Skip to main content

குட் ஷொட்

 

Capture

“எங்கட போராட்டம் ஏன் தோத்துது தெரியுமா?”

வெடியண்ணை கேட்ட கேள்வியில், வாய்வரையும் கொண்டுசென்ற சிக்கன்விங் அங்கேயே விக்கித்து நின்றது. நிமிர்ந்து பார்த்தேன். அண்ணர் ஈழத்தமிழன் கணக்காய் தள்ளாடியபடி நின்றார். கையில் இருந்த கிளாஸில் கொக்கோகோலாவோடு கொஞ்சம் சஷிவாஸ்; அடிக்கடி ஒரு உறிஞ்சி உறிஞ்சினார். “ஆய்க்” என்று காறியபடியே “டொக்” என்று மேசையில் கிளாசை வைப்பார். சற்றுத்தள்ளி சவுண்ட் சிஸ்டத்தில் டீ.ஆர் “ஒஸ்தீ” என்று கதற, சிலர் பிதுக்கி பிதுக்கி ஆடிக்கொண்டு இருந்தார்கள். ஒருவரின் டான்ஸில் ஆயிரத்தில் ஒருவன் எம்ஜூஆர் அடிக்கடி வந்துபோனார். இன்னொருவர் ஆடும்போது அவரின் பொன்ட்ஸ் அண்டர் வெயார் கங்காரு குட்டி போல எட்டிப்பார்த்தது. ஒருவரின் தோளில் இருந்த இரண்டுவயதுக் குழந்தை கைகளால் தாளம் போட்டு சிரித்துக்கொண்டிருந்தது. ஒரு சின்னப்பெடியன் அறையின் லைட்டை ஒன் பண்ணி ஒப் பண்ணிக்கொண்டிருந்தான்.

நான் சிக்கனை மீண்டும் பாவமாக பார்த்தேன். சாப்பிடுவோமா? அல்லது கேள்விக்கு பதில் சொல்லவேண்டுமா? யோசித்துக் கொண்டிருக்கையில் இன்னொரு டீஆர் தன் கிளாசை என் வாயருகே கொண்டுவந்தார். பிதுக்கி பிதுக்கி ஆடியதில் ஷேர்ட் வெளியே வந்து வண்டி புங்குடுதீவுவரை பரந்திருந்தது.

"தம்பி ... ஒரு ஷொட் அடியுமேன் ... மொட்டை வேற நல்லா விழுந்திட்டுது ... இப்பவும் பியரை போட்டு உறிஞ்சிக்கொண்டு இருக்கிறீர் .. காலமை ஒரே காஸ் காஸா போகும் தம்பி .. அந்தச் சனியன் வேண்டாம் .. பெரிசை அடியும்"

வேண்டாம் என்றேன். டீ ஆர் இன்னமும் கிளாசை நேருக்க, வண்டி குறிகாட்டுவான் பாலம் தாண்டி நயினாதீவை அண்மித்துவிட்டது. ஒருகையால் தடுத்து நிறுத்தினேன்.

"இல்லண்ணை தமிழீழம் கிடைக்காம நான் பெரிசை தொடுறதா இல்ல"

“வாடா மாப்பிள்ள.. ” பாடல் ஆரம்பித்தது. டீ ஆர் என் பதிலை கவனியாமல் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக ஓடிவிட்டார். அப்பாடி என்ற ஆசுவாசத்துடன் சிக்கினை அவசரமாக ஒரு கடி கடிக்கையில் மீண்டும் வெடி முருங்கை மரத்தில்.

"நான் கேட்ட கேள்விக்கு நீர் இன்னும் பதில் சொல்ல இல்ல … ஏன் தோத்தம் எண்டு நினைக்கிறீர்? … சும்மா சொல்லுமேன்"

அண்ணை அடித்தாலும் ஸ்டெடியாகவே இருக்கிறார் என்று புரிந்தது. ஏதாவது பதில் சொல்லியாகவேண்டும். என்ன சொல்லலாம்? ஆ.

"இந்தியா"

"அரை லூசங்கள்"

"அமேரிக்கா?"

"ச்சிக்"

"கோத்தாவா?"

"அவன் ஒரு மொக்கு மண்டையன்… தம்பி நீர் இதை மேலோட்டமா பார்க்கிறீர். கொஞ்சம் யோசியும் .. நான் அதுக்குள்ள ஒரு ஸ்டெப் போட்டிட்டு வாறன்"

அண்ணை கிளாஸ் கையோடு எழுந்து டான்ஸ் குழுவோடு இணைந்துகொண்டார். “முன்னால் முன்னால் முன்னால் நீயும் வாடா, உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா” என்று கோரஸ் பாட, அண்ணை ஒரு கையில் கிளாசை பலன்ஸ் பண்ணியபடிய இரண்டு முறை இருந்து எழும்பினார். கூட்டம் ஆடுவதை நிறுத்திவிட்டு அண்ணரை பார்த்து கைதட்டத் தொடங்கியது. “மாணவன் மனது வைத்தால் முடியாது என்பது இல்லை” என்று ரகுமான் பாடுகையில், அண்ணர் காலை மடித்து பின்புறமாக எப்படியோ வைத்து எம்ப, பலன்ஸ் தவறி, தடுமாறி விழ, கிளாஸ் சலிங் என்று சுக்கலானது.

 ஃபக்கிங் மேன் .. தண்ணி வேஸ்டா போயிட்டுது”

என்றபடி அண்ணர் உதறிக்கொண்டு எழுந்தார். கூட்டம் அதற்கும் கைதட்டியது. புது கிளாஸ், புது பெக், நிறைய கோக் கலந்தபடி என்னருகில் வந்து அமர்ந்தார்.

“லூசுக்கூட்டம், கிளாஸ் கிளீனரால டைல்ஸ மோப் பண்ணியிருக்குதுகள்.. அதான் வழுக்குது”

நான் பேசாமல் பியரை கொஞ்சம் உறிஞ்சிவிட்டு ஒரு சிக்கினை கடித்தேன்.

“யோசிச்சீரோ?”

இதுக்குமேல யாராக இருக்கும்? சொல்லிப்பார்ப்போம்.

"… ஆரு இயக்கமா?"

"இப்பிடி கதைச்சால் ஆரெண்டும் பார்க்காமா அறைஞ்சிடுவன் … "

இதுதான். இதே குழப்பம்தான். அண்ணை புலி எதிர்ப்பாளரா? ஆதரவாளரா? என்ற குழப்பம். அவரின் மனைவி உட்பட அனைவருக்குமே இருக்கிறது. அவர் முகநூலிலும் யாருக்கு எப்ப எதுக்கு லைக் பண்ணுவார் என்று சொல்லமுடியாது. ஒருநாள் பரணிக்கு லைக் பண்ணுவார். இன்னொருநாள் நடேசனுக்கு  லைக் பண்ணுவார். மனோ கணேசனுக்கு லைக் பண்ணுவார். திடீரென்று நாமலுக்கு லைக் பண்ணுவார். அவரின் பின்னணி பற்றி வரலாற்றாசிரியர்கள்  மூன்று வகை வேர்ஷன்களை சொல்லிக்கொள்வர்.

அண்ணர் பார்ட்டிகளில் சொல்லும் வேர்ஷன்.

இயற்பெயர் சத்தியசீலன். முன்னால் போராளி. இயக்கப்பெயர் வெற்றியரசன். கோண்டாவில் வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்து சிறப்புத்தேர்ச்சி பெற்றதால் வெடி என்ற பட்டப்பெயருக்கு சொந்தக்காரன். கொழும்பிலே சக்கைவைக்கவென லொட்ஜில் வந்துநின்ற வேளையில் ஆர்மியிடம் பிடிபட்டவர். தூங்கும்போது பிடிபட்டதால் சயனைட் கடிக்க முடியவில்லை. நாலாம் மாடியில் கொஞ்சநாள் வைத்திருந்திருக்கிறார்கள். சித்திரவதை செய்திருக்கிறார்கள். அண்ணரோடு பீச்சுக்குப் போனால், குளிக்கும்போது முதுகில் ஒரு அயர்ன் பொக்ஸ் தழும்பை காணமுடியும். அது நாலாம்மாடி விசாரணை ஒன்றின்போது நிகழ்ந்தது. சமாதான காலத்தில் இரகசிய கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டு, அண்ணரின் புத்திசாலித்தனம் மேலிடத்துக்கு தெரியவந்து, சர்வதேச பிரிவுக்கு தாய்லாந்து மூலம் மாற்றப்பட்டு, இறுதியாக அண்ணர் அவுஸ்திரேலியா வந்தார். அன்றிலிருந்து தாயக விடுதலைக்காக தன் உடல் பொருள் ஆவி முழுதையும் அர்ப்பணித்திருப்பவர்.

அண்ணரின் அகதி விண்ணப்பம் தாக்கல் செய்த லோயர் பார்ட்டிகளில் சொல்லும் வேர்ஷன்

இயற்பெயர் சத்தியசீலன். .அண்ணையின் தகப்பனார் தின்னவேலியில் சீனன்வெடிக் கடை நடத்திவந்தவர். “வெடி”யின் நேம்சேக் அதுதான். அண்ணர் யாழ்ப்பாண பிரபல பாடசாலை ஒன்றில் படித்தவர். கெட்டிக்காரன். ஓஎல் பரீட்சையில் எட்டு டி எடுத்தவர். ஏ எல் இரண்டாம் வருடம் பெட்டைப்பிரச்சனை. காவல்துறை. பங்கர் என்று வாழ்கை பஞ்சர் ஆனது. பங்கரிலிருந்து வெளிவந்த அடுத்த மாதமே பிணை வைத்து, வயதுக்கட்டுப்பாடு பாஸ் எடுத்து கொழும்பு வந்துவிட்டார். அங்கிருந்து ஸ்டுடென்ட் விசா எடுத்து லண்டன் போய் கையைத்தூக்கினார். விசா ரிஜெக்டட். பிரான்ஸ் போனார். அங்கேயும் ரிஜெக்டட். அடுத்த பிளைட்டில் இலங்கை திரும்பினார்.  ஏர்போர்டில் அவரை அதிகாரிகள் ஏறெடுத்தே பார்க்கவில்லை. அண்ணர் நேரே மட்டக்குளி லோட்ஜுக்கு போனார். அயர்ன் பொக்ஸை எடுத்தார். கட்டிலில் நல்ல சூட்டோடு பிரட்டி வைத்துவிட்டு, அதற்கு மேலே முதுகுப்புறமாக படுத்தார். “ஆய்க்” என்று சின்னக் கத்தல். “அம்மாளாச்சி” என்று ஒரு அனுங்கள். அடுத்த செமிஸ்டருக்கு அட்மிஷனை அவுஸ்திரேலியாவுக்கு எடுத்தார். ஏர்போர்டில் வைத்தே முதுகைக்காட்டினார். இன்றைக்கு வீடு பே ஒஃப்.

அண்ணரின் மனைவி அதே பார்ட்டியில் வைட் வைன் அதிகமானால் சொல்லும் வேர்ஷன்.

இயற்பெயர் சத்தியசீலன். வெடிப்புளுகர். வெடியைத்தவிர வேறெதுவும் சொல்லுவதில்லை. கலியாணம் கட்டினதே அப்படித்தான். அக்குப்பஞ்சர் படித்துவிட்டு சாதககுறிப்பில் டொக்டர் என்றுபோட்டு, யாழ்ப்பாண கம்பஸ் எம்பிபிஸ் பிள்ளையை சீன வெடிக்கார தேப்பன் மடக்கிப் போட்டுது. பிள்ளை விசா எடுத்து அவுஸ்திரேலியா வந்து இறங்கியபிறகுதான் புரிந்தது. அண்ணர் ஊசியை அடிக்காலில் குத்திக்கொண்டு இருந்திருக்கிறார். மனிசி கடுப்பாகி அயர்ன் பொக்சால் முதுகில் அண்ணருக்கு அக்குபஞ்சர் குத்திவிட்டுது. ஆனாலும் அக்குபஞ்சர் குடும்பத்தில் அவ்வப்போது ரொமான்ஸ் நடந்ததில் மூன்றாவது இப்போது வயிற்றில் இருக்கிறது.

என்ன தம்பி யோசிக்கிறீர்?

என் கடைசி அஸ்திரம்.

“நான் நினைக்கிறன் … வெளிநாட்டுல இருக்கிற ஆக்கள் நாங்கள் தோத்ததுக்கு முழுக்காரணம்"

அண்ணரின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. சொதப்பிவிட்டேன்.

"யோசியாம கதையாதீம் .. எங்கட உதவி மட்டும் இல்லாட்டி கோவணங்கூட தப்பியிருக்காது"

குழம்பிவிட்டேன். இவர் கோவணம் என்று எதை சொல்லுகிறார்? கேட்கவேண்டும் போல தோன்றியது. அண்ணையின் கண்களோ கேட்டால் தொலைத்துவிடுவேன் என்றது. தந்திரோபாய பின்வாங்கலே சரியானது.

"அண்ணை .. நான் சின்னப்பெடியன் .. இந்தப்பிரச்சனை இண்டவரைக்கும் விளங்கேல்ல .. ஆருதான் காரணம்? நீங்களே சொல்லுங்களேன்"

“அப்பிடிக்கேளும் தம்பி”

அண்ணர் இந்த பதிலைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாற்போல் தோன்றியது. பக்கத்திலிருந்த பிளாஸ்டிக் கதிரையை இழுத்துபோட்டார். கிளாசில் மீண்டுமொரு உறிஞ்சல். மீண்டுமொரு “ஆய்க்”. டீ ஆர் இப்போது "அம்மாடி ஆத்தாடி" என்று அரற்ற தொடங்கியிருந்தார். ஒருவன் சேர்ட் கீழ்ப்பகுதியை பிடித்து உதறிக்கொண்டிருந்தான். ஒரு ஐம்பது வயதுக்காரர் பிடரியில் ஒருகையும் வயிற்றுக்கு கீழே இன்னொரு கையுமாய் கமல் போன்று மாவரைத்துக்கொண்டிருந்தார்.

அண்ணர் எதுவுமே பேசாமல் சில கணங்கள் இருந்தவர் பெருமூச்சு ஒன்றை விட்டார். எனக்கு இப்போது ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏன் தான் தோற்றோம்?

“அண்ணே…”

"நான்தான் தம்பி"

“சொல்லுங்க .. அப்ப ஏன்தான் இந்த போராட்டம் தோற்றது?”

“நான்தான் தம்பி .. இந்த போராட்டம் தோத்ததுக்கு முழுக்காரணம்”

சொல்லிவிட்டு வெடியண்ணை திடீரென்று குழுங்கி குழுங்கி அழ ஆரம்பித்தார். அதிர்ச்சியாக இருந்தது. முதன்முறையாக வெடி அண்ணை மீது அளவிடமுடியாத மரியாதை தோன்றியது. மற்றவர்களை குறைசொல்லாமல் தோல்விக்கு தன்னையே குறைசொல்லும் பக்குவம் தோனிக்கு பின்னர் அண்ணரிடம்தான் இருக்கிறது என்று தோன்றியது. அப்போதுதான் அண்ணையை சரியாக கவனித்தேன். சிவந்த கண்கள். வழுக்கை இல்லாத இடங்களிலும் நரை மயிர் பளபளத்தது. தொப்பிலாஸ் சேர்ட், லோங்க்ஸ், மீசை என்று அண்ணை இன்னமும் யாழ்ப்பாணத்தை விட்டு இத்தனை வருடங்களில் இடம்பெயரவில்லை என்றே தோன்றியது. 

பார்க்க பாவமாக இருந்தது. அழவேண்டாம் என்று அவர் கையை அழுத்தி ஆறுதல் கொடுக்கலாம் என்று நினைக்கையில் கண்ணை கசக்கியபடியே எழுந்து சென்றார். திரும்பியபோது கிளாஸ் மறுபடியும் நிரம்பியிருந்தது.

“எல்லாமே எண்ட கைக்குள்ள இருந்துது தம்பி”

விம்மல் இன்னமும் நின்றபாடில்லை.

“நீங்க சொல்லுறது விளங்கேல்ல அண்ணை”

அண்ணர் கதையை சொல்லத்தொடங்கினார்.

2008ம் ஆண்டு செப்டம்பர் மாசம் சர்வதேச தமிழ் உறவுகள் சேர்ந்து ஒரு முக்கிய இராஜதந்திர தீர்மானத்தை எடுத்தார்கள். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் தமிழருக்கு சார்பான ஆட்சிகளை ஏற்படுத்துவது என்பது தான் அது. அதற்கு சிங்கப்பூர் ஒர்சார்ட் ஓட்டலில் மீட்டிங்கூட நடந்தது. அமெரிக்க விவகாரங்களை வெடி அண்ணனும் இந்திய அரசியலை வைகோவிடமும் கையளிப்பதென ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. முடிவை ஏற்றுக்கொள்ளாமல் டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து கிளைகள் வெளிநடப்புச் செய்தன.

அடுத்தநாள் முதலே அண்ணர் களத்தில் இறங்கினார். 2009இல் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியானார் என்பது தெரிந்ததே. ஆனால் ஆரம்பத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர்களில் ஒபாமாவைவிட கிலாரி கிளிண்டனே முன்னணியில் இருந்தார். அதனால் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்வில் அண்ணையும் அவர் ஆட்களும் கிலாரியோடு ஒரு டீல் போட்டிருக்கிறார்கள். அவர் தேர்தலில் வெல்லுவதற்கு ஐம்பது மில்லியன் டொலர் இவர்கள் கொடுப்பதாகவும், பதிலுபகாரமாக கிலாரி ஜனாதிபதியானால் இலங்கை அரசாங்கத்தை அவர் கவிழ்ப்பதாகவும் திட்டம்.

எனக்கு ஒரு டவுட் வந்தது.

“ஜனநாயக கட்சி பிரைமரி தேர்தல் ஜூன் 2008 இலேயே முடிஞ்சுதே. ஒபாமாதான் வேட்பாளர் என்று எப்பவோ தெரிய வந்திட்டுதே .. ”

“இதான் தம்பி .. உம்மள மாதிரி விஷயம் தெரிஞ்ச இளைஞர்கள் அரசியலுக்கு வரோணும்”

அண்ணர் நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லாமல் அடுத்த விஷயத்துக்கு தாவிவிட்டார்.

கைக்காசை கிலாரிக்கு கொடுத்ததால் ஒபாமாவுக்கு ஸ்பொன்சர் பண்ண ஒரு சதம் கூட இவர்களிடம் இருக்கவில்லை. செல்லக்கிளி அம்மான் ஞாபகார்த்த அப்பப்பார்ட்டி வைத்ததில் நாடுபூராக ஐயாயிரம் டொலர்களே சேர்ந்தது. ரேடியோவில் அறிவித்து, வீடு வீடாக போய், பூபதி விளையாட்டு போட்டி என்று பலதும் நடத்தி அப்படி இப்படி என்று ஒரு லட்சம் டொலர்கள் சேர்த்துவிட்டார்கள். ஒபாமா அதை வாங்கிவிட்டு ஈழத்தமிழர் பற்றிய கேள்விக்கு “ப்ரோப்ளம் ஒப் தி அதர்” என்று வொயிஸ் கொடுத்தார். அதற்கு மேல் பேசுவதென்றால் காசு வை என்றார்கள். இந்தியாப்பக்கம் வைகோ அண்ணனும் ஆட்சிமாற்றத்துக்கு கடும் முயற்சி செய்கிறார். இருவருமே இறுதிநாள்வரை இதற்காக போராடியிருக்கிறார்கள். ஆனால் கடைசியில் எல்லாமே புகைஞ்சு போயிட்டுது.

“அடப்பாவமே .. அவ்வளவு காசும் அம்போவா?”

“மனிசிண்ட தாலிக்கொடி கூட போயிட்டுது”

அண்ணர் சண்டைக்கு பிறகு இரண்டு இன்வெஸ்ட்மெண்ட் ப்ரோபெர்டி எப்படி வாங்கினார் என்று அரசல் புரசலாக அதே ஆராய்ச்சியாளர்கள் அனுமானங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதிகமாக ஊர்ஜிதப்படுத்தபடாமையால் இங்கே தரமுடியவில்லை. அண்ணர் தொடர்ந்தார்.

“கடைசி நேரத்தில கூட ஒரு ஸீப்ளேன் தம்பி”

“ஸீப்ளேனுக்கு என்ன?”

“கொஸ்டரிக்கா எண்டு ஒரு நாடு இருக்கு தெரியுமா?”

முழித்தேன்.

“அந்த நாட்டுல அண்டர் கிரவுண்ட் ஆக்கள் இருக்கிறினம். என்ன வேணுமெண்டாலும் செய்விக்கலாம். சரி, பெரியவங்களை எப்பிடியாவது வெளிய எடுக்கலாம் எண்டு, வீட்டை அடகு வச்சு ஒரு ஸீப்ளேன் அரேஞ் பண்ணினன். அவங்களும் அனுப்பினாங்கள். ஆனா இயக்கம் ஆர்மிண்ட பிளேன் எண்டு நினைச்சு சுட்டு விழுத்திட்டுது”

“அனுப்பமுதல் அறிவிக்கேல்லையா?”

“அறிவிச்சது தம்பி .. உள்ளுக்க கொமியூனிகேஷன் கடைசி நேரத்தில பிரச்சனை .. உமக்கு தெரியும் தானே”

எனக்கு என்ன தெரியும்? எதை சொல்லுகிறார்? விளங்கவில்லை. சரி விடுவோம்.

“அண்ணே .. நீங்க செய்யக் கூடியதை செய்திட்டீங்கள் .. இதுக்கு மேல என்ன செய்யேலும் சொல்லுங்க?”

“அத தான் ரத்தினமண்ணையும் சொன்னவர்”

“ரத்தினமண்ணையா?”

“அவர் தான் எங்கட புதுவை இரத்தினதுரை, கடைசி நாள் வரைக்கும் ஸ்கைப்பில கதைச்சவர் தம்பி … அண்ணைக்கு என்னில வலு பாசம்…. ”

“மெய்யாலுமா?”

“என்ன இப்பிடி கேக்கிறீர் .. "தமிழா நீ பேசுவது தமிழா? எழுதேக்க நான் அவரிண்ட மடில கிடந்தனான்”

“அது காசி ஆனந்தன் எழுதினதல்லோ?”

“உமக்கென்ன விசரே .. அண்ணர் பாடிப்பாடி எழுதினவர் ..எனக்கு இன்னும் நல்ல ஞாபகம் இருக்கு ..  தமிழா நீ பேசுவது தமிழா?”

அண்ணர் பாடிக்கொண்டே அடுத்த ரவுண்டுக்கு தாவினார். இம்முறை கோக் குறைந்து கிளாஸ் கலர் தங்கத்துக்கு மாறியிருந்தது. அடிக்கும்போது “ஆய்க்” வரவில்லை.

“அண்ணை உங்களிட்ட ஒண்டு கேக்கட்டே”

“பயப்பிடாம கேளும் .. இதெல்லாம் என்னோட முடிஞ்சிட கூடாது”

“இவ்வளவு பெரிய வேலையெல்லாம் செய்திருக்கிறியள் .. ஆனா இலங்கை அரசாங்கம் போன கிழமை ஒரு பேர் லிஸ்ட் வெளியிட்டுதே. நானூறு புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்களிண்ட டீடெய்ல் … ”

“அதுக்கு?”

“அந்த நானூறு பேர்ல கூட எப்பிடி நீங்கள் இல்லாமல் போனீங்கள்?”

அண்ணர் ஒன்றுமே பேசாமால் இன்னொரு ஷொட் அடித்தார். ஒரு மெல்லிய புன்முறுவல் அவர் முகத்தில்   வெளிப்பட்டது.

“அங்கதான் தம்பி வெடி நிக்கிறான்”

“என்ன சொல்லுறீங்கள் அண்ணே?”

“எந்த அசுமாத்தமுமில்லாம விஷயத்தை முடிக்கிற ஆள்தம்பி நான். நான் ஆரெண்டு இஞ்ச ஆருக்குமே தெரியாது .. என்னத்துக்கு தலைவர் என்னை இஞ்ச அனுப்பினவர் என்று நினைக்கிறீர்?”

“என்னது தலைவரை உங்களுக்கு தெரியுமா?”

“இது வலு ரகசியமான விஷயம். உமக்கெண்டபடியா சொல்லுறன்” என்றவாறு அண்ணர் பொட்டம்ஸ் அப் அடித்துவிட்டு அந்தக்கதையை சொல்லத்தொடங்கினார்.

“ஆனையிறவு அடிபாட்டு டைம்.  முதல் ரெண்டுநாளில் இயக்கம் உள்ளுக்க முன்னேறிட்டுது. ஆனா அங்கால கொப்பேகடுவா வெத்திலைக்கேணிக்குள்ளால ஆர்மியை கொண்டுவந்து இறக்கீட்டான்…இயக்கத்துக்கு சிக்கீட்டுது .. அப்ப எங்களிட்ட கடற்படை இருக்கேல்லத்தானே”

“நீங்க அப்பேக்க இயக்கத்தில இருந்தீங்களா?”

“சீச்சீ நான் சின்னப்பெடியன் .. நாங்கள் முட்டை மா சப்பிளை செய்தனாங்கள்”

“பிறகு?”

“வெத்திலைக்கேணி அடிபாட்டில இயக்கத்துக்கு பயங்கிற இழப்பு .. நிண்ட பெடியள் எல்லாரையும் பங்கர் வெட்ட கூட்டிக்கொண்டு போயிட்டாங்கள்”

“உங்களையுமா?”

“வெட்டவெளிக்க இரவிரவா வெட்டோணும் தம்பி … அவன் பராலைட் போட்டிட்டு மோட்டர் அடிப்பான். இரண்டு நாள் தொடர்ந்து வெட்டுறம். நித்திரை இல்ல. மூண்டாம் நாள் இரவு இரண்டுமணி .. எனக்கு அதுக்கு மேலே கண் விடேல்ல .. கொஞ்சம் அயர்ந்திட்டன்”

“ஐயோ”

“அரை மணித்தியாலம் தான் … ஏதோ சத்தம்கேட்டு எழும்பீட்டன். பங்கரால எட்டிப்பார்த்தா … ஐம்பது அடிதூரத்தில ஒரு செயின் புளொக் வருது”

“அம்மாளாச்சி ..”

“பக்கத்தில பங்கர் வெட்டிக்கொண்டு கிடந்தவனெல்லாம் காயத்தில கத்திறான். மெடிக்ஸ் எல்லாம் எங்க போனாங்கள் எண்டு தெரியேல்ல. தூக்கியோண்டு ஒடேல்லாது. ஏதாவது செய்யோணும்”

எனக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது.

“நீங்க என்ன செய்தீங்கள் அண்ணே? .. ஒடீட்டீங்களா?”

“ஓடியிருக்கலாம் .. ஆனா பக்கத்தில சிநேகிதங்கள் அடிபட்டுக்கிடக்கேக்க ஓடுறதுக்கு எண்ட மனம் ஓம்படேல்ல”

“ப்ச்’

“செயின் புளொக் நல்லா கிட்ட வந்திட்டுது. வேற வழியில்ல. பார்த்தன். பங்கருக்கு வெளிய ஒரு ஆர்பிஜி விழுந்து கிடந்தது. பாய்ஞ்சு எடுத்து செயின் புளோக்கை அடிச்சன் எண்டால் எல்லாரும் தப்பலாம்.. இல்லாட்டி கதை கம்மாஸ்.. எனக்கு வேற வழி தெரியேல்ல”

“கடவுளே”

“ஒரு செக்கன் கூட யோசிக்கேல்ல .. வல்லிபுரத்தானை கும்பிட்டன் .. ஒரே எம்பு .. பங்கரால பாயிறன் .. அவன் கண்டிட்டு சுடத்தொடங்கீட்டான் … நான் ஓடி ஆர்பிஜி பக்கத்தில விழுந்து அதை எடுத்து செயினுக்கு குறிவைக்கிறன். ஒரே குறி”

“அப்பவே ஆர்பிஜி அடிக்கத்தேரியுமா?”

“எல்லாம் நிதர்சனத்தில பார்த்த கேள்வி ஞானம் தான்”

“ஓ”

“ஒரே குறி .. தப்பீட்டுதெண்டா கீசுப்பட்டிருப்பன் .. லோட் பண்ணீட்டு கண்ணைமூடிக்கொண்டு அடிச்சன் ஒரு அடி”

“பட்டுதா?”

“சிதறிட்டுது தம்பி .. அப்பிடியே செயின் புளொக் பறந்துது .. எனக்கு  பயங்கிற சந்தோசம் .. ஆனையிறவையே விழுத்தின சந்தோசம் … சந்தோஷத்தில என்ன செய்யிறதெண்டு தெரியாம அப்பனே முருகா எண்டுறன் .. அப்பத்தான் ”

“அப்பத்தான்?”

“எண்ட தோளில ஆரோ ஒருத்தர் கை வைக்கிறார் .. எனக்கு உள்ளுக்க குலப்பன் அடிக்குது … நடுக்கத்தில திரும்பிப்பார்க்கிறன் .. பார்த்தா ..””

வெடி அண்ணர் மீண்டும் ஒருவித புன்னகையோடு இன்னொரு ஷொட் அடித்தார். கிளாசை மேசையில் சத்தமாக வைத்தார். ஆர்வம் தாங்கமுடியவில்லை. “ஆரது?”

“தலைவர்…”

“தலைவரா?”

“நான் அவரைப்பார்த்து அண்ணே எண்டன் .. எனக்கெண்டா வாய் எல்லாம் நடுங்குது”

வெடி அண்ணர் கண் கலங்க எழுந்து நின்றார். 

“சீவியத்துக்கும் அதை மறக்கமாட்டன், எண்ட ரெண்டு தோளையும் பிடிச்சுக்கொண்டு .. ஒரு வார்த்தை சொன்னார்’”

வெடி அண்ணர் கிளாசை சரித்து ஒரே மூச்சில் பொட்டம்ஸ் அப் அடித்தார். “ஆய்க்”

“குட் ஷொட்”

 

*****************************

யாவும் கற்பனை

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட