Skip to main content

காடு திறந்து கிடக்கிறது!

 

நீர்வீழ்ச்சியே தான். ஸ்ஸ்ஸ் என்ற பரிச்சயமான சத்தம். சத்தம் வரும் திசையில் இரண்டு நாள் நடந்தால் அடைந்துவிடலாம். முதலில் குளிக்கவேண்டும். உடல் முழுதும் உள்ள கீறல்கள், அதில் உள்ள ரத்த திட்டுகள், அழுக்குகள், பச்சை இலை வாசனை எல்லாமே போகும்வரை தேய்த்து குளிக்கவேண்டும். அவசரமாக போகலாம் என்றால் போகும் பாதை அத்தனை அழகு. மிரட்டும் அழகு. எங்கேயும் பூக்கள். எல்லாமே பூக்கள். பார்த்தால் அன்று முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல .. அவ்வளவு அழகு.

“நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”

அபேர்ச்சர் நன்றாக குறைத்து மஞ்சளும் சிவப்பும் கலந்த அந்த காட்டுப்பூவை நெருங்கி போஃகஸ் பண்ண கை தடுமாறிக்கொண்டிருந்த நேரம் தான் அந்த குரல். பரிச்சயமான குரல். இந்த காட்டில் .. நானே வழி தடுமாறி அலைந்துகொண்டிருப்பவன். இந்த இடத்தில் எவரும் இருக்கும் சிலமனே இல்லை. அதுவும் என்ன மாதிரி குரல் இது? ஆண் குரலா? பெண் குரலா? எங்கேயோ கேட்டிருக்கிறேன் இதை. எங்கே? தவிப்பில் படமெடுப்பதை நிறுத்திவிட்டு எல்லாத்திக்கிலும் பார்த்தேன். காடு. காடென்றால் அப்படி ஒரு காடு. இப்படி ஒரு காட்டில் தன்னந்தனியனாக என்ன துணிச்சல் எனக்கு? சரி, வழி தவறியவன்,  சரியான வழியை தேடுவதை விடுத்து பாதையில் நின்ற பூவில் என்ன அப்படி ஒரு காதல்? பூ கிடக்கட்டும் .. காடு முழுக்க கலர் கலராய்… முதலில் பாதையை வெட்டு. அடர்ந்து இருள் மண்டிக்கிடக்கும் புதர்களை வெட்டிகொண்டு முன்னேறு. சில மணிநேரங்களில் சூரியன் மறைந்துவிடும். அல்லது ஏற்கனவே மறைந்தும் விட்டிருக்கலாம். யார் கண்டார்? இந்த கருங்காட்டில் இரவேது? பகலேது? இருக்கும் கொஞ்ச நஞ்ச வெளிச்சமும் கண்ணே உருவாக்கிய வெளிச்சம். அடச்சீ வெளிச்சம் போதாத நேரத்தில் அபேர்ச்சர் குறைத்தால் படம் நன்றாக வராதே. அந்த அழகான பூ என்னை பாவமாய் பார்த்தது. “உனக்கென்ன அவசரம்? கொஞ்ச நாள் பொறுத்திரேன். ப்ளீஸ்”. கெஞ்சியது. கோடை வரும். மீண்டும் இந்த காடு எரியும்.  பற்றி எரியும் காடு. அப்போது வெளிச்சம் வரும். படம் எடு. அதுவரைக்கும் பொறுத்திரு என்றது அந்த பூ. நிமிர்ந்து பார்த்தேன். மிரட்டும் தொனியில் ஆங்காங்கே காட்டுத்தீயில் சிக்கி கரிக்கட்டைகளான மரங்கள். அதில் கூட சிலிர்த்துக்கொண்டு வளர்வேன் என்று அடம்பிடிக்கும் ஒட்டுண்ணி தாவரங்கள். எரிந்தாலும் மீண்டும் துளிர்வேன் என்று வீராய்ப்பாய் ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்கள். குருவிகள். ரீங்காரிக்கும் தேனிக்கள். தூரத்தில் ஏதோ மிருகங்கள் தாவியோடும் சல சலப்புகள். கங்காருவாக இருக்கலாம். நான் இருக்கிறேன் என்ற பயத்தில் பாய்ந்து ஓடலாம். ஓடவேண்டாம் என்று சொல்லவேண்டும். எப்படி சொல்வது? கங்காருகளின் மொழி தான் என்ன? தமிழ் புரியுமா? அதற்கு தெரிவது இருக்கட்டும். எனக்கு தெரியுமா? தெரிந்து பேசினாலும் கூட கங்காரு என்ன நான் சொல்வதை கேட்கவா போகிறது?  ஓடட்டும். எங்கே ஓடிவிட முடியும்? கோடைக்கு இன்னமும் கொஞ்ச நாள் தானே. காட்டுத்தீயில் எல்லாமே தீய்ந்து .. ஐயோ .. நான் விசரன் .. இன்னும் ஏன் நேரத்தை வீணடித்துக்கொண்டு .. ஓடவேண்டும். ஓடு .. ஓ..

“நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”

மீண்டும் அந்த குரல். இம்முறை குரல் வந்த திசை புரிகிறது. மேற்குத்திசையில் தான் யாரோ. அது எதிரொலியா? அப்படி என்றால் கிழக்கு திசையில் இருந்து தான் வரவேண்டும். அது சரி கிழக்கு எது? இந்த காட்டில் எப்படி கிழக்கை கண்டுபிடிப்பது? சரி ஒலி வந்த திசை கிழக்கு. அந்த குரல் .. கேட்டு கேட்டு வெறுத்து வெறுத்து மீண்டும் கேட்டு எனக்கு பரிச்சயமான குரல். ஆண் குரல் தான். பெண்மை நிறைந்திருக்கும் குரல். அல்லது ஆண்மை நிறைந்திருக்கும் பெண் குரல். அது முக்கியமல்ல. யார் அது? அறிமுகம் கூட கொடுக்காமல், அருகில் கூட வராமல், காதலித்திருக்கிறாயா? என்றால் என்னத்தை சொல்ல? நம்பலாமா? பக்கத்தில் இருப்பவரையே நம்பாதவன் நான். பக்கத்தில் இருப்பவரை தான் நம்பவே கூடாதாமே? என்ன ஒரு விதண்டாவாதம். மிகவும் பக்கத்தில் யார் இருப்பான்? நானா? என்னை விட எனக்கு மிகவும் பக்கத்தில் எவர் இருக்க முடியும்? உண்மை தான். பக்கத்தில் இருப்பவரை நம்பக்கூடாது தான்.

“நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”

முதலில் “நீயார்” என்று கேட்கவேண்டும் போல் தான் இருந்தது. ஆனால் கேட்டுத்தான் என்ன பிரயோசனம்? நான் இதுவரைக்கும் தெரிந்துகொண்டவற்றில் எந்த பயனும் இருக்கவில்லை. இனியும் தெரிந்து எதையும் பயன்படுத்தப்போவதுமில்லை. ஆனாலும் தெரிந்துகொள்வதில் ஒரு ஆர்வம். அதை தேடல் என்று சொல்லவா? என்ன மண்ணாங்கட்டி தேடல்? பயனற்ற தேடல். பயன் முக்கியமா? தேடல் முக்கியா? எது முக்கியம்? எதை தேடுகிறேன் என்று கூட தெரியாத தேடல். ஒவ்வொருமுறையும் என்னிலேயே வந்துமுடியும் தேடல். திரும்பவும் தேடல். ஏதாவது ஒன்றை தேடவேண்டும். என் தேவை எல்லாம் யாராவது என் எதிரே நின்று துணிந்து கேள்வி கேட்டு துளைக்கவேண்டும். நீ யார் என்று கேட்கவேண்டும். நான் என்பேன். அது நான் இல்லை என்று சொல்லவேண்டும். மறுப்பேன். நிறுத்தாமல் மீண்டும் கேட்டு கேட்டு .. நானில்லை அது என்று சொல்லி நான் மறுத்து அது மறுத்து யார் எதை மறுத்தார் என்ற நிலை அறுத்து .. என்ன இது நட்ட நடு காட்டில் தன்னந்தனியனாக, உளறிக்கொண்டிருக்கிறேன். கவிதை வேறு வருகிறது. உளறுவதெல்லாம் இப்போது கவிதையாகிறது. கவிதைகள் எழுதியபோதெல்லாம் உளறினேன் என்றனர் ஒரு மக்கட் கூட்டம். அது வேண்டாம். அந்த மக்கட் கூட்டம் வேண்டாம் என்று தானே காடேகினேன். ராமன் போல. ராமன் ஏன் காடேகினான்? விரும்பியா? அவன் மக்கட் கூட்டம் வேண்டாம் என்றானா? இல்லையே. “மன்னவன் பணி என்றாகிலும் நும்பணி மறுப்பனோ” என்றானே? நக்கல் தானே. பட்டும் திருந்தவில்லை ராமன். கைகேயி தலைவிரி கோலமாய் இருக்கும்போதும் நக்கல். மந்தரை மீதும் நக்கல். சீதையை அரும்பாடு பட்டு மீட்டபோதும் அவள் மீது நக்கல். “ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட,மாண்டிலை” என்றானே அந்தச்சனியன். என்ன திமிர். ராமன் காதலித்திருக்கிறானா?

“நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”

மீண்டும் அமைதியை கிழித்துக்கொண்டு அதே குரல். பொறுமை கெட்டுவிட்டது. கேட்டுவிட்டேன்.

“முதலில் யார் நீ? உனக்கு என்ன வேண்டும்?”

பதில் இல்லை, மயான அமைதி. குருவிகள் சத்தம், தேனீக்கள் ரீங்காரம், மிருகங்களின் சலசலப்பு இது எல்லாமே சேர்ந்து காட்டின் அமைதி இன்னமும் வியாபித்தபடி இருந்தது. சத்தங்கள் சேர்த்த அமைதி சத்தமில்லாத அமைதியை விட இன்னமும் மிரட்டக்கூடியது. அது பயந்திருக்கவேண்டும், பதில் இல்லை.

“சொல்லு … யார் நீ.. உனக்கென்ன வேண்டும்?”

“சொல்லு நாயே …. என்னை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தாயே .. யார் நீ”

அமைதி மீண்டும் .. இம்முறை அதை மௌனம் என்று சொல்லலாமா? மௌனம் என்றால் எது? பேசாமல் இருப்பதா? ஓசை எழுப்பாமல் இருப்பதா? அமைதி வேறு மௌனம் வேறா? அமைதியில்லாத மௌனமும் இருக்கிறதே? அமைதியின் பேரில் கொண்டாட்டங்களும் இருக்கிறதே. இரண்டும் வேறு வேறு தான் போல. இது எந்த வகை. மௌனமா? அமைதியா? இரண்டையும் கிழித்துக்கொண்டு சொன்னது.

“காடு”

“ஆ?”

“யாரென்று கேட்டாயே … நான் தான் .. காடு .. சொல்லு .. நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”

காடு பேசுகிறது. காடு ஏன் என்னிடம் பேசவேண்டும?. அது பேசா மடந்தை அல்லவா. அப்படி பேசவேண்டும் என்றாலும் நான் எதற்கு? காட்டில் கிடைக்காத துணையா? ஏன் நான்? அதையும் கேட்டுவிட்டேன்.

“காடா? … காட்டுக்கெதுக்கு நாட்டிலிருந்து நட்பு?… காட்டில் கிடைக்காததா? இந்த தேனியிடம் பேசினாயா? பூக்கள் பூக்களாய் திரிகிறது பார் .. தறி கெட்ட கழுதை .. அந்த தேனியிடம் பேசு .. கருகிய மரங்களை விட்டுவிட்டு வசந்தகால குருத்துகள் மத்தியில் கூடு கட்டி கொண்டாடுகிறதே குருவிகள். அதனுடன் பேசு. நீ எரியும்போது நாட்டுக்குள் ஓடிவிட்டு துளிர்த்த பின் அடைக்கலம் தேடிய மிருகங்களிடம் பேசு. இதை தானே துணை என்று நினைத்து தனித்து கிடக்கிறாய். தற்குறி. பேசு .. அதை எல்லாவற்றையும் விட்டு விட்டு என்னோடு என்ன வீண் பேச்சு? நான் யார் உனக்கு? நான் யார் எனக்கென்றே தெரியாதவன் நான். என்னை ஏன் வீணாக வம்புக்கிழுக்கிறாய்?”

கோபமாய் கேட்டாலும் குரலில் ஒரு ஏக்கத்தை காட்டிவிட்டேனோ? தரித்திரம் பிடித்தவன் நான். இதை ஏன் வெளியே காட்டிக்கொள்ளவேண்டும்? போயும் போயும் ஒரு காடு .. அது போய் என்னோடு பேசுகிறேன் என்கிறது. விட்டு எறியவேண்டாம்? ச்சே விவஸ்தை கெட்டவன் நான். காடு சிரித்தது.

“நாட்டிலிருந்து நீ என்னைத்தேடி வந்தாயே? நான் கேட்டேனா? இது நியதி. அதை ஏன் புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறாய்? இங்கே நானும் நீயும் தான். இருவருமே தனித்திருக்கும் பனித்திருக்கும் பரம ஏழைகள். காடாய் இருந்து ஒருமுறை பார். எல்லாமே சுத்தி சத்தம்போடும்போது கிறீச்சிட்டுகொண்டு ஒரு மௌனம் கிழிக்கும். அது என்னை கொல்கிறது. நல்ல காலம் நீ வந்துவிட்டாய் .. “

காடு சொல்வது சரியென்றே பட்டது. காடு தானே. யாருமே இல்லாத காடு. இங்கே நானும் காடும் தானே. மனம் திறந்துவிடுவோம். போகும் வழியில் ஒரு துணை. அதுவும் காடளவு துணை. காடேகும் மன்னவனுக்கு காடே துணை இருக்கிறேன் என்கிறது. இதை தான் காடு வா வா என்கிறது என்றானா அவன். எனக்குள் சிரித்துக்கொண்டே முன்னாலே மூடியிருந்த பற்றையை மீண்டும் வெட்ட ஆரம்பித்தேன். அட .. மூடிக்கிடக்கிறது ஒரு ஒற்றையடிப்பாதை. இந்த அடர் காட்டில் என்ன இது ஒற்றையடிப்பாதை? யார் போட்ட பாதை?

“எப்படி இது .. என்ன இது ..எனக்கு முன்னாலே இங்கே யார் வந்தது. யார் போட்ட பாதை இது?”

“நீ போட்ட பாதை தான் .. தடம் மாறினாலும் பாதை ஓன்று தான்”

“நான் போட்ட பாதையா? இது புது வழி .. புது காடு .. இன்றைக்கு தான் இந்த காட்டுக்கே நான் வந்திருக்கிறேனே.. உனக்கு தெரியாததா?”

“இன்றுகள் சேர்ந்தது தானே வாழ்க்கை. இன்றைய நேற்றைகள் தானே நேற்றைய இன்றுகள். பாதையா முக்கியம்? எங்கே போகிறாய் என்பது தானே முக்கியம்”

“ஆனால் பாதை மாறினால் பயணங்கள் மாறிவிடும் இல்லையா?”

“புத்திசாலித்தனமாக பேசுகிறாய் நீ .. பிடித்திருக்கிறது”

“அவசரப்படாதே .. புத்திசாலித்தனமாக பேசுபவன் முட்டாளாகவே இருப்பான். புத்திசாலி முட்டாள்தனமாகவே பேசுவான். நான் பாவம். அவசரகுடுக்கை. ஏமாளி. என்னை ஏமாற்றுவது எருவுக்கு வைக்கோல் போடுவது போல. எளிது. மாயவித்தை காட்டுபவனின் நிகழ்ச்சியில் முன் வரிசையில் இருந்து கைகொட்டி சிரிக்கும் சிறுவன் நான். என்னே அதிர்ஷ்டம். நான் காண்பவன் எல்லாம் எனக்கு வித்தை காட்டுகிறான்”

“…”

காடு அமைதியாக இருந்தது. ஏதோ செய்தது. பேசும்போது தொல்லையாய் இருந்த அதே காடு. நிறுத்தியபோது கொலைசெய்தது.

“பேசேன் .. வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறாய்?”

காடு சிரித்தது போல ஒரு சலசலப்பு. செருமிக்கொண்டே கேட்டது.

“அப்படி என்றால் நானும் உன்னை ஏமாற்றுகிறேன் என்று நினைக்கிறாயா?”

காடு அப்படி ஒரு கேள்வி கேட்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. காடு ஏன் என்னை ஏமாற்றவேண்டும்? நானோ வழிப்போக்கன். எங்கே போவது என்று தெரியாமல், தெரியும் ஒற்றையடி பாதையில் செல்லும் வழிப்போக்கன். என்னை ஏமாற்றி என்ன வரப்போகிறது? ம்கூம் நம்பாதே. என்னைக்கண்டாலே சீண்டவேண்டும் என்று எல்லோருக்குமே தோன்றும். காடு என்ன விதிவிலக்கா? இப்போது காட்டுக்கு என்ன பதில் சொல்ல?

“நீ ஏமாற்றுகிறாய் என்று நான் நினைத்தால் அப்புறம் நான் ஏமாளியாக இருக்கமுடியாது. ஏமாற்றவில்லை என்று நினைத்தால் நான் இந்த பதிலை சொல்லமுடியாது. என்னை விட்டுவிடேன் ப்ளீஸ்”

“அப்படி என்ன அவசரம்? எங்கே போகிறாய்?”

“நீர் வீழ்ச்சிக்கு … “

“நீர் வீழ்ச்சியா .. அது எங்கே இருக்கிறது? யார் சொன்னார்கள்?”

“யாரும் சொல்லவில்லை. எனக்கு நீர் வீழ்ச்சிக்கு போய் அதனோடு சேர்ந்து அழவேண்டும் போல இருக்கிறது. அதன் கண்ணீரில் நனையவேண்டும் போல … அதனோடு சேர்ந்து நானும் குதித்து தற்கொலை செய்யவேண்டும் போல … ஒவ்வொரு பாறைகளிலும் மோதி சிதறி .. ஆங்காங்கே கரையோரங்களில் இருக்கும் மரங்களுக்கு நீர் பாய்ச்சி .. மீன் வளர்த்து, சுழியோடி.. ஆறுகளுடன் சங்கமித்து .. நீர்வீழ்ச்சியோடு வாழ்வதை விட சாவது சுகம் தெரியுமா?”

“சொல்லவே இல்லையே? நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”

காடு என்னை எப்படியும் விடப்போவதில்லை என்று தெரிந்துவிட்டது. என் காதலில் உனக்கென்ன அத்தனை அக்கறை? என்னோடு பேசு .. என்னோடு பாடு .. என் படங்களை பார் .. வேண்டுமானால் தீயில் கருகியிருக்கும் யூகலிப்டஸ் மரங்களில் சாய்ந்து ஆசுவாசம் கூட கொடுக்கிறேன். ஆனால் காடேயானாலும் சுதந்திரம் மூக்கு நுனி வரைதான். சொல்லமாட்டேன் ..போ.

“சொல்லு .. நீ என்ன மனதில் நினைக்கிறாய் என்று எனக்கு தெரியும் .. சொல்லு .. நீ எப்போதாவாது காதலித்திருக்கிறாயா?”

கண்களில் நீர் முட்டிவிட்டது. “ஆண் பிள்ளை அழக்கூடாது”, ஐந்து வயதில் அம்மாவிடம் அடிவாங்கி, அழுதுகொண்டு போனால் பாட்டி இதை சொல்லி சொல்லியே மடியில் வைத்து கொஞ்சும். வாய்விட்டு அழுதால் வெற்றிலை காம்பை உடைத்து வாயில் போடும். அது ஒரு வாழ்க்கை. இப்போது பாட்டியும் இல்லை. அம்மாவும் இல்லை. வெற்றிலை காம்பும் இல்லை. ஆனால் அடி மட்டும் மாறி மாறி விழுந்துகொண்டே இருக்கிறது.

“எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”

..

“சொல்லு .. எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”

“என்றெல்லாம் நினைத்த தருணங்களில் ஏமாந்திருக்கிறேன் … முன் வரிசையில் இருந்து கைகொட்டி சந்தோஷமாக கண்கட்டி வித்தை அது … காதல்”

“தெரிகிறது இல்லையா? அப்புறம் என்ன நீர்வீழ்ச்சி வேண்டிக்கிடக்கிறது? நீர் வீழ்சசியை பற்றி உனக்கென்ன தெரியும்? எங்கே ஆரம்பித்தது என்று தெரியுமா? எங்கே போய் சேரும் என்று தெரியுமா? கடலில் போய் சேர்ந்தால் பிறகு அது சுவை மாறிவிடும். உப்பு கரிக்கும்? நீ என்ன செய்யபோகிறாய்? அந்த கடலில் நீ யார்? யோசித்தாயா?”

அட, உண்மை தானே. அவ்வளவு குன்றுகள் மலைகள் எல்லாம் வழுக்கி விழுந்து காயப்பட்டு குற்றியுரும் குலையுயிருமாய் கீழே விழுந்து இறுதியில் அது கடலில் சேர்ந்துவிடும். நான்? ச்சே .. ஏன் நான் மீண்டும் மீண்டும் ஏமாறிக்கொண்டே இருக்கிறேன்? நல்ல காலம் எனக்கென்று இந்த காடு வந்தமைந்தது. காடு வந்து தடுத்தாட்கொண்டதா என்னை? எம்பெருமானே. பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா எத்தால் …

“அப்படி என்றால் நீ என்னோடு இறுதிவரை கூட வருவியா?”

இம்முறை காதல் ஒரே எம்பு தான். காட்டிடம் தாவிவிட்டது. காதல் என்றால் அப்படி ஒரு காதல். ஆண்டாள் காதல். பாரதியின் கண்ணமா காதல். பாவை விளக்கு உமா …மேகலா என்று அத்தனை காதலும் சேர்த்து வைத்து ஒரே இடத்தில் .. காட்டுக்காதல்.

“முதலில் நீ எங்கே போகிறாய்? அதைச்சொல்லு”

“நீர் வீழ்ச்சிக்கு”

“அட அது தானே வேண்டாம் என்று ஆகிவிட்டது.. திரும்பவுமா?”

“ஓ … நீர் வீழ்ச்சி வேண்டாம் ..எத்தனை அழுக்கேறினாலும் ஆகட்டும் ..  வீழ்ச்சியே இருக்ககூடாது ..
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?”

“என்னது இது?”

“கவிதை .. மகா கவிதை?”

“நீ எழுதினாயா?”

“நானா? கவிதையா? கவிஞர்கள் உலகில் தவறிப்பிறந்த கவிப்பொருள் நான். மற்றவர்கள் எழுத முதுகும் கொடுத்து பொருளும் கொடுக்கும் அதிசய சடையப்பன்”

“அதிலும் ஒரு அங்கதம் .. உன் பிழைப்புக்கு தான் “நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்” என்றாளே அவள்”

“யாரவள் அவ்வையா?”

“அட .. அவ்வையும் அறிந்தவன் ஏன் இந்த காட்டில் திக்கித்திணருகிறாய்? பேசாமல் வீடு போய் சேர்?”

அதுவும் சரிதான். காடு சொன்னால் எதுவுமே சரியாக தான் இருக்கும். வீடு போகவேண்டும். எப்படி போக? முன்னே உள்ள வழி நீர்வீழ்ச்சிக்கு போகும் போல. யாரோ முதலில் போன பாதை. பின்னே உள்ள வழி வந்த வழி. வந்த வழி மறக்ககூடாது. எதற்கு? அந்த வழி போகாமல் இருக்க தானே? வேண்டாம். இப்போது எந்த வழி போக? காட்டிடமே கேட்கலாம்.

“எனக்கொரு வழி சொல்லு? சொந்த வழி எந்த வழி என்று சொல்லு? சொல்லும் வழி வீடு போய் சேரும் வழியாய் சொல்லு?”

“ஹ ஹ ஹா …”

காடு சிரித்தது. எனக்கு கோபம். காடு கூட என்னைப்பார்த்து சிரிக்கிறது. இன்னமும் கோபம்.

“என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கிறது? வீடேகும் வழி தானே கேட்டேன்? நான் முட்டாள். காட்டிடம் போய் வீடு பற்றி கேட்கிறேன்.. ச்சே”

“உன் வீடு எது? அறிவாயா? வீடேகு என்றவுடன் புறப்பட்டவனுக்கு வீடு எதென்று தெரியவேண்டாமா?”

அட .. திரும்ப திரும்ப அடி வாங்கும் சூட்சுமம் இப்போது தான் புரிகிறது. முதலில் வீடு எது என்று அறியவேண்டும். பின் பாதை சமைக்கவேண்டும். எது வீடு? வேறு வழியில்லை. காட்டிடமே கேட்கலாம்.

“என் அருமைக்காடே ..என் வீடு எது? சொல்லேன் பார்க்கலாம் .. ”

“உன் வீடு .. மூடனே .. அது தெரிந்தால் வழி தவறியிருப்பாயா? வீடு எது என்று தெரிந்து என்ன பிரயோசனம்? வழி தெரியவேண்டாமா? வழியை அறிந்தால் அது முடியும் இடம் தானே வீடு. புரிகிறதா முட்டாளே?”

அம்மாடி. இந்த விஷயம் எனக்கு புரியவே இல்லையே. காடு எத்தனை புத்திசாலி. என்னையும் அறியாமல் கைகொட்டி ஆரவாரமாய் சீட்டி அடித்தேன். எப்படிப்பட்ட ஒரு காடு இது. இது வரை ஏமாளியாய் இருந்தவனை அடக்கி ஆட்கொள்ளவந்த பெருங்காடு.  என்காடு.

“அப்படி என்றால் அந்த வழியையாவது சொல்லேன்”

“அப்படி வா வழிக்கு … கண்டுபிடி .. உன் வழியை கண்டு பிடி. வழியில் எதையும் கண்டு மயங்காமல் .. யார் பேச்சையும் கேட்காமல் உன் வழியை கண்டுபிடி. உன்னை பின்பற்றி செல்லு. ஒருநாள் இல்லை ஒருநாள். வீடு வரும். அந்த வீடு இருக்கும் நாடு வரும். எல்லாமே .. முதலில் பாதையை சமை.. வீட்டை பற்றி இப்போது கவலைப்படாதே”

வெட்டினேன். புதிதாக ஒரு பாதை. முன்னே இருந்த பாதையும் வேண்டாம். வந்த பாதையும் வேண்டாம். என் பாதை. இதுவரை யாருமே வெட்டாத, நான் வந்து வெட்டுவேன் என்று எனக்காக காத்திருக்கும் பாதை. புதர்களுக்குள் அமுங்கிக்கிடக்கும் பாதை. என்னை வீடு கொண்டு போய் சேர்க்கவே இன்னமும் பிறக்காமல் கருவுற்றிருக்கும் பாதை. காடு அவள் தாய். சொல்லிவிட்டாள். வெட்டு. பாதையை வெட்டு. பயணத்தை முடி. சடக். சடக். சடக் .. தூரத்தில் ரம்மியமான சத்தங்கள். அருவி ஓசை. தேனீக்களின் ரீங்காரம். நெருங்க நெருங்க .. சடக். சடக். சடக். அருவி ஓசை சல சல சல .. எங்கேயோ கேட்ட சத்தம் இது. ஆ.

நீர்வீழ்ச்சியே தான். ஸ்ஸ்ஸ் என்ற பரிச்சயமான சத்தம். சத்தம் வரும் திசையில் இன்னமும் இரண்டு நாள் நடந்தால் போய்விடலாம். முதலில் குளிக்கவேண்டும். உடல் முழுதும் உள்ள கீறல்கள், அதில் உள்ள ரத்த திட்டுகள், அழுக்குகள், பச்சை இலை வாசனை எல்லாமே போகும்வரை தேய்த்து குளிக்கவேண்டும். அவசரமாக போகலாம் என்றால் போகும் பாதை அத்தனை அழகு. மிரட்டும் அழகு. எங்கேயும் பூக்கள். எல்லாமே பூக்கள். பார்த்தால் அன்று முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல .. அவ்வளவு அழகு.

“நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா?”

 

&&&&&&&&&&&&

குறிப்பு

முதலில் இருந்த தலைப்பு “ஒரு காடு பாலைவனமாகிறது”. நீண்ட யோசனைக்கு பின், ஒரு நாள் கழித்து, உதயா மற்றும் வீணாவோடு நடந்த தர்க்கத்தின் பின், படிமம் சொல்லவரும் சேதிக்கு தலைப்பு இடறுகிறது என்று பட்டதால் “காடு திறந்து கிடக்கிறது” என்று மாற்றிவிட்டேன்.

அவ்வை கவிதை.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக