விளமீன் சிறுகதை பற்றி வைதேகி

Jul 3, 2017 0 comments
விளமீன் - ஜே.கே (புதியசொல், ஏப்ரல்- ஜூன் 17)

"வீ ஓல்மொஸ்ட் கோயிங் டு த்ரோ இட். நோ வன் பை இட்"

என்ற நிலையில் இருந்த அந்த விளமீன் கடைசியில் சரசுமாமியின் கைப்பக்குவத்தில் குழம்பாகி ஜென்ம சாபல்யம் அடைந்தது என்பது தான் கதையின் பிரதான குறியீடு.

கதை முழுவதுமே குறியீடாகத் தான் நகர்கின்றது. ஒவ்வொரு மீனையும் ஒவ்வொரு பக்குவத்தில் சமைத்து, சமைத்ததை ரசித்து ருசித்து அதுவும் தட்டில் எஞ்சியிருக்கும் கீரை கலந்த குழம்புச் சொதியை அப்படியே கோப்பையோடு உறிஞ்சிக்குடிக்கும் சரசு மாமிக்கு வாய்த்தது விளமீனுக்கும் திரளிக்கும் வித்தியாசம் தெரியாத அற்பாயுள் கணவன். ;)

ஆசையாசையாக தான் சமைத்த ஓராக்குழம்பை கிடங்குவெட்டித் தாட்டுப்போட்டு கத்தரிக்காய்க்குழம்பை வைத்துவிட்டு கணவன் முன்னால் சிரித்தபடி சரசு மாமி நின்ற அந்த ஒரு சம்பவம், தங்களுடைய அடிப்படை ஆசாபாசங்களையே குழிதோண்டி புதைத்து விட்டு கணவனுக்காகவும் சமூகத்துக்காகவும் ஒரு போலி வாழ்வை சிரித்தபடி ஏற்றுக்கொள்ளும் ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதியாக சரசுமாமி தெரிவார்.

பிரெஸ்டன் சந்தையில தற்செயலாக வந்து மாமியின் கண்ணில் அகப்பட்ட விளமீன் தொடக்கி வைக்கும் சரசுமாமியின் இரண்டாவது இன்னிங்ஸை. ;)

முதல் இன்னிங்ஸ் போல இல்லாமல், சரசுமாமி அடிச்சுவிளையாடத் தொடங்குவா இரண்டாவதை 😉😍.

மாமியின் ஸ்லோ அன்ட் ஸ்ரெடியான ப்ரோகிரஸை ஜே.கே அழகாக சொல்லியிருப்பார். மூன்று சரை சீனி போட்டு கப்புச்சீனோ குடிச்ச சரசுமாமி பிறகு சீனியே போடாமல் கப்புச்சீனோ குடிப்பதை அழகான காட்சியாக உருவகித்து ரசிக்க முடிகின்றது.

யாரைப்பற்றியும் கவலைப்படாமல் மாமி தன் பாட்டுக்கு தனக்குப்பிடிச்சதை சுதந்திரமாக செய்யத்தொடங்குவதை செயற்கைத்தனம் கொஞ்சமும் இல்லாமல் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கும்.

மீன் சந்தையில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு,

"சொறி...மெடம் இஸ் நோ மோர்"

"ஷி பாஸ்ட் எவே எ மன்ந் எகோ"

என்று ராசன் சொல்ல, என்னையுமறியாமல் வெடித்துச் சிரித்து,

"வா...வ் சரசுமாமி யு மேட் இட்" என்று சத்தமாகச் சொல்லிவிட்டேன்.

மனிசி இரண்டாவது இன்னிங்ஸில் சதமடிச்சிட்டுது. ;)

கதையில் தொக்கி நிற்கும் முடிவை வாசகமனது மளமளவென்று ஊகித்து சிருஷ்டிக்கும். நான் ஊகித்ததை எழுதினால், அது இனி கதை வாசிக்கப்போகின்றவர்களுக்கு நான் செய்யும் பாவம். இது என்னுடைய வாசிப்பின் புரிதல். வாசகசாத்தியங்கள் ஆளுக்காள் வேறுபடலாம். Let them decide.

ஏனெனில், ஒரு சிறுகதையின் வடிவம் என்பது எழுதுபவரின் எத்தனமும் வாசிப்பவரின் இயல்பும் இணைந்தே உருவாக்கப்படுகின்றது. So, it's unique.

க்ளிஷே, விரசம், தேவையற்ற அருட்டல்கள் எதுவுமில்லாமல் ஒரு sensitive ஆன கதைக்கருவை விளமீனை வைத்து மணக்க மணக்க குழம்பு வைத்த ஜேகேக்கு மிக்க நன்றி.

A JK story :)

Thanks Jeyakumaran Chandrasegaram

பி.கு: சரசுமாமிக்கும் அந்த சூடானிய "குழந்தைக்கும்" அன்பும் முத்தங்களும் 😍😘😘😘 

- வைதேகி பாலமுரளி

Comments

Contact Form