வெற்று முரசு


சில மாதங்களாகவே லியோ டோல்ஸ்டாயின் நாட்டார் சிறுகதை ஒன்று என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. அதுபற்றி ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கையில்தான் கோமகன் அண்ணாவின் ஞாபகம் வந்தது. அவருடைய நடு சஞ்சிகைக்கு கட்டுரை எழுதித்தருமாறு கேட்டு மாதக்கணக்கில் கொடுக்கவில்லை. இதைக்கொடுக்கலாம் என்று தோன்றியது.
“நடு”. பிரான்சிலிருந்து வெளிவருகின்ற காலாண்டு இலக்கிய சஞ்சிகை. பிரான்சிலிருந்து என்று சொல்வது தேவையற்றது. கோமகன் அண்ணா எங்கிருந்தாலும் அங்கிருந்து “நடு” வெளிவரும் என்று நினைக்கிறேன். முழு முயற்சியும் அவருடையதுதான். தளத்தை மதுரன் வடிவமைத்துக்கொடுக்கிறார். எழுத்தாளர்களை அணுகிக் கட்டுரை கேட்பது, ஞாபகமூட்டுவது, மீள ஞாபகமூட்டுவது, பண்பாக ஞாபகமூட்டுவது, மரியாதையுடன் ஞாபகமூட்டுவது, எரிச்சலுடன் ஞாபகமூட்டுவது, கோபத்தைக்காட்டாமல் ஞாபகமூட்டுவது, ஆக்கம் கிடைத்தபின் எழுத்துப்பிழைகள் திருத்துவது, கொஞ்சம் அப்படி இப்படி இருந்தால் இதை எப்படி வெளியிடாமல் தவிர்ப்பது என்று குழம்புவது, தொகுப்பது, வெளியானபின்னர் எழுதியவர்கள் கொடுக்கும் அலப்பறைகளை சமாளிப்பது! என்று ஒவ்வொரு வெளியீடும் கோமகன் அண்ணாவுக்கு கொல்லக்கொண்டுபோவதுபோலத்தான். எது இவரை, இவரைப்போன்ற சிறுபத்திரிகை ஆசிரியர்களை இயக்குகிறது என்று சரியாகத்தெரியவில்லை. ஏதோ ஒரு சின்னத் தணல் எங்கோ ஒரு மூலையிலிருந்து இவர்களைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கும். பிறப்பிலிருந்து அந்தத்தணல் கூடவரும். அதுதான் வாசிக்க வைப்பது. எழுத வைப்பது. செயற்பட வைப்பது. கோமகன் அண்ணாவின் தணல் இலக்கியவெளியில் அடிக்கிற பருவமழைகளுக்கும் குளிருக்கும் தணியாமல் எரியட்டும்.

இதுவரை நான்கு "நடு" இதழ்கள் வெளிவந்துவிட்டன. இவ்வாறான இதழ்களில் நான் முதலில் தேடி வாசிப்பது இதுவரை கேள்வியேபடாத எழுத்தாளர்களின் ஆக்கங்களைத்தான்.
முருகன் நாகசுந்தரம் என்பவரின் “பசி” என்கின்ற கவிதை இப்படி ஆரம்பிக்கிறது.
“பலமாத பட்டினிக்குப்பின்
ஓர்நாள் பசிமுற்றி
என் விரல்களைத் தின்ன ஆரம்பித்தேன்.”
பின்னர் சிறுகதைகளைத் தேடிப்போய் வாசித்தேன். அப்புறம் சில கட்டுரைகள். அவ்வையின் நேர்காணல் வந்திருந்தது. “ஆயுதங்களுடன் பெண்கள் இருந்தபோது பெண்களை ஏற்றுக்கொண்ட சமூகம், பின்னர் ஆயுதம் மௌனித்த பின் தனது சுயரூபத்தைக் காட்டியிருக்கிறது.” என்று அவ்வை சொல்வதை புரிந்துகொள்ளமுடியவில்லை. எப்போது எது ஏற்றுக்கொள்ளப்பட்டது? இப்போது எது குறைந்துவிட்டது? அவ்வையிடம் இதுபற்றி விசாரிக்கவேண்டும் என்று தோன்றியது. பின்னர் எதுக்கு? எல்லோரிடமும் எல்லாவற்றுக்கும் பதில் இருக்கும். எல்லாப்பதில்களும் சரியாக வேறு இருக்கும்.
இப்படியான இணைய இதழ்களை எப்படி அணுகுவது என்ற பயிற்சி எனக்குப்போதவில்லை. பொதுவாகவே இணையவாசிப்பு பற்றிய முழுமையான பிரக்ஞை என்னிடம் இல்லை. ஒரு கட்டுரை வாசிப்பதற்குள் பொறியில் மாட்டிய எலிமாதிரி மவுஸ் அங்கும் இங்கும் பரபரக்கிறது. ஒன்றை முடித்ததும் அடுத்ததாக எதை வாசிப்பது என்றும் தெரியவில்லை. மற்றவர்கள் விளக்கலாம்.
இம்முறை “நடு” இதழில் “வெற்று முரசு” என்கின்ற என்னுடைய கட்டுரை வெளிவந்திருக்கிறது. புதிதான வாசகர்களிடம் சென்று சேரலாம் என்றுதான் அவ்வப்போது இப்படி படலை தாண்டிப்போவது. இது பேழையில் மூடி ஆற்றோடு விடுவதுபோலத்தான். அதன்பின்னர் என்ன ஆகுமென்றே தெரியாது. யாரேனும் வாசிக்கிறார்களா? அதுவும் தெரியாது. முப்பது ஆக்கங்களுக்குள் ஒன்றாய் “என்னை ஏன் இப்படித் தனியே விட்டாய்?” என்று அது பாவமாய்ப்பார்க்கும்.
“வெற்று முரசு” கட்டுரையிலிருந்து சிறு பகுதி. முழுமையாக வாசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
//வரலாற்றில் புரட்சியாளர்கள் ஒருபோதும் புலிக்கூட்டத்திலிருந்தும் சிங்கக்கூட்டத்திலிருந்தும் உருவாகியிருக்கமாட்டார்கள். மாற்றாக அவர்கள் செம்மறிக்கூட்டத்திலிருந்தும் பசுக்கூட்டதிலிருந்துமே உருவாகிறார்கள். தம்முடைய இடையர்களின் அதிகாரப்பிடியிலிருந்து வெளியேறவே அவர்கள் வெளிக்கிளம்புகிறார்கள். அப்படிக்கிளம்பும்போது அவர்களுக்கென்று ஒரு தத்துவ ஆலோசகர், ஒரு தொடர்பாளர், ஒரு மீட்பர், அவர் வழி பின்பற்றும் படையணி என்று புரட்சிக்கு ஆதாரமான பாத்திரங்கள் எல்லாமே தானாகவே உருவாகும்.//1 comment :

  1. மீண்டும் பதிவேற்ற முடியுமா?

    ReplyDelete