Skip to main content

கதை சொல்லாத கதை!

 

2010_Panorama_Kurukshetra_01

ஏகலைவன் கவலையோடு தனது வலக்கை பெருவிரல் இருந்த இடத்தை தடவிக்கொண்டிருந்தான். குருஷேத்திரம் போர் தொடங்கி மூன்றாவது தினமே கரண்ட் தடைப்பட தொடங்கியது. இன்றைக்கு பதின்மூன்றாவது நாள். ஒரு நாளைக்கு அரை மணித்தியாலம் படி கரண்ட் தந்தாலாவது மோட்டர் போடலாம். ஒரு கையால் எக்கி எக்கி தண்ணி அள்ள சீவன் போகிறது. யோசித்துக்கொண்டே மனைவி குணாட்டி தந்த தேனிர் கோப்பையை இடக்கையால் வாங்கிக்கொண்டே ரேடியோவை திருகினான்.

“ஒலி 96.6, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது குரு எப்.எம்மின் குருஷேத்திரம் சிறப்பு செய்திகள். போர் ஆரம்பித்து பதின்மூன்றாவது நாளான இன்று தந்திரோபாய பின்னகர்வில் சிக்குண்டு, சக்ரவியூகத்துள் புகுந்த பாண்டவரின் சிரேஷ்ட படைத்தளபதி அபிமன்யுவும் அவனோடு சேர்ந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட படையினரும் பலி. இருநூறுக்கும் மேற்பட்ட யானைகளும் பெருந்தொகையான ஈட்டிகளும் ..….”

அவசர அவசரமாக ஏஎம்முக்கு மாற்றினான்.

“இது பாண்டவர் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் தமிழ் செய்திகள். வாசிப்பவர் விதூரன். பதின்மூன்றாம் நாள் போரிலே ஆயிரக்கணக்கான கௌரவ அரக்கர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். யுத்த விதிகளுக்கு மாறாக, கௌரவர் நிராயுதபாணியாக நின்ற அபிமன்யு மீது அம்புதொடுத்து படுகொலை செய்துள்ளனர். அவரோடு ஏழு படைவீரர்கள் சிறுகாயங்களுக்கு உள்ளானார்கள். அஸ்தினாபுரத்து மக்களை கௌரவரிடம் இருந்து காக்கும் தர்மத்தின் போரில் …”

நாள் முழுக்க எப்எம்முக்கும் ஏஎம்முக்கும் மாத்தி மாத்தி திருகியதில் பட்டறி கொஞ்சம் இறங்கிவிட்டது போல இருந்தது. சத்தம் மொனோ ரேடியோவில் சன்னமாகவே கேட்டது. நிஷாத இராச்சியத்தின் மன்னன், இப்படி இடம்பெயர்ந்து பெயர் நுழையாத தெரியாத ஊரிலே, அக்கம்பக்கத்தார் தரும் உதவியில் வாழ்வதை நினைக்க மாவீரனான ஏகலைவனுக்கு அவமானமாய் இருந்தது. ச்சே குருநாதர் துரொணரும் சாவெய்திவிட்டார். நானோ போருக்கு போகாமல் திண்ணையிலேயே உட்கார்ந்து ரேடியோ கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்று எண்ணி அவன் மனம் வெதும்பினான். பீஷ்மரை கூட சிகண்டிக்கு பின்னால் இருந்து அம்பெய்து கொன்றிருக்கிறார்கள். “அர்ஜூனன் ஒரு பொட்டை பயல்” என்று கொச்சைத்தமிழில் வரலாற்று கதை என்பதையும் மறந்து கொஞ்சம் சத்தமாகவே திட்டினான் ஏகலைவன்.

“நீங்கள் ஏன் வருந்துகிறீர்கள், அவர்கள் தான் உங்களை போரிடமுடியாதவாறு நாட்டை விட்டே துரத்திவிட்டார்களே. பற்றாக்குறைக்கு பெருவிரலை கூட கொய்து … எல்லோரும் வீரர்கள் தானே! ஒற்றுமையாய் இருந்திருந்தால் இன்றைக்கு பாண்டவர் இவ்வளவு ஆட்டம் போடுவார்களா? போயும் போயும் குரு சாம்ராஜ்யத்தையே எதிர்த்து போரிடும் துரோகி அர்ஜூனனுக்காக உங்களை வாளாவிருக்கவிட்டார்களே .. இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்”

29998ekalavya_fகுணாட்டி ஒவ்வொருநாளும் கணவனின் வலக்கையை பார்த்து புலம்பாத நாள் இல்லை. தன்னை துரத்திவந்த கொடிய நாயின் குறுக்கே பாய்ந்து, அதன் வாய் மீது அம்புகள் ஆயிரம் விட்டு அடிபட்டு ஓடவைத்து, யாரவன் என்னை காப்பாற்றியது என்று அவள் திரும்பிப்பார்ப்பதற்குள் அது நடந்தேவிட்டது. துரோணர் கேட்கமுதலேயே அவன் விரலை வெட்டிக்கொடுத்ததை தன் கண்முன்னாலேயே பார்த்த அவள் துடித்துப்போய்விட்டாள். கோபமும், பாசமும், காதலும் ஒரு சேர, அவனை ஓடிவந்து கைபிடித்து சேலையை கிழித்து கை முடிந்து.."

அப்படி சொல்லாதே குணாட்டி… நாயை கொன்றது என் தவறு, உண்மையான சத்திரியன் தன் அம்பை பலமுள்ள எதிரிமீதே தொடுப்பான். குரைக்கும் நாய் மீது தொடுத்தது தவறல்லவா? குருவை வையாதே, தவிரவும் தவறு விடாத மனிதர் தான் ஏது? .. ஒரு நேரிய லட்சியத்துக்கு போரிடும் போது சில தவறுகள் ஆங்காங்கே நடக்கலாம் தானே, பெரிது பண்ணாதே. நல்லதை பார்க்கமாட்டாயா? தேரோட்டி மகன் கர்ணனை அவர்கள் கொண்டாடவில்லையா? தளபதி ஆக்கவில்லையா? அவர்கள் இன்றைக்கு எம்மோடு இல்லாமல் இருந்தால் எம்மினத்தின் நிலையை கொஞ்சம் எண்ணிப்பார்.

ஏகலைவன் எந்த நிலையிலும் துரோணரையோ, கௌரவரையோ விட்டுக்கொடுக்கமாட்டான். பெருவிரல் போனாலும் நான்கு விரல்களைக்கொண்டு இன்றைக்கும் நாணேற்றி அம்பு தொடுத்தானானால் சாட்சாத் இராமபிரான் வந்தால் கூட அவனோடு நேருக்கு நேர் போருதமுடியாது. ஆனாலும் குரு சொல்லிவிட்டாரே என்ற வைராக்கியத்தில் அந்த சம்பவத்துக்கு பிறகு வில்லை தூக்கினானில்லை. வெறும் குறுநில மன்னனாக பீஷ்மகன் மகள் ருக்குமணிக்கு கல்யாண தரகு வேலை பார்த்துவந்தான். அந்த வேலைக்கு கூட கிருஷ்ணன் உலை வைத்துவிட்டான். திருமணம் பேசியிருந்தசமயம் பார்த்து ருக்குமணி தேவியை கடத்திக்கொண்டு போய் பெண்டாண்டு விட்டான். கிருஷ்ணனை நினைக்க நினைக்க ஏகலைவனுக்கு கோபம் தலைக்கேறியது.

“இவன் கிருஷ்ணா ஒரு திருட்டு நாதாரி, திட்டமிட்டு ஒவ்வொரு காயாய் நகர்த்தி, கௌரவர் பலத்தை குறைத்திருக்கிறான். கர்ணனின் கவச குண்டலங்களை பறித்து, குந்தியை காட்டி அவனிடம் நாகாசுரத்தை ஒரு தடவைக்கு மேல் அர்ஜுனன் மீது ஏவ மாட்டேன் என்று வாக்கு வாங்கி, சண்டை தொடங்கும் நாளில் திருகுதாளம் செய்து, துரோணரை ஏமாற்றி கொன்று … விதூரரை போரிடவிடாமல் செய்து .. பாவம் அவர் நியூஸ் வாசிக்கிறார்!”

குணாட்டி தயங்கி தயங்கி கேட்டாள்.

“கிருஷ்ணா தான் கடவுள் என்கிறார்களே எல்லோரும், அவரிடம் தானே போய் கையேந்துகிறார்கள்?”

ஏகலைவன் பெரிதாக சத்தம் போட்டு சிரிக்கத்தொடங்கினான்.

“அப்படித்தான் சொல்வார்கள். இனிமேல் கதை இன்னமும் தலைகீழாகும். நீயும் இருக்கமாட்டாய். நானும் இருக்கமாட்டேன். அடுத்த சந்ததிக்கு கதையை மாற்றிவிடுவார்கள். ஏதோ கௌரவர் தான் நாட்டை பிடித்து வைத்திருந்ததாகவும், பாண்டவர் சேனை நாட்டை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டதாகவும் வரலாற்றை மாற்றிவிடுவார்கள். அத்தனை அதிரதரும், கிருஷ்ணாவும் பாண்டவருடன் சேர்ந்து செய்த அநியாயத்தை சொல்ல யார் இருக்கப்போகிறார்கள்?”

குணாட்டியால் இதை நம்பமுடியவில்லை. அப்படியே வரலாற்றை மாற்றமுடியுமா என்ன? ஐந்து சகோதர்கள் சேர்ந்து செய்த அநியாயம் கொஞ்ச நஞ்சமா? அபலைப்பெண் திரவுபதியை துரத்திக்கொண்டு அரசவை மட்டும் வந்துவிட்டார்களே கிராதகர்கள். இதெல்லாவற்றையும் வரலாறு மன்னிக்குமா? கண் தெரியாத திருதராஷ்டிரனை தோளில் தூக்கி கொண்டாடிவிட்டு சுதந்திரம் கிடைத்தவுடன் ஏறி மிதித்தார்களே.. அதைத்தானும் மறைக்கமுடியுமா? நாடு தருகிறோம், பாதி தருகிறோம், சமவுரிமை தருகிறோம் என்று ஆசை காட்டி தலைவர்கள் எல்லோரையும் மோசம் செய்தார்களே .. அதையும் தான் மறுக்கமுடியுமா? பாண்டவர் கௌரவருக்கும் அத்தினாபுரத்துக்கும் செய்த அநீதி கொஞ்ச நஞ்சமா? மறக்குமா? ம்ஹூம் .. சந்தர்ப்பமேயில்லை. அநீதி ஒருபோதும் தோற்பதில்லை. குணாட்டிக்கு நம்பிக்கை பிறந்தது.

“தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும்”

அடி பேதைப்பெண்ணே உனக்கு என்ன சொல்லி புரியவைப்பேன்? தர்மம் அதர்மம் எதுவாகினும் அது வெற்றிபெற்றவனால் எழுதப்படுவது தானே. வென்றவர் பக்கம் தான் தர்மம் என்று காலம் காலமாய் வரலாறு எழுதப்பட்டிருப்பதை நீ அறிவாயா? இங்கே பலசாலி வாக்கு தான் பலநாள் நிலைக்கும். தர்மம் அதர்மம் எல்லாம் வெறும் போலி வார்த்தைகள் தான். மனதுக்குள்ளேயே நினைத்துக்கொண்டு ஏளனச்சிரிப்பொன்றை உதிர்த்தான் ஏகலைவன்.

“ஏன் சிரிக்கிறீர்கள் நாதா? நான் சொல்வது உங்களுக்கு பகடியாக இருக்கிறதா?”

“நீயே இருந்து பார்க்கத்தான் போகிறாய், ஒருவேளை இந்த போரில் எங்கள் பக்கம் தோற்று அழியும் நிலை வந்தால், அந்த  அழிவுக்கு பின் சில காளான்கள் முளைக்கும். தாமே எம்மை மீட்க வந்த தலைவர்கள் என்று சொல்லும். அதர்மம் வழியே நடந்த போர் என்பதால் தான் தோற்றோம் என்று பாண்டவர் துதி பாடும்! நம்மால் ஒன்றுமே செய்யமுடியாது”

பேசிக்கொண்டே ஏகலைவன் ரேடியோவின் பட்டறியை கழட்டி, வாயால் கடித்து நசுக்கிவிட்டு மீண்டும் போட்டு ஒன் பண்ணினான்.  குரு எப்.எம் இரைச்சலாய் கேட்டது.

“சற்று முன் நடந்த கொடூர சண்டையில் தளபதி கர்ணனின் பன்னிரெண்டு வயது மகன் வீரஷசேனா கொடூரமான முறையில் போர்க்களத்தில் அர்ஜுனனால் படுகொலை செய்யப்பட்டார். இந்த அதிபாதக செயலை ..…”

காலையிலேயே இருள் கவ்வியிருந்தது. ரேடியோவை நிறுத்திவிட்டு ஏகலைவன் செய்வதறியாது கூரையை அண்ணாந்து வெறித்துப்பார்க்க தொடங்கினான். கால்கள் மெதுவாக நடுங்க ஆரம்பித்திருந்தது. இதுவரை அணைந்திருந்த மின்குமிழ் திடீரென்று மின்ன தொடங்கியது. ஐந்து வினாடிகள் கூட ஆகியிராது. விட்டில் பூச்சிகள் மேக இருட்டில் கூட டக் என்று வந்து மின்குமிழில் ஒட்டிக்கொண்டன.

“அம்மா பல்ப் எரியுது ….கரண்ட் வந்திட்டு … டீவிய போடட்டா? மகாபாரதம் தொடங்கியிருக்கும்”

“பொறு தம்பி, முதல்ல மோட்டர போடு .. தண்ணி டாங் நிரம்பட்டும். லோட் காணாட்டி எல்லா லைட்டையும் ஒருக்கா நிப்பாட்டு”

இந்திய அமைதிப்படை யாழ்ப்பாண டவுனுக்குள் நுழைந்து ஆறுமாதங்களாகியிருந்தது. பத்து தொடக்கம் பதினொரு மணிவரைக்கும் மின்சாரம் கிடைக்கும். மகாபாரதம் டெலிசீரியலும் அதே நேரம் தான். முன் வீட்டில் பாட்டு ஆரம்பித்துவிட்டது. குமரனின் மனதில் எழுத்தோட்டம் ஆரம்பித்துவிட்டிருந்தது. இரண்டு படைகளும் மோதும்போது “மகாபாரத்” என்று ஹிந்தியில் விழும். அப்புறம் ஆங்கிலத்தில்.  “அக்ரஸ்ரீ மகாபாரத கதா! மகா பாரத்து கதா! கதாகே புருஷாத்துகி”, எழுத்தோட்டம் முடியப்போகிறது. “அஞ்சு நிமிஷத்துக்க தண்ணி டாங் நிரம்பிடோனும். சங்கூதப்போகிறார்கள்”

அம்மா தொடங்கப்போகுது .. நானே வேணுமெண்டா அன்ரி வீட்ட போய் பார்க்கட்டா?

கை கால் முறி வாங்கப்போறியா? இரு .. நிரம்பட்டும்

Was Draupadi Disrobedகுமரனுக்கு கண்ணெல்லாம் கலங்கிவிட்டது. போன வாரம் தான் கெட்டவன் துச்சாதனன் பாஞ்சாலியை துகிலுரிய ஆரம்பித்திருந்தான். கிருஷ்ணர் வந்து காப்பாற்றவேண்டும். வரமுதல் தொடரும் போட்டுவிட்டான் படுபாவி. பார்க்கமுடியவில்லை என்ற ஏக்கம் ஒருபுறம். பாஞ்சாலி காப்பற்றப்படவேண்டுமே, கிருஷ்ணன் சரியான தருணத்தில் வந்துவிடுவானா என்ற கலக்கம்.தண்ணி டாங் நிரம்பி வழியும் சிலமனை காணும்.. பாஞ்சாலிக்கு என்ன ஆகியிருக்கும் .. கிருஷ்ணா ..

ஐய நின்பத மலரே-சரண் … ஹரி,ஹரி,ஹரி

 

“History is always written by the winners. When two cultures clash, the loser is obliterated, and the winner writes the history books-books which glorify their own cause and disparage the conquered foe. As Napoleon once said, 'What is history, but a fable agreed upon?”

Dan Brown, The Da Vinci Code

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக