Skip to main content

தீண்டாய் மெய் தீண்டாய் : உயிரேந்தும் கற்றாளை

 

images-81
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும் 
நன்றுமன் வாழி தோழி. உன் கண்
நீரொடு ஓராங்குத் தணப்ப
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே.
- கபிலர்

கொஞ்சம் எங்கட தமிழாக்குவோம்.

காட்டு மயில் பாறையில் இட்ட முட்டையை
வெட்ட வெயிலில் குட்டி குரங்கு ஒன்று
உருட்டி விளையாடும் நாட்டுக்காரனின்
நட்பு யாருக்கு வல்லது? அவனின்
பிரிவை எண்ணி கலங்காத
கல்மனத்தாருக்கே நல்லது.

மயிலின் முட்டை அரிதானது. தாய் மயிலினால் அடைகாக்கப்பட வேண்டியது. அதை எந்த மயிலாவது பாறையில் இட்டுவிட்டு போகுமா? அந்த முட்டையை ஒரு கருங்குரங்கு ஒன்று உருட்டி உருட்டி விளையாடுகிறதே. அதற்கு என்ன தெரியும்? அதன் மதிப்பு என்ன புரியும்? அது போலவே தலைவனால் அடை காக்கப்பட்டு மகிழ்விக்கப்படவேண்டிய தலைவியும் தனித்து வெயில் பாறையில் விடப்பட்டு, பாழாய்ப்போன குரங்கு ஒன்று உருட்டி விளையாடும் கீழ் நிலைக்கு போய்விட்டாளே என்கின்ற கழிவிரக்கம். இதைத்தான் மாணிக்கவாசகர்

வந்தாய் பவரையில் லாமயில்
    முட்டை இளையமந்தி
பந்தா டிரும்பொழிற் பல்வரை
    நாடன் பண்போ

என்றார். வைரமுத்து கோச்சடையான் பாடல் ஒன்றில் அப்படியே பயன்படுத்தி இருப்பார்.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய்...
இதயம்
உடலில் இருந்து விழுந்து
உருண்டு புரண்டு போகுதே

இதே பாடலில் குறுந்தொகையின் இன்னொரு பாடல் வரிகளையும் கடன் வாங்கியிருப்பார்.

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு
என் உயிரோ சிறிதே
காதலோ பெரிதே

இதன் மூலம் இங்கிருக்கிறது. கொஞ்சம் காமம் தூக்கலோடு.

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட, செவ்வியை ஆகுமதி.
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே!

என்னவாம்?

வேர்ப்பலாக்களுக்கு மூங்கிலில் வேலிபோட்ட
நாட்டுக்காரனே.
சிறிய கிளையில் தொங்கும்
பெரிய கோண்டாவில் பழம் போல
அவள் உயிர் சிறிது.
காமம் பெரிது.
வந்து வேலி போடுடா ராசா!

தமிழின் அத்தனை காதல் கவிதைகளும் குறுந்தொகையிலிருந்து வந்தவை என்று சுஜாதா ஒருமுறை எழுதியது ஞாபகம் வருகிறது.

பிரிவுத்துயர் கொடியது. “நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு” என்று சீதை இராமனைப்பார்த்து கேட்பாள். அன்பினைப்பிரிந்து பனிவிழும் தேசங்களில் வாழும் ஒவ்வொரு மனிதனின் போர்வைக்குள்ளும் பனிப்பாறைகளே இரைந்து கிடக்கும். வெம்மைக்கு ஏங்கும் தருணங்கள் அவை. ஒவ்வொரு பனிக்கட்டியும் அவள் வெம்மையை நினைவூட்டும். சூரியனில் தரித்தால்கூட குளிரில் உடல் அவளின் வெம்மையை நாடி ஏங்கும். அது தான் பிரிவு. வெம்மை, குளிர் இரண்டுமே பிரிவுக்கு உவமானமாகும். வெம்மையின் போது குளிரின் பிரிவு தாக்கும். குளிர்மையின் போது வெயிலின் வெம்மைக்கு உடல் எங்கும்.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

என்பார் வள்ளுவர். நெருப்பு தொட்டால்தான் சுடும். காமம் பிரிவின்போது சுடுகிறதே என்று கலைஞர் இதற்கு நயம் சேர்ப்பார்.

பிரிவின்போது தனிமை மனிதனை பலவீனமாக்கும். எப்போது தனிமைப்பட்டாலும் அவள் அருகில் வந்து கொலை செய்வாள் என்கின்ற பயத்தில் மனம் சந்தடிக்குள் ஒளிந்துகொள்ளவே விரும்பும். ரயிலில் தனியே அமரும்போது யன்னலினூடாக பார்த்துவிட்டாலோ அந்தோ பரிதாபம்தான். மஞ்சள் பூக்களில் வெளிகளில் எல்லாம் அவள் அலைந்து திரிவதாய் ஒரு உணர்வு. கூடவே ரகுமானும் வைரமுத்துவும் சேர்ந்துவிட்டால் நிலைமை மோசம்.

தென்றல் என்னைத் தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்.
மேகம் ரெண்டும் சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்

பிரிவிலே மூன்று வகை. ஓன்று தற்காலிகமானது. ஒரு நாள், இரண்டு நாள், இருபது நாள், ஆறுமாதத்திலேனும் சேர்ந்து விடுவோம்தானே என்னும் பிரிவு. அதில் அடிக்கடி ஊடல் எட்டிப்பார்க்கும். சேருவோம் என்று தெரிந்து வருகின்ற பிரிவில் குறும்புகளும் நிறைந்திருக்கும். அடுத்தபிரிவு நிரந்தரமானது. நிஜமான பிரிவு. அவளோ அவனோ இல்லை என்றாகும் பிரிவு. இதை முகம் கொடுக்கத்தெரியாதவன் வெம்பியே அழிவான். இல்லாத இணையோடு கற்பனையில் வாழ்வான். அந்த வாழ்க்கை அவனுக்கு நிரந்தரமாகும். தனக்கென்ற நிஜத்தில் நாமெல்லாம் அவனுக்கு கற்பனையாவோம். மூன்றாவது பிரிவே கொடியது. நீச்சல் தெரியாதவனுக்கு தெரியும் அக்கரை அது. அவள் இருக்கிறாள் என்று தெரியும். என்னை நினைக்கிறாள் என்று தெரியும். ஆனால் வருவாளா என்று தெரியாது. என்றாவது சேருவோமா என்பதும் தெரியாது. கொடிய பிரிவு அது. நிச்சயமற்ற காத்திருப்பு. திருக்குமரனுடைய கவிதைகள் சொல்லும் பிரிவு அத்தகையது. மனதை சில்லிடவைப்பது.

விரக்திப்பாலைவன வெம்மை நிம்மதியை
துரத்தி அலைக்கழித்து
துவண்டுவிழத் துவண்டுவிழ
அரக்கத்தனமாக அடிக்க இதன்மேலும்
இரக்கங்காட்டாயோ எனக்கேட்டும் பதிலின்றேல்
அறுத்தென்னைக் கொல்வதற்கு ஆணையிடு அல்லவெனில்
கருக்கென் உணர்வெல்லாம், களிவாழ்வை எதிர்பாரா
பருப் பொருளாயென்னைப் படை
.

திருக்குமரன் அரசியல் செய்தாலும் அதில் காதல் பிரிவே தெரிகிறது. வலி எங்கு போனாலும் கூடவருவது. அரசியலில் பலர் அவலைத் தேடுவார்கள். திருக்குமரன் என்கின்ற கவிஞன் அங்கேயும் அவளையே தேடுவான்.

பிரிவின்போது கொடியது பழைய நினைவுகள். பிரிவின் போதே அத்தனை நினைவுகளும் வண்டிகட்டி வாசலில் வந்து நிற்கும். அதிலும் பிரிந்துபோனவரை விட இருப்பவருக்கே வலி அதிகம். அத்தனை நினைவுகளும் அவ்விடமே நடந்தது அல்லவா. எனக்கென்னமோ தலைவனை விடவும் தலைவியே அதிகம் பிரிவுத்துயரில் புலம்புவாள்.  பிரிந்துசென்றவனோ செல்லுமிடத்தின் சங்கதிகளில் பளு மிக்கவனாவான். இடமும் புதுசு. நினைவுகள் ஓய்வின்போது மாத்திரம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். அவளுக்கோ துயில் எழும்பி போர்வை மடிக்கும்போதே மல்லுப்பட்ட கணங்கள் நினைவுக்கு வந்து துடிக்கும். ஒழுங்கையில் சைக்கிள் சத்தம் கேட்கும் போதெல்லாம் இவன் வருகிறான் என்று முகம் பவுடரைத் தேடும். கேற்றடி திறக்கும் போதெல்லாம் அனிச்சையாக முந்தானை சரிசெய்யப்படும். கிணற்றடியில் அமர்ந்து உடுப்பு தோயக்கும்போதேல்லாம் மேல்முதுகு ஈரம் இவன் முத்தத்துக்காய் காயாமல் இருக்கும். கசக்கி கசக்கி தோய்த்தாலும் விலகாத வாழைக்கயர், தோட்டத்தில் அவன் செய்த லீலையை சொல்லி நிற்கும்.

இரக்கமற்றவன். பிரிந்துபோனான். அவன் காதலும் காமமும் இரக்கமுள்ளது. இவளோடே தங்கிவிட்டது. முரண் நகை.

734750_10151244255784891_355504988_aகொண்க னூர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
தெண் கடல் அடைகரைத் தெளிர்மணி ஓலிப்பக்
காண வந்து நாணப் பெயரும்
அளிதோ தானே காமம்
விளிவது மன்ற நோகோ யானே.

என்ன பொருள்?

கடற்கரையில் தெளிவான மணியோசையுடன்
தலைவனின் தேர் -  நான்
காண வந்தது.
நாண திரும்பியது.
இரக்கம் கொண்ட காமமோ
கூடவே இருந்துவிட்டது.
இரந்து பின் அழிந்து போவது.
வருந்துகிறேன் தோழி.

இது நெய்தல் பாட்டு. தலைவன் பிரிந்தபின் பாடியது. தலைவனுக்கு இதைப்பாடத் தோணாது. காத்திருப்பவளுக்கே இந்த எண்ணம் தோன்றும். அன்றைக்கு தேர்மணி. இன்றைக்கு சைக்கிள்மணி. ஆனால் காதலும் காமமும் காலாகாலத்துக்கு மாறாத உணர்வுகள்.

தலைவனுக்கு வலி இல்லையா? நினைவு இல்லையா? நிறைய இருக்கும். திருக்குமரனின் இன்னொரு பாடல்.

எப்போதோ பெய்த மழையின்
ஈரத்தை இழுத்துவைத்துக் கொண்டு
அடுத்த மழைக்காலம் வரை
உயிரேந்தும் கற்றாளை போல
பழகிய அன்பின் நினைவுகளை
அடித்தொண்டையில் வைத்துக் கொண்டு
கம்மும் குரலை
செருமியபடி காத்திருக்கிறது
கன மனசு.

என்பதில் வரும் “உயிரேந்தும் கற்றாளை” யை பற்றி யோசியுங்கள். மழை அடுத்த பருவத்திலும் பொய்த்தால் கற்றாளை தப்புமோ? வறண்டுவிடும். “காமம், இரந்து பின் அழிந்து போவது, அதனால் வருந்துகிறேன் தோழி” என்று குறுந்தொகை தலைவியின் பயம் இதுதான். இயலாமையின் உச்சத்தில் அவன் எனை மறந்துவிடுவானோ என்னும் பயம் அது.

இதனால்தான் தலைவனை விடவும் தலைவியின் வலி அதிகம் என்கிறேன். திருக்குமரனின் கற்றாளையில் சொச்சம் ஈரமாவது இருக்கிறது. இந்த பாலைத் தலைவியின் நிலையை பாருங்கள்.

பெயன்மழை துறந்த புலம்புறு கடத்துக்
கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி
துதைமென் றூவித் துணைப்புற விரிக்கும்
அத்த மரிய வென்னார் நத்துறந்து
பொருள்வயிற் பிரிவா ராயினிவ் வுலகத்துப்
பொருளே மன்ற பொருளே
அருளே மன்ற வாருமில் லதுவே.
 

நம்மட தமிழில்.

மழை பொய்த்ததால் காய்ந்துபோய்
கள்ளிக்காய் வெடிக்கும் – அந்த
சத்தத்தில் பயந்துபோய்
ஜோடிப்புறா பறந்துபோகும்.
என்னைப் பிரிந்தவர்
பொருள் ஈட்டத்தான் பிரிந்தார் எனின் – உலகில்
அருள் அல்ல பொருளே பெரிதாகிறது.

இதுவும் பாலைப்பாட்டுத்தான். ஈரமே இல்லாமல் வெடித்துச்சிதறும் கள்ளிக்காயைப் பார்க்கையில் தலைவிக்கு தோன்றக்கூடிய கவிதை இது. திருக்குமரனின் கற்றாளையின் ஈரம் சொல்லி நிற்பது நம்பிக்கை. தலைவனுக்கே உரியது. குறுந்தொகை தலைவியின் கள்ளிக்காய் வரட்சி இயலாமை. அதீத காத்திருப்பால் நிகழ்வது. வந்து என்னை மீட்டுப்போ என்று சொல்லுவது.

கம்பராமாயணத்தில் சுந்தரகாண்ட பாடல் ஒன்று. அசோகவனத்தில் இராமன் பிரிவில் புலம்பும் சீதையின் ஏக்கம்.

தேங்கு கங்கைத் திருமுடிச் செங்கணான்
வாங்கு கோல வடவரை வார் சிலை,
ஏங்குமாத்திரத்து, இற்று இரண்டாய் விழ
வீங்கு தோளைநினைந்து மெலிந்துளாள்.

இராமன் தோள்களை நினைத்து ஏங்குகிறாளாம். எத்தகைய தோள்கள் அவை? அதற்கு சுயம்வரத்துக்குப் போவோம். இராமன் முறிக்க இருந்த வில் சிவனுடையது. வலிமையானது. அதில் நாணேற்றும் வீரனுக்கே சீதை. இதனால் சனகன் அடிக்கடி கவலை கொள்வானாம். அந்த வில்லை இராமன் பார்க்கவே அது வெந்ததாம். அவனின் தோள்களின் பூரிப்பிலேயே அது வெடித்து இரண்டு துண்டானதாம். அத்தகைய தோள்கள் அவனது என்று நினைத்து சீதை மெலிந்தாளாம். அதில் கம்பரின் குறும்பும் இருக்கிறது. இவ்வளவு வீரமும் சுயம்வரத்தில்தானோ.  என்னை மீட்க ஏன் இன்னும் வரவில்லை?

தலைவனும் என்ன செய்வான்? அதுவும் நவீன தலைவன். இங்கே அவுஸ்திரேலியாவில் இருப்பவர் பலர். இறுதி யுத்தத்தின் பின்னர் கப்பல் ஏறியவர்கள். உற்றோரை பிரிந்து வருடக்கணக்காகிறது. ஊருக்கு மீண்டும் சென்றால் விமானநிலையத்தில் கேடு விளையும். இளம் மனைவியையும் இரண்டு வயது குழந்தையும் அழைப்போம் என்றால் விசா அதற்கு அனுமதிக்காது. இங்கேயுமில்லாமல் அங்கேயுமில்லாமல் அனுதினமும் ஸ்கைப்பில் மழலைச்செல்வத்தையும் அதன் தாயையும் அணைத்து மகிழும் அவலமனிதர்கள். தமிழனின் இந்த அவலம் கல் தோன்றா மண் தோன்றா காலத்திலிருந்து ஆரம்பித்திருக்கவேண்டும். குறுந்தொகை தலைவனின் புலம்பலை பாருங்கள்.

குண கடல் திரையது பறை தபு நாரை
திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்தா அங்குச்
சேயள் அரியோள் படர்தி
நோயை நெஞ்சே! நோய்ப்பா லோயே.

இது பரணர் பாட்டு. இலகு படுத்தலாம்

கிழக்கு கடற்கரையில் நிற்கும்
சிறகிழந்த நாரை – சேரனின்
தொண்டித் துறைமுகத்தில் கிடைக்கும்
அயிரை மீனை நினைத்து
தலையைத் தூக்கிப் பார்த்தது போல
அருகில் இல்லாதவளை எண்ணி
வருந்துகிறாய் என் நெஞ்சே.

சிறகிழந்த நாரையின் வலி சொல்லும் பாட்டு. அறுபட்டுக்கிடக்கிறனே. பாவி நான். சிறகு மட்டும் இருந்திருந்தால் அங்குபோய் இங்கிவளை கொண்டுவந்து சேர்த்திருப்பேனே என்ற தலைவனின் புலம்பல். காலத்தின் ஓட்டத்தில் எதுவுமே மாறவில்லை எங்கிறது எங்கள் வாழ்க்கையும் இலக்கியமும்.

புதுவையின் பாடல் ஒன்று இருக்கிறது. தொண்ணூறுகளில் நிலா வெளிச்சங்களில் வானொலி துணையோடு கேட்ட ராகம் அது. மீன் பிடிக்கச்செல்லும் தலைவன் பாடும் பாட்டு இது.

வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் - கடல்
வீசுகின்ற காற்றின் உப்பின் ஈரம்
தள்ளி வலை ஏற்றி வள்ளம் போகும் - மீன்
அள்ளி வர நீண்ட நேரம் ஆகும்.

அடுத்த சரணத்தின் முன் வரிகள்.

“ஊருறங்கும் சாமத்திலே யாருமற்ற நேரத்திலே
காரிருட்டில் படகெடுத்துப் போவோம் – நேவி
கண்டுவிட்டால் கடலில் நாங்கள் சாவோம்
பேருமின்றி ஊருமின்றிப் பெற்றவளின் முத்தமின்றி
ஈரவுடல் கரையதுங்கும் காலை”

அடுத்த சரணத்தில் வரிகள் இப்படி வரும்.

“பாயிறக்கிக் கரையினிலே பாதம்படும் வரையினிலே
பார்த்த விழி பூத்திருப்பாள் மனைவி – என்னை
பார்த்த பின்பே சோற்றை உண்பாள் துணைவி
வாயிறுக்கி வயிறிறுக்கி வாழும்கடல் மீனவனின்
வாசலெங்கும் வேதனையின் கோடு”

புரட்சிப்பாடல்தாம். ஆனால் அதில் ஆதாரமான உணர்ச்சியான பிரிவுத்துயரானது குறுந்தொகை தமிழ் தந்த நெய்தல் திணை உறவே. பாலைத்திணையில் தலைவி தலைவனுக்கு என்ன ஆயிற்றோ என்று ஏங்கும் ஏக்கம் ஒரு பாடலாய் வருகிறது. அர்த்தம் புரிய கொஞ்சம் வியர்க்கும்.

nile 2அம்ம வாழி, தோழி யாவதும்
தவறு எனில் தவறோ இலவே வெஞ் சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும்
அரிய கானம் சென்றோர்க்கு
எளிய ஆகிய தட மென் தோளே.
 

இலகு தமிழில்.

தோழி, கேளேன்.
அவர் கொடிய பாலைவனத்தினூடே
பயணம் செய்திருக்கிறார்.
அங்கே இறந்த வழிப்போக்கர்களின் உடல்களை குவித்துவிடுவார்களாம்.
அந்தக் குவியலின் நிழலில் யானைகள் இளைப்பாறுமாம்.
அவரை எண்ணி
என் மெலிந்த தோள்கள் மேலும் மெலிந்ததில்
தவறென்ன சொல்லு?

இதைத்தானே அந்த மீனவனின் மனைவியும் நினைத்திருப்பாள்?

*********** தொடரும் ************


முதல் பாகம்  : நாணமில்லா பெருமரம்

தொடர்புடைய சிறுகதைகள்
மேகலா
சுந்தர காண்டம்

நன்றி
திருக்குமரன் கவிதைகள் 
401 காதல் கவிதைகள் – சுஜாதா
புதுவை இரத்தினதுரை
வைரமுத்து.
படங்கள் இணையத்தில் எடுத்தவை. மூலம் தெரியாது.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட