Skip to main content

அசோகவனத்தில் கண்ணகி!

 

அசோகவனம், சோலையாய், விதம் விதமான மரங்களும் பூக்களும் என அழகை அள்ளி தெளித்துக்கொண்டிருந்தது. சுற்றிவர நீலலில்லி பூக்கள். நுவரேலியா குளிர். தூரத்திலே மலைச்சாரல். வெயில் குறைந்த வானம், மலைகளில் பட்டு தெறித்தோ என்னவோ, மெல்லிய நீல வண்ணத்தில் தூரத்தில் மலைத்தொடர்களை பார்க்கும்போதே கண்ணுக்கு இதமாக, குளிர் பதினெட்டு பத்தொன்பது டிகிரி இருக்கலாம். 

மரத்தடியில் முழங்கால்களுக்குள் முகம்புதைத்து தன் சிலம்புகளை பார்த்தபடியே கண்ணகி சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். மரத்தின் மேலே உச்சியில் இருந்து விதம் விதமான பறவைகளின் சத்தங்கள். அவ்வப்போது உஸ் உஸ் என்ற சத்தம். இது எதுவுமே கண்ணகி காதில் எட்டவில்லை. அவளுக்கு ஊர் ஞாபகம். பூம்புகார் வெயில் அவ்வப்போது நினைவுக்கு வந்து வந்து மிரட்டிக்கொண்டிருந்தது. கோவலன் வந்து தன்னை மீட்டபின்னர் அப்படியே இங்கேயே ஒரு கடை வைத்து செட்டிலாகவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். மாதவியிடம் இருந்தும் கடல் தாண்டி தொலை தூரத்தில் இருந்துவிடலாம். இவனும் அங்காலே இங்காலே அசையமாட்டான். கோவலன் நினைவில் கண்ணகிக்கு இரண்டு செல்சியல் குளிர் இன்னமும் கூடியது. சாக்கு போன்ற ஒரு போர்வையை நேற்று தான் மண்டோதரி கொடுத்துவிட்டு போயிருந்தாள். எடுத்து போர்த்திக்கொண்டாள். யாரோ மரத்தில் மேலிருந்து அழைப்பது போல தோன்றியது. அண்ணாந்து பார்த்தாள். ஒன்றுமேயில்லை.ப்ச்.. பிரமை.

மண்டோதரி. அவளை நினைக்கும்போதே கண்ணகிக்கு ஆச்சர்யமாயிருந்தது. அழகி. தவறு. தவறு. பேரழகி. அவள் இடையை பார்த்தபோது பெண் தனக்கே பொறாமையாய் இருக்கிறதே, இந்த விசரன் இராவணனுக்கு ஏன் இப்படி மதி கெட்டுப்போயிற்று என்று நினைத்துக்கொண்டாள். உள்ளூர இன்னொரு கலக்கமும் சேர்ந்துகொண்டது. மீட்கிறேன் பேர்வழி என்று வரும் கோவலன் மண்டோதரி பின்னாலே போய்விடமாட்டான் என்று என்ன உத்தரவாதம்? மாதவி வீடே கதி என்று கிடப்பவன் அவன். பெண் என்று பேப்பரில் எழுதி கொடுத்தால் கூட பேப்பரை சின்னவீடாக வைத்துகொள்வானே என் கணவன். அடடா .. இப்போது கண்ணகிக்கு மண்டோதரியை நினைக்க நினைக்க கோபம் தான் வந்தது. என்ன மாதிரி பெண் இவள்? இவளுக்கு இருக்கும் அழகுக்கும் அறிவுக்கும் வேறு யாருமாயிருந்தால் போடா நாயே என்று இராவணனை தூக்கி எறிந்துவிட்டு போயே போயிருப்பாளே. இவளோ எனக்கு குளிருக்கு போர்க்க போர்வை தருகிறாள். பதிவிரதை என்று வரலாறு சொல்லவேண்டும் என்பதற்காக ஒரு அளவு கணக்கு இல்லையா? ம்ம்ம். மரத்தின் மேலே இருந்து மீண்டும் அந்த உஸ் உஸ் சத்தம். எட்டிப்பார்த்தாள். ம்ஹூம். ஒன்றுமேயில்லை. நத்திங் என்று நினைத்தவாறே மீண்டும் சிலம்புகளை வெறிக்க ஆரம்பித்த தருணத்தில் தான்,

03.RavanaLustsSita

 

“வீணையடி நீ எனக்கு,
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு,
புது வயிரம் நானுனக்கு”

 

தூரத்தில் பாட்டுச்சத்தம். பாரதி பாடல். கூடவே வீணை இசை. இராவணன் தான். கருமாந்திரம் பிடித்தவன். பாரதி பாட்டை இந்த மாபாதக செயலுக்கு பயன்படுத்துகிறான்.  நிமிர்ந்து பார்த்தால் தூரத்தில் இராவணன் ஆடி அசைந்தபடி … கையில் வீணை. வரட்டும். கண்ணகி உடனேயே மரத்தடியில் இருந்த கதிரையில் ஏறி அமர்ந்தாள். அசோகவனத்தில் காவலுக்கிருந்தவர்கள் எல்லாம் ஓடிவந்து அவனுக்கு கார்ட் ஒப் ஒனர் கொடுத்துக்கொண்டு பூ தூவினார்கள். அவன் அவளிருந்த பகுதிக்கு நெருங்க நெருங்க, கண்ணகி கால் மேல் கால் போட்டு அவனை கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள். சின்ன ஏளன சிரிப்பும் கூட சேர்ந்துகொண்டது. இராவணனுக்கோ இவளைப்பார்த்ததும் சுருதி ஏறி இருக்கவேண்டும். பாட்டு சத்தம் பலமாக வந்தது. பாட்டும் வீணையும் சுருதி சேரவில்லை. “புது வயிரம்” கீழ் நோட்டு எட்டவே இல்லை. இதைவிட ஜேசுதாஸ் எவ்வளவு நன்றாக பாடியிருப்பார் என்று கண்ணகி நினைத்துக்கொண்டாள். இலங்கையர்கள் பாட்டுவிஷயத்தில் இன்னமும் முன்னேறவேண்டி இருக்கிறது போல. இவன் பாட்டுக்கு போய் சிவன் மயங்கினானாமே! அக மகிழ்ந்து வரம் வேறு குடுத்தானாம். கை நரம்புகளால் சாமகானம் … சுத்தம். சுடலை கூத்தனுக்கு சுருதி தெரியுமா? தாளம் தெரியுமா? 

போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடிவானவளே ! நாதவடிவானவளே !
நல்ல உயிரே கண்ணம்மா !

இராவணன் இவள் எண்ண ஓட்டங்களை தவறாக நினைத்திருக்கவேண்டும். கண்ணம்மா என்று உச்சஸ்தாயியில் அரட்ட தொடங்கினான். அட நாதாறிப்பயலே. கண்ணமாவை எங்கே பாவிப்பது என்று ஒரு விவஸ்தை இல்லையா. கண்ணகிக்கு கோபம் வந்தது. வாடா வா .. “நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சா இயல்பும் ஞானச்செருக்கும்” புதுமைப்பெண்ணின் இலக்கணம் என்று இதே பாரதி தாண்டா சொன்னான். கிட்ட வந்து பாரேன். ஓட்ட அறுக்கிறேன். வாடா மல்லி. கருணாகர எண்டகோ!

இராவணன் மேலும் நெருங்கினான். நெருங்கியவன் அப்படியே ஸ்டைலாக பத்தாவது தலையை மரத்தில் சாய்த்து ஒய்யாரமாய் நின்றான். கைகளில் இரண்டு வீணையில் பின்னணி இசை வேறு கொடுத்துக்கொண்டிருந்தது. ரோஜா படத்து பெண் பார்க்கும் சீனில் வரும் பின்னணி இசை. சுடுவதிலும் ஒரு விவஸ்தை இல்லையா என்று கண்ணகி தனக்குள்ளேயே சிரித்துக்கொள்ள, இராவணன் மீண்டும் தப்பாக அதை அர்த்தப்படுத்திக்கொண்டான்.

பிடிச்சிருக்கா?

“ஹாச்…சும்” என்று தும்மினாள் கண்ணகி. நுவரெலியா குளிர், வந்து இரண்டு மூன்று நாளில் மதுரைக்காரிக்கு ஒத்துவரவில்லை. மண்டோதரியிடம் எலெக்ட்ரிக் ஹீட்டர் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். “ஹாச்…சும்”.

“பாத்தியா .. தடிமன் பிடிச்சிட்டுது .. யாரங்கே .. கண்ணகிக்கு சித்தாலெப்பை கொண்டுவாருங்கள்”

“ஒண்டுமே வேண்டாம் .. நீ எனக்கு அலுப்படிக்காம போனி எண்டால் அதுவே மெத்த பெரிய உபகாரம்”

“என்ன ஆச்சரியம்? வந்து இரண்டு நாளில் இலங்கை தமிழ் வேறு பழகி விட்டாய் கண்ணகி.. “

“டேய் .. நீங்க எல்லாம் சகட்டு மேனிக்கு இந்திய தமிழ் பேசுவீங்க .. நாங்க இலங்கை தமிழ் பேச கூடாதா?”

“எதுக்கு கோபம் பெண்ணே .. நீ கோபப்பட்டால் என் மனம் தாங்காது”

“மதுரையே தாங்காது தெரியுமா?”

“என்ன சொல்ற?”

“கொஞ்ச நாள் தான் .. என்னை தேடி கோவலன் எப்படியும் இலங்கை வருவான் .. வந்தவன் உங்களை எல்லாம் உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டு தான் என்னை மீட்பான் தெரியுமா?”

“நான் எல்லாம் இராமனிடமே வதம் வாங்கியவன் .. உன் கோவலன் எம்மட்டுக்கு?”

“உனக்கு அவனைப்பற்றி சரியாக தெரியாது”

“என்ன நீ? கட்டிய கணவனை அவன் இவன் என்று பேசுகிறாய்? .. இதுவே சீதையாயிருந்தால் இராமன் பெயரே சொல்ல மாட்டாள் தெரியுமா? அஞ்சி ஒடுங்கி … என்னை கண்டாலே பயத்தில் வேர்த்துவிடுவாள் …”

“உனக்கு தெரியுமா? சீதை இலேசுபட்டவள் இல்லை இராவணா .. அவள் ஒரு அமுசடக்கி கள்ளி. மாயமான் வேண்டும் அதுவும் இராமனே கொன்று வென்று வரவேண்டும் என்றதுக்காக என்னா ஆட்டம் ஆடினாள் தெரியுமா? அது பாவம் பெடி இலக்குவன் .. அவன் மீது அபாண்டமாக பழி சொல்லி .. சீதைக்கு நான் எவ்வளவோ மேல் .. வெரி ஓபின் டைப்”

“நீ ஒரு வாயாடி .. சீதையாய் இருந்தால் இரண்டு வார்த்தை பேசியிருக்கமாட்டாள் .. தான் உண்டு தன் பாடுண்டு என்று இருப்பாள். இராமன் வந்து தன்னை மீட்பான் என்று சதா அதே சிந்தனை தான் .. அவளையே சந்தேகித்து தீக்குளிக்க சொன்னான் இராமன் .. உண்ட சேட்டை கதைக்கு கோவலன் என்னென்ன டெஸ்ட் எல்லாம் வைப்பானோ?”

“ஹ ஹ ஹ ..டெஸ்ட்டா? எனக்கா? கோவலனா?  … சான்ஸே இல்ல … யாரு யாருக்கு டெஸ்ட் வைப்பது என்று கொஞ்சமாவது அருகதை வேணாம்?”

இராவணன் குழம்பிப்போனான். இவள் எப்படிப்பட்ட பெண்? எங்கிருந்து இவளுக்கு இவ்வளவு துணிச்சல் வந்தது? நான் இல்லாதபோது நன்றாக பேசி பழகுவதாக தான் மண்டோதரி சொல்கிறாள். ஆனால் என்னை கண்டவுடன் எள்ளும் கொள்ளுமாக .. கூடவே மதுரை குசும்பும் சேர்ந்து. ச்சே ஊருலகத்தில் மாதவி, அகலிகை, சகுந்தலை என்று ஆயிரம் பெண்கள் இருக்க கண்ணகியை என்ன மண்ணுக்கு இங்கே தூக்கிவந்தோம் என்று தன் மேலேயே கோபப்பட்டான்.

என்ன யோசிக்கிறாய்? ஏண்டா என்னை  தூக்கி வந்தோம் என்றா? அதை தான் நானும் சொல்கிறேன். பேசாமல் மரியாதையாக அதே புஷ்பக விமானத்தில் என்னை கொண்டுபோய் பூம்புகாரில் இறக்கி விடு. இல்லையா.. ஆள் அனுப்பி கோவலனை இங்கே வர வை. சும்மா அவ்வப்போது வந்து ‘பிடிச்சிருக்கா?’ ‘நீ ரொம்ப அழகாயிருக்கே’ என மணிரத்னம் வசனம் பேசிக்கொண்டு பீலா விட்டாயானால் இந்த அசோகவனத்தையே எரித்துவிடுவேன் தெரியுமா?

நீ … அசோகவனத்தை .. எரிக்க போகிறாயா?

நம்பாட்டி மதுரைப்பக்கம் நம்மளை பற்றி விசாரிச்சு பாரு தம்பி

இராவணன் தலைகள் குழப்பத்தில் சுற்ற தொடங்கியது. என்னடா சில நேரங்களில் பக்கா லோக்கலாக பேசுகிறாள். சில நேரங்களில் நல்ல தமிழில் பேசுகிறாள். எது நல்ல தமிழ் எது லோக்கல் தமிழ் என்பதே இப்போது குழம்பி விட்டதே. இளங்கோ அடிகள் இவளை பற்றி இலக்கியத்தனமாக விளித்திருந்தாரே. தவறான ஆளை கொண்டுவந்துவிட்டோமோ என்ற குழப்பத்தில் அங்கிருந்து தயக்கத்துடன் நகர தொடங்கினான்.

“நீ நல்ல மூடில் இல்லை போல இருக்கிறது .. நாளை வருகிறேன்.”

“நாளை வந்தாலும் இதே நிலை தான் அற்பனே .. போய் வேலையை பாரு”

இராவணன் போக போக ஒருவித வெற்றிப்பெருமிதத்துடன் கண்ணகி கதிரையில் இருந்து எழும்பி பாத்ரூம் போக என்று டோய்லட் இருக்கும் காட்டுப்பாதை வழியாய் நகர்ந்தாள். ஒரு பத்தடி தான் வைத்திருப்பாள், ஏதோ ஒரு சத்தம். சர சர என்று அடர்ந்த மரங்களுக்கிடையே யாரோ நகர்ந்து வருவது போல சத்தம் கேட்டது. விக்கித்துப்போனாள் கண்ணகி. பாத்ரூம் பக்கம் எவன் எட்டிப்பார்க்க வருவது? இது நிச்சயம் இராவணன் இல்லை. அவன் கீழ்த்தரமானவன் தான். ஆனால் இவ்வளவு சீப்பாக இறங்க மாட்டான். யார் இந்த இடத்தில் களவாக வரக்கூடும்? விபிஷனணாக தான் இருக்கும். நல்லவன் வேஷம் போடும் சந்தர்ப்பவாதி. அன்றைக்கு அவன் பார்வையே சரியில்லை. கண்ணகி மரத்தடி ஒன்றை முறித்து தயாராக வைத்துக்கொள்ள சத்தம் துல்லியமாக கேட்டது.

“ஸ்ரீ கோவலா .. ஸ்ரீ கோவலா.. ஜெய் ஸ்ரீ கோவலன்”

யாரப்பா இது ஸ்ரீ கோவலன் என்று சொல்லிக்கொண்டு வருவது என்று உற்று பார்த்தால் அட, ஒரு குரங்கு … கோவலன் பெயரை சொல்லிக்கொண்டு. அட இப்படி தானே அனுமனும் சீதையிடம் தூது போனான். பாதை தெரிந்தவன் என்பதற்காக கோவலன் அனுமனை பிடித்து இங்கே அனுப்பியிருக்கிறானோ? இருக்கலாம். காரியக்காரன். அனுமன் இப்போது கிட்ட நெருங்கினான்.

“கண்ணகி தாயே .. உங்களை கண்டுவிட்டேன் கடைசியில் …நானே அனுமன் .. கோவலன் உங்கள் காவலன் என்னை உங்களிடம் தூது அனுப்பியிருக்கிறான்”

கண்ணகிக்கு சந்தேகம். சீதைக்கு வந்த அதே சந்தேகம். கோவலன் புத்தி இவன் முகத்தில் அப்படியே இருந்தாலும் இது இராவணன் சூழ்ச்சியாக இருக்குமோ என்ற சந்தேகம். அவன் தான குரங்கு வேடத்தில் யாரையாவது அனுப்பியிருக்கிறானோ?

“நீ கோவலன் தூதுவன் தான் என்பதற்கு என்ன ஆதாரம்?”

“தாயே .. ஆதாரம் என்று காட்டுவதற்கு கொடுத்துவிட அண்ணலிடம் சல்லிக்காசு கூட இல்லை. அண்ணல் வியாபாரத்தில் எல்லாவற்றையும் இழந்துவிட்டார். எனக்கு கூட சம்பளம் இரண்டு வாழைக்குலைகள் தான்”

TN_153349000000

கேட்ட கண்ணகி அப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டாள். இவன் அனுமன் தான். கோவலன் தூதுவன் தான். கோவலன் ஒரு வங்குரோத்து கேஸ் என்பது இராவணனுக்கு தெரிந்திருக்க சாத்தியமில்லை. அவன் வல்லவன், நல்லவன், நாலும் கொண்டவன் என்று இராவணனுக்கு ஏற்கனவே கதை அளந்தாயீற்று. ஆக உண்மையை இவன் புட்டு புட்டு வைப்பதால் இவன் தூதனாக தான் இருக்கவேண்டும். அடடா நாம் தப்பாக கோவலனை இத்தனை நாளாய் எடை போட்டு வைத்திருந்தோமே. மாதவியே கதியென்று கிடந்தாலும் எனக்கொரு தீங்கென்ற போது துடித்து போய் தூது அனுப்பியிருக்கிறானே. ஆகா கோவலனல்லோ உண்மையான  புருஷன் என்று அகமகிழ்ந்தாள்.

நல்லது அனுமனே .. என்னவர் என்ன சொல்லி அனுப்பினார்? என்னை இந்த அரக்கனிடம் இருந்து மீட்க படையோடு வருகிறாரா? தனியாளாக வருகிறாரா? தன் தந்திரத்தால் இந்த இராவணனை வென்றுவிடுவாரா? இல்லை என்னை உன்னோடு அழைத்து வர ஆணை சொல்லி அனுப்பினாரா?

அனுமன் தயங்கினான். இராமனுக்கெல்லாம் தூது போனவன். சஞ்சீவி மலையை காவியவன். வாயு புத்திரன். கேவலம் அந்த கோவலன் என்னை இன்றைக்கு இந்த இடத்தில் தயங்க வைத்துவிட்டானே என்று அனுமன் கோவலன் மீது கோபப்பட்டான். ஆனாலும் எடுத்த காரியம் முடிக்கவேண்டும் அல்லவோ. அட்லீஸ்ட் வாழைக்குலையாவது கிடைக்கிறதே.

இல்லை தேவி .. அது வந்து ..

தயங்காமல் சொல்லு ஆஞ்சநேயா.. உன் மதிநுட்பத்தால் இராவணனை வென்று என்னை மீட்டு போக போகிறாயா? உன்னால் முடியுமா?

தேவி வந்து ..

சொல்லு .. குவிக்…

அனுமன் சன்னமான குரலில் தயங்கி தயங்கி சொல்ல தொடங்கினான்.

தேவி … கோவலன் நிதி நிலைமை சரி இல்லை .. வந்து … உங்களிடம் இரண்டு காற்சிலம்புகள் இருக்கிறதாமே?

அதுக்கு?

அதை மீட்டுக்கொண்டு வந்தால் தான் மீண்டும் பிஸ்னஸ் செய்யலாம் எண்டு ...

படீரென்று அனுமனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள் கண்ணகி.

 

&&&&&&&&&&&

Comments

  1. உங்களுடைய எழுத்துநடை என்னை மிகவும் கவர்ந்தது, படிக்க படிக்க சுவாரஸியமாக இருக்கிறது.

    உங்களை பின்தொடர்ந்து வருகிறேன்.

    ReplyDelete
  2. எல்லாம் முடிஞ்ச பிறகு மதுரை எரிஞ்சு பிரியோசனமில்லை கண்ணகி, கிரெடிட் காட்டாவது கொடுத்தனுப்பு

    ReplyDelete
  3. நன்றி செம்மலை ஆகாஷ்.

    ReplyDelete
  4. @பாலா .. விவரமா தான் இருக்கிறீங்க.

    ReplyDelete
  5. வணக்கம்.
    முதல் முறையாக இந்த வலைக்கு வருகிறேன்.
    படிக்கத் தொடங்கியதிலிருந்து சிரித்துச் சிரித்து
    வயிற்று வலி வந்து விட்டது.

    வித்தியாசமான கற்பனை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. சூப்பர் காமடி பதிவு :) அங்கங்க உள்குத்து வைச்சு, நல்ல ஓட்டம்! காலத்தோட தொடர்பு படுத்தேக்க கொஞ்சம் குழப்பினாலும் அத எல்லாம் இதில பாக்ககூடாது மண்டு எண்டு எனக்கு நானே குட்டு வைச்சுக்கொண்டன் :) கலக்குங்க தல :)

    ReplyDelete
  7. மீண்டும் ஒரு அருமையான பதிவு,,, வாழ்த்துக்கள்...
    கோவலனை தீக்குளிக்க வைக்கிற மாதிரி முடியும் என எதிர்பார்த்தேன்...
    ஏனெனில் அன்றைய கோவலனும் இன்றைய கோவலன்களுக்கு வழிகாட்டி தானே........
    அவனை தீக்குளிக்க வைக்கும் போதாவது பேப்பரில் வரும் பெண்ணையாவது விட்டு வைப்பார்கள் ,,,(உடனே ஆண்களும் ஆயுதம் ஈந்தி என்னை தாக்க வேண்ட... தொப்பி அளவு என்றால் போட்டு கொள்ளவும்.(கொல்லவும்)

    ReplyDelete
  8. கோவலனை தீக்குளிக்க வைக்கிற மாதிரி முடியும் என எதிர்பார்த்தேன்...
    ஏனெனில் அன்றைய கோவலனும் இன்றைய கோவலன்களுக்கு வழிகாட்டி தானே........
    அவனை தீக்குளிக்க வைக்கும் போதாவது பேப்பரில் வரும் பெண்ணையாவது விட்டு வைப்பார்கள் ,,,(உடனே ஆண்களும் ஆயுதம் ஏந்தி என்னை தாக்க வேண்டாம் .. தொப்பி அளவு என்றால் போட்டு கொள்ளவும்.(கொல்லவும்)

    ReplyDelete
  9. நல்ல கற்பனை. நகைச்சுவையுடன் கலந்து சொன்னது நன்றாகவுள்ளது. என்றாலும் " எலெக்ட்ரிக் ஹீட்டர்" என்பது கொஞ்சம் கூடிவிட்டதோ? .... இல்லை இல்லை நான் சொல்லவில்லை. சொன்னது சின்னாம்பிதான்...

    ReplyDelete
  10. வயிறு குலுங்க சிரிச்சன்.

    ReplyDelete
  11. நன்றி அருணா செல்வம் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  12. நன்றி வீணா.

    ReplyDelete
  13. மிகவும் நன்றி செல்வி ...

    //கோவலனை தீக்குளிக்க வைக்கிற மாதிரி முடியும் என எதிர்பார்த்தேன்.//
    இதுவும் ஒரு ஆங்கிள் தான். கோவலனை தீக்குளிக்கவைத்து எதை நிரூபிக்கபோகிறோம்? அவன் யார் என்று தானே எல்லோருக்குமே தெரியுமே .. கண்ணகிக்கு கூட!

    ReplyDelete
  14. நன்றி சக்திவேல் அண்ணே ... லொள்ளுல இதெல்லாமே ஜகஜம் பாஸ்.

    ReplyDelete
  15. நன்றி குணபாலன் அவர்களே.

    ReplyDelete
  16. கோவலன் யாரென்பது அனைவருக்கும் தெரியும் என்றாலும் கூட அவனை தீக்குளிக்க வைக்க துணியும் பெண்களும் இருக்கிறார்கள் என்ற விடயம் வெளிப்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லவா?

    ReplyDelete
  17. //கோவலன் யாரென்பது அனைவருக்கும் தெரியும் என்றாலும் கூட அவனை தீக்குளிக்க வைக்க துணியும் பெண்களும் இருக்கிறார்கள் என்ற விடயம் வெளிப்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லவா?//
    இந்த ஆங்கிளில் யோசிக்கவேயில்லை செல்வி .. சுப்பெர்ப் .. ஆனா இந்த கதை very light vein இல் , அவரவர் கதாபாத்திரங்களின் குணவியல்புகளை மாற்றாது எழுதியது. கண்ணகி கோவலனை தீக்குளிக்க கேட்பது போல எழுதமுடியாது . காப்பியத்திலே அந்த சூழ்நிலை வந்தும் அவள் அதை செய்யவில்லை தானே. ஆனாலும் வித்தியாசமான பார்வை . அருமை .

    ReplyDelete
  18. Superb Thala! Kalaaikiraanga Romba!

    ReplyDelete
  19. Nanri Thaleeva .. yaruppaa athu peyara podaamaa ponathu!

    ReplyDelete
  20. நன்றி அண்ணா ... தங்கள் அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்....

    ReplyDelete
  21. நன்றி அண்ணா ... தங்கள் அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்....

    ReplyDelete
  22. இலங்கையர்கள் பாட்டுவிஷயத்தில் இன்னமும் முன்னேறவேண்டி இருக்கிறது போல.
    ஆஹா...

    சீதை இலேசுபட்டவள் இல்லை இராவணா .. அவள் ஒரு அமுசடக்கி கள்ளி
    இப்படியும் ஜோசிக்கிறானே ...

    ரோஜா படத்து பெண் பார்க்கும் சீனில் வரும் பின்னணி இசை. சுடுவதிலும் ஒரு விவஸ்தை இல்லையா
    விடமாட்டீங்களே

    அதை மீட்டுக்கொண்டு வந்தால் தான் மீண்டும் பிஸ்னஸ் செய்யலாம் எண்டு ...
    படீரென்று அனுமனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள் கண்ணகி.
    அருமை

    ReplyDelete
  23. நன்றி கீதா .. என்ன கன காலமாக ஆளை படலை பக்கம் காணேல்ல!

    ReplyDelete
  24. JK, excellent piece of work and humorously written. I read a novel called The Rosie Project and it has reminded me of your writing style. I attached few links to get more insight of it. We are enjoying your writing. You have the talent and gift to write a novel like the kite runner.
    Best Wishes, Arulpillai
    http://www.youtube.com/watch?v=USTxNo3Stlk
    http://graemesimsion.com/?p=253

    ReplyDelete
    Replies
    1. Thanks Arulpillai .. just watched the video .. looks an interesting plot :) .. Taken the not of it. Thanks again. Please do share other interesting novels/books you come across. Cheers.

      Delete
  25. //“டேய் .. நீங்க எல்லாம் சகட்டு மேனிக்கு இந்திய தமிழ் பேசுவீங்க .. நாங்க இலங்கை தமிழ் பேச கூடாதா?”//

    :-) :-) saththiyamaa unmai

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட