Skip to main content

படித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி

 

muruga

யாழ்.குடாநாட்டின் ஒரு கால கட்டத்தின் ஆத்மாவை பிரதிபலிக்கும் கொல்லைப்புறத்து காதலிகள்

புதிய தலைமுறைப்படைப்பாளி ஜே.கே.யின் பால்யகால வாழ்வனுபங்களின் பதிவு

 

படலை வெளீயிடாக இந்த ஆண்டு(2014) இறுதிப்பகுதியில் வெளியாகியிருக்கும் மெல்பனில் வதியும் ஜே.கே. என்ற ஜெயக்குமரன் சந்திரசேகரத்தின் பால்ய கால நினைவுப்பதிவாக வெளியாகியிருக்கும் அவரது என் கொல்லைப்புறத்து காதலிகள் நூலைப்பற்றி அதனைப்படித்துப்பார்க்காமல் ஒரு வாசகர் பின்வரும் முடிவுக்கும் வந்துவிடலாம்.

ஜே.கே. என்ற எழுத்தாளரின் வாழ்வில் வந்து திரும்பிய நிஜக் காதலிகள் பற்றிய கிளுகிளுப்பூட்டும் கதைகளாக அல்லது கட்டுரைகளாகத்தான் இந்த நூலின் உள்ளடக்கம் இருக்கலாம் என்ற உத்தேச முடிவுக்கு அவர்கள் வரலாம்.

ஆனால் , அவரது காதலிகள் அவரது பால்யகாலத்து நண்பர்கள் மட்டுமல்ல அவரது பெற்றோர், சுற்றம், சிநேகிதிகள், ஊர்மக்கள், அவரது செல்லப்பிராணிகள், அவரைக்கவர்ந்த படைப்பாளிகள், சொற்பொழிவாளர்கள், இசைக்கலைஞர்கள் , நடிகர், போராளிகள்... என்று பலரை ஜே.கே. இந்த நூலில் அடையாளம் காட்டுகின்றார்.

344 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் உள்ளடக்கம் - அதில் எழுதப்பட்டிருப்பது சிறுகதைகளா, கட்டுரைகளா, நனவிடை தோயும் பதிவுகளா, புனைவு இலக்கியமா, நடைச்சித்திரமா முதலான மயக்கங்களை வாசகர்களுக்குத்தரலாம்.

இந்நூலுக்கு மிகவும் பொருத்தமான ஓவியங்களை ஒவ்வொரு படைப்புக்கும் வரைந்துள்ளார் ஓவியர் ஜனகன். முன்னுரை எழுதியிருக்கும் கேதா, சுற்றுச்சூழல் மீதான ஜே.கே.யின் ஆழ்ந்த காதலை சுட்டிக்காண்பிக்கின்றார்.

ஜே.கே.யின் கலை, இலக்கிய வாழ்வில் அவருக்கு ஆதர்சமாக இருந்த - அவர் மேடையேறும் வேளைகளிலும் மறக்காமல் அவர் குறிப்பிடும் இருவரான சுஜாதாவுக்கும் கம்பவாரிதிக்கும்தான் இந்த நூலை சமரப்பித்திருக்கிறார்.

அதிலும் தமிழுக்குள் தன்னை ஆட்கொண்ட எழுந்து வேந்தர் சுஜாதா என்றும் அன்புக்குரிய கம்பவாரிதி என்றும் அழுத்தமாகவே ஜே.கே. பதிவு செய்கின்றார்.

அதிலிருந்து இந்த நூலின் உள்ளடக்கத்தை தேர்ந்த வாசகர்களினால் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால் - அந்த இருவர் மட்டுமல்ல பல எண்ணிலடங்கா மனிதர்களும் ஒரு சில செல்லப்பிராணிகளும் இசையும் கவிதையும் இலக்கியமும் தாய் தந்தையரும் உடன்பிறப்புகளும் நட்புகளும் சுற்றமும் ஆசிரியர்களும் ஜே.கே. என்ற இளம்தலைமுறைப்படைப்பாளியை அவரது இளமைக்காலத்தில் எவ்வாறு பாதித்திருக்கிறார்கள் என்பதை அழகியல் பூர்வமாக வாசகர்களுக்கு தெவிட்டாத - அயற்சி தராத உரைநடையில் சுவாரஸ்யம் சற்றும் குன்றிவிடாமல் ஒவ்வொரு ஆக்கத்தையும் ஜே.கே. நகர்த்திச்சென்று ஒரு காலகட்டத்தை - எம்மவர்கள் இடர்களுக்கு மத்தியிலும் தொலைத்துவிட்ட வசந்த காலத்தை ஆதாரங்களுடன் பதிவு செய்துள்ளார்.

இந்த நூலை வாசித்த சமகாலத்திலேயே தமிழகத்தின் மூத்த எழுத்தாளர் அசோகமித்திரனின் நேர்காணலை காலச்சுவடு இதழில் படித்தேன். அவர் சொல்கிறார்:

கட்டுரைக்கு ஆதாரம் தரவேண்டும். கதைக்கு ஆதாரம் தேவையில்லை. நான் கதைகளுக்கும் ஆதாரம் தருகின்றேன். ஆனால், கட்டுரைக்குத்தான் ஆதாரம் அவசியம். புகைதைக்கு அது அவசியமில்லை.

Kollaipurathu Kathalikal_cover-1ஜே,கே. தமது கொல்லைப்புறத்து காதலிகளில் எழுதியிருக்கும் அனைத்துக்கும் ஆதாரம் தருகின்றார்.

இந்த நூலை அவர் எழுதியதன் நோக்கத்தையும் சுருக்கமாகவே குறிப்பிடுகிறார்.

எமக்குப்பின்னாலும் நம் வாழ்க்கை நிலைபெற வேண்டும். நாம் வாழ்ந்த வாழ்க்கையின் பெருமைகளை ஒவ்வொன்றாக உலகறியப் பிரசவிக்க வேண்டும். என் கொல்லைப்புறத்துக்காதலிகள் முதல் பிரசவம்.

அவருடை பிரசவவேதனையும் புரிகிறது. அதிலிருந்த பரவசமும் தெரிகிறது.

ஒவ்வொரு மனிதர்களிடத்திலும் அவர்களுடைய குழந்தைப்பருவம் இனிமை நிரம்பியது. ஏழ்மையில் பிறந்த குழந்தையிடத்திலும் மாற்றுத்திறனாலியாக பிறக்கும் குழந்தையிடத்திலும் மாறத புன்னகை தவழும். அந்தப்புன்னகையும் மழலையும் சிறு சிறு செயல்களும் கூட அதனைப்பெற்றவர்களினால் - வளர்த்தவர்களினால் வாழ்நாளில் மறக்கவே முடியாது. அதானல்தான் இன்றும் குழந்தைப்பருவ ஒளிப்படங்கள் வீடுகளில் மட்டுமல்ல முகநூல்களிலும் பேணப்படுகிறது.

குமரன் என்ற ஜே.கே. யின் குழந்தைப் பருவம், இளைமைக்காலம் கோயில் உற்சவத்தில் அவர் ஆசையாக வாங்கும் விளையாட்டுப்பொருட்கள், சுவைத்த ஐஸ்கிறீம், வளர்த்த நாயும் ஆட்டுக்குட்டியும் பார்த்த படங்கள், படித்த நூல்கள், ஓடித்திரிந்த சைக்கிள், கேட்ட சொற்பொழிவுகள், டீயூட்டரிகள், கிரிக்கட் ஆட்டங்கள், பங்கர் வாழ்க்கை , ஹெலியின் சத்தம், குண்டு வீச்சு, இடப்பெயர்வு, போர்க்காலம், மனதைக்கவர்ந்தவர்கள்.... அசையும் அசையா சொத்துக்கள்... என்று பல்வேறு தகவல்களையும் ஆதாரங்களுடன் பதிவுசெய்கின்றார்.

அவரிடம் என்னை மிகவும் கவர்ந்த விடயங்கள். அவரது அவதானம். மற்றது நினைவாற்றல். ஒரு தேர்ந்த படைப்பாளிக்கு அவசியம் இருக்கவேண்டிய இயல்புகள் இவை. ஆக்க இலக்கியப்படைப்பாளிகளுக்கும் வரலாற்றாசிரியர்களுக் கும் அவசியம் இருக்கவேண்டிய இந்த இயல்பு ஜே.கே. யிடம் அமைந்திருந்தமையினால்தான் வட ஈழத்திலிருக்கும் படைப்பாளிகள் அவ்வப்போது கதைகளிலும் கவிதைகளிலும் நாவல்களிலும் பதிவு செய்த யாழ். குடாநாட்டின் ஒரு கால கட்டத்தை காய்தல் உவத்தல் இன்றி புகலிடவாழ்விலிருந்து எழுதியிருக்கிறார்.

இது புலம்பல் இலக்கியம் அல்ல. வேரை இழந்து வாடும் ஒரு மனிதனின் ஆத்மக்குரல். வேரைத்தேட விழையும் ஒரு இலக்கியப்பிரதியாளனின் வாக்குமூலம்.

உண்மையிலேயே இந்த நூல் இலங்கையில் வெளிவந்திருக்கவேண்டியது. புகலிடத்தில் வாழ்பவர்கள் தொலைத்துவிட்டு வந்த வாழ்க்கை இதில் பேசப்படுகிறது. ஆனால் , இந்த நூலின் உள்ளடக்க ஆதாரங்களுடன் அவற்றின் சோகங்களுடன் எம்மவர்கள் இன்றும் அங்கே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

அவரது என் கொல்லைப்புறத்து காதலிகள் நூலில் மொத்தம் 21 ஆக்கங்கள் இடம்பெறுகின்றன. அவற்றுள் கம்பவாரிதி, சுஜாதா, இளையராஜா, ரஜினிகாந்த், மணிரத்தினம், ரகுமான் முதலான பிரபல்யமான தனிநபர்கள் பற்றிய சித்திரங்களை தவிர்த்துவிட்டுப்பார்த்தால் ஏனையவற்றில் எம்மவரின் வாழ்வுதான் படர்ந்திருக்கிறது.

இதனைப்படிக்கும் புகலிடத்தின் ஈழத்தமிழர்களுக்கு மிகவும் நெருக்கமான வாழ்க்கை இதில் சொல்லப்பட்டிருப்பதனால் தம்மைத்தாமே அதில் அவர்கள் தேடிக்கொள்வார்கள். தமக்குள் சுயவிமர்சனும் செய்துகொள்வார்கள். என்னைப்போன்ற தென்னிலங்கை வாசிக்கும் கிழக்கிலங்கை மற்றும் மலையக வாசகர்களுக்கும் அந்த பங்கர் வாழ்வு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கட்புலன் செவிப்புலன் அற்றவர்களினாலும் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிந்திருப்பது போன்று அந்த போர்க்காலத்தின் குண்டுகளின் கெந்தக வாசத்தையும் அவலக்குரல்களையும் உணரமுடியும்.

அதானல்தான் முள்ளிவாய்க்காலை எட்டியும் பார்க்கத்தவறிய புகலிடக்கவிஞர்களினால் அந்த அவலத்தை கவியரங்கு மேடையில் பேச முடிகிறது.

மறு புறத்தில் படலை உட்பட பல வடமாகாண சொற்பிரயோகங்களுக்கு இந்திய - தமிழக வாசகர்கள் அடிக்குறிப்பும் கேட்பார்கள்.

எதனையும் ஆதாரங்களுடன் பேசும் எழுதும் ஜே.கே. யினால் பங்கர் வாழ்வு அவலத்தை சோகரசத்துடன் மாத்திரம் அல்ல - அதிலிருந்த மௌனப்புன்னகையையும் சுவாரஸ்யம் குன்றாமல் பதிவுசெய்யவும் முடிந்திருக்கிறது.

மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களின் தனிப்பட்ட வாழ்வு அழுகையும் சோகமும் நிரம்பியது எனச்சொல்லி மறைந்து விட்ட ஒரு சில நடிகர்களின் பெயர்களையும் குறிப்பிடுவார்கள். திரையிலோ மேடையிலோ நகைச்சுவை நடிகராக தோன்றுவதுதான் மிகவும் கடினமானது என்பார் கமல்ஹாசன். அதற்கென விசேடமான கடின உழைப்பும் வேண்டும் என்பார்.

வடபுலத்து மக்களின் போர்க்கால அவலத்தை சோக ரசமாகவும் அதிலே நீடித்த சிருங்கார ரசத்தையும் நலினாமாகவும் அங்கதமாகவும் சொல்லும் கலையில் தேர்ந்தவராகவும் ஜே.கே. காட்சி தருகிறார். இந்த நூலில் வாய்விட்டுச்சிரித்த விடயங்கள் ஏராளம் இருக்கின்றன.

இன்று எமக்கு மிகவும் தேவையாகவிருப்பதையே ஒரு மருத்துவராக சொல்லியிருக்கிறார் என்றும் கருதுவதற்கு இடமிருக்கிறது.

குட்ஷொட் என்ற ஜே. கே.யின் அவுஸ்திரேலியா S B S வானொலியில் ஒலிபரப்பான சிறுகதையை கேட்டேன். அதன் வானொலி வடிவம் மிகவும் சிறப்பாக பதிவாகியிருந்தது. அதனை இசையும் கதையும் என்ற கொடுமைக்கு ஆளாக்காமல் நேயர்களை கவரச்செய்த றேய்செலுக்கும் பாலசிங்கம் பிரபாகரனுக்கும் ஸ்ரீபாலனுக்கும் நிச்சயம் பாராட்டுத்தெரிவிக்கலாம்.

சிறுகதை வடிவத்திற்குள் வந்த குட்ஷொட்டை இந்த நூலில் தேடினேன். இல்லை. இந்த நூலில் எனது பார்வையில் சிறுகதை வடிவத்திற்குள் வந்திருக்கும் ஒரே ஒரு கதை நூலின் இறுதியில் பதிவாகியிருக்கும் குட்டி. அதுவே இந்நூலின் மகுடக்கதை என்பது எனது பார்வை. ஏனைய வாசகர்கள் இது விடயத்தில் என்னிலிருந்து வேறுபடலாம்.

அந்தக்கதையும் ஆதாரங்கள் நிரம்பியது. ஆனால், கட்டுரை அல்ல. குறிப்பிடத்தகுந்த சிறுகதை. ஆங்கில இலக்கியத்தில் படிப்படியாக தேர்ச்சி பெற்றுவரும் அவள், திடீரென்று மாயமாகி போராளியாகித் தோன்றுகிறாள். அவள் மறைவதும் திடீரென்று நடக்கிறது.

வாசகர்களை தன்னுடன் அழைத்துச்செல்லும் ஜே.கே. படைப்பாளியான என்னையும் அழைத்துச்சென்றார். எனக்கு தி.ஜானகிராமனின் மோகமுள்ளில் வரும் யமுனா நினைவுக்கு வந்தாள்.

அதிலே பாபு என்ற இளைஞன் யமுனா வீட்டின் எடுபிடிவேலைகளைச்செய்வது போன்று இதிலே ஜே.கே. குட்டியின் வீட்டுக்கு காய்கறி கீரை வகை வாங்கிக்கொடுப்பதற்காக மட்டுமல்ல குட்டியிடம் இலக்கியம் பேசுவதற்கும் வருகிறார். அவளது விலகல் அவளது மரணம் என்பன அவரை மிகவும் பாதித்திருந்தாலும் அவளது மறைவின் மூலம் ஜே.கே. விடுக்கும் செய்தியானது புகலிடத்தமிழ்மக்களை மாத்திரம் அல்ல ஜே.கே.யையும் சுயவிமர்சனம் செய்யவைக்கிறது.

ஏன் உனக்கு இலங்கையை பிடிப்பதில்லை என்று அவருடைய சிங்கள நண்பர்கள் கேட்டபொழுது அதற்காக தமிழ் வாசகர்களுக்கு கக்கூஸ் என்ற பதிவனை எழுதியிருப்பவர் அதன் இறுதியில் பிரேமதாஸா காலத்தில் வானிலிருந்து போடப்பட்ட மனித மலக்கழிவு பொதிகள் ஏற்படுத்திய அநாகரீகத்தைச்சொல்லி, They shit on us என்று முடிப்பார்.

போர்க்காலத்தில் குண்டுகளின் எறிகணைகளின் இயந்திரத்துப்பாக்கிகளின் கெந்தக மணம் மட்டுமல்ல மனித மலத்தின் நாற்றமும் பரிமாறப்பட்ட கரன்ஸிகளின் வாசமும்தான் பரவியிருந்தது.

கந்தக மணமும் மலக்கழிவின் நாற்றமும் அப்பாவி மக்களை வந்தடைந்தாலும் கரன்ஸியின் வாசம் வந்தடைந்தது சிலரிடம்தான். ஈழத்தின் வரலாற்றில் இவையெல்லாம் மறைக்கவோ மறக்கவோ முடியாதவை.

ஜே.கே. என்ற படைப்பாளி மக்கள் நுகர்ந்த கந்தக மணத்தையும் மலக்கழிவின் நாற்றத்தையும் சொல்கிறார். ஆனால், அரசியல் வாதிகள் தமது வசதிக்கு ஏற்ப பரிமாறப்பட்ட கரண்சியின் வாசத்தை சொல்கிறார்கள்.

அந்த மல நாற்றம் ஏற்படுத்திய வெறுப்பினை ஒரு தேசத்தின் மீதான வெறுப்பாகவே சித்திரிக்க முயலும் ஜே.கே. , குட்டி என்ற கதையில் என்ன சொல்கிறார் பாருங்கள்.

இவர்கள் எல்லாம் யார்...? தாம் செய்வது சரியா பிழையா என்பதையெல்லாம் தாண்டி அதை தமக்காகச்செய்யாமல் முகம் தெரிந்தோ தெரியாமலோ இருந்த எமக்காய்ச்செய்தவர்கள். எம் பிள்ளைகளுக்காய் செய்தவர்கள். நாங்கள் நன்றாக வாழவேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் தலைமுறையை இனிவரும் தலைமுறைகளை நாம் நன்றாக வைத்திருப்போம் என்று நினைத்து நம்மிடம் ஒப்படைத்துவிட்டு நமக்காக உயிர் விட்டவர்கள். பதினைந்து வயதில் போராடப்போன குட்டி ஏறத்தாள அறுபது வருட வாழ்க்கையை இங்கே இழக்கிறாள். அதில் அழகான குடும்பம் குழந்தைகள் குட்டி குட்டிச்சண்டைகள், சந்தோஷங்கள் படைப்புகள், பொதுவாழ்க்கை, இலக்கியம் - மாசத்துக்கு இரண்டு சினிமா, இன்றைக்கு சமூக தளங்கள் எல்லாவற்றையுமே இழக்கிறாள். 'யாருக்காக' என்ற ஒரு கேள்வியை கேளுங்கள். தாங்கமாட்டீர்கள். ஏதாவது உங்களுக்கு செய்யத்தோன்றும். ஏதாவது உருப்படியாக செய்யவேண்டும். எம்மால் எது முடியுமோ அதைச்செய்யவேண்டும் சின்னத்துரும்பையாவது தூக்கிப்போட வேண்டும்.

அந்த எமது முகம் தெரியாத குட்டி ஜே.கே.வுக்கு நேற்றுப்பெய்த மழையில் அவளது வீட்டு வளவில் நின்ற மரத்திலிருந்து விழுந்து கிடக்கும் விளாம்பழங்களையும் எடுத்துச்செல்லுமாறு சொன்னவள். அவள் போர்க்களத்தில் மடிந்த பின்னாலும் ஒரு குருட்டுணர்வொடு அவளது குரலை ஜே.கே. வெளிப்படுத்துகிறார். அவள் இவருக்கு விளம்பழமும் இலக்கியமும் மாத்திரம் அல்ல சமூகச்செய்தியையும் வழங்கிவிட்டுத்தான் சென்றிருக்கிறாள். அந்தச்செய்தியை ஒரு நீண்ட பந்தியில் சொல்லும் ஜே.கே. அவர்களுக்கு நாமும் ஒரு செய்தி சொல்லலாம்.

அங்கே பாதிக்கப்பட்ட எம்முடன்பிறப்புகள் இருக்கிறார்கள். அவர்கள் புகலிடம் தேடி ஓடவில்லை. அந்த மண்ணை விட்டுச்செல்ல விரும்பாதவர்கள். அந்த வேரைப்பிடுங்கி எறிந்துவிட்டு வெளியேறினால் மரம்போன்று பட்டுப்போய்விடுமோ என்று அஞ்சுபவர்கள். அவர்களுக்காக சிறு துரும்பையாவது அசைப்பதற்காக தனது தாயகத்தை ஜே.கே. வெறுக்காதிருத்தல் வேண்டும் என்பது அடியேனின் தாழ்மையான வேண்டுகோள்.

குட்டியன் என்ற இந்நூலில் ஆறாவது படைப்பு அவர் பிரியமாக நேசித்த ஆட்டுக்குட்டியின் அதன் கருக்காலம் முதல் அதன் பிரசவம் வளர்ச்சி திடீரென்று அதன் மறைவு என்பவற்றை மிகவும் நெகிழ்வொடு சொல்கிறது. படிக்கும்பொழுது உருக்கமாகவும் இருக்கிறது.

அதன் தோற்றத்திலும் ஜே.கே. யின் பரிவு இயல்பாக சித்திரிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஊணும் ஊட்டி அதன் மீதான தனது உணர்வுகளை எம்முடன் நேர்த்தியாகவும் யதார்த்தமாகவும் பகிர்ந்து கொள்கின்றார்.

அதன் திடீர் மறைவு குட்டி என்ற போராளியின் மறைவுக்கு ஒப்பானது. குட்டி இரத்தம் சிந்தி விதையாகின்றாள். குட்டியன் இரத்தம் சிந்தி யாருடையதோ வயிற்றை நிரப்புகிறது.

தான் தெரியாத்தனமாக உண்டுவிட்ட ஆட்டின் இறைச்சியினால் தான் பட்ட அவஸ்தை பற்றி காந்தி அடிகள் தமது சத்தியசோதனையில் ஓரிடத்தில் சொல்வார். அந்த ஆடு அவரது வயிற்றுக்குள்ளிருந்து எழுப்பும் அலறல் தன்னை மிகவும் கஷ்டப்படுத்தியது எனச்சொல்கிறார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்த பூமிகா என்ற ஹிந்திப்படம்தான் எனக்கு ஜே.கே.யின் குட்டியனைப்படித்தபொழுது நினைவுக்கு வந்தது.

அதில் வரும் சிறுமியின் வீட்டில் கோழி வளர்க்கிறார்கள். அந்தக்கோழிதான் அவளது தோழி. தினமும் அதற்கு தீணி போடுவதும் விளையாடுவதும் அதனுடன்தான். ஒரு நாள் பாடசாலை விட்டு அவள் வீட்டுக்கு வருகிறாள். வீட்டின் பின்வளவில் கோழியைக்காணவில்லை. தேடிப்பார்க்கிறாள். இல்லை. வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் மதிய உணவுப்பந்தியில் இருக்கிறார்கள். அந்தச்சிறுமி தாயிடம் தந்தையிடமெல்லாம் ஓடிச்சென்று தனது செல்லம் கோழியை காணவில்லை என்று அழுது புலம்பி சொல்கிறாள். அவர்களின் மௌனம் அவளுக்கு எரிச்சலூட்டுகிறது. பாட்டியிடம் ஓடி வந்து கேட்கிறாள். பாட்டியோ அடுப்பிலிருக்கும் கறிச்சட்டியை காண்பிக்கிறாள்.

அந்தக்காட்சி எப்படி இருந்திருக்கும் என்பதை அந்தத்திரைப்படத்தை பார்க்காதவர்கள் கூட புரிந்துகொள்வார்கள்.

என்னை நீண்ட நாட்கள் பாதித்த திரைப்படம் பூமிகா. இங்கே அத்தகைய ஒரு பாதிப்பை ஜே.கே. தமது குட்டியனில் தருகிறார்.

இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு படைப்பு குறித்தும் தனித்தனியாக விமர்சித்தால் அதுவே நீண்ட கட்டுரையாக மாத்திரமல்ல தனிநூலாகவும் என்னளவில் மாறிவிடுவதற்கு வாய்ப்புண்டு.

நவீன தமிழ் இலக்கியத்தின் மூலவர்களிடமும் அதன் பின்னர் நான்கு தலைமுறைக்கால இலக்கியப்பிரதியாளர்களிடமும் இல்லாத தமிழ் சினிமாவின் சினிமா பாடல்களின் மீதான பாதிப்பு ஜே.கே. போன்ற புதிய தலைமுறையிடம் ஆழமாக குடியேறியிருக்கிறது.

IMG_49072பெர்லினிலிருக்கும் கருணாகரமூர்த்தியாகட்டும் அவுஸ்திரேலியாவிலிருக்கும் ஜே.கே. ஆகட்டும் இவர்களின் படைப்புகளில் தமிழ் சினிமா என்ற வலிமையான ஊடகம் நெருங்கியிருக்கிறது.

இந்தத்தன்மைகளை நாம் புதுமைப்பித்தனிடமோ சுந்தரராமசாமியிடமோ ஈழத்தில் இலங்கையர்கோன், சம்பந்தன் சி.வி. வேலுப்பிள்ளையிடமோ மற்றும் பலரிடமோ நாம் பார்க்கமாட்டோம்.

ஆனால் - புதிய தலைமுறையிடம் காண்கின்றோம்.

அத்துடன் ஜே.கே. போன்ற புதிய தலைமுறையிடம் இந்தச்சமூகம் குறித்த விமர்சனங்களும் தாராளமாக வருகின்றன. இந்த நூலில் ஜே.கே. முன்வைக்கும் விமர்சனங்கள் மதவாதிகளை மட்டுமல்ல பகுத்தறிவுவாதிகளையும் கேள்விக்குட்படுத்துகிறது.

குறிப்பாக கடவுள், அரோகரா முதலான பதிவுகளில் அவரது விமர்சனப்பார்வை அநாயசமாக அங்கதச்சுவையுடன் வெளிப்படுகிறது.

கடவுள் தொடர்பாக நீண்டவிவாதங்கள். ஆராய்ச்சிகள். பால்யகாலத்தில் பரீட்சைக்கு படிக்கும்பொழுதுதான் எத்தனை வேண்டுதல்கள். வயது ஏறும்பொழுது தன்னைத்தானே கேள்விக்குட்படுத்துகிறார்.

இறுதியில் சிங்கப்பூர் செம்பகவிநாயகர் கோயிலில் வணங்கும் ஒரு மூதாட்டியின் கண்ணீர் ஜே.கே.யை இப்படியும் சிந்திக்கத்தூண்டுகிறது. அந்தப்பாட்டிக்கு கண்ணீர் வரும் உணர்வும் இல்லை. அவளது பக்தி கண்ணீரைத்துடைத்துக்கொள்ளவேண்டுமே என்ற சிந்தனையையும் தொலைத்துவிடுகிறது.

ஜே.கே. இவ்வாறு முடிக்கிறார்.

கடவுள் இருந்துவிட்டுப்போகட்டுமே...

யாழ்ப்பாணக்கலாச்சாரம் கந்தபுராணக்கலாச்சாரம் என்று பண்டிதமணி கணபதிப்பிள்ளை சொல்லியிருக்கிறார். எப்போது...? ஜே.கே. இந்தப்பூமியில் அவதரிக்க முன்னர். ஒரு காலத்தில். ஆனால் - இந்தத்தகவல் ஜே.கே. தெரிந்திருக்க நியாயம் இல்லை.

நல்லூர் கந்தன் உற்சவகாலத்தில் ஜே.கே.யை ஒரு சந்தேகம் வந்து சங்கடப்படுத்துகிறது. ஆனால் - அதனை தனது உடன்பிறந்த அக்காவிடம் கேட்கும் தைரியம் இல்லை. அக்காவின் சிநேகிதியிடம் கேட்கிறார்:

' அக்கா... முருகன் இருபத்தஞ்சு நாளும் வள்ளி தெய்வானையுடன் சுற்றிவிட்டு இருபத்தாறாவது நாள் கலியாணம் முடிக்கிறாரே.. இதுதான் தமிழ்க்கலாச்சாரமா...?

எனக்கு இந்தவரிகளை படித்தபொழுது எனது மகன் அவுஸ்திரேலியாவுக்கு தனது நான்கு வயதில் (1991 இல்) வந்தபொழுது, தொலைக்காட்சியில் World Vision விளம்பரங்களை பார்த்துவிட்டு, ' அப்பா....உமாதேவியார் எத்தியோப்பாவுக்கும் சோமாலியாவுக்கும் போகமாட்டாங்களா...? ' எனக்கேட்டதுதான் நினைவுக்கு வந்தது.

இவ்வாறு எமது வாழ்வில் நிகழ்ந்த பல சுவாரஸ்யங்களை இரைமீட்டிப்பார்ப்பதற்கும் ஜே.கே. யின் கொல்லைப்புறத்து காதலிகள் தூண்டுகிறார்கள்.

வாசகர்களே படித்துப்பாருங்கள். உங்களது கடந்த காலத்துக்கு ஜே.கே. அழைத்துச்செல்கிறார்.

இந்த அவசர கணினியுகத்தில் சினிமா ஆழமாக வேறூண்றியிருக்கிறது.

அந்த ஆழத்தில் ஜே.கே.யும் இருக்கிறார். அவரின் கொல்லைப்புறக்காதலிகளில் ஆழமும் இருக்கிறது. தேடலும் இருக்கிறது. அவருக்கு எமது வாழ்த்துக்கள்.

letchumananm@gmail.com


என் கொல்லைபுறத்துக் காதலிகள்" நூலை இணையத்தில் வாங்க இங்கே அழுத்துங்கள்.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக