ஏன் எண்ணெய் விலை குறைகிறது?

Feb 3, 2015 6 comments


கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் ஸ்டேஷன்களை கடந்துசெல்லும்போதும் எழும் கேள்வி இது. நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் ஒரு டொலர் ஐம்பது சதமாகவிருந்த லீட்டர் பெட்ரோல், நேற்றைக்கு தொண்ணூற்றெட்டு சதம். இது நானறிந்து கடந்த எட்டு வருடங்களில் ஆகக்குறைந்த விலை. இது இன்னமும் குறையும் என்கிறார்கள்.

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் எண்ணெய் வியாபாரம் என்பது ஒரு திறந்த சந்தை. இங்கே விலைகளுக்கு அரச கட்டுப்பாடு கிடையாது (ஆனால் வரி உண்டு, லிட்டருக்கு முப்பத்தெட்டு சதம்). சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் இயங்குவதால் விலை குறைப்பில் போட்டிபோட்டு இயங்குவார்கள். இங்கே லாபம் என்பது எவ்வளவு எண்ணெய் விற்கப்படுகிறது என்பதில் தங்கியுள்ளதே தவிர விலையில் அல்ல. உதாரணத்துக்கு ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு அரைச்சதம் லாபம் கூட வைப்பார்கள். கடந்த பத்துவருடங்களில் ஒரு லீட்டர் பெற்றோலின் சராசரி லாபம் வெறும் ஒரு சதம்தான் (இலங்கை மதிப்பில் ஒரு ரூபா). ஆனால் பெட்ரோலை பவுசர் கணக்கில் விற்பதால் கொள்ளை லாபம் வரும். ஒரு பெட்ரோல் ஸ்டேஷனில் சராசரியாக மாதத்துக்கு 800,000 லீட்டர் பெட்ரோல் விற்பனையாகிறது. அப்படியாயின் 8000 டொலர்கள். இது வெறும் பெட்ரோல் கணக்கு மட்டுமே. டீசலையும், காஸையும் கடையில் நடைபெறும் சில்லறை வியாபாரத்தையும் கணக்கிலிட்டால் லாபக்கணக்கு எங்கேயோ போகும். என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர். மென்பொருள் துறையில் நீண்டகாலம் வேலை டெஸ்டராக இருந்துவிட்டு இப்போது செவென் லெவன் பெட்ரோல் செட் ஒன்றை குத்தகைக்கு எடுத்துவிட்டார். மாதம் லாபமாக கையில் பதினையாயிரம் டொலர்கள் வருவதாக சொல்வார். 

ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலை சந்தை நிலவரங்களுக்கமைய மாறுபடும். ஒவ்வொருநாளும் மாறும். மெல்பேர்னில் பெட்ரோல் விலை புதன்கிழமைகளில் குறைவாகவும் ஞாயிறுகளில் அதிகமாகவும் பொதுவாக இருப்பதுண்டு. அதற்கு காரணம் வார இறுதியில் எல்லோரும் பெட்ரோல் அடிப்பதால் கடைக்காரர் விலையை ஏற்றுகிறார்கள் என்ற மாயை உண்டு. அதில் உண்மை இல்லை. சிட்னியில் வியாழக்கிழமையிலே விலை மிகவும் குறையும்.பிரிஸ்பேனில் செவ்வாய். இங்கே சந்தைவிலை சிங்கப்பூர் விலையை வைத்தே எடை போடப்படுகிறது. சிங்கப்பூர் சந்தை விலை கிட்டத்தட்ட கிழமைக்கொருமுறை நிர்ணயம் செய்யப்படும். அதற்கேற்ப அவுஸ்திரேலிய சந்தையும் தாளம் போடும். உதாரணத்துக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு லீட்டர் பெட்ரோல் ஒரு டொலர்என நிர்ணயிக்கிறார்கள் என்று வைப்போம். அடுத்தநாள் இங்கே ஒரு டொலர் இருபது சதத்துக்கு பெட்ரோல் விற்கப்படும். பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடுத்த புதன்கிழமை ஒரு டொலருக்கு விழும். அடுத்தநாள் மீண்டும் புது வட்டம். புது விலை. அது ஏன் ஒன்றிருபதுக்கு விற்றுவிட்டு பின்னர் குறைக்கவேண்டும்? பேசாமல் ஒரு டொலருக்கே விற்கலாமே என்று கேட்டால், பின்னர் வர்த்தகம் எங்கே செய்வது? திறந்த பொருளாதார சந்தையின் மாய வித்தைகள் இவை. நிறுவனங்கள் தமக்கிடையே ஒரு புரிந்துணர்வுடன் செய்யும் வர்த்தகப்போட்டி. WWF விளையாட்டில் ஆளாளுக்கு அடிப்பது போல நடிக்கையில் நாங்கள் பேக்கிழவாண்டிகள் போல பார்த்துக்கொண்டிருப்போமே, அதுபோல நாங்களும் இந்த வட்டத்துக்குள் சிக்கி விளையாடுவோம். வாரம் முழுதும் விலை குறையுதா என்று பார்த்து சரியான சமயத்தில் பெட்ரோல் அடித்து கொஞ்சக்காசை சேமிப்பதில் ஒரு அற்ப திருப்தி. ஆனால் பெட்ரோல் ஸ்டேஷன்களுக்கு எல்லாமே லாபம்தான் ஒரு வகை சூதுதான் இது. சிலர் தெரிந்து ஆடுவார்கள். சிலர் தெரியாமல் ஆடுவார்கள். எப்படியாயினும் தவிர்க்கமுடியாது.

அது சரி, எதற்கு சிங்கப்பூர் விலையை நிர்ணயம் செய்யவேண்டும்? அங்கேதான் எண்ணெய் வளமே கிடையாதே என்ற ஞாயமான கேள்வி வருகிறது. சிங்கபூரிலே பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கின்றன. ஆஸ்திரேலியாவிலும் இருக்கின்றது. ஆனால் அவற்றால் சிங்கப்பூரோடு போட்டிபோட முடிவதில்லை. இந்த இரண்டுக்குமிடையேயான செலவீன இடைவெளி, நாணயமாற்று விகிதம் போன்ற விஷயங்கள் எண்ணெய் விலை மாற்றங்களுக்கு காரணமாகும். தம்மாத்துண்டு நாடாகவிருந்து சிங்கபூர் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பண்ணும் வேலைகள் கொஞ்ச நஞ்சமில்லை. எங்கள் பொறியியலாளர்கள் பலருக்கு சிங்கப்பூர் வேடந்தாங்கலாக இருப்பதற்கு இந்த எண்ணெய் வியாபாரமும் முக்கியகாரணம்.

இலங்கை இந்திய நாடுகளைப்பொறுத்தவரை பெட்ரோல் விலையை அரசாங்கமே கட்டுப்படுத்துகிறது. கடந்த வருடம் எண்ணெய் விலை குறைந்த அளவுக்கு அந்த நாடுகள் பெட்ரோல் விலையை குறைக்காததால் கொழுதத இலாபம் ஈட்டியிருக்கும். இலங்கை அரசாங்கம் சென்றவாரம் எண்ணெய் விலையை இருபது வீதத்தினால் குறைத்திருக்கிறது. இது இன்னமுமே உலகளாவிய விலை வீழ்ச்சிக்கு சமானமாக வாய்ப்பில்லை. இதைத்தான் அண்மையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் குறிப்பிட்டிருக்கிறார். இலங்கையும் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஆஸ்திரேலிய மிதக்கும் சந்தை அமைப்புக்கு வரப்போவதுபோல தோன்றுகிறது. இதில் உள்ள முக்கிய அம்சம் விலை நிர்ணயத்தை கண்காணிக்கும் சுயாதீன ஆணைக்குழுவின் பிரசன்னம். அது இல்லாவிட்டால் நிறைய தில்லுமுல்லுகள் நடக்கலாம். யுத்த காலத்தில் கொக்காகோலா போத்தல்களுக்குள் எண்ணெய் கடத்திய மண்டைக்காய்கள் நாங்கள். எண்ணெய் விலையை சந்தையிடமே கொடுத்துவிட்டால் கதை கந்தல்தான். 

இப்போது சர்வதேச ரீதியில் ஏன் எண்ணெய் விலை குறைகிறது என்று பார்ப்போம்.

சென்ற வருடம் ஜூன் மாதம் ஒரு பரல் கச்சாய் எண்ணையின் விலை நூற்றுப்பதினைந்து டொலர்கள். தற்போது நாற்பத்தொன்பது டொலர்கள். அரைவாசிக்கும் குறைவு. ஆனால் நமக்கு என்னவோ இருபதுவீதம்தான் விலை குறைந்துள்ளது. சரி அதை விடுவோம். ஏன் விலை குறைந்தது? 

பத்து வருஷத்துக்கு முன்னாலே எண்ணைக்கான கேள்வி அதிகம். சீனா, ஆசியா பொருளாதாரங்கள் கிடுகிடுவென வளர எண்ணையும் அதிகம் தேவைப்பட்டது. கூடவே ஈராக் யுத்தம். அரேபிய வசந்தம் நடைபெற்றுக்கொண்டிருந்ததில் பல நாடுகளில் உள்நாட்டு சிக்கல்கள். எண்ணெய் நிறுவனங்களால் கேள்வியை சமாளிக்க முடியவில்லை. விலை எகிறியது. இந்த நிலையில்தான் அமேரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்த எண்ணெய் வளங்களை பயன்படுத்த ஆரம்பித்தன. அமெரிக்கா தன்னுடைய எண்ணெய் வளத்தை பொத்தி வச்சுக்கொண்டு உலகம் முழுக்க எண்ணெய் அள்ளுது என்று நாங்கள் சொல்லுவோம் அல்லவா. அது ஓரளவுக்குத்தான் உண்மை. நிஜத்தில் அமெரிக்க எண்ணெய் வளங்கள் தோண்டுவதற்கு அவ்வளவு இலகுவானதல்ல. ஆழமான ஷேல் என்ற கல்லுத்தகடுகளுக்கு கீழே இருக்கும் கச்சாய் எண்ணெய் அவை. அவற்றை தோண்டி வெளியே எடுப்பதென்றால் பெருத்த செலவு வரும். ஆனால் உலக அளவில் எண்ணெய் விலை அதிகரித்ததால் செலவு மிகுந்த அந்த ஆழமான எண்ணெய் வளங்களை நிறுவனங்கள் தோண்ட ஆரம்பித்தன. முதலீடுகள் அந்த இடங்களில் ஊக்குவிக்கப்பட்டன. அமெரிக்காவின் பொருளாதார மந்தமும் இதற்கு ஒரு காரணம். அல்பேர்டா, நோர்த் டகோடா பகுதிகளின் எண்ணெய்க் கிணறுகள் உருவாகின. கூடவே சில தொழில்நுட்பங்களும் வளர்ச்சியடைந்தன. அதில் ஒன்றுதான் ஹைட்ரோலிக் பிராக்கரிங்(hydraulic fracturing) . தண்ணீர், மணல், சில இரசாயனங்களை மிக வேகமாக பீச்சியடித்து அதிக ஆழத்திலுள்ள பாறைகளில் பிளவு ஏற்படுத்துவது. பின்னர் அதற்கூடாக எண்ணெய் உறிஞ்சும் தொழில் நுட்பம். வெகுவிரைவில் அமெரிக்க எண்ணெய் உலக சந்தைக்கு வரத்தொடங்கியது. இன்றைக்கு அமெரிக்கா உலக எண்ணெய் உற்பத்தியில் ஐந்து வீதத்தை பங்களிக்கிறது. 

ஆனால் சீக்கிரமே உலக பொருளாதார மந்தம் காரணமாக எண்ணெய்க்கான கேள்விகள் குறைய ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக சீனா, ஜெர்மனி நாடுகளில் எண்ணெய் தேவை எதிர்பார்த்ததைவிட இப்போது குறைவு. அதே சமயம் எரிபொருளை வினைத்திறனாக பயன்படுத்தும் இயந்திரங்கள் பாவனைக்கு வந்தன. தற்போதைய வாகனங்களின் எரிபொருள் நுகர்வு முன்னர் போன்று மோசம் கிடையாது. அமரிக்க வாகனங்களின் எரிபொருள் பாவனை முன்னரைவிட மிகவும் குறைவு. வாகனம் வாங்குபவர்களும் எரிபொருள் குடிக்கும் ஆறு சிலிண்டர் கார்களை தவிர்த்து நான்கு சிலிண்டர்களையே வாங்குகிறார்கள். மக்களின் கொள்வனவுத்திறனும் குறைந்துவிட்டது. அவுஸ்திரேலியாவின் முன்னணி கார் தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். ஆக மட்டில் எண்ணெய்க்கான தேவை எதிர்பார்த்ததைவிட உலகில் குறையத்தொடங்கியது.

அதே சமயத்தில் ஈராக் யுத்தம் முடிந்ததும், மேற்குலகம் சார்ந்த அரேபிய வசந்தம் முற்றுப்பெற்றதன் காரணமாக மத்திய கிழக்கில் எண்ணெய் உற்பத்தி அதிகமாகிவிட்டது. ஈரான் மீதான தடை, ஐசிஸ் பிரச்சனை எண்ணெய் உற்பத்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அமெரிக்கா, கனடாவும் தொடர்ந்து எண்ணெயை உற்பத்திசெய்கின்றன. எரிபொருள் உற்பத்தி தேவைக்கு அதிகமாகிவிட்டது. விளைவு? விலை படுபயங்கரமாக குறையத்தொடங்கிவிட்டது.

பொதுவாக எரிபொருள் விலை குறைந்தால் உலக எண்ணெய் நாடுகளின் கூட்டான "ஓபெக்" உற்பத்தியை குறைத்து விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பார்க்கும். ஆனால் அதற்கு இம்முறை சவூதி அரேபியா அதற்கு இசையவில்லை. அதற்கு இரண்டு நரித்தனமான காரணங்கள். ஒன்று உற்பத்தியை குறைத்தால், சந்தையில் சவுதியின் பங்கு, மார்கட் ஷேர் குறைந்துவிடும். எண்பதுகளிலும் ஒருமுறை இப்படி நடந்து உற்பத்தியை குறைத்தார்கள். ஆனாலும் விலை கூடவில்லை. அதனால் சவுதியின் வருமானம்தான் டபிளாக குறைந்தது. அந்த நிலையை சவூதி இம்முறை விரும்பவில்லை. இரண்டாவது காரணம் ஒரு மாஸ்டர் பிளான். அமெரிக்காவை சிக்கலில் மாட்டும் ஐடியா. எண்ணெய் விலை குறைந்தால் அமெரிக்க நிறுவனங்களால் ஆழமான அமெரிக்க எண்ணெயை அகழ்வது கட்டுப்படியாகாமல் போய்விடும். அந்த நிறுவனங்கள் திவாலாகும். அவை திவாலானால் உற்பத்தி தாமாகவே குறையும். விலை ஸ்திரமாகும். தம்முடைய சந்தை நிலையும் பாதுகாப்பாகும். அதனால் ஒபெக் அமைப்பு உற்பத்தியை குறைக்க முயன்றபோது சவூதி தடுத்துவிட்டது. தற்போதைய விலை குறைவால் சவுதிக்கு ஒப்பீட்டளவில் பாதிப்பு குறைவே. அதனிடம் 750 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பு இருக்கிறது. பட்ஜெட்டை இப்போதைக்கு சமாளிக்கலாம். கையைப் பிசையும் நாடுகள் என்றால் வெனிசுலாவும் ரசியாவும் ஈரானும்தான். மூன்றின் மீதும் பொருளாதாரத்தடை வேறு. வெனிசுலா கம்யூனிசம் என்று உள்ளூரில் விலையை கடுமையாக குறைத்துவைத்திருக்கிறது. தற்போது பணவீக்கம் சுத்தமோசம். 

எண்ணெய் விலை குறைவதால் உலக பொருளாதாரமும் பணப்புழக்கமும் அதிகமாகவே சாத்தியம் உண்டு. மக்களிடம் பணம் அதிகமாக புழங்கும். பணம் புழங்கினால் வாங்கும் சக்தி அதிகரிக்கும். பட்ஜெட் நிலுவைகளை எண்ணெய் வரி மூலம் ஓரளவுக்கு சமாளிக்கலாம். இப்படி எண்ணெய் நிறுவனங்களைத்தவிர ஏனையவர்களுக்கு நிறைய நன்மைகளே உண்டு. எண்ணெய் விலை குறைவதாலே நீண்டகால நோக்கில் எண்ணெய் நிறுவனங்களுக்கும் லாபம் அதிகம் உண்டு. விலை குறைய, குறைய அதிக வலுவுள்ள இயந்திரங்கள் பாவனைக்கு வரும். குறிப்பாக பெரிய வாகனங்கள் புழக்கத்துக்கு வரும். மாற்று எரிபொருட்கள் மீதான கவனம் குறையத்தொடங்கும். அவற்றின் மீதான ஆராய்ச்சிகள் குறையலாம். இதனால் எண்ணெய் வர்த்தகம் கூடியகாலத்துக்கு நின்று பிடிக்கலாம். இதனால் எண்ணெய் விலை அதிகரிப்புக்கு மேற்குலகம் பெரிதும் ஆர்வம் காட்டாது. ஆக இப்போதைக்கு எண்ணெய் விலை அதிகரிக்காமல் இருக்கவே சாத்தியம் அதிகம்.

Comments

 1. நல்லதொரு அலசல்

  ReplyDelete
 2. anna please you will write short story about time machine.
  I expect................

  ReplyDelete
  Replies
  1. I have tried relativity based stories and quantum teleportation stories. If something clicks then will ofcourse write more and more on this space. Thank you. (wish you passed the name)

   Delete

Post a comment

Contact Form