Skip to main content

விருந்து




ஶ்ரீயும் நிர்மாவும் ஒன்றாகப் படகில் அவுஸ்திரேலியா வந்தவர்கள். கிட்டத்தட்ட ஆறரை வருடங்களாக அவர்கள் புரோட்மெடோஸில் இருந்த தடுப்பு முகாமில்அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். வெளியில் விட்டபின்னரும் அவர்களுக்கு இங்கே ஒழுங்கான ஒரு வேலை கிடைக்கவில்லை. ஒரு வழியாக உதவிநிறுவனம் ஒன்றினூடாக அவர்கள் ‘விருந்து’ என்கின்ற ஒருநாள் உணவகத்தை ஆரம்பிக்கிறார்கள். நான்கு மாதங்களின் பின்னர் நிரோவும் தடுப்புமுகாமிலிருந்து வெளியே வருகிறார். பின்னர் நியேதனும் முகாமிலிருந்து வெளியேறி இவர்களோடு இணைகிறார். இப்போது உணவகம் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என்று நான்கு நாள்களும் நடைபெறுகிறது.

நேற்று ஜீவியின் பிறந்தநாள் என்று அந்த உணவகத்துக்குப் போகலாம் என்று முடிவு எடுத்தோம். அங்கு சாப்பிட முற்பதிவும் செய்து காசையும் முன்னமேயேகட்டிவிடவேண்டும். பொதுவாக புக்கிங்கை ஓரிரு வாரங்களுக்கு முன்னரேயே செய்யவேண்டும் என்று நண்பர் ஒருவர் சொன்னார். எங்கள் காலத்துக்குஇரண்டு பேருக்கான இடம் நேற்று கிடைத்தது. புக் பண்ணினோம். ஏழு மணிக்கு ஒரு நிமிடம்கூட தாமதிக்கவேண்டாம் என்றார்கள். 

மெல்பேர்னில் நேற்று மரண குளிர். போட்டிருந்த ஜக்கட் ஐஞ்சியத்துக்கும் பிரயோசனமில்லை. நடுங்கியபடியே ‘டான்’ என்று டைமுக்கு வாசலில் போய்நின்றோம். உள்ளே நுழைந்தால், ‘அதிகாலை நிலவே, அலங்காரச் சிலையே, புதுராகம் நான் பாடவா’ என்று இளையராஜா பாடல். வாசலில் ஒரு வயதானபெண்மணி வரவேற்றார். ஐரிஷ்காரராக இருக்கவேண்டும். இதுவா முதல் தடவை என்று கேட்டு ‘ஹவ் எக்ஸைட்டிங்’ என்றார். உணவகத்தில் கூட்டம்அள்ளியது. கிட்டத்தட்ட எழுபது பேர்வரை இருப்பார்கள். நெருக்கம் நெருக்கமான கதிரை, மேசைகள். வந்திருந்தவர்களில் பலர் ஐரோப்பிய பின்னணியைக்கொண்டிருந்தார்கள். இரண்டு வட இந்தியர்களும் தெரிந்தார்கள். இலங்கை முகங்களைக் காணவில்லை. எங்கள் அருகே எண்பத்துமூன்று வயது இளைஞர்ஒருவருக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. எல்லோரும் உரத்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஒரு பேல் ஏல் எடுத்தேன். ஜீவி ஜிஞ்சர் பியர். ‘பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’ என்று ஜானகி கீச்சிட்டாலும் பேச்சுச்சத்தத்தில் எதுவும் கேட்கவில்லை. 



சில்வர் கிண்ணியில் போண்டா, அதன்மேல் கொஞ்சம் சட்னி, நறுக்கப்பட்ட கோவாவும் வெங்காயமும் என அப்பட்டைஸர் வந்தது. அதன்பின்னர்ஒருங்கிணைப்பாளர் மணி அடித்து எல்லோரையும் அமைதியாக்கிவிட்டுப் பேச ஆரம்பித்தார். எப்படி இந்த நாட்டுக்குப் புகலிடம் கோரி வந்தவர்கள் எமக்கு தம்கலாச்சாரத்தையும் வாழ்க்கையையும் உணவினூடாக பகிர்ந்தளிக்கிறார்கள் என்று விளக்கினார். பின்னர் ஶ்ரீ பேச ஆரம்பித்தார். எப்படி அவர்கள் படகில்வந்தார்கள் என்பதையும் ஒன்பது ஆண்டுகளாகியும் இன்னமும் புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் இழுபட்டுக்கொண்டிருக்கிறது என்பதையும்கூறினார். மட்டுப்படுத்தப்பட்ட ஆங்கிலத்தில்தான். ஆனால் அருமையாக அவருடைய பேச்சு இருந்தது. அனைவருக்கும் அது புரிந்தது. நண்டைச்சாப்பிடும்போது பக்கத்துக் கோப்பையை எட்டிப்பார்க்காமல் உங்கள் கோப்பையிலேயே கவனமாக இருங்கள் என்றார். கைகளைப் பயன்படுத்தச்சொன்னார். கோப்பையும் மேசையும் அலங்கோலமானால் காரியமில்லை என்றார். முக்கியமாக, இரண்டாம், மூன்றாம் தடவையும் மறக்காமல் கேட்டு வாங்கிச்சாப்பிடச்சொன்னார். 



‘அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்புமது புலம்புவதைக்கேள்’ என்று ஜானகியும் விடாமல் பாடிக்கொண்டிருந்தார். 

சோறு, அன்னாசியில் ஒரு கறி, பருப்பு, பீற்றூட் சட்னி, ஊறுகாய் சகிதம் பெரு நண்டு திருவருள்கொண்டு இருப்பிடத்தைவிட்டு வெளியே வந்தார். ஒரு முழுநண்டும் நிறையக் குழம்பும். அப்படியே தீவாக்கள் சமைப்பதுபோல! ஆஸி நாக்குகளுக்காகக் கொஞ்சம் உறைப்புக் குறைவுதான். ஆனால் மல்லியும் செத்தல்மிளகாயும் சரியான விகிதத்தில் சேர்த்துத் திரித்த தூளாக இருக்கவேண்டும். டேஸ்ட் என்றால் அப்படி ஒரு டேஸ்ட். ஶ்ரீதான் ஒவ்வொரு மேசையாக வந்துதட்டை வைத்தார். நாம் ‘வணக்கம்’ என்றோம். ‘அட நம்மட ஆக்களா?’ என்று புன்னகைத்து ‘உங்களுக்குக் கொஞ்சம் உறைப்பு காணாதுதான், சாப்பிடுங்கோ, மறக்காமல் இரண்டாந்தரம் எடுங்கோ’ என்றார். தமிழாக்கள் வந்திருப்பதாக உள்ளே போய் சொல்லியிருக்கவேண்டும். ஏனைய மூவரும்அடுத்தடுத்து வந்து சாப்பாட்டைப்பற்றி பேசிவிட்டுப்போனார்கள். நண்டு சமைத்தவர் திருகோணமலைக்காரர். தான் ஊரில் மீன்பிடி தொழிலைச் செய்ததாகவும் அங்கும் இப்படித்தான் கறி வைத்ததாகவும் , ஆனால் இரண்டு மடங்கு உறைப்போடு என்று சொன்னார். அடுத்தமுறை மீன் குழம்பு வைக்கும்போது வரச்சொன்னார். திருகோணமலையில் சும்மாவே மீன் சாப்பாடு அதகளம். இவர் வேறு மீன் பிடித்து கறி வச்ச மனுசன். விடுவோமா? 



நான் பிளேட்டை வழித்துத்துடைத்துவிட்டு எக்ஸ்றா எடுக்க எழுந்தேன். அங்கே பார்த்தால் எக்ஸ்றாக்கு ஒரு கியூ நின்றது. மெல்பேர்னில் எந்தஉணவகத்திலும் இரண்டாம் தடவைக்கு கியூ நிற்பதைப் பார்த்திருக்கமுடியாது. வயது வித்தியாசம் இல்லாமல் குழம்பும் அன்னாசிக்கறியும் சோறும்அள்ளிப்போட்டுக்கொண்டு போனார்கள். எனக்கு நிவேதன் அண்ணர் எக்ஸ்றாவில் ஒரு எக்ஸ்றா போட்டுத்தந்தார். அதன்பின்னர் டெஸர்ட்டாக கேக்கும்சோயாபால் தேநீரும் தந்தார்கள். எங்கள் பிளேட்டை எடுக்க வந்த பெண்மணி, மிகச் சுத்தமாக வழிக்கப்பட்டிருந்த நண்டுக்கோதுகளையும் கோப்பையையும்பார்த்துவிட்டுச் சொன்னார். 

“Wow, looks like you guys had a great time!” 

உணவகத்தில் பணிபுரிபவர்கள் எல்லோரும் வொலண்டியர்கள்தான். அவர்களும் கிடைத்த காப்பில் போண்டாவையும் நண்டுச்சோறையும்சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த நான்கு அற்புத சமையல்காரர்களும் அனைவரோடும் சென்று அளவளாவிக்கொண்டிருந்தார்கள். உணவின்அற்புதருசியோடு ஒருவித கொண்டாட்ட சூழலையும் அவர்கள் உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். சாப்பிட்டு முடித்து மிகுந்த மனநிறைவோடுவெளியேறியபோது இளையராஜா பாட்டு தொடர்ந்துகொண்டிருந்தது. 

‘அந்த நிலாவைத்தான் கையில பிடிச்சேன், என் ராசாவுக்காக’ 

எங்கள் ஊரின் அற்புத உணவு எங்கள் சமூகத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கிறது, வெளியே அது பரவலாகச் சென்றடையவில்லையே என்ற கவலைஅவ்வப்போது எழுவதுண்டு. எங்களுடைய கோழிப்பிரட்டல், ஆட்டுப்பொரியல், மாட்டுக்கறி, நண்டுக்குழம்பு, இறால் வறை, புளிக்கப் புளிக்க கணவாய்க்கறி, சூடைப்பொரியல், ஊருக்கு ஒரு மீன் குழம்பு … இப்படி எந்தப்பெரிய லிஸ்ட் அது? அவற்றின் சுவையை ருசித்தால் ஆயுசுக்கும் மறக்குமா என்ன? அதனை ஒருஅற்புத அனுபவமாக, தேவையான அளவு தியேட்டரிக்கலுடன் கொடுக்கும்போது அது உலகம் முழுதும் கொண்டாடப்படவே செய்யும். “விருந்து” என்கின்றஇந்த உணவகம் அதை நன்றாகச் செய்து பல கலாச்சார மனிதர்களிடம் சென்று சேர்கிறது என்று நினைக்கிறேன். 

“விருந்து” உணவகத்தாருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும். 

000

https://tamilfeasts.ceres.org.au/


Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக