Skip to main content

அருண்மொழி



குளித்து முடித்துத் தலையைத் துவட்டியவாறே அருண்மொழி குளியலறையிலிருந்து வெளியே வந்தாள். ஐபோனிடம் மெல்பேர்ன் நேரத்தைக் கேட்டாள். பத்தரை. கூடவே அங்கு வெப்பநிலை எட்டு டிகிரி செல்சியஸ் என்றது. அவளுக்குப் புழுக்கமாக இருந்தது. ‘சனியன் குளித்து ஐஞ்சு நிமிசங்கூட ஆகேல்ல, அதுக்குள்ள அவியுது’ என்று புறுபுறுத்தாள். ஏனோ எட்டு டிகிரி மெல்பேர்ன்மீது எரிச்சலும் கோபமும் வந்தது. குளிர் மனிதர்களைச் சோம்பேறி ஆக்கிவிடுகிறது என்று முணுமுணுத்தாள். பதினொரு மணிக்குப் பார்த்திபன் ஸ்கைப்கோல் எடுப்பதாகச் சொல்லியிருக்கிறான். நேரம் இருந்தது. ஒரு கிரீன்டீ போடலாம் என்று குசினிக்குள் நுழைந்து கேத்திலை ஓன் பண்ணினாள். 

யார் இந்தப் பார்த்திபன்?

தெரியவில்லை. யாழ் சைவ உயர் வேளாள, கலாநிதிப்படிப்பு முடித்த, அவுஸ்திரேலியக் குடியுரிமை அந்தஸ்து உள்ள, கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த, எந்தத் தீயப் பழக்கவழக்கங்களுமற்ற … மணமகள் தேவை விளம்பரத்தைத்தாண்டி பார்த்திபனைப்பற்றித் தனக்கு எதுவுமே தெரியவில்லை என்பது அருண்மொழிக்கு சங்கடமாக இருந்தது. நல்ல பொருத்தமாம். செவ்வாய்க்குற்றம் குறைந்த அருண்மொழியின் சாதகக் குறிப்போடு மிக அரிதாகப் பொருந்திவந்த குறிப்புகளில் அவனுடையதும் ஒன்று என்று அவளின் அம்மா சிலாகித்திருந்தார். எழுபது வீதம், எப்படியும் முடித்துவிடவேண்டும் என்று சாத்திரி சொன்னாராம். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தெரிந்தவர்களிடம் அவனைப்பற்றி விசாரித்துப்பார்த்ததில் அவனுக்குக் குடிவெறிப்பழக்கம் ஏதும் இல்லையென்றும் சொல்லியிருக்கிறார்கள். அம்மாவுக்கு அதுவொன்றே அவன் நல்லவன் என்பதற்குச் சான்றாகிவிட்டது. அதனை ஒரு தகுதியாகக் கொள்ளலாமா என்று அருண்மொழிக்குத் தெரியவில்லை. அவளே அப்பிள் சைடர் அவ்வப்போது அருந்தியிருக்கிறாள். சியாட்டில் கிளையண்ட் சைட் விசிட்டின்போது இத்தாலிய உணவகத்தில் பினோட் வைன் அருந்தியிருக்கிறாள். அலுவலகத்தில் ஒவ்வொருதடவையும் புரஜெக்ட் சைன் ஓப் ஆகும்போதும் ஷம்பைன் உடைத்துத் தன் அணியோடு சேர்ந்து கொண்டாடியிருக்கிறாள். மது அப்படியொன்றும் ஒரு கொடிய ஜந்துவாக அருண்மொழிக்கு என்றுமே தோன்றியதேயில்லை. தவிர அளவான மது அவ்வப்போது ஒன்றுகூடல்களின்போது அவளுக்குச் சுதியேற்றியதை ரசித்தும் இருக்கிறாள். பார்த்திபன் குடிப்பதேயில்லை என்பதை எப்படி உள்வாங்குவது? சிலவேளை தெரிந்தவர்கள் அறியாவண்ணம் குடிப்பவனாக இருக்கலாம். அல்லது தெரிந்தவர்கள் பொய் சொல்லியிருக்கலாம். உண்மையிலேயே மதுவை அண்டாதவனாக இருந்தால் ஒன்று அவன் கடவுள் பக்தனாக இருப்பான், அல்லது மது அருந்துதல் உடலுக்குத் தீங்கு என்று நினைப்பவனாக இருப்பான், இல்லை கலாச்சார சீர்கேடு. மூன்றுமே அருண்மொழிக்குத் தகாத காரணங்கள். பார்த்திபன் ஒரு பொன்சாக இருப்பானோ என்று அருண்மொழிக்குத் தோன்றியது. அப்படி மனிதர்களை இலகுவில் எடைபோடக்கூடாது என்றும் எண்ணிக்கொண்டாள். 

தண்ணீர் ஊற்றாமல் ஓன் செய்திருந்ததில் கேத்தில் ஒருவித தீய்ந்த சத்தம் போட்டது. அதை அவசரமாக நிறுத்தித் தண்ணீர் ஊற்றி மீண்டும் ஓன் செய்தாள். 

ஐபோனில் பார்த்திபனின் பேஸ்புக் புரபைலுக்குச் சென்று நோண்டினாள். அவனது முகநூல் பக்கத்தில் பெரிதாக எதையும் அறியமுடியவில்லை. நண்பர்களின் எண்ணிக்கை இருநூறுக்கும் குறைவாகவே இருந்தது. பொது நண்பர்களும் இல்லை. கல்வித்தகுதிகள், வேலை செய்யும் இடம், வயது, டிப் டொப்பாக உடையணிந்து நிற்கும் படங்கள், பீச்சில் கால் நனையாமல் காற்சட்டையோடு நிற்கும் படங்கள். கறுப்புக்கண்ணாடி அணிந்து பென்ஸ் காரில் சாய்ந்தபடி நிற்கும் படங்கள். வீட்டு குடிபூரலின்போது ஐயரை வணங்கிக்கொண்டுநிற்கும் படங்கள். அனேகமான படங்களில் அவன் அம்மாவும் கூடவே நின்றார். தவிர அம்மாவின் தனிப்படங்களும் கிடைத்தன. பார்த்திபனும் ஓரளவு ஸ்மார்ட்டாகவே இருந்தான். படிந்து வாரிய தலை. வட்டமுமில்லாத நீளமுமில்லாத முகம். பொது நிறம். கிளீன் ஷேவ், அகன்ற காதுகள். அவ்வளவும்தான். ஒரு ஆணின் புகைப்படத்தில் இதைவிட வேறு எவற்றை அவதானிப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. எது ஒரு ஆணுக்கு அழகு சேர்ப்பது? புரியவில்லை. அவன் முகம் அவளுக்குப் பிடித்திருக்கிறதா? அதையும் சொல்லமுடியவில்லை. எப்படியான முகம் அவளுக்குப் பிடிக்கும் என்றும் ஒரு வரையறை அவளிடத்தில் இல்லை. அவனது விருப்புகள் பற்றியும் எதையும் எடைபோட முடியவில்லை. எலன் மஸ்க் பற்றிய ஒரு செய்திக்கட்டுரை லிங்க் கிடைத்தது. “தாங்யூ ஒபாமா” என்று ஒரு நிலைத்தகவல். “கிளாஸி ஏ.ஆர்.ஆர்” என்று “முன்பே வா” பாடல் வீடியோ லிங்க். உலகில் வாழச்சிறந்த இடம் மெல்பேர்ன் என்ற கட்டுரை லிங்க். இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக சில லிங்குகள். மற்றும்படி ஒரு கவிதை, கட்டுரை, நண்பர்களுடனான படம் என்று எதுவும் இல்லை. பார்த்திபன் என்கின்ற உடலும் உணர்வும் சேர்ந்த நிஜ மனிதனை அங்கே காணமுடியவில்லை. காணக்கிடைக்கும் ஒவ்வொரு விடயமும் மணமகள் தேவை விளம்பரத்துக்கான தயார்படுத்தல்போன்றே அருண்மொழிக்குத் தோன்றியது. லிங்க்டின் போனாலும் அதே நிலைமைதான். மணமகள்கள் தன்னைப்பற்றித் தேடினால் எவையெல்லாம் கிடைக்கும் என்பதில் கவனமாக இருக்கிறான். 

அருண்மொழி அதை அம்மாவிடம் சொன்னாள். 

“இப்பிடித்தான் போனமுறை அந்த டொக்டர் மாப்பிள்ளையையும் சொங்கி எண்டனி. அந்தாளுக்குக் கலியாணம் ஆகி இப்பப் பிள்ளையும் பிறந்திட்டுது” 

“தட்ஸ் எக்ஸாக்ட்லி மை பொயிண்ட் அம்மா…” 

கிரீன்டீயோடு தன் அறை மேசையில் வந்து உட்கார்ந்த அருண்மொழிக்கு தலை, வயிறு, நாரி என்று எல்லாவிடமும் வலி சுள்ளென்றது. பீக்கோ மாத்திரையை எடுத்துப் போட்டுக்கொண்டாள். “வென் யூ ஹாவ் எ மொமண்ட், பிளீஸ் ரிவியூ மை கோட்” என்று நிரோஜனிடமிருந்து குறுந்தகவல் வந்திருந்தது. அன்று அருண்மொழி அலுவலகத்திலிருந்து சீக்கிரமாகவே புறப்பட்டுவிட்டாள். பொதுவாக அவள்தான் இறுதியாகப் புறப்படுபவள். சொப்ட்வேர் ஆர்க்கிடெக்ட் என்பது வெறும் பெயருக்குத்தான். ஆனால் முழுவேலையும் அவள் இருந்தால்தான் முடியும். டிசைன் பண்ணி, டாஸ்க், எஸ்டிமேஷன், பிரியோரிட்டைசேசன், டெஸ்ட் பர்ஸ்ட் கோடிங் என்று மென்பொருள் வடிவமைப்பின் அத்தனை நிலைகளுமே அவளின்றி அந்த நிறுவனத்தில் அசையாது. சிறிய சிக்கலுக்கும் அவளிடம் கருத்து கேட்காமல் நகரமாட்டார்கள். இதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வெளிநாடு செல்லத்தான் வேண்டுமா என்று அருண்மொழி யோசித்தாள். தேன்கூட்டிலிருந்து வெளியேறினால் ராணித்தேனீயை எவர் மதிப்பர்? என்று நினைத்தவள், மறுகணமே புரோகிராமிங் அறிந்தவர்களுக்குச் செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்று சிரித்துக்கொண்டாள். தன் மக்புக்கை விரித்து, பிட்பக்கட்டில் நிரோஜனின் மென்பொருள் கோடுகளைச் சரிபார்த்தாள். ஆங்காங்கே திருத்தங்களைக் குறிப்பிட்டாள். அலுவலக ஈமெயிலைத் திறந்து தேவையானவற்றுக்குப் பதில் அனுப்ப ஆரம்பித்தாள். அவுஸ்திரேலியாவில் பதினொரு மணிக்கு இன்னமும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. 

நிரோஜன் சாட்டில் வந்தான். 

“அருண், சின்ன புரப்ளம் ஒன்று. பைத்தன் லம்டால…” 

“நீ இன்னமும் ஓபிஸ்லதான் இருக்கிறியா? ஐ ஆம் இன் அ பிட் ஒஃப் எ ரஷ்” 

“சின்னச்சிக்கல்தான் … இமேஜ் மஜிக் டிபெண்டன்சியை லம்டாக்கு ஏத்தேக்க…” 

“வேர்சன் செக் பண்ணியா?” 

“ம்ம்ம்… லோக்கல்ல வேர்க் பண்ணுது… லம்டாலதான்” 

“நிரோஜன் …. நீ ட்றை பண்ணு. நான் சீரியஸ்லி பிஸி … மூண்டு நிமிசத்தில் ஒரு மாப்பிள்ள ஸ்கைப்கோல் எடுக்கப்போறார். கதைக்கோணும்.” 

“வட் த?” 

“எக்ஸாக்ட்லி… பை பை …” 

சாட்டை குளொஸ் பண்ணிவிட்டு அருண்மொழி ஸ்கைப்பை தேடி எடுத்து ஓன் பண்ணினாள். கணினியின் கமராவை மறைத்து ஒட்டியிருந்த ஸ்டிக்கரை உரித்தெடுத்தாள். 

“என்ன நீ உடுப்பு ஒண்டும் மாத்தேல்லையா. இதென்ன வீட்டு உடுப்போட புறக்கோலம் காட்டிக்கொண்டு. முதலில தலையில கிடக்கிற துவாயத் தூக்கி அங்கால எறி.” 

அறைக்குள் நுழைந்த அம்மா அவளைப்பார்த்துக் கத்தினார். 

“திஸ் இஸ் சிகே அம்மா” 

“சிகேயோ கேகேயோ வீட்டு உடுப்பு வீட்டு உடுப்புத்தான்” 

அருண்மொழி இரவில் அவள் பொதுவாக அணியும் முழங்கால் நீள பிஜாமா, கையில்லாத டிசேர்ட் அணிந்திருந்தாள். அதற்கே வெக்கை கசகசத்தது. வீடியோ போட்டாலும் ஸ்கைப்பில் பிஜாமா எங்கே தெரியப்போகிறது? அம்மாவைப் பார்த்தாள். அவர் நிலைகொள்ளாமல் அங்கேயும் இங்கேயும் அலைந்துகொண்டிருந்தார். புதிய சோட்டி அணிந்து, பவுடர் பூசி, விபூதி அணிந்து. 

“உங்களையா பொம்பிளை பார்க்கப்போறினம்?” 

“கதையை விட்டிட்டு ஒரு சல்வாரை எடுத்துப்போடு” 

அம்மா முறைத்தபடியே அவள் கட்டிலில் தூக்கி எறிந்த ஈரத்துவாயை உதறியபடி வெளியே போனார். எதுக்கு வீணான சண்டை என்று அருண்மொழி சல்வார் டொப் ஒன்றைக் கிளறி எடுத்தாள். வீட்டு இன்டர்நெட்டின் வீடியோ குவாலிட்டிக்கு அயர்ன் பண்ணுவது அபத்தம் என்று தோன்றியது. அப்படியே டீசெர்ட்டுக்கு மேலாகவே அணிந்துகொண்டாள். அவள் சல்வார் அணிந்தே பலமாதங்கள் ஆகிவிட்டிருந்தன. எப்போதாவது கோயிலுக்கு அம்மாவுடன் போகும்போது அணிவது. மற்றும்படி ஜீன்ஸ், டீசேர்ட், பாவாடை சட்டைதான். அந்தச் சல்வார் கை, மார்பு, இடுப்பு என்று எல்லாவிடங்களிலும் இறுக்கியது. ‘ஷிட்’ என்றவாறே அதனைக் கழட்டி, உள்ளே அணிந்திருந்த டீசேர்ட்டை இழுத்து எறிந்துவிட்டு மீண்டும் சல்வார் டொப்பை அணிந்துகொண்டாள். நைட் பிஜாமாவும் சல்வார் டொப்பும் அசிங்கமான கொம்பினேசனாகத் தெரிந்தது. ஸோ வட். 

“பார்ப்பம், இந்தப்பிள்ளை என்னெல்லாம் செய்யப்போகுதெண்டு…” 

புறுபுறுத்தபடி மீண்டும் உள்ளே வந்த அம்மாவுக்கு நெக் காட்டியபடியே மின் விசிறியை நான்கில் சுழல விட்டாள். பாட் கொஞ்சம் விலகியிருந்ததுபோல அந்தரமாக இருந்தது. ஒருமுறை பாத்ரூம் போய்வந்தால் என்ன என்று தோன்றியது. நேரம் இல்லை. அம்மா திடீரென்று ஒரு கறுப்பு ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் ஒட்டிவிட்டுப்போனார். அருண்மொழிக்குக் கோபம் வந்தது. அம்மாவை வெளியே போகச்சொல்லிவிட்டு அறைக்கதவை மூடினாள். எவ்வளவுதான் அம்மாவுடன் இசைந்துபோனாலும் அவர் திருப்திப்படுவதேயில்லை. திருமணம் முடித்து, பிள்ளை பெற்று, பேரப்பிள்ளை பெற்று, அதற்குத் திருமணம் ஆனாலும்கூட இந்த அம்மா இப்படித்தான் இருக்கப்போகிறார். எவ்வளவுகாலம்தான் அம்மாவைத்திருப்திப்படுத்தவென்றே வாழ்ந்துகொண்டிருப்பது? அப்பா இருந்திருந்தால் இப்படியெல்லாம் ஸ்கைப்பில் கதைக்க அனுமதித்திருக்கமாட்டார் என்றே தோன்றியது. அவனை நேரே வரச்சொல்லியிருப்பார். அவரே முதலில் ஸ்கிரீன் பண்ணியிருப்பார். அல்லது அவளுக்குப் பிடித்தமாதிரியான ஆணை அவளே காதலிக்கும்படியாக வளர்த்திருப்பார். அறுபது வயதிலேயே ஏன் அப்பா இறந்துபோனார் என்று மீண்டுமொருமுறை எண்ணிக்கொண்டாள். தன்னோடு டெனிஸ் ஆடி, கடலில் நீச்சலுக்குக் கூடவந்து, சிறுவயதிலிருந்தே கணிதம் படிப்பித்து, அவளோடு ரிஸ்க் போர்ட் கேம் விளையாடி. அப்பாவுக்குப்பதிலாக அம்மா … என்று வந்த விபரீத சிந்தனையை அருண்மொழி தலையில் குட்டித் தடுத்துக்கொண்டாள். 

மெல்பேர்னில் பதினொரு மணி. 

ஸ்கைப் ரிங் பண்ணியது. டை, கோர்ட், குலோக், தொப்பி எல்லாம் அணிந்த படம் ஒன்று திரையில் நடுங்கிக்கொண்டிருந்தது. பார்த்திபன் கலாநிதிப்பட்டம் வாங்கிய விழாவின்போது எடுத்ததாக இருக்கலாம். அவளை இம்பிரஸ் பண்ணவே அந்தப்படத்தை அவன் போட்டிருக்கலாம். இப்படி எத்தனை பேரோடு அவன் பேசியிருப்பான்? எத்தனை வீடுகளில் இந்தப்படம் திரையில் நடுங்கியிருக்கும்? எத்தனை பெண்கள் அவசர அவசரமாக பஞ்சாபியைக் கொழுவிக்கொண்டு. கீழே வெறும் இரவு பிஜாமாவை அணிந்தபடி. அல்லது வெறும் ஸ்கைப் அழைப்புக்காகவே பேஃசியல் செய்து. சேலை அயர்ன் பண்ணி. பிளீட் பிடித்து நேர்த்தியாகக் கட்டி. கால்களில் மட்சிங்காக சாண்டில்ஸ் அணிந்து. ச்சே மற்றவர்களைத் தான் ஏன் அப்படி மலினமாக எடை போடுகிறேன் என்று அருண்மொழி தனக்குள் நொந்துகொண்டாள். 

“ஹலோ … கான் யு ஹியர் மீ?” 

பார்த்திபன் குரலில் கம்பீரம் இருந்தது. சற்றுத் தயங்கி, அடிக்குரலில் பேசினான். போலியாக இருக்கலாம். இப்படிப் பேசினால் ஆண்மை என்று எங்கேயாவது யாராவது சொல்லியிருக்கக்கூடும். திரைப்படங்களின் பாதிப்பு. அல்லது இயல்பாகவே அவனது குரல் அப்படியாகவே இருக்கக்கூடும். அவள் ஏன் எல்லாவற்றையும் எதிர்மறையாகவே யோசிக்கிறாள்? வாழ்க்கை என்பது பிழைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஆரம்பப்புள்ளிகளாக வைத்தபடி, பரீட்சித்துப் பரீட்சித்து எழுதப்படும் மென்பொருள் இல்லை என்பது அவளுக்குப் புரிந்தே இருந்தது. இது பல்லாண்டுகளாகப் புரையோடிப்போயிருகும் சிஸ்டம். கொஞ்சம் கொஞ்சமாக, அவசரப்படாமல், மூல நோக்கம் சிதறாமல் சிக்கல்களைத் தீர்க்கவேண்டும். முன்முடிபுகள் இல்லாமல் இதை அணுகவேண்டும் அல்லவா. 

“ஹலோ … மிஸ் சதாசிவம்… கான் யு ஹியர் மீ?” 

அவன் மிஸ் சதாசிவம் என்று சொன்னது படு அபத்தமாக இருந்தது. சியாட்டிலிலிருந்து பிராங் அவளை முதன்முதலில் புரோகிராமிங் வேலைக்காக பேஸ்டைமில் நேர்முகத்தேர்வு செய்தபோது ‘மிஸ் சதாசவம்’ என்று அழைத்தது ஞாபகம் வந்தது. பின்னாளில் அவள் அதன் அர்த்தத்தை அவனுக்குச் சொன்னதும், அவன் மன்னிப்புக் கேட்டதும், அவள் ‘நோ இட் மேட் பேர்பஃக்ட் சென்ஸ்’ என்று மேலும் சிரித்ததும். 

“ஹலோ … மிஸ் சதாசிவம்..” 

“யெஸ் பார்த்திபன். லவுட் அண்ட் கிளியர்… கான் யூ?” 

“யியப் மிஸ்..” 

“இட்ஸ் பைன். ஜஸ்ட் கோல் மி அருண்மொழி. ஹவ் ஆர் யு?” 

பரஸ்பரம் முகமன் விசாரித்தார்கள். ஆங்கிலத்தில் பேசுவது அந்தரமாக இருந்தது. நீயும் தமிழ். நானும் தமிழ். திருமணம் முடித்தால் நாம் எந்த மொழியில் பேசிக்கொள்வோம்? தமிழில்தானே. பின்னர் ஏன் ஆங்கிலத்தில்? அவனுக்கு அவனுடைய ஆங்கிலப்புலமையை காட்டவேண்டும். இவளுக்கும் அவன் முன்னிலையில் தான் இகழ் இல்லை என்று காட்டவேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே தோன்றியிருக்கவேண்டும். உரையாடலை முறித்து இலகுவில் தமிழுக்குத் தாவ முடியவில்லை. சொல்லலாமா என்று யோசித்தாள். ஏதோ தடுத்தது. 

அவனே தமிழுக்கு மாறினான். கொஞ்சம் அபத்தமாக. 

“சாப்பிட்டீங்களா?” 

“ம்ம்ம் …” 

மத்தியானத்துச் சோறு கறியை குழையல்போட்டு தாயும் மகளும் சாப்பிட்டிருந்தார்கள். அருண்மொழி கையை மணந்து பார்த்தாள். அம்மாவின் மீன் குழம்பு வாசம் சுகந்தமாக இருந்தது. சொல்லலாமா என்று யோசித்துவிட்டுப் பின்னர் அமைதியானாள். குறைவாக நினைத்தாலும் நினைப்பான். எதுக்கு. பார்த்திபனும் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை. 

“நான் ரோஸ்ட் சிக்கினும் ஸ்லடும். இரவில் லைட்டாகத்தான் சாப்பிடுவேன். ஈவினிங் ஜிம்மால வந்து குளிச்சதும் ஏழு மணிக்கெல்லாம் சாப்பாடு. சும்மா சிக்கினை ரோஸ்ட் பண்ணிறது மட்டும்தான். புரோடின் இன்டேக்” 

அவன் தொடர்ந்து பேசிக்கொண்டு போகவும் அவளுக்குத் திக் என்றது. அவன் சொல்வது பொய்யாக இருந்தால் எவ்வளவு நல்லது? இரவில்தான் அவள் உருப்படியாகச் சாப்பிடுவது. வாரத்தில் மூன்று நாள் புட்டு. ஒரு நாள் இடியப்பம். தோசை. இட்லி. வெள்ளி, சனி, ஞாயிறு நண்பர்களுடன் கடையில். இருபத்தைந்து வயதில் நாக்குச் சுவைக்குச் சாப்பிடாமல் ஹெல்த் ஹெல்த் என்று உடம்பைக்கவனித்து என்ன பயன்? 

“வாவ் நைஸ், தட்ஸ் ஹெல்தி” என்றாள். 

பார்த்திபன் சிரிக்கும்போதும் ஒரு போலித்தனம் தெரிந்தது. முதல் ‘ஹா’ நெடிலாகவும் அடுத்தது குறிலாகவும். கொஞ்சம் ஹஸ்கியாக. ஆனால் நன்றாக இருந்தது. தொடர்ந்து பேசினார்கள். பேசினான் என்பதே சரி. அவனுடைய ஒவ்வொரு கேள்விக்கும் பின்னாலே அவனைப்பற்றிய ஒரு பெருமிதம் ஒளிந்திருந்தது. அதைப்பறையடிக்கவே அவன் கேட்டான். அவள் பதில் சொல்லி முடிக்கும்வரை காத்திருக்கப் பொறுமையில்லாமல் அவன் தன் பதிலைச் சொல்லத்தொடங்கினான். 

“எந்த ஸ்கூலில படிச்சீங்கள்?” 

“ஹிண்டு லேடிஸ்” 

எந்த ஹிண்டு லேடிஸ் என்று அவன் கேட்கவில்லை. யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொழும்பு என்று நாடு முழுவதும் இந்து மகளிர் பாடசாலைகள் இருந்தன. அவனுக்கு அது முக்கியமில்லை. 

“நான் ஜப்னா ஹிண்டு. சென்ஜோன்சும் அட்மிசன் கிடைச்சது … ஆனா எங்கட காலத்தில ஹிண்டுலதான் நல்ல படிப்பு எண்டு அம்மா அங்க சேர்த்துவிட்டவா. அங்க படிச்சிருக்காட்டி ஐலண்ட் செக்கண்ட் வந்திருக்கமாட்டன் எண்டு அம்மா இப்பவும் சொல்லுவா” 

ஒரே வரியில் முந்நூறு பெருமிதங்களை எப்படியோ கொழுவிவிடுகிறான். தன்னைப்பற்றி எதிராளி குறைத்து மதித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். சின்னச் சந்தேகம் வரக்கூட விடுவதில்லை. ஒரு தேர்ந்த பிஎச்டி டிபென்ஸ்போல அவனுடைய பதில்கள் இருந்தன. சின்ன மாறுதல். இங்கே கேள்விகளையும் அவனே கேட்டுக்கொண்டிருந்தான். 

“நீங்கள் கம்பஸ் எங்க படிச்சீங்கள்?” 

அவனுக்கு அவள் பேராதனை பொறியியல் பீடம் என்று நன்றாகவே தெரியும். சாத்திரியார் முழு பயோடேட்டாவும் கொடுத்திருப்பார். அவனுக்கு அவன் புராணம் பாடவேண்டும். 

“கெளனியா…” என்றாள். வேண்டுமென்றே. 

“நைஸ் … நான் ஸ்ரீலங்காவில படிக்கேல்ல … மத்ஸ்ல ஐலண்ட் செக்கண்ட் வந்ததால எனக்கு இஞ்ச மொனாஷ்ல ஸ்கொலர்ஷிப் கிடைச்சது .. அப்படியே தொடர்ந்து படிச்சு, பிஎச்டியும் செய்து முடிச்சிட்டன் .. யூ நோ பேர்மனன்ட் ஹெட் டமேஜ் கேஸ்…” 

சிரித்தான். தன்னை நக்கலடிப்பதாக அவன் நினைத்தாலும் அதில் முழுக்க முழுக்க தற்பெருமை இருந்ததை அருண்மொழி கவனித்தாள். ‘ஸச் எ பிரிக்’ என்று முணுமுணுத்தாள். 

“விளங்கேல்ல” 

“இல்ல. சும்மா.. பஃனி எண்டனான்” 

“ஹா ஹ … நான் பகிடிக்குத்தான் சொன்னனான், ஆனா இந்த டென்சிட்டி கிரேடியண்ட் பில்ம்ஸ் டொபிக் வலு இண்டரஸ்டிங்… யு நோ, இந்த கிரேடட் டென்சிட்டி பில்ம்ஸ் வந்து ….” 

“ஹோலி கிராப் ” என்று நிரோஜனின் சட் கணினித் திரையின் மேல்மூலையில் பிளிங் பண்ணியது. 

“என்னாச்சு… கண்டுபிடிச்சிட்டியா?” 

“யு வேர் ரைட். இமேஜ்மஜிக்ல வேர்சன்ல செக்கியூரிட்டி புரப்ளம் இருக்கு எண்டு லேட்டஸ்ட் லம்டால தூக்கிட்டாங்கள். சோர்ஸ் எடுத்து ஈசி2ல கொம்பைல் பண்ணி …. சரி அதை விடு. அண்டர் கொன்றோல். மாப்பிள்ளை எப்பிடி?” 

“நொட் அண்டர் கொன்றொல். பிஎச்டி… போட்டு ஆத்திறான். போரிங்” 

“மே பி உனக்கு ஐடிகாரன்தான் சரிவரும் அருண்” 

‘தேயார் யு கோ’ என்று அருண்மொழி மனதுக்குள் சிரித்தாள். ஜூனியர் என்றாலும் நிரோஜனுக்கு அவள்மீது ஒரு கிரஷ் இருப்பது அறிந்ததுதான். கடந்த சில மாதங்களில் அந்தக் கிரஷ் சீரியஸ் ஆனதை யும் புரிந்து வைத்திருந்தாள். ஆனால் ஒருநாள்கூட அவுட்டிங் போகக் கேட்டதில்லை. இப்போதுகூட அவளை இம்பிரஸ் பண்ணத்தான் அலுவலகத்தில் நின்று வேலை செய்கிறான். புத்திசாலி. ஆனால் ஒரு பெண்ணோடு எப்படிப் பேசிப்பழகவேண்டும் என்று தெரியாது. பொதுவாகத் தமிழ் ஆண்களே இப்படித்தான். இந்த விடயத்தில் சிங்களவர்களிடம் நிறையக்கற்றுக்கோள்ளவேண்டும். கட்டிப்பிடிக்கும்போது மார்பு முட்டிவிடும் என்று அந்தார்ட்டிகாவில் நின்று கைகளை விரிப்பவர்கள் தமிழ் ஆண்கள். சிங்களவர்களுக்கு மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் அப்படியொரு சிந்தனையே எழுவதில்லை. 

“… நான் இப்ப செய்யிற ரிசேர்ச் அதுதான். யு நோ கோல்… நிலக்கரி. அதில இருக்கிற ஹைட்ரஜனை எப்பிடி எக்ஸ்றாக்ட் பண்ணுறது எண்டு … இந்த நாட்டுக்கு இது மிக முக்கியம், பெரிய பட்டரி ஸ்டோரேஜுக்கு இது யூஸ்புல்லா இருக்கும் … கிரேட் பியூச்சர்… ஹலோ… யு தேர்” 

“ஹலோ … அருண்மொழி..” 

அருண்மொழி சுதாகரித்தாள். 

“யியா … ஐ ஆம் ஹியர் .. சின்னதா பிரேக் ஆனமாதிரி .. நவ் கிளியர். கான் யு?” 

“டீஸன்ட். சொன்னாப்போல இப்ப நான் அசிஸ்டென்ட் புரபசராக இருக்கிறன் … ஐந்தாறு வருடங்களில் புரபசர் ஆகிவிடலாம்… நீங்கள் எப்படி?” 

“நான் அக்கடமிக் பீல்டிலயே இல்லையே” 

“இல்லை, நீங்கள் என்ன வேலை செய்றீங்கள் எண்டு …” 

“ஓ, நான் ஆர்க்கிடெக்டாக இருக்கிறன். ஐ மீன் சொப்ட்வேர் ஆர்கிடெக்ட். யூ நோ .. டிசைனிங் த சிஸ்டம்ஸ், கோடிங் .. நேம் இட் .. பிட் போரிங் ஐ கெஸ்” 

அவள் ஏன் தன் வேலையை போரிங் என்று விளித்தாள் என்று அருண்மொழிக்குப் புரியவில்லை. தினமும் ஆவலுடன் அலுவலகம் சென்று மாய்ஞ்சு மாய்ஞ்சு விரும்பிச் செய்யும் வேலையை ஏன் ஒரு வெறும் பிரிக்குக்காக அப்படி ஏளனம் செய்யவேண்டும்? அவனோடு பேசுவதால் அவனுடைய கதிரியக்கம் தனக்கும் பரவுகிறதோ என்று எண்ணினாள். அல்லது அவனுடைய சுப்பீரியர் கொம்பிளக்சுக்கு இசைந்து போகிறாளா? சமயத்தில் பிஎச்டிகள் தம்முன் இருப்பவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்கின்ற எண்ணத்தை இயல்பாகவே விதைத்துவிடுகிறார்கள் என்று அவளுக்குத் தோன்றியது. 

பார்த்திபன் இதுவெதையும் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. 

“வீடு வாங்கிட்டன். இஞ்ச எல்லாமே மோர்ட்கேஜ்தான் … இன்னொரு அஞ்சு வருசத்தில இரண்டாவது வீடும் வாங்கலாம்… இப்ப ஒரு பென்ஸ் ‘சி200’ நிக்குது. எனக்கு ‘எக்ஸ்5’ல ஒரு கண். இரண்டுபேரும் உழைத்தால் ஈசியாகச் சமாளிக்கலாம்” 

அதற்கு என்ன பதில் சொல்வதென்று அருண்மொழிக்குத் தோன்றவில்லை. ‘எக்ஸ்5’ வாங்குவதல்ல முக்கியம். அதில் ஊரெல்லாம் சுற்றவேண்டும். இவனைப்பார்த்தால் வீட்டுக்குள்ளேயே ஆராய்ச்சிப்புத்தகத்தோடு முடங்கிக்கிடப்பவன்போலத் தெரிந்தான். 

கேட்கவேண்டுமே என்று கேட்டாள். 

“மெல்பேர்ன்ல நீங்கள் எங்கே இருக்கிறீங்கள்?” 

அந்தக்கேள்விக்கு அர்த்தமே இல்லை என்று அவளுக்குத்தோன்றியது. மெல்பேர்னின் எந்தப் புறநகரங்களின் பெயர்களும் அவளுக்குத் தெரியாது. ஏன், அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் எங்கிருக்கிறது என்றுகூடத் தெரியாது. 

“கிலேடன் … கொஞ்சம் எக்ஸ்பென்சிவ்வான இடம். கம்பசுக்குப்பக்கம் எண்டு வாங்கினாங்கள் … ஐடிகாரர் என்றால் சிட்டிக்குத்தான் வேலைக்குப் போகவேண்டியிருக்கும். ட்றெயின் இருக்கு … எங்கட வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடைதான். டூ ஈஸி.” 

முடிவே எடுத்துவிட்டானா? எங்கள் என்று அவன் யாரைச் சேர்த்துச் சொன்னான்? அவனையும் அவன் அம்மாவையுமா? அல்லது அவளையும் சேர்த்தா? அல்லது அவளையும் அவள் அம்மாவையும் சேர்த்தா? அருண்மொழிக்குக் குழப்பமாக இருந்தது. இவன் இப்படி எத்தனை பெண்களோடு பேசியிருப்பான்? ஒரு டொக்டர் பெண்ணோடு பேசும்போது என்ன சொல்லியிருப்பான்? ஆஸ்பத்திரி அருகிலேயே இருக்கிறது என்றிருப்பானா? அக்கவுண்டண்ட் என்றால் எப்படிப் பேசியிருப்பான்? புதிதாக கன்சல்டன்ஸி ஆரம்பிக்கலாம் என்றிருப்பானா? எல்லோரிடமும் ‘எங்கள் வீடு’ என்றுதான் சொல்லியிருப்பானா? அருண்மொழிக்கு யோசிக்கவே அருவருப்பாக இருந்தது. அந்தக் கிலேடன் வீட்டில் ஒரு அறையில் அவளும் அடுத்த அறையில் டொக்டர் மணமகளும் அதற்கடுத்த அறையில் எக்கவுண்டன்ட் மணமகளும் குடியிருக்க, நடுஹோலில் அவனும் அவன் அம்மாவும் எக்ஸ்பொக்ஸ் விளையாடிக்கொண்டிருக்கும் காட்சி ஒன்று தோன்றி மறைந்தது. மாலையில் எல்லோரும் அவனோடு ஜிம்முக்குப் போய், அவனோடு சிக்கனை ரோஸ்ட் பண்ணி உண்டு, அவனுடைய ஐதரசன் பட்டரிக்கதைகளைக் கேட்டு, பின்னர் படுக்கப்போகும்போது. பஃக். அவள் அக்கணம் என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்பதே அவளுக்கு விளங்கவில்லை. அவள் ஏன் அழைப்பில் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறாள்? ஏன் அதை நிறுத்திவிட்டு எழுந்து செல்லாமல் இருக்கிறாள்? இன்னமும் எவ்வளவுநேரம் இது தொடரப்போகிறது? 

“ஒகே .. ஐ’ம் டன் போர் த டே… லீவ் பண்ணுறன்” 

நிரோஜன் பிளிங் பண்ணினான். 

“டாக்ஸி கோல் பண்ணு நிரோ. வழியில பிட்சா எடுத்துக்கொண்டு போ. கோர்மே வாங்காத. பட்ஜட் இல்லை. ரிசீப்ட் மறக்காத. வீட்ட போனதும் டெக்ஸ்ட் பண்ணு.” 

“டோண்ட் வொரி. அந்த பிஎச்டி இன்னமும் உயிரோட இருக்கா?” 

“வெல் அண்ட் ட்ரூலி… நான்தான் சவமாயிட்டன்” 

“ஐ டோல்ட் யூ … ஐடி ஆள்தான் …” 

“ட்றை கோலிங் த டக்ஸி… குட் நைட்” 

அவள் சட் விண்டோவை மூடிவிட்டு கிரீன்டீயை ஒரு மிடறு குடித்தாள். ஆறிப்போய் கசாயம்போல இருந்தது. செருமினாள். நிரோஜன் அவ்வளவு மோசமில்லை என்று தோன்றியது. ஜூனியர். சொல்வதை அட்சரம் பிசகாமல் கேட்பான். ஆனால் நோ பஃன். பனங்கொட்டைக் குணங்கள் இன்னமும் மீதமிருக்கின்றன. தவிர வாழ்க்கையைப் பூச்சியத்திலிருந்து அவனோடு ஆரம்பிக்கவேண்டும். அருண்மொழிக்கு அவளை நினைக்கவே சிரிப்பு சிரிப்பாக வந்தது. அவளா இப்படியெல்லாம் யோசிக்கிறாள்? கெட்டிங் டூ மச். அடுத்த மாதமே ஒரு சியாட்டில் அசைன்மண்ட் இருந்தது. அம்மாவுக்கு அல்வா கொடுத்துவிட்டு அங்கேயே செட்டில் ஆகிவிடவேண்டும். 

“நீங்கள் சமைப்பீங்களா? நான் நல்லா தேத்தண்ணி போடுவன்” 

மறுபடியும் “ஹா ஹ” என்று பார்த்திபன் சிரித்தான். அந்தச் சிரிப்பினூடாக அவனின் கேள்வியிலிருந்த வன்மத்தை மறைக்க முயன்றான் என்று தோன்றியது. அவள் அவனிடம் அதே கேள்வியைக் கேட்டுவிடக்கூடாது என்கின்ற கவனமும் அவனிடத்தில் இருந்தது. எத்தனையோ ஸ்கைப் உரையாடல்கள் கொடுத்த அனுபவமாக இருக்கவேண்டும். சொல்லவேண்டியவற்றையும் சொல்லுவது. கேட்கவேண்டியவற்றையும் கேட்பது. இது ஒரு ஆற்றல். ஸச் எ டிபென்ஸ். டபிள் பிஎச்டியே கொடுப்பார்கள். 

“சும்மா சமைப்பன் … அம்மா இருக்கிறதால அவ்வளவா தேவைப்படுறதில்ல… அவ யாழ்ப்பாணம் போற டைமில இருக்கவே இருக்கு எங்கட வெள்ளவத்தை கடையள். யாழ்ல நண்டுக்கறி நல்லா இருக்கும்” 

அவன் அதை ரசிக்கவில்லை. 

“இஞ்ச வந்தால் சமைக்கவேண்டித்தான் இருக்கும் … கடையில வாங்கிக் கட்டாது” 

அருண்மொழிக்கு அது புரியவில்லை. இரண்டுபேரும் வேலைக்குப்போய், இரண்டுவீடு வாங்கி, எக்ஸ்5கூட ஓடும் ஒரு ஊரில் கடையில் வாங்கிக்கட்டாதா? என்ன லொஜிக் இது? அதைவிட இவனோடு வீட்டிலேயே இவன் அம்மா இருக்கிறார். எதற்காக வேலைக்குப்போகும் அவள் சமைக்கவேண்டும்? சாவனிஸ்டுகள். தாய், மகன் இருவருமே மேல்சாவனிஸ்டுகள். அவளுக்கு எரிச்சலாக வந்தது. 

“உங்கட அம்மா உங்களோடதானே இருக்கிறா?” 

சடக்கென்று கேட்டுவிட்டு நாக்கைக் கடித்தாள். அந்தக்கேள்வியை அவன் எதிர்பார்த்திருக்கமாட்டான் என்று தோன்றியது. அருண்மொழி வேண்டுமென்று அதைக்கேட்கவில்லை. எரிச்சலில் எதேச்சையாக வந்துவிட்டது. அவள் அம்மா அறிந்தால் துள்ளுவார் என்று தோன்றியது. 

“அம்மா இருக்கிறாதான் … ஆனா அவவுக்கும் வர வர ஏலாது… இப்பவே ஒவ்வொரு கிழமையும் செக் அப், ஸ்கான், அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என்று அலைஞ்சுகொண்டுதான் இருக்கிறா. பாவம்.” 

அருண்மொழி ‘ஓ சொறி’ என்றாள். அவள் அம்மாவும் வருத்தக்காரி என்பது ஞாபகம் வந்தது. அம்மாவை விட்டுவிட்டு அவள் வெளிநாடு போவது சாத்தியமேயில்லை. அவுஸ்திரேலியாவும் வேண்டாம். சியாட்டிலும் வேண்டாம். இங்கேயே இருக்கவேண்டும். நிரோஜன் பற்றிய ஞாபகத்தை வலிந்து தவிர்த்தாள். 

“ஷி வில் பி பைஃன்” 

ஏன் நாளாந்த வாழ்க்கைபற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது. பரஸ்பரம் என்னென்ன பிடிக்கும் என்றுகூடத் தாம் பேசிக்கொள்ளவில்லையே என்று தோன்றியது. அவளே ஆரம்பித்தாள். சற்று அபத்தமாக. 

“உங்களுக்கு என்ன பிடிக்கும்?” 

“என்ன பிடிக்கும் என்றால் … சாப்பாட்டை கேக்கிறீங்களா? … தோசை பயங்கரமாப் பிடிக்கும் ..” 

“ஆ நைஸ் .. எனக்கும் பிடிக்கும் … ஐ டிண்ட் மீன் இட் … மியூசிக் .. என்னமாதிரி மியூசிக் கேப்பீங்கள்?” 

“மியூசிக் அவ்வளவா பிடிக்கிறதில்ல … மியூசிக்கால எந்தப் பிரயோசனமுமில்ல எண்டு நினைக்கிறன்… பொதுவா டெட் டோக் கேப்பன். பொட்காஸ்ட்ஸ். எப்பவாவது இருந்திட்டு கார்ல … இளையராஜா, ரகுமான் இப்பிடி …” 

அவன் இசை பற்றிய தன் கணிப்புபற்றி ஒரு பிரசங்கமே நிகழ்த்தி ஓய்ந்தான். பதிலுக்கு அருண்மொழி தான் உண்மையைச் சொல்லலாமா என்று நினைத்தாள். சொல்லவேண்டியது முக்கியம் என்றும் தோன்றியது. மறைப்பது சரியல்ல. அவன் கேட்காமலேயே சொன்னாள். 

“என்யா பிடிக்கும் … கன்ரி மியூசிக்கும் பிடிக்கும் … இண்டியன் மியூசிக்ல இப்போதைக்கு ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் எண்டு ஒருத்தர் … அவரிண்ட ‘ரங்கபுர விகாரா’ கேட்டுப்பாருங்கோ … யூடியூப்ல இருக்கு. டிவைன்” 

“நீங்கள் மியூசிக் படிச்சனிங்களா?” 

“ம்ஹூம் … சும்மா கேக்கிறதுதான் .. ஒஃபிஸ்ல பாட்டுக்கேட்டுக்கொண்டே வேலை செய்யிறது” 

“ஓ .. நான் ரிசேர்ச் செய்யேக்க அதில மட்டும்தான் கொன்சென்ரேட் பண்ணுறது … பி.எச்.டி எண்டா விளையாட்டில்லைதானே…” 

அவளுக்கு யாரோ குதத்துக்குள் ஒரு கறல் ஆணியைச் சொருகியதுபோல இருந்தது. ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் யார் என்று விசாரித்து, அந்த நிமிடமே அந்தப்பாடலை யூடியூபில் தேடி எடுத்து, அப்போதே பிளே பண்ணி, இருவரும் கேட்டு ரசித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அதற்குமேல் பார்த்திபனுக்கு மரியாதை எதுவும் தேவையில்லை என்று முடிவு செய்தாள். ‘லெட்ஸ் கெட் ஓவர் வித் திஸ் ஷிட்’ என்று அமைதியானாள். 

“ஆர் யூ ஓகே அருண்மொழி? சைலண்டாயிட்டிங்கள்” 

‘நீ எங்கே என்னைப் பேசவிடுகிறாய்’ என்று அவள் நினைத்துக்கொண்டாள். 

“இல்லையில்லை, கொஞ்சம் ஏலாது, அதான். பிட் டையர்ட்” 

“ஏலாதா? ஏதும் வருத்தம் காய்ச்சலா? டொக்டரிட்ட போனீங்களா?” 

“நாஃ … தேவையில்லை. பீரியட் டைம், இரண்டாம் நாள். பட் ஐஆம் பைஃன்” 

“ஓ சொறி” 

அவன் எதற்காக சொறி சொன்னான் என்பது அவளுக்குப் புரியவில்லை. இந்த விடயத்தை அவன் எதிர்பார்க்கவில்லை என்று தோன்றியது. வீட்டுக்கு ஒரே ஆண் பிள்ளை. தாய் பேசியிருக்கமாட்டார். வாழ்க்கையில் இன்னொரு பெண்ணோடு பழகியே இருக்கமாட்டான். ஒரு பெண்ணுக்கு பீரியட் வருமென்பதுகூட இந்தப் பொன்சுக்குத் தெரியுமோ என்னவோ. அருண்மொழி தலையில் கை வைத்தாள். பிஎச்டியின் டிபென்ஸ் முதன்முதலில் தடுமாறியதுபோலத் தெரிந்தது. 

ஆனால் சின்ன குலுக்கலுக்குப்பின்னர் யாழ்தேவி மீண்டும் பயணத்தை ஆரம்பித்தது. 

“பிள்ளைகள் பற்றி என்ன நினைக்கிறீங்கள் அருண்மொழி?” 

சம்பாசணைக்கு சம்பந்தமேயில்லாமல் அவன் திடீரென்று அந்தக் கேள்வியைக் கேட்டான். சிலவேளைகளில் பீரியட்பற்றிப் பேசியதில் அவன் அப்படியே மேலே சென்று பிள்ளைகள்பற்றி யோசித்தும் இருக்கலாம். அவளுக்கு ஒருவிதத்தில் அவனை நினைக்கப்பாவமாகவும் இருந்தது. ஸோ நேயிவ். சாடியில் நடப்பட்டு, நேரத்துக்குத் தண்ணீர் ஊற்றி, வெயிலின்போது நிழலிலும் நிழலின்போது வெயிலிலும் இழுத்துவிடப்பட்டு, பருவத்துக்குப் பருவம் கவ்வாத்து செய்யப்பட்ட குரோட்டன் செடி இவன். இவனை நொந்து என்ன பயன்? 

அவன் திரும்பவும் சொன்னான். 

“பிழையா ஏதும் கேட்டிட்டனா? பிள்ளைகள் பற்றிய உங்கட பிளான் என்ன?” 

குரோட்டன் எப்படி இனப்பெருக்கம் செய்யும் என்று அருண்மொழிக்கு அறியவேண்டும்போல இருந்தது. அவனுடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பிள்ளைகள் பற்றி அவள் என்றைக்குமே யோசித்திருக்கவில்லை. வேலை, வேலை முடிந்தால் வீடு. மாலையில் நேரம் கிடைத்தால் எங்கேயாவது செல்வது. இசைக் கச்சேரி, நடன அரங்கேற்றம், நூலகம், அலுவலக நண்பர்களுடன் ஏதாவது பார்ட்டி, கிளபிங், வார இறுதியில் நீச்சல், ரயில் பயணங்கள், அவ்வப்போது ஒன்சைட் என்று சிங்கப்பூர், ஜேர்மனி, அமெரிக்கா பயணங்கள். அருண்மொழி தான் ஒரு நாள் கர்ப்பமடைந்து, குழந்தை சுமந்து, பெற்று, பாலூட்டி, நப்பி மாற்றி, அது தூங்கும்போது தானும் தூங்கி, சிரிக்கும்போது மகிழ்ந்து, அழும்போது தாலாட்டி, பள்ளிக்கு அனுப்பி, பாடம் படிப்பித்து … நினைக்கவே மூச்சு முட்டியது. பார்த்திபனின் ஒரே கேள்வியில் அவள் ஐந்து குழந்தைகளுக்கு அம்மாவாகிவிட்டதுபோன்ற அயர்ச்சிவந்தது. 

“பிள்ளைகளா … அது பற்றியெல்லாம் நான் யோசிக்கவேயில்லை” 

“யோசிக்கோணும் இல்லையா .. முப்பது வயசுக்குள்ளேயே பெத்தாத்தான் பேரண்டிங் ஈசியா இருக்கும் .. பிள்ளைக்கு பதினைஞ்சு வயசு இருக்கேக்க எங்களுக்கு அறுபது வயசெண்டால் ஜெனரேஷன் கப் பெரிசாயிடும் …. பெடியன் பந்து அடிச்சா போய்ப்பொறுக்க தைரியம் வேண்டும் இல்லையா?” 

‘அதற்கு வேண்டுமென்றால் ஒரு நாய் வளர்க்கலாம்தானே’ என்று சொல்ல அருண்மொழிக்கு வாய் உன்னியது. குரோட்டன் எப்படி இனப்பெருக்கம் செய்யும் என்று ஓரளவுக்கு ஐடியா வந்தது. பதி வைப்பார்கள். ஒரு செழிப்பான கிளையைச் சற்றுக்கீறி, தென்னை மட்டை கட்டி, மேல்கிளையில் ஒரு நீர்கலனை வைத்து… எவ்வளவு பக்காவாக இவன் தன் வாழ்க்கையைத் திட்டம்போட்டு வைத்திருக்கிறான்? இருபத்தெட்டு வயதில் இருபத்தைந்து வயதுக்காரியைத் திருமணம் முடித்து, இரண்டே வருடங்களில் இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்து, அறுபது வயதுக்குள் பேரப்பிள்ளைகளையும் கண்டு, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஊர் சென்று திரும்பி, உலகில் வேறெந்த நாடுகளுக்கும் செல்லப் பிரியப்படாமல், தமிழ்த் திரைப்படங்கள் பார்த்து, இரண்டு மூன்று வீடுகள் வாங்கி, பெண்பிள்ளைக்கு சாமத்தியவீடு செய்து, ஆண் பிள்ளையை இன்னொரு பிஎச்டி ஆக்கி, சாகும்வரையிலும் பணம்பற்றிப்பேசி, அந்திரட்டியில் வெளியிடப்பட்டும் தேவாரக் கல்வெட்டின் மூன்று பக்கங்களுக்குள் அடங்கிவிடக்கூடிய ஒரு டிப்பிக்கல் வாழ்வுக்கு எந்தளவுக்கு அவன் தன்னைத் தயார் படுத்தி வைத்திருக்கிறான்? அருண்மொழிக்கு பிரமிப்பாக இருந்தது. அவன்மீது கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. எவ்வளவு எளிமையாகவும் இலகுவாகவும் இவனது வாழ்வு நிகழ்ந்து முடியப்போகிறது? ‘மே பி ஹி இஸ் ரைட்’ என்று வந்த சிந்தனையைப் புறந்தள்ளினாள். 

இப்போதைக்கு இவனைச் சமாளித்து காய் வெட்ட வேண்டும். 

“நீங்கள் சொல்லுறது உண்மைதான்… வெள்ளனவே பிள்ளைகளைப் பெற்றுவிட்டால் எல்லாமே ஈஸிதான்” 

பிள்ளைகள் விடயத்தில் அவனுக்குத் தேவையான பதில் கிடைத்ததும் உடனே அடுத்த கேள்விக்குத் தாவிவிட்டான். 

“வீடியோ ஓன் பண்ணுவமா?” 

‘வை நொட்’ என்றபடி அவள் வீடியோவை அழுத்தினாள். தலைமயிர்க்கொண்டையை சரி செய்யவில்லை. முகம் எண்ணெய் வடிகிறதா, இல்லையா என்கின்ற கவலைகள் இல்லை. இவனுக்கு இதுவே அதிகம். தவிர இதுதான் நான் என்பதில் அவளுக்குச் சற்றுப் பெருமையும் இருந்தது. ‘ஹாய்’ என்று கை காட்டினாள். மறுமுனையில் பார்த்திபன் கணினித் திரையைப்பார்த்துச் சிரித்தான். கமராவைப் பார்க்கவேண்டும் என்கின்ற பிரக்ஞை அவனிடம் இருக்கவில்லை. தலைமயிரைப் படிய வாரியிருந்தான். கிளீன் ஷேவ். அகன்ற நெற்றி. கறுப்பு பிரேம் கண்ணாடி. சற்று நீள மூக்கு. ஆர்மனி டிசேர்ட் போட்டிருந்தான். கைத்தசைகள் திரண்டு, தோள்பட்டைகள் அகன்று ஜிம் உடலோடு இருந்தான். “யு லுக் ஸ்மார்ட்” என்று அவள் எதேச்சையாகச் சொன்னதுக்கு வெட்கப்பட்டான். வாழ்க்கையில் எந்தப்பெண்ணும் அவனைப்பார்த்து அப்படி இதுகாலும் சொல்லியிருக்கவில்லை என்று தெரிந்தது. சற்றுநேர இடைவெளிக்குப்பின்னர் அவன் பதிலுக்கு “யு லுக் பியூட்டிபுல்” என்றான். அவள் ‘ஓ தாங்ஸ்’ என்று சற்றே எள்ளலுடன் சிரித்தாள். அவன் வாய் சற்றுத் திறந்திருந்தது. கண்கள் கணினித்திரையை விழுங்கிக்கொண்டிருந்தன. அசையாமல். ஆடாமல். 

“யு தேர் பார்த்திபன்?” 

அவன் தடுமாறினான். திரைக்கு அப்பால் எதையோ அவன் கண்கள் துலாவின. பின்னர் திரும்பி அடுத்த கேள்வியைக் கேட்டான். 

“அம்மாவைப்பார்க்கப் போறீங்களா? அம்மா இஞ்ச வாங்கோ” 

அவன் அம்மா திடீரென்று திரையில் தோன்றினார். இத்தனை நேரமும் அவன் எதிரிலேயே இருந்திருப்பார்போல. இவர்கள் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்திருப்பார். குரோட்டனின் பராமரிப்பாளர். அவளை அவன் அழகு என்று சொல்லவைத்ததும் அவராகவே இருந்திருக்கக்கூடும். இந்தப்பொன்சுக்கு ஒரு பெண்ணைப்பார்த்து அழகு என்று சொல்லும் தைரியம் சுயமாக வந்திருக்கச் சாத்தியமில்லை. அருண்மொழி விரக்தியாகச் சிரித்தாள். 

“வணக்கம் அருண்மொழி, எப்பிடி இருக்கிறிங்கள்?” 

அவன் தாயார் நிதானமாகவே பேசினார். பாவாடை சட்டை அணிந்திருந்தார். கண்ணாடியும் நீள மூக்கும் அவனோடு பொருந்திவந்தது. 

“நல்லா இருக்கிறன் அன்ரி, நீங்கள் எப்பிடி?” 

“நல்ல சுகம் … பார்த்தது சந்தோசம், இரண்டுபேரும் கதையுங்கோ. நான் படுக்கப்போறன்.” 

பதிலுக்குக் காத்திருக்காமல் அவர் போய்விட்டார். அருண்மொழிக்கும் அதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. பார்த்திபன் கணினித்திரையையே விழுங்குவதுபோலப் பார்த்துக்கொண்டிருந்தான். பின் தயங்கியபடி கேட்டான். 

“அம்மாவை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? எனக்கு அவவெண்டால் உயிர்” 

அவன் குரல் சீரியஸ் ஆனது. அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. திடீரென்று பார்த்திபன் அழ ஆரம்பிக்க, அவனது தாயார் கணினி முன்னர் வந்து உட்கார்ந்து, அவனை மடியில் இருத்தி, முலைப்பால் கொடுக்க ஆரம்பித்தார். பால் வடிய எழுந்து நின்று அவன் ‘தோடுடைய செவியன்’ பாட ஆரம்பித்தான். இந்தக் காட்சியில் தான் எங்கே இருக்கிறாள் என்று அருண்மொழி தேடிப்பார்த்தாள். தூரத்தில் தீற்றப்பட்ட வழிப்போக்கர்களில்கூட அவள் உருவத்தைக் காணமுடியவில்லை. அருண்மொழிக்கு வெறுத்துப்போனது. ஒரு முட்டாளும் அவனது சூனியக்கார அம்மாவும். அந்த வீட்டில் அவள் ஒரு இரண்டாந்தரப்பிரஜையாகவே நடத்தப்படுவாள். அங்கு எல்லாமே அந்த சூனியக்காரி என்பது விளங்கியது. இவன் ஒரு புத்திசாலி ஜப்பான் ரோபொட். அவர் நில் என்றால் நிற்பான். படி என்றால் படிப்பான். இந்தப்பெண்ணை காதலி என்றால் காதலிப்பான். முதலிரவில் எப்படி அவளை முத்தமிடுவது என்பதைக்கூட குழந்தை தாயிடமே கேட்டறியும் என்பதும் விளங்கியது. இதனை வழிப்படுத்த ஒரே வழிதான். மூளையைத் திருகி உள்ளே உள்ள சிப்பில் அம்மாவை மனைவி என்று பைஃண்ட் அண்ட் ரிபேள்ஸ் பண்ணும் ஸ்கிரிப்ட் எழுதவேண்டும். 

கடையை மூடும் தருணம் இது. அவளே சொன்னாள். 

“உங்களுக்கு நேரமாகேல்லையா? அங்க நடுச்சாமம் இருக்கும் எண்டு நினைக்கிறன்” 

“யியப் … படுக்கிற டைம்தான் … வேறு என்ன? வட் டு யூ திங்க்?” 

‘நீ ஒரு லூசுக்கேஸ்’ என்று மனதில் தோன்றியதை மறைத்தாள். 

“நைஸ் … வோஸ் கிளாட் டோக்கிங் டு யூ” 

“பிளஷர், நானும் அம்மாவும் பேசிட்டுத் தொடர்பு கொள்கிறோம் ” 

அருண்மொழிக்குச் சிரிப்பாக இருந்தது. அவள் அலுவலக நேர்முகத்தேர்வுகளில்கூட இவ்வாறாகச் சொல்வதில்லை. பிடித்திருந்தால் அந்த இடத்திலேயே எச்.ஆர் ஐயும் கூப்பிட்டு, சம்பளத்தையும் பேசி முடித்துவிடுவாள். பிடிக்கவில்லையா, அப்போதே முடிவைச் சொல்லி நன்றி கூறி அனுப்பிவிடுவாள். அந்தக்கணமே ‘உன்னை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று சொல்லிவிடலாமா என்று யோசித்தாள். வேண்டாம், அம்மா கோபப்படுவார். இது அவர் கொண்டுவந்த சம்பந்தம். அவரே பேசிக்கொள்ளட்டும். அருண்மொழி ‘குட் நைட்’ சொல்லி அழைப்பை முடித்துவிட்டு, மறக்காமல் கமராவில் ஸ்டிக்கரை எடுத்து மீள ஒட்டினாள். போனில் ‘தாங்ஸ் போர் த பிட்ஸா, ஐ ஆம் ஹோம். ஹவ் ஆர் திங்ஸ்’ என்று நிரோஜனின் மெசேஜ் வந்திருந்தது. அவனுக்குத் தேவை ஒரு ஸ்டேடஸ் அப்டேட். என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் மாப்பிள்ளை தூங்கவே மாட்டார். ‘பிளெஷர், குட் நைட்’ என்று சிரித்தபடியே அவனுக்குப் பதில் அனுப்பினாள். சாகட்டும். 

கணினியை மூடிவைத்துவிட்டு ஹோலுக்குள் வந்தாள். அம்மா மியூட் பண்ணிய டிவியில் வாணி ராணி பார்த்துக்கொண்டிருந்தார். 


“முடிஞ்சுதா?” 

“ம்ம்ம் … பசிக்குது. பிட்ஸா எடுப்பமா?” 

“ப்ச்… எப்பிடி அந்தத் தம்பி? டக்கெண்டு இல்லை எண்டாத.” 

“அப்ப ஓகே, எனக்கு ஹவாயன். உங்களுக்கு என்ன வழமைபோல தந்தூரியா?” 

“நான் எப்பிடி கதை போச்சுது எண்டு கேட்டனான்” 

“லீவ் இட் அம்மா. அது ஒரு டோட்டல் புல்ஷிட். டைம் வேஸ்ட். வேண்டாம் எண்டிடுங்கோ.” 


—தொடரும்—

Photo Credits : wheelz4speed.deviantart.com

Comments

  1. Wonderful writing Anna, really enjoyed it. Looking forward to the next part.

    ReplyDelete
  2. Yalini Thivaharan4/18/2018 1:17 am

    I so don't want them to end up together. I'm sure you would come up with the unexpected. Waiting to see what the next part has got in store for us :)

    ReplyDelete
  3. Yalini Thivaharan4/18/2018 1:18 am

    I so don't want them to end up together. I'm sure you would come up with something unexpected. Waiting to see what the next part got in store for us:)

    ReplyDelete
  4. இன்னும் கதைக்குள் பிரயாணிக்கவில்லை... அடுத்தபாகத்துக்கான எதிர்பார்ப்புடன்.........

    ReplyDelete
  5. Junior Nirojan4/18/2018 3:34 am

    கொப்பராண.... ஏதோ என்னோட பக்கத்த இருந்து பார்த்து எழுதின மாதிரி இருக்கு... ஆனா என்ன.. இப்ப அருண்மொழி என்னோட இல்லை... அவள் இன்னும் கொஞ்சம் தைரியம் உள்ளவளா இருந்திருக்கலாம.

    ReplyDelete
  6. Very well written and interesting as usual.

    ReplyDelete
  7. ஆஹா....ஆர்வத்தைத் தூண்டும் ஆரம்பம்.....
    சரளமான தடங்கல்கள் எதுவுமற்ற அக புற எண்ண ஓட்டங்கள்....
    வெற்றிடமாக இருந்த ஒரு வசீகரமான பண்பாட்டுப் புள்ளியில் இருந்து தொடங்குகிறது ஒரு ’நவீன தமிழ் கோலம்’
    தொடர்ந்து வாசிக்க ஆவல்.

    ReplyDelete
  8. காத்திருப்பு கொடுமையானது!!
    தொடர்ச்சி எப்போது வெளிவரும்??

    ReplyDelete
  9. Fantastic.. I enjoyed throughout the episode

    ReplyDelete
  10. On a different note, is it not safe to leave the camera on the lap top without a sticker on it?Just curious?

    ReplyDelete
  11. There is a view from one of my friend...Johnians always try to downgrade the hinduites(jhc) whenever they get the chance..is it true?

    ReplyDelete
    Replies
    1. May be its true Theepan. But I am not one of those who duck behind school identities. There is an intrinsic reason for that character to say he is from JHC. He is an island second, elite academic, yet he still feels inferior not to be a johnian because of the stupid conventional wisdom of johnians' status quo (especially with girls). Parthiban tries to cover his grounds here. Ashamed to explain the nitty gritties of story tellings. But then many now have asked this question. If you try to read without thinking about the writer, it may give a better experience.

      Delete
  12. Yes i didnt think in this view when I read this...this story telling was really admired me...but when i discussed with one of my friend, he came with the view..whataver I feel these differences influnece the tamil's politics also..

    ReplyDelete
  13. Thank you spending sometime to reply me

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட