Skip to main content

ஆத்தில வாசகன் … குளத்தில எழுத்தாளன்!

 

1950s-photo-of-two-boys-r-007

“என் இனிய இயந்திரா”, தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்து வகுப்பறைகளில் அந்த புத்தகம் தவணை முறையில் கை மாறும். யார் அன்றைக்கு அதை வீட்டுக்கு கொண்டு போவது என்று போட்டி இருக்கும். அந்த இயந்திர நாயை பற்றி மாணவர்கள் கலந்து பேசுவார்கள். அடுத்த சில நாட்களில் “ஏன் எதற்கு எப்படி” என்ற இன்னொரு நூல் இதே போன்று ஒரு சுற்று வரும். மாணவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு நூலகத்தில் உறுப்பினராக இருப்பர். அம்புலிமாமா, ராணி காமிக்ஸில் ஆரம்பிக்கும் வாசிப்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கல்கி, பாலகுமாரன், ஜெயகாந்தன், அகிலன் வரைக்கும் நீளும். எழுத்தாளர் விழாக்கள் எல்லாம் பாடசாலை முடிந்தபின் மதியம் இரண்டு மணிக்கு, உச்சி வெயிலில், பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வழியில், சமாந்தரமாக துவிச்சக்கரவண்டிகளில் பயணம் செய்யும்போது தினம் தினம் இடம்பெறும். சில மாணவர்கள் பாலர் கவிதைத்தொகுப்பு வெளியிடுவார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை சிறுகதை எழுத சொல்லுவார்கள். மாலை ஆறு மணிக்கு மேசைவிளக்கில் படிக்கும் சிறுவனை எட்ட நின்று கவனித்தால், புத்தகம் நடுவே செங்கை ஆழியானின் கடல்கோட்டை இருக்கும். கதிரையை இழுத்து முற்றத்தில் போட்டு, பக்கத்தில் அரிக்கன் இலாம்பை வைத்து நிலவு வெளிச்சமும் கூட இருக்க, அக்கா வந்தியத்தேவனோடும் குந்தவையோடும் மூழ்கிக்கிடப்பார். புத்தகங்களும் வாசிப்பும் ஈழத்து வாழ்க்கையில் இன்றியமையாத பின்னிப்பிணைந்த தோழனாக, தோழியாக, சுற்றமாக எப்போதுமே இருந்திருக்கிறது.

z_p-36-To-Jaffna-01

இன்றைக்கு இருபது வருடங்கள் கழித்து, ஏதாவது நூல்கள் இப்படி மாணவர்கள் மத்தியில் உலவுகிறதா? மாணவர்கள் நூலகங்களில் தவம் கிடக்கிறார்களா? இரவில் கணணி, செல்லிடப்பேசி எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு நிலவு ஒளியிலே பதின்மத்து இளைஞனோ இளைஞியோ புத்தகத்துடன் மூழ்கிக்கிடக்கின்றனரா? இந்தக்கேள்விகளுக்கு வெறுமனே இல்லை என்று ஒற்றை சொல்லில் பதில் சொல்வது சரியல்ல. வாசிப்பு என்பது ஒரு படித்த சமூகத்தின் ஆதாரமான விஷயம். அது அப்படியே இரு தசாப்தங்களில் ஒழிந்துபோக சந்தர்ப்பம் இல்லை. ஆனால் குறைந்து போயிருக்கிறது என்பதையும் மறுக்கமுடியாது. இதற்கு காரணமாக பேஃஸ்புக், செல்லிடப்பேசிகள், திரைப்படங்கள் போன்றவற்றை சொல்வதும் சரியா என்ற சந்தேகம் வருகிறது. இவை காலத்தின் பரிமாணங்கள். எல்லா கலாச்சாரங்களிலும் இவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதற்காக வாசிப்பு ஏனைய கலாச்சாரங்களில் குறைந்துபோனதாக செய்தியில்லை. வாசிப்பு குறைந்துவிட்டது, புத்தகவிற்பனை அருகிவிட்டது என்ற புலம்பல்கள் ஆங்கில படைப்பு சூழலில் வருவதில்லை. ஆனால் தமிழில் இது இருக்கிறது. ஒரு தலைமுறையே திரையுலகம் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. எங்கே தவறு இருக்கலாம்?

dvs081170ஒரு காலை நேரத்தில் மெல்பேர்ன் புகையிரதப்பயணம். பாடசாலை மாணவர்கள். அலுவலம் செல்கின்ற பயணிகள். பல்வேறு வகையான பதவிகளில் இருப்பவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என்று விதம் விதமான வயது வித்தியாசங்கள். அனேகமான பயணிகள் ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தனர். பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள். Kindle, iPad போன்ற கருவிகளில் இருக்கும் மின்நூல்கள். அவர்கள் வாசித்துக்கொண்டிருந்த புத்தகங்களை குறிப்பெடுக்க தொடங்கினேன். “Italy a short history”, “A song of ice and fire”, “Echo Rising”, “How Branding Grows”, “Call the midwife”, “Restaurant at the End of Universe” , “Life of Pi”, “Outliers”. ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகையான நூல்கள். சிலது நாவல்கள். சிலது பயணம் சார்ந்தது. சிலது ஆன்மிகம். சிலது சிந்தனைக்கு விருந்தளிக்க கூடியது. சிலது தொழில்சார்ந்தது. சிலது விஞ்ஞானம். முக்கியமான விஷயம் அனேகமான புத்தகங்கள் துறைபோன இலக்கியவாதிகளால் எழுதப்படவில்லை. பல் துறை சார்ந்த நிபுணர்கள், அவர்கள் துறைசார்ந்து படைப்பிலக்கியத்தையோ அல்லது அவர்களுடைய தொழில்சார் நூல்களையோ எழுதுகிறார்கள். விளைவு, படைப்புகளில் ஒருவித பரம்பல் தன்மை இருக்கிறது. விரும்பிய துறையில் ஒரு புத்தகத்தை தேர்வு செய்து வாசிக்கமுடிகிறது. நடைமுறை வாழ்க்கை படைப்பில் வருகிறது. வாசிக்கும்போது எம்மால் அந்த நூல்களின் பாத்திரங்களோடோ, கதை சொல்லியோடோ, விஷயங்களோடோ பயணிக்க முடிகிறது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு பன்னிரண்டு வயது இருக்கும். அப்போது குடும்ப நண்பர் ஒருவர் ஐன்ஸ்டீனுக்கு பரிசாக கொடுத்த புத்தகம் “மக்களுக்கான இயற்கை விஞ்ஞானம்(People’s Natural Science)”. அந்த புத்தகத்திலே இருக்கின்ற ஓடும் ரயில் சார்ந்த சுவாரசியமாக விளக்கப்பட்ட விஞ்ஞான பரிசோதனை சிறுவன் ஐன்ஸ்டீனின் மூளையில் பசுமரத்தாணி போல ஏறிவிட, பின்னாளில் உலகையே வியக்கவைத்த சார்புவிதியை ஐன்ஸ்டீன் கண்டுபிடிக்க அது காரணமானது.

Dont-panic-douglas-adams1டக்ளஸ் அடம்ஸ், தொழில்நுட்பத்தை படைப்பிலக்கியத்தில் சுவாரசியமாக சூடு குறையாமல் கொண்டுவந்த ஜாம்பவான். எழுபதுகளில் அவர் எழுதிய Hitchhiker’s Guide To Galaxy (ஒரு வழிப்போக்கனின் பிரபஞ்ச வழிகாட்டி), அன்றைய இளைஞர்களின் பைபிள். புதுமையான எண்ணங்களை, வித்தியாசமாக சிந்திக்கவைக்கும் ஆற்றலை அந்த தலைமுறை இளைஞர்கள் மத்தியில் இவருடைய படைப்புகள் ஏற்படுத்திக்கொடுத்தன. சமகாலத்தில் சிலிக்கன் வலியில் இடம்பெற்ற தகவல் தொழில்நுட்ப புரட்சியின் ஊற்றுகளான ஸ்டீவ் வொஸ்னியாக், ஸ்டீவ் ஜொப்ஸ், பில் கேட்ஸ் போன்றவர்கள் தொடங்கி, பின்னாளில் உருவான கூகிள் நிறுவனத்து எரிக் ஷிமிட், லாரி பேஜ் போன்ற, தொழில்நுட்பம் மூலம் சிறந்த நிறுவனங்களை ஆற்றுப்படுத்தி முன்னுக்கு வந்த எல்லோருக்குமே டக்ளஸ் அடம்ஸ் ஒரு பிதாமகன். கூகிள், அன்றோயிட், பேபில் போன்ற மென்பொருள் பெயர்கள் கூட இவர் நாவல்களில் இருந்தே எடுக்கப்பட்டன. இத்தனைக்கும் அடம்ஸ் ஒரு நாவலாசிரியர் மாத்திரமே. ஆனால் ஆச்சர்யமான நாவலாசிரியர். பண்ணைகளையும், குதிரைவீரர்களையும், குடும்பத்து யதார்த்தங்களையும் சுற்றிக்கொண்டிருந்த எழுத்தை புதுமைப்படுத்தி பிரபஞ்ச சூழலுக்கு கொண்டு சென்றார். பூமியில் நிகழும் எல்லாமே எவ்வளவு அபத்தமானதாக இருக்க கூடும் என்று உணர்த்த கிரகம் கிரகமாக வாசகர்களை பயணிக்கவைத்தார். விளைவாக அடம்ஸ் புதுமையாக சிந்திக்கும் ஒரு தலைமுறையையே உருவாக்கினார்.

சயந்தன் என்ற ஈழத்தை சேர்ந்த இளைஞன். ஒரே வாரத்தில் மூன்று புத்தகங்கள் வாசிப்பவன். புத்தகங்களை ஒலிவடிவில் கேட்பவன். “ஏன் நீ தமிழ் புத்தகங்களை வாசிப்பதில்லை?” என்று கேட்டேன். “Non Fiction, வகை விஞ்ஞான, பொருளியல் சார்ந்த, நவீன உலகத்துக்குரிய புத்தகங்களை தமிழில் தன்னால் இனம் கண்டுகொள்வது சிரமமாக இருக்கிறது” என்றான். “ஆங்கிலத்தில் அது அதிகம் கிடைக்கிறது. சிறந்ததை, எனக்கேற்றதை தேர்ந்தெடுக்க கூடியதாக இருக்கிறது, தமிழில் எல்லாமே இலக்கியமாக இருக்கிறதே” என்று சிரித்தான்.

சயந்தனை எப்படி தமிழில் வாசிக்கவைப்பது? தமிழிலக்கிய சூழலில் டக்ளஸ் அடம்ஸ், டெர்ரி பிரச்சட் போன்ற ஜாம்பவான்கள் ஏன் உருவாகவில்லை? ஏன் மக்களுக்கான விஞ்ஞானத்தை நம் பிள்ளைகளுக்கு நாம் வாங்கிக்கொடுப்பதில்லை? உலகமயமாக்கல் சார்ந்த பொருளாதார, வியாபாரம் சார்ந்த நூல்கள் ஏன் தமிழில் இல்லை? என்ற கேள்வி இப்போது எழுகிறது. அப்படியே வெளிவந்தாலும் அது ஏன் மக்களை சென்றடைவதில்லை? அப்துல் கலாமின் அக்கினிச்சிறகுகள் கூட ஒரு மொழிபெயர்ப்பு தான். புதுமைப்பித்தன் நாற்பதுகளில் இந்த அதிசயம் தமிழில் ஓரளவு முடியும் என்று கோடி காட்டினார். பின்னாளில் சுஜாதா அதை பல படிகள் மேலே கொண்டு சென்றார். ஆனால் அவை தவிர அனேகமான தமிழ் படைப்புகள், இலக்கியங்கள் என்று அடைப்புக்குள்ளேயே சுருங்கிவிட்டன. அ.முத்துலிங்கம் போன்ற துறை போனவர்கள் கூட ஒரு எல்லையை விட்டு வெளியே வர முயலவில்லை.

sujathaஎழுத்து என்பது இங்கே இலக்கியவாதிகளுக்குள் சுருங்கிவிட்டது. முறையாக வாசித்து, உலக இலக்கியங்களை படித்து, கூட்டங்களுக்கு சென்று, வரையறைகளை வகுத்து எழுதும் எழுத்தாளர்களின் படைப்புகளில் அந்த இலக்கியத்தன்மை இயல்பாகவே ஒட்டிக்கொண்டு விடுகிறது. புதுமை, சுயத்தை அங்கே சில மாற்றுக்கள் குறைந்துவிடுகிறது. வாழ்க்கையை அதன் யதார்த்தங்களோடு தருவது மட்டுமே இலக்கியம் என்ற கருத்தியல் மீதான கொண்டாட்டம், சுஜாதா என்ற மாபெரும் தலைமுறை எழுத்தாளனுக்கு சாகித்திய அக்கடமி விருதை கைக்கெட்டாமல் செய்தது.

பல்துறைசார் நிபுணர்கள் தமிழில் அவர்கள் அனுபவங்களை கோர்த்து ஒரு படைப்பை அமைப்பது என்பது குறைந்துவிடுகிறது. அப்படி எழுதுபவர்கள் கூட தங்கள் துறையை மறுத்து மீண்டும் குடும்ப வாழ்க்கையையும், போரின் அல்லல்களையும் எழுத்தின் கருப்பொருள் ஆக்குகின்றார்கள். இந்த தலைமுறை இளைஞர்கள் செய்யும் தொழில்கள் ஏதோ ஒரு மென்பொருள் நிறுவனத்தின் கணனித்திரையின் முன்னேயோ அல்லது வங்கி முகாமைத்துவ முன்றலிலோ இருக்கும்போது, தமிழ் நூல்கள் கிராமத்தையும், நனைவிடை தோய்தலையும், குடும்ப சிக்கல்களையும், சாதியம், பெண்விடுதலை, கம்யூனிசம் என்ற வழமையான கருப்பொருட்களுடனேயே சுற்றிவருகின்றன. வரக்கூடாது என்றில்லை. ஆனால் அவை மட்டுமே வருவது, வாசகனை தமிழை விட்டு அவனுக்கு தேவையான அனுபவத்தை கொடுக்கும் ஆங்கிலத்துக்கு அழைத்துச்செல்கிறது. நல்ல வாசகனை தமிழுக்குள் இழுத்துவைத்திருக்க, அவனுக்கேற்ற எழுத்தை நாம் தரவேண்டும். காலத்தை ஒட்டிய எழுத்துக்கள் நமக்கு வேண்டும்.

“இரண்டு வருடங்களுக்கு முன்னர் அந்தரோமீடாவுக்கு பயணம் செய்த என் அண்ணா திரும்பும் போது வயது குறைந்து தம்பியாக மாறி இருந்தார்”

என்று ஐன்ஸ்டீனின் சார்புத்துவத்தை வைத்து இளமையான நாவல் எழுதலாம். விஞ்ஞானம் விளக்கலாம்.

“முதல் நாள் அலுவலகம்; முன்னே 21இஞ்சி கணனித்திரை, கொமாண்டுகள் எதுவுமே புரியவில்லை. பக்கத்தில் இருந்தவனோ இரண்டு காதுகளிலும் ஏ ஆர் ரகுமானை அலறவிட்டுவிட்டு ஜாவாவில் வெளுத்துக்கட்டிக்கொண்டிருந்தான். கேட்கலாம் தான். அவன் சொன்னால் கூட புரியவா போகிறது?”

என்று ஒரு நாவலின் இடை வரி இருக்கலாம்.

இதைத்தான் வாசகனாக இன்றைக்கு தேடிக்கொண்டிருக்கிறேன். எழுதினால் இன்றைய இளைஞன் இதை வாசிக்காமல் போகமாட்டான். செங்கை ஆழியான் சொல்லித்தந்த வன்னியையும் நெடுந்தீவையுமே இன்றைக்குமே சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி? அதற்கு தான் செங்கை ஆழியான் இருக்கிறாரே. எங்கள் அவல நிலையை சொல்லத்தானே அதற்குள் அகப்பட்டு அல்லலுற்ற ஏராளமான எழுத்தாளர்கள் இருக்கிறார்களே? எழுதுகிறார்களே? அதை ஏன் எல்லோருமே எழுத முயலுகிறார்கள்? எவ்வளவு காலத்துக்கு நனைவிடை தோய்ந்துகொண்டே கிடப்பது?

ஒரு எழுத்தாளனை இதைத்தான் எழுதவேண்டும் என்று கட்டுப்படுத்தமுடியாது, கூடாது.  எங்கள் உடனடித்தேவை கலப்படமில்லாத புது இரத்தம். பல்துறை களத்தை தமிழுக்கு கொண்டுவர, இலக்கியவாதிகள் அல்லாதோர் எழுத தொடங்கவேண்டும். ஒவ்வொருவருக்குள்ளும் ஏராளமான கதைகள் அனுபவங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு கொஞ்சம் கற்பனை சேர்த்தால் அழகான நாவல்கள், படைப்புகள் நிச்சயம் கிடைக்கும். இன்றைக்கு என் எழுத்தை வெளியிட பதிப்பாளர் இல்லையே, எவருமே வாசிக்கமாட்டார்களே என்ற கவலையும் கிடையாது. இணையம் இருக்கிறது. பதிவுலகம் இருக்கிறது. வாசகன் தீனி இல்லாமல் இங்கே பட்டினி கிடக்கிறான். எழுத்தாளனோ அவனை விடுத்து வேறு யாருக்கோ எழுதிக்கொண்டிருக்கிறான். இருவரும் இணைந்தால் ஆச்சர்யங்கள் நிகழலாம். இணையத்தில் காப்பு பணம் கிடைக்காது. சல்லி பெயராது. ஆனால் வாசகனுக்கும் எழுத்தாளனுக்குமிடையில் சம்பாஷனை இருக்கும். கருத்து வேறுபாடுகள், கலந்துரையாடல்கள் என்று ஈற்றில் எழுத்தாளனும் வாசகனும் ஒரே புள்ளியை அடையும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். நிஜமான எழுத்தாளனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?

இன்னுமொன்று, வாசிப்பு தளம் என்பது இங்கே மாறிவிட்டது. தேடல் காகிதங்களில் இருந்து இடம்பெயர்ந்து இணையத்தில் விரிந்து கிடக்கிறது. மின் நூல்கள், இணையத்தளங்கள், பதிவுலகம், Facebook, Twitter என்பதில் இருந்து Ted (ted.com), Khan Academy(www.khanacademy.com), pod casts, ஒலி நூல்கள் என்று படைப்பாளியும் தேடுபவனும் சேரும் புள்ளிகள் பரந்திருக்கின்றன. தமிழ் எழுத்துக்கள், ஓரளவுக்கு இதை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டாட ஆரம்பித்தாலும், இன்னமுமே பின் தங்கியே இருக்கிறது. அப்படியே கொண்டாடினாலும், அவற்றை அரசியலுக்கும், சினிமாவுக்கும், தீவிர இலக்கியத்துக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். சொல்லும் தளம் மாறியிருக்கிறது. ஆனால் சொல்லும் விஷயம் இன்னமுமே அப்படியே.

Professional Blogger Boss

ஒரு பொறியியலாளன் கட்டட நிர்மாண களத்தை வைத்து, அதில் புதுமை சேர்த்து படைப்பை சிந்திக்கட்டும். மென்பொருள் துறையாளன் அந்த துறையின் அதிசயங்களை தமிழ் படுத்தட்டும். வைத்தியன் தமிழில் மருத்துவம் சார்ந்த எழுத்துகளை தரட்டும். ஆசிரியன், விஞ்ஞானி, வியாபாரி, தொழிற்சாலையில் வேலை செய்பவர் எல்லோருமே எழுத ஆரம்பிக்கவேண்டும். தொடர்ந்து எழுதவேண்டியதில்லை. ஒரு நாவல் கூட போதுமானது. ஏன், ஒரு சிறுகதையே காலத்துக்கும் நிலைக்கும். அவர்கள் எழுதுவதற்கு கம்பரையும், ஷேக்ஸ்பியரையும் படித்திருக்கவேண்டிய அவசியம் கிடையாது. இரவிரவாக வாசிக்கும் ஒருவன் முயன்றால் நாலு வரி எழுதலாம் என்று தோளில் தட்டிக்கொடுக்கவேண்டும். எழுத்து ஒரு போதை போன்றது. ஆரம்பித்துவிட்டால் அப்புறம் யாருமே தடுத்து நிறுத்தமுடியாது. சித்திரம் போல அது கைப்பழக்கம். எழுத எழுத படியும், வளரும். ஆரம்பிக்கவைப்பது தான் சவால். அதை செய்தோமானால் புற்றீசல் போல எழுத்துக்கள் கிளம்பும். அவற்றில் பல சொதப்பும் தான். ஆனால் நூறு கிளம்பும்போது பத்து தேறும். அதில் இரண்டு புரட்சி செய்யும். ஒன்று தலைமுறையை மாற்றியமைக்கும். அந்த ஒரு நூல் வெளிவர நாங்கள் இத்தனை அத்திவாரங்கள் போடவேண்டும். எழுத்தாளன் எழுத தொடங்கினால் தான், ஆங்கிலம் பக்கம் சாய்ந்திருக்கும் இளைய தலைமுறை வாசகன் தமிழ் பக்கம் தலைவைத்து படுப்பான்.

எழுத்தாளர் விழா அதை செய்ய ஒரு கல்லை எடுத்து வைக்கும் என்று நம்புவோம். தமிழ் மேலான உணர்ச்சிவசப்பட்ட தன்மையை மீறி, மொழியை ஊடகமாக கொண்டு எழுதப்படும் விஷயங்கள், அதன் பரப்புகள் இலக்கியம் தாண்டி விரியட்டும். பல்வேறு துறைபோனவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் எழுத தூண்டுகோல் புரியட்டும். பழமை மதிக்கப்பட்டு புதுமை படியேற ஆரம்பிக்கட்டும்.

நன்றி

இந்த கட்டுரை சிட்னியில் 2013-04-20 அன்று நடந்த எழுத்தாளர் விழாவுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. மீள்வாசிப்பு செய்து திருத்தங்கள் முன்மொழிந்த சக்திவேல் அண்ணா, வாலிபன், சயந்தன், கேதா மற்றும் வீணாவுக்கு மிகவும் நன்றிகள்.

படங்கள் : இணையம்(Ofcourse!)

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக