Skip to main content

ராஜாக்களின் சங்கமம்

 

unnamed

 

பதின்மத்தில் எப்போதும் என்னோடு நெருங்கிய தோழிகளாக பயணித்த இருவர் "என் கொல்லைப்புறத்துக் காதலிகளில்" வருகிறார்கள்.  ஒருவர் "ஏகன் அநேகன்" இளையராஜா. அடுத்தது "என் மேல் விழுந்த மழைத்துளியே" ஏ. ஆர். ரகுமான்.  இசையை ரசிக்கவைத்தவர்கள். அதேபோல  தோழர்கள் "இருவர்".  அகிலன், கஜன்.  அந்த மூன்று அத்தியாயங்களையும் எழுதும்போது கிடைத்த சந்தோசம் கொஞ்ச நஞ்சமில்லை. எல்லாப்பாடல்களையும்கேட்டுக்கொண்டே, ரசித்து ரசித்து எழுதிய தருணங்கள், எழுத்துப் பிழை திருத்த உட்கார்ந்தால் கூட, திரும்பவும் புதிதாக ஒரு பந்தி முளைத்துவிடும்.

புத்தக அறிமுகத்துக்கென்று ஒரு நிகழ்ச்சி செய்வோம் என்று முடிவெடுத்தகணம், அகிலனையும் கஜனையும் ஒரே மேடையில் ஏற்றி அழகு பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் கஜனை சிங்கப்பூரிலிருந்து அழைப்பதுமுதல், அப்படிப்பட்ட மேடைக்குரிய அரங்கைத் தயார்படுத்துவது என எல்லாமே என் சக்திக்கு மீறிய விஷயங்கள் என்று விளங்கியது. மெதுவாக ஜூட் அண்ணாவிடம் இதைப்பற்றிக் கேட்டேன். சென். ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கத்துக்கூடாக ஒரு கை கொடுப்பதாக சொன்னார். இன்னொரு கை வேண்டுமே. ஜெய் ஸ்ரீகாந்தா அண்ணாவிடம் தயங்கி தயங்கிக் கேட்டேன். தோளே கொடுத்தார். அப்புறம் நண்பர்கள் ஒவ்வொருவராக "என்ன செய்யோணும் ஜேகே" என்று கேட்க ஆரம்பித்து, கேட்டதுக்கு மேலாகவே உதவி செய்ய ஆரம்பிக்க,

கிள்ளிப்பார்க்கிறேன். இந்த ஞாயிறு நிகழ்ச்சி நடக்கப்போகுது.

அகிலனையும் கஜனையும் மேடை ஏத்திட்டு, ஏதாவது புதுசா செய்ய வேண்டாமா? இசை என்பதே சப்தஸ்வரங்களை வைத்துச் செய்யும் ஒரு மஜிக் என்பார் இளையராஜா. எனக்கு புரியாது. அது கடவுள் போல. உள்ளே எங்கேயோதான் தலைவர் இருக்கிறார் என்று பட்சி சொல்லும். ஆனா எங்கே, எது, எப்படி என்று புரிவதில்லை. தேவையுமில்லை. எப்போதாவது ஒரு கர்நாடக சங்கீத பாடலை கேட்கும்போது அடடா இதை இளையராஜா இப்படி மாற்றியிருக்கிறாரே. ரகுமான் இங்கே பாவித்திருக்கிறாரே என்று நினைப்பதுண்டு.அந்த உணர்வையே மேடையில் கொடுக்கமுடியுமா என்று இருவரிடமும் கேட்டேன். முயற்சிக்கலாம் என்று சொல்லிவிட்டு ஆளாளுக்கு தங்கள் கச்சேரிகளை கவனிக்க கிளம்பிவிட்டார்கள். 

ஆனால் என்ன செய்யப்போகிறார்கள் என்று சொல்லவேயில்லை. மூச்.

சென்றவாரம்தான் ஐடியா இது  என்று கஜன்  சொன்னான். ஒரு ராகத்தை எடுப்பது. அதில் ஒரு கீர்த்தனையையோ, பாடலையோ பாடுவது. அகிலன் பாடும்போது, இது  .. எங்கேயோ கேட்டமாதிரி இருக்குதே, "கண்கள் இரண்டால்" பாட்டா? "அழகான ராட்சசியேயா?", "சுடும் நிலவா?" என்று  நாங்கள் குழம்பிக்கொண்டிருக்கையில், திடீரென்று "சின்னக்கண்ணன் அழைக்கிறான்" என்று அகிலனின் குரல் கணீரென்று ஒலிக்கும்.  எல்லாமே ரீதி கௌளை எண்டது தெரியாட்டியும் அந்த மஜிக் நடக்கும் என்று கஜன் சொன்னான். இப்படி ஒரு முக்கால் மணிநேரம் இடம் பொருள் ஏவல் மறந்து எங்களை மயக்க தயாராகிறார்கள் இவர்கள்.

பாட்டு - அகிலன்
மிருதங்கம் - கஜன்
வயலின் - பைரவி
மோர்சிங் - நந்தீஸ்
கடம் - சதீபன்

எல்லாம் ஒகே. ஒரு டீசர் வேண்டும் என்று கேட்க, பிளைட்டுக்கு அவசரமாக வெளிக்கிட்டுக்கொண்டிருக்கையில் கடகடவென பாடித்தந்த ஒலிப்பதிவு இது. கானடா!

 

November 2nd, 4.00 PM
Carwatha College P-12
43-81 Browns Road
Noble Park North VIC 3174

ஞாயிறன்று உங்கள் எல்லோரையும் எதிர்பார்க்கிறோம்.

என் கொல்லைப்புறத்துக் காதலிகளை இணையத்தில் வாங்க இங்கே அழுத்துங்கள்.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக