயாளி செய்யும் பாலியல் வல்லுறவுக்கும், சந்தர்ப்பமும் அதிகாரமும் இருக்கும் போது சென்றிபாயிண்டில் இராணுவம் செய்யும் வல்லுறவுக்கும் நிறைய வித்தியாசம். முன்னையது தனி மனித, சுற்றம் சார்ந்த விகாரம். பின்னையது ஒரு நாடு, இனம் அதன் கலாச்சாரம் சார்ந்த விகாரம். இந்த வகை வாழ்க்கையை ஒரு வித sattire உடன் எழுதும்போது அவை உலக இலக்கியம் ஆகிறது. ஆகியிருக்கின்றன. ஷோபாசக்தியின் “ம்” என்ற நாவல் இந்த வகையது. அதில் அவரின் அரசியல் பார்வை வேறு இருப்பதால், நாவலின் இலக்கியத்தரம் பலரால் பார்க்கப்படுவதில்லை. சயந்தன் தமிழில் ஒரு நிஜமான Transgressive இலக்கியத்தை படைக்கலாம் என்ற நம்பிக்கையை “ஆறா வடு” அளிக்கிறது.
ஈழத்து போராட்ட வாழ்க்கை, ஏதோ மிகப்பயங்கரமானதும், வாழ முடியாததும் போன்ற தோற்றப்பாட்டை நாவல் ஏற்படுத்துகிறது. இருபது வயசு வரை வடக்கிலும், இன்னொரு ஐந்து வருஷங்கள் கொழும்பிலும் இருந்தவன், இந்த கதையில் நடந்த நிஜ வாழ்க்கை சம்பவங்கள் பூராவும் நினைவு தெரிந்த நாட்களில் என்னை சுற்றி நடந்தன என்ற உரிமையில் சொல்லுகிறேன். எங்கள் வாழ்க்கை அவ்வளவு மோசம் கிடையாது! உயிர் எப்போது போகும்? எவன் எப்ப வந்து தூக்குவான்? இந்த எல்லா சிக்கல்களும் இருந்தாலும், எங்களுக்குள் மிகவும் …. மிகவும் அழகான, அட இனி அப்படி ஒரு வாழ்க்கை அமையாதா? என்று ஏங்க வைக்கக்கூடிய ecstatic வாழ்க்கை ஒன்று இருந்தது. அதை செங்கை ஆழியான் அருமையாக எழுதுவார்.  அந்த பதினைந்து வருஷ வாழ்க்கையை தான் எழுதுவதென்று தீர்மானித்திருந்தால், ஏன் இந்த விஷயம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று புரியவில்லை.  

sayanthan-150x150சயந்தன், இது உங்கள் முதல் நாவல் என்கிறார்கள். நிச்சயம் நீங்கள் எழுத்துலகில் சிறுவயது முதல் நிறைய எழுதியிருக்கிறீர்கள் என்றும் புரிகிறது. அதுவே உங்களுக்கு எமன்! முதல் நாவல், எதை எடுக்க? எதை விட? என்ற குழப்பத்தில், எல்லாமே வந்து விழுந்துவிட்டது. 87இல் இருந்து 2002 வரை உள்ள ஈழப்போராட்ட வரலாற்றை செங்கை ஆழியானால் பத்து புத்தகங்கள் தாண்டியும் எழுதி முடிக்க இயலவில்லை. பதினைந்து வருஷங்களில் நடந்த விஷயங்களை நாவல்களாக எழுத பத்தாயிரம் பக்கங்களே போதாது என்ற நிலையில் வெறும் இருநூறு பக்கங்களுக்குள் என்னத்தை எழுதிவிட முடியும்? அதை யோசித்து இருந்தால் narration இல் கோட்டை விழுந்திருக்காது என்றே என் சிற்றறிவுக்கு படுகிறது. அமுதன் பார்வையில், “நான்” என்ற narrative விளிப்புடன் பயணிக்கும் கதை, ஏன் இந்திய இராணுவ காலத்தில் “இவன்” ஆகிறது? அதற்குள் சிவராசன், நிலாமதி, தேவி என பலரின் கதை. ஒவ்வொன்றும் முத்துக்கள். சிறுகதைகள். ஆனால் தொகுப்புக்கு பொருந்தவில்லை. “நான்” என்பதை “அமுதன்” என்று மாற்றி third person narration இல் சொல்லியிருந்தால் ஓரளவுக்கு போருந்தியிருக்கலாம். ஆனால் “நான்” இல்லாமல் அந்த நக்கல்களை அடித்தால் கருத்து கூறுவது போன்று ஆகிவிடும். உங்கள் சங்கடம் புரிகிறது. கொஞ்சம் மனதை கல்லாக்கிக்கொண்டு எடிட் பண்ணியிருந்தால் “ஆறா வடு” ஆறாமலேயே மனதில் எப்போதும் உட்கார்ந்திருக்கும்!
கடைசியில் அமுதன் கடலில் தத்தளிக்கும் போது இவன் தான் அந்த ஈபி காரனா? புலியா? இவன் விலகிட்டானா? கோடு தானே கீறினான்? எப்போது விலகினான்? என்ன நடக்குது? என்ற குழப்பம் வர ஆரம்பித்து விட்டது. Non linear கதை களனின் பாத்திரங்கள் ஒரு சிலவாக இருந்தாலேயே எங்களால் அவற்றோடு ஒன்றி பயணிக்கமுடியும். முடியவில்லை. போதாக்குறைக்கு இரிதிரிஸ் என்று ஒரு பாத்திரம் வருகிறது. கொஞ்சம் தத்துவார்த்த அறிமுகம். அறிமுகம் செய்யவேண்டிய தேவை புரிகிறது. அதன் அரசியல், அதை புகுத்தவேண்டும் என்ற உங்கள் ஆர்வம் ஆச்சர்யம். ஆனால் புகுத்தியவிதம் …. தப்பாட்டம் சயந்தன்!
ஒரு நாவலின் கடைசி ஐம்பது பக்கங்களில் (முன்னூறு பக்க நாவல் என்று வைப்போமே) புதிதாக ஒரு உப கதையையோ அல்லது பாத்திரத்தையோ அறிமுகப்படுத்தகூடாது என்பது நியதி. புகுத்துவதானால் முன்னம் எப்போதோ எங்கேயோ அந்த நாவலில் அட்லீஸ்ட் கோடியாவது காட்டியிருக்கவேண்டும் என்பது தார்மீக எழுத்து நெறி.
Any appearances within the last 50 pages of a novel or last 30 pages of a script should have been foreshadowed earlier, even if mysteriously
சுஜாதா இதை படிச்சு படிச்சு சொல்லுவார். கடைசியாக ஒரு அண்ணனையோ தம்பியையோ திடீரென்று கொண்டு வருவது தப்பாட்டம் என்பார். பிரிவோம் சந்திப்போம் மதுமிதா, முதல் பாகத்திலேயே ரகுவை காதலித்து/காதலிக்காமல் குழம்புவாள். ரகுவும் குழம்புவான். இரண்டாம் பாகம் முடிவில், திரும்பவும் மது வந்து ரகுவை குழப்ப, இந்த சனியன் ரத்னாவை விட்டு விட்டு மீண்டும் குழம்பபோகிறான் என்று வாசகர்கள் அனைவரையும் கோபம்கொள்ள வைப்பார் இல்லையா? சுஜாதா வசனம் எழுதிய ரோஜா படத்தில்  காஷ்மீர் தீவிரவாதி வாசிம்கானை கைதுசெய்யும் காட்சி ஆரம்பத்தில் வரும். அப்புறமாக கதை திருநெல்வேலியில் உள்ள குக்கிராமத்துக்கு நகர்ந்து, சென்னைக்கு தாவி, பின்னர் காஷ்மீருக்கு ரிஷியும் ரோஜாவும் போக போகிறார்கள் என்ற போது பார்வையாளனையும் என்ன நடக்கபோகிறது என்பதற்கு கொஞ்சம் தயார்படுத்திவிடுவார். இறுதியில் அந்த வாசிம்கானை மையப்படுத்தியே காட்சிகளின் நோக்கம் நகரும். என்னை கேட்டால் இரித்திரிஸ் வரும் அந்த கடைசி அத்தியாயம் கொஞ்சம் எடிட் செய்யப்பட்டு நாவலின் முதலாவதாக வந்திருக்கவேண்டும்.  இது உங்கள் நாவல் தான். ஆனால் வாசகனாய், கிரிக்கெட்டில் இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என்று மைதானத்துக்கு வெளியே நின்று கொண்டு விமர்சனம் செய்யும் பார்வையாளன் நான்! சச்சின் 99இல் ஆட்டமிழக்கும் போது “என்ன ப்ளேயர் இவன்? இவனுக்கு ஒரு ரன் கூடவா அடிக்க தெரியாது” என்று சொல்லுவேன். அப்போது அவர் அடித்த 99ரன்கள் மறந்துவிடும். ஆடாமல் இருக்கும் வரை அந்த வசதி எப்போதும் இருக்கிறது!
சயந்தன், இந்த விமர்சனம் “ஆறா வடு” நூலை எப்படி புரிந்துகொண்டேன் என்ற அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். இரண்டு முறை வாசித்தால் சிலவேளைகளில் என் அபிப்பிராயம் மாறுபடலாம். ஐந்து முறை வாசித்தால் இன்னமும். இதையே வன்னியில், சுற்றம் முற்றம் எல்லாம் இழந்த ஒருத்தனாய் வாசித்திருந்தால் வேறு தளமாய் இருந்திருக்கும். விமர்சனம் என்பது ஒரு சட்டத்தில் இருந்து வருவதால், இன்னொருவர் வாசிப்புக்கும், எழுத்தாளர் உங்கள் சிந்தனைக்கும் என் வாசிப்பு அனுபவம் பொருந்தவேண்டும் என்றில்லை. என்னடா இவன் கொஞ்சம் அதிகப்பிரசிங்கித்தனமாக எழுதுகிறானே என்றும் நினைக்கக்கூடும். எனக்கு இதுதான் பிடிக்கும். “நன்றாக இருக்கிறது, தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு எழுத்தாளர்” வகை ஸ்டேடஸ் கமெண்ட் போட்டுவிட்டு போவதில் இஷ்டமில்லை. வெறும் குப்பை என்று கிழித்துபோடும் சாருவும் இல்லை!
சினிமாவில், “கில்லி” மாதிரி ஒரு படம் என்றால் வெறுமனே “நல்ல படம்” என்று சொல்லிவிட்டு போகலாம். அதுவே “ஹே ராம்” என்றால், ஆற அமர விமர்சிப்போம் இல்லையா? ஒரு கட்டத்தில் “ஹே ராம்” நல்ல படம் என்பதையும் தாண்டி, விமர்சனங்கள் போய்க்கொண்டிருக்கும். ஆறா வடுவுக்கு கிடைக்கும் அந்த வகை விமர்சனங்கள் தான் உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.
உங்கள் அடுத்த புத்தகம் இதை விட அதிக விமர்சனங்களை கிளரும் என்ற நம்பிக்கையில், சந்திப்போம்!

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக