Skip to main content

அன்றும் இன்றும் குரு

 

2

அவுஸ்திரேலிய கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவில், கலாநிதி ஸ்ரீ பிரஷாந்தன் தலைமையில் இடம்பெற்ற "அன்றும் இன்றும்" என்ற கவியரங்கத்தில் "குரு" பற்றி படிக்கப்பட்ட கவிதை.

அன்றும் இன்றும் என்றும்
என் குருவாய் அமைந்தவர்.
அவர் அருளாலே
அவர் தாள்
வணங்கிப் பணிகிறேன்.

அவைத்தலைவர் அண்ணனுக்கும்
பெண்ணான நட்புக்கும்
நட்பு சொல்லும் பெண்ணுக்கும்
காதல் சொல்லும் தலைவனுக்கும்
இனியமாலை வந்தனங்கள்.

அள்ள அள்ள குறையாத
தெள்ளு தமிழ் இயல் கேள
அள்ளு கொள்ளை யாகவந்து
அமர்ந்தி ருக்கும்அன்பர்கள்
அனைவருக்கும் வணக்கங்கள்.

ஆயினும் என்ன ஒரு குறை!

மாலைப்பொழுதின் மயக்கமோ?
மதிய உணவின் கிறக்கமோ?
இல்லை
மயக்கும் சபை மொழிகளோ?
நானறியேன்.
கரத்தை எடுத்து உரத்துத் தட்ட
தயக்கமென்ன?
காசா? பணமா?
கலக்கமென்ன?
கவிதை
கை வசமாவது
விரைவில் வேண்டும்.
கரவோசை கொடுங்களேன்.


அன்றும் இன்றும் குரு.

ஒரு ஐயம் தெளிவுறவில்லை.

அன்றென்பது எது?

அண்ணலும் அனுஜனும்
ஆசானின் யாகத்தை
இமையாமல் காத்திட்ட
இதிகாச காலமா?

குட்டிச்சுவரையும்
கிணற்றையும்
வானையும் காட்டி
சித்தனொருவன்
பாரதிக்கு
சிவத்தினை உரைத்தானே
அப்பொழுதா?

யாரடா நீ என்று
கூராக நேர் நோக்கி
ஒரு பொல்லாப்பும்
இல்லை என்ற
செல்லப்பாச் சித்தரின் காலமா?

இல்லை.

நான் யார்?
என் உள்ளமார்?
ஞானங்கள் யார்?
என்ற கேள்விக்கெலாம்
குருவை விடுத்து
கூகிளிலே
விடையைத்தேடும்
கலி காலமா?

அன்றென்பது எது?

கம்பன் அன்றானவா?
படிக்கின்ற அனுக்கணமும்
புதிதாக கருக்கட்டும்
கவிதைக்கும்,
சொல்லுக்கும்,
சொல்லுணர்த்தும் பொருளுக்கும்,
பொருள் கடந்த உணர்வுக்கும்
ஏகபோக உரிமைக்காரன்.

காலத்தை வென்றிட்ட
காவியத்தின்
ஒற்றைச்சொல்லும்
ஞாலத்தின் சாலச்சிறந்த
ஆசிரியத் தகைதானே.

கம்பனவன் கவிதைக்கு
அன்றென்ன? இன்றென்ன?

குருவுக்கும் அது பொருதுமன்றோ?

அன்றும் இன்றும்
இலவும் பலவும்
இரவும் பகலும்
இவ் வுலகுக்கே அன்றில்
இரவிக்கு அல்லவே.
இருளகற்றி அறிவு ஒளி
அறிவுறுத்தும் ஆசானும்
அன்றைக்கும் இன்றைக்கும்
மாறாத மறை பொருளே.


அன்றென்ன இன்றென்ன
நல்ல குரு எவருக்கும்
எள்ளிதாக அமைவதன்று.

தேடவேண்டும்.

1தேடுவது கிட்டாமல்
ஓடி நீயும் அலைகையிலே
எங்கிருந்தோ வந்தொருவன்
கண்டறிந்தேன் என்றுரைப்பான்.
அக்கணமே வந்தவனை
சிக்கனவே பிடிக்கவேணும்.
கண்ட மார்க்கம் சொல்லு என்று
சென்ற வழி அறிய வேணும்.
மாணிக்க வாசகனும்
பாரதியும் விவே
கானந்தனும் பாரினிலே
நற்குருவை
தேடியே அறிந்தார்கள்.

நல்ல குரு
நாலையும் நமக்குச் சொல்வான்.
ஞானத்தை நாமே அறியச் செய்வான்.
குளத்தைக் காட்டி குடி என்பான்.
குடிக்க குடிக்கத் - தாகம்
வறட்டி எடுக்கும்.
குளம் பாலையாகும்.
நாக்கு வறண்டு
அலைந்து திரிந்து
அவனையே மீளச்
சரணாவோம்.

அவன்
நதியினை நமக்கு காட்டி
நில்லாதே ஓடு என்பான்.
ஆறு அலையடிக்கும்.
கரை புரளும்.
மணல் படுக்கும்.
மலை முகடும்
பள்ளத் தாக்கும்
மருதமும்
நெய்தலும்
வழியில் வரும்.
அக்கரைகள் பச்சையாகும்.
அடங்கிவிடுவோமோ
என ஒரு
ஆசை துளிர்க்கும்.
இல்லையென ஓடையிலே
ஈற்றில் ஓடை விரிந்து
ஆழி வரும்.
கடலே நம் குருவாகி
பிரவாகித்து நிற்கும்.
அலைகள் நம் கால் தழுவி
”சும்மா இரு” என
சுயத்தினையே
உணர்த்திச் செல்லும்.

ஆசானும் மாணவனும்
அவனியிலே அமைவதுவும்
வதுவை போல தேவனோட
சபையினிலே அமைவதன்றோ.

எனக்கும் ஒரு குரு.
எனை அறிவித்த குரு.
எனையறியாத குரு.
பதியை விட்டு கிளம்பிவந்து
பதுமையாய் அமர்ந்திருக்கும்
அவருக்கு
கொஞ்சகாலமா பத்தில குரு.

நல்லூரான் வடக்கு தெரு
குரு மணலில் கும்பிபோட்டு
சுடுமென்று செருப்பு வச்சு
உட்கார்ந்து நிமிர்ந்தாலோ
முன்னாலே சொட்டை தெரியும்.
இன்னும் கொஞ்சம் மண் குவிச்சு
குட்டி சுவரு கட்டிவச்சு
எட்டி எட்டி பார்த்தாலே
பட்டி மன்ற அவை புரியும்.
முருகனோட ஒத்தசொல்லில்
நிறையபேரு சூழ்ந்திருக்க
அரியணையின் மீதினிலே
அடக்கமாக அமர்ந்திருப்பார்.
என் அண்ணல்.

கம்பநாடன் கவி சொல்வார்.
வள்ளுவனின் நெறி சொல்வார்.
பகிடியோடு பகிடியாக
பாமரனும் புரியும் வண்ணம்
உயரும் வழி பலவும் சொல்வார்.
என்னைப்போல ஏராளம்
கத்துக்குட்டி பெடியள் இன்று
இறுமாப்பா இரண்டு வரி
மொழி வடிக்க வழி அமைத்தார்.

இந்தகுரு இரு பத்து
ஆண்டுமுன்னே எமக்கமைந்தார்.
இருளகற்றும் பணியினையே
இறையராமல் தொடருகின்றார்.

குரு பிரம்மம்!
குரு பிரம்மம்!
அது அன்றைக்கும் இன்றைக்கும்
என்றைக்கும் மாறிடுமோ?

ஏமாற்றுப் பேர்வழிகள்
இங்கொன்றும் அங்கொன்றும்
ஏராளம் இருப்பார்கள்.
எப்போதும் இருப்பார்கள்.

நாலு கட்டு கொப்பி ஒன்று.
கொட்டிலிலே வாங்கு ரெண்டு.
பீசை மட்டும் கட்டிப்புட்டா,
மட்டை ஒன்றில் ஞானத்தை
பட்டமாக தருவார்கள்.

வித்தை ஒன்றும்
விற்றுப் பிழைக்கும்
சொத்து அல்ல.

கற்றுக்கொண்ட வித்தையினை
மொத்தமாக இறக்குபவன் அஞ்சான்.
வித்தையினை உள்வாங்கி
ஞானத்தினை அருளுபவன் மெய்ஞான்

கஷ்டப்பட்டு படிச்சவண்ட
கட்டைவிரலை வெட்டக்கேட்ட
வெட்கம் கெட்ட வேலையினை
செய்பவன் குருவல்ல.

சேத்திரத்தில் மார்க்கமது
தெரியாமல் விழித்திட்ட
பார்த்தனுக்கு கீதைசொன்ன
பரந்தாமனே குருவாவான்.

துரோணன் கொடுத்தது வித்தை.
கண்ணன் கொடுத்து ஞானம்.
முன்னவனோ ஆசிரியன்.
பின்னவனே குருநாதன்.

அன்றும் இன்றும் குரு.

அறிவெல்லாம் அறியவென
குருவை முன்னறிவோம்.
குரங்கினது குட்டிபோல
கெட்டியாய்ப் பற்றுவோம்.
அவனோடே திரிவோம்.
அவனனைத்தும் அறிவோம்.
இறுதியில் அவனையும்
துறப்போம்.

அறிவெலாம் சிறியதாய்
அறியும் அக்கணப் பொழுதில்
அதனையும் துறப்போம்.

அன்றாய் இன்றாய்
ஏகமாய் அநேகமாய்
அவனாய் அவளாய்
அனைத்துமாய், அற்றதாய்
உள்ளதாய் இல்லதாய்
அமைந்த அத்திருவை
எம் குருவை
நன்றே நம்பி குடி வாழ்க்கை
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு!

நன்றி வணக்கம்.


அவுஸ்திரேலிய கம்பன் கழகத்துக்கும் படங்களைத் தந்துதவிய "தமிழ் அவுஸ்திரேலியன்" நிறுவனத்துக்கும் நன்றிகள்.

Comments

  1. "கற்றுக்கொண்ட வித்தையினை
    மொத்தமாக இறக்குபவன் அஞ்சான்.
    வித்தையினை உள்வாங்கி
    ஞானத்தினை அருளுபவன் மெய்ஞான்" சூப்பர் சூப்பர் சூப்பர் ஜீ - வாழ்த்துக்கள்.
    [மகள் நடனத்தை பார்க்க சென்றதால் உங்கள் நிகழ்விற்கு வரமுடியவில்லை] Uthayan

    ReplyDelete
  2. அரங்கிலேயே வெகுவாக ரசித்த கவிதை. இப்போது இரண்டுமுறை வாசிக்க இன்னமும் பிடித்துபோகிறது. ஆழ்ந்தபொருள், அருமையான பார்வை, தேர்ந்த சொல்லாட்சி, சுவையான மொழிநடை எல்லாவற்றுக்கும் மேல், நேற்று நீங்கள் அரங்கேற்றிய விதம் அருமையிலும் அருமை! அரங்கிற்கு அப்பாலும், நிலைக்கும் கவிதை இது. நுட்பமான படிமங்களை மிகவும் ரசித்தேன். இதற்கு நயம் எழுத ஆசை, விரைவில் செய்கிறேன்.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா..

    தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
    நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

    வலைச்சர இணைப்பு
    http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_24.html

    நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .