Skip to main content

ராஜா ரகுமான்



ராஜா ரகுமான் சம்பவம் நடந்து இது மூன்றாவது நாள்.

நாற்பது ஐம்பது தடவைகளுக்கு மேல் அந்த வீடியோவைப் பார்த்தாயிற்று. இன்னமும் கெலி அடங்குவதாயில்லை. என்னைப்போன்ற, ‘யாரை உனக்கு அதிகம் பிடிக்கும்?’ என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்ற, இவர்களுடைய இசையை இம்மை மறுமை இல்லாமல் ரசிக்கின்ற எவருமே மிகவும் உணர்ச்சிவசப்பட்டே இந்த வீடியோவைப் பார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அப்படியொரு அற்புதத் தருணம் இது.

வெளியுலகமும், அவரவரது தீவிர ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் இருவரையுமே கீழ்மைப்படுத்தும் ஒரு சில ரசிகர்களும்தான் இவர்களுக்கிடையேயான ஒரு மாயைப் பிரிவினையை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதை எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். மற்றும்படி ரகுமானும் ராஜாவும் அவ்வப்போது தம்மிடையே தொடர்பில் இருந்திருக்கவே சாத்தியங்கள் அதிகம். ஒருமுறை மெல்பேர்னில் நிகழ்ந்த, ரகுமானின் இசைக்கோர்வைகளை சிம்பனியாக இசைத்த கச்சேரியில் ‘இந்திய இசை மேதைகள்’ என்ற கருப்பொருளில் பிரபல இசையமைப்பாளர்களின் இசைத்துணுக்குகளையும் சேர்த்து வாசித்தார்கள். அதில் ராஜாவின் ‘செந்தூரப்பூவே’ பாடலும் இசைக்கப்பட்டது. இதனை ராஜாவின் அனுமதியில்லாமல் ரகுமான் தொடர்ந்து செய்துவந்திருக்கமுடியாது என்பதை உலகம் அறியும். ரகுமானுக்கான பாராட்டு விழாவில் இளையராஜா வந்ததும்கூட இந்த நெருக்கத்தால்தான். அதே நிகழ்ச்சியில்தான் எம்.எஸ்.வி என்ற ஆதாரசுருதியில் தான் பஞ்சமம் என்றும் ரகுமான் மேல்சட்ஜமம் என்றும் அவர் கூறினார். அவை எல்லாம் இலகுவில் வந்து விழக்கூடிய வார்த்தைகள் அல்ல. மற்றும்படி ராஜா பொதுவெளியில் பேசுகின்ற, எமக்கு அவர் உளறுவது போன்று தெரிகின்ற விடயங்கள் எல்லாம் ‘Raja being just raja’. அதனைக்கூட இளையராஜாவாக ஒருநாளேனும் இருந்து பார்த்தால்தான் எமக்கு விளங்கும்போலப் படுகிறது.

இந்தத் தருணத்தில் ‘யாரை எனக்கு அதிகம் பிடிக்கும்?’ என்ற கேள்விக்கு ஏன் நான் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறேன் என்று யோசித்துப்பார்க்கிறேன்.

மிகச் சிறிய வயதிலேயே திரையிசை மீதான ஆர்வத்தை, திரையிசையை எப்படி ரசிப்பது என்பவற்றையெல்லாம் தூண்டிவிட்டது சிவத்திரன் அண்ணர்தான் (அதே கெமிஸ்றி வாத்தியார்). அவர் எங்கள் அண்ணாவின் நெருங்கிய நண்பர், தூரத்து உறவும்கூட. எண்பதுகளிலேயே கசட் ரெக்கோர்ட் பண்ணி லொறி பற்றியில் பாட்டுக்கேட்ட மனுசன். சில வேளைகளில் லொறி பற்றியையும் ரேடியோவையும் கொண்டுவந்து எங்கள் வீட்டிலும் தந்துவிட்டுப்போவார். ஆரியகுளச் சந்தியில் ஒரு பற்றி சார்ஜ் பண்ணும் கடை இருந்தது. சார்ஜும் பண்ணி அசிட்டும் நிரப்ப ஐம்பது ரூபா அளவுக்கு கேட்பார்கள். ஒரு தடவை புல்சார்ஜ் பண்ணினால் ஒரு மாதம் முழுதும் கசட்டில் பாட்டுக்கேட்கலாம். கசட்டுகளையும் சிவத்திரன் அண்ணாவே கொடுத்துதவுவார். அந்தக்காலத்தில் எல்லா பாடலுமே எங்களுக்கு இளையராஜாதான் என்றதால் இளையராஜாவை இப்போதுபோல கொண்டாடுவதில்லை. We took it for granted. அதனாலேயே ‘புத்தம் புது ஓலை வரும்’, ‘சல சலவென ஓடும்’, ‘இதழோடு இதழ் சேரும் நேரம்’ எல்லாம் ராஜாவின் இசை இல்லை என்று தெரியவந்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. தவிர, பற்றி சார்ஜ் இறங்கிவிடும் என்ற கவலை எப்போதுமே ஒரு மூலையில் இருந்ததால் இந்த யார் பெரிது, யார் கடவுள் என்ற சங்கதிகளுக்குள் நாங்கள் இறங்கியதேயில்லை. பாட்டு பிளே ஆகும்போது சின்னச் சத்தம் போட்டால்கூட அக்கா திட்டும். சேர்ந்து பாடமுடியாது. கண்ணை மூடிக்கொண்டு ரசித்துக்கொண்டேயிருக்கோணும். பாட்டு போகும்போதே அதைக் கவனியாமல் ரேடியோவுக்கு கீழே கொமெண்டு எதுவும் போடவோ லைக் பண்ணவோ முடியாது. இதனாலேயோ என்னவோ, பாட்டை யார் இசையமைத்தார், பாடினார் என்றில்லாமல் அதன் ஆதார மெட்டுக்கும் இசைக்கோர்வைக்கும் மாத்திரமே நாம் ரசிக்கப்பழகியிருந்தோம்.

அதே சிவத்திரன் அண்ணாதான் ரகுமானையும் ரசிக்கத்தூண்டியவர். ஒரு படத்தில் பிரபலமாகும் பாடலைவிடுத்து அதிகம் பேசப்படாத பாடல்களில் உள்ள நுணுக்கங்களையும் ரசிக்கப்பண்ணியவர் அவர். ‘ஜூலை மாதம் வந்தால்’ எல்லாம் ஒரு பாட்டா என்று நான் பன்னிரண்டு வயசில் பெரிய அறிவாளிக்கணக்கா சொன்னபோது, சரணத்தை மாத்திரம் ரிவைண்ட் பண்ணிக் காட்டினார். “காடு மலைகள் தேசங்கள் காண்போமா காற்றைக்கேள்” என்ற இடத்தில் வரும் சேஞ்ச் ஓவரைக் குறிப்பிட்டு, ‘இஞ்ச இருக்கு தம்பி இந்தப்பாட்டிண்ட மஜிக்’ என்றார்.

ராஜா, ரகுமான் என்றில்லை, எம்.எஸ்.வியை, ஏன் ஏ. எம். ராஜாவை ரசிக்கத்தூண்டியவரும் சிவத்திரன் அண்ணர்தான். ‘நிலவும் மலரும் பாடுது’ பாடலையும் ‘புது வெள்ளை மழை’ பாடலையும் அடுத்தடுத்துக் கேட்ட காலமெல்லாம் உண்டு. சிவத்திரன் அண்ணாவைப் பொறுத்தவரையில் நல்ல பாடலை ரசிக்கவேண்டியதுதான். அந்தப்பாடலை இசையமைத்தவர் யாராக இருந்தாலும் அவரைக் கொண்டாடித்தீர்க்கவேணும். அதன் வழியிலேயே நாங்கள் தேவாவையும் ரசித்தோம். வித்யாசாகரையும் ரசித்தோம். எம்.எஸ்.வி, கே.வி.எம், ஏ.எம்.ராஜா, சிற்பி, கார்த்திக் ராஜா, எஸ். ஏ. ராஜ்குமார், ஹரீஸ், யுவன், ஜி.வி, ரஞ்சித் பரோட் என்று எல்லோரையும் ரசித்தோம். ஒரு நல்ல பாடலை கேட்கும் கணத்தில் அந்தப்பாடலின் இசையமைப்பாளர்தான் உலகிலேயே நிகர் எதுவுமில்லாத கலைஞர் என்று எண்ணத்தோன்றும். ‘விழிகளில் அருகினில் வானம்’ என்ற ரமேஷ் விநாயகத்தின் பாடலை ஒரு முறை கேட்டுப்பாருங்கள். அந்தப்பாட்டு எந்த விதத்தில் ராஜா ரகுமான் பாடல்களுக்குக் குறைச்சலானது? கீரவாணியின் ‘சங்கீத ஸ்வரங்கள்’ பாட்டெல்லாம் பிரபஞ்ச லெவல். ‘முகிலினமே ஏனடி என் மேனியில் சரிகிறாய்?’ என்று ஒரு பாடல் இருக்கிறது. பவதாரிணி இசை. சான்ஸே இல்லை. ‘கண்ணுக்குள் பொத்திவைத்தேன் என் செல்லக்கண்ணனே வா’, ஜிப்ரான் இசை. ‘செண்பகப் பூவைப்பார்த்து’ என்று ஒரு பாட்டு. வி.எஸ். நரசிம்மன் இசை. இப்படி லிஸ்ட் வளர்ந்துகொண்டே போய் கடைசியில் வந்து நிற்பது,

‘வானம் பொழியாம பூமி விளையுமா கூறு’. நம்ம யுவன்.

கிட்டத்தட்ட ஐந்நூறு படங்களுக்கு தன்னோடு ரகுமான் வேலை பார்த்ததாக ராஜா சொன்னார். ‘அத நீதானே சொல்லணும்’ என்று அவர் குறிப்பிட்டபோது அதில் சின்ன ஆதங்கமும் தெரிந்தது. உண்மைதான், ரகுமான்தான் அதைச் சொல்லிப்பெருமைப்படல் வேண்டும். ஆனால் ரகுமான் சொன்னால் என்ன ஆகும்? ஒரு கோஷ்டி, ‘ராஜா இவ்வளவு சாதிச்சதே ரகுமானால்தான்’ என்று உளறும். இன்னொரு கோஷ்டி ‘ரகுமான் இவ்வளவு சாதிச்சது ராஜாவால்தான்’ என்று உளறும். எல்லா மதங்களும் ஒரே மார்க்கத்தைத்தான் சென்றடைகின்றன என்று படித்துப் படித்துச் சொன்னாலும் தமக்குள் அடிபட்டுக்கொள்கின்ற மதம் பிடித்த கூட்டம் இருக்கும் உலகம் இது. இல்லாத கடவுளின் பெயரிலேயே இத்தனை அடிபாடு என்றால், கேட்டு ரசித்து உணரக்கூடிய இசையில் எத்தனை பிரிவினைகள் செய்வார்கள். வாழ்ந்து போதீரே.

“மன்றம் வந்த தென்றலுக்கு” ராஜா பாட, ரகுமான் பியானோ வாசித்துக்கொண்டிருக்கையில், ‘அங்க எப்டி ‘ஏ' வாசிக்கறே நீ, உனக்கு டியூன் தெரியுமில்ல?’ என்று ராஜா செல்லமாகச் சொல்ல, ரகுமான் கீபோர்டை விட்டு விலகி இரண்டு அடி வைத்துவிட்டுத் திரும்பி வர, ராஜா ரகுமானின் தோள்களில் அன்போடு கைபோட.

ஒரு பூவின் வாழ்வில் ஒரே ஒரு தென்றல்தானாம்.

காலையில், வேலையில், மாலையில், இதை எழுதையில், இருவரின் பாடல்களையும் விசர் பிடித்ததுபோல மாறி மாறி கேட்டுக்கொண்டிருக்கிறேன். கடைசியாகக் கேட்ட பாடல்களில் பிடித்த வரிகள்.

“நல்லோர்கள் உன்னை பாராட்ட வேண்டும், 
நலமாக நூறாண்டு நீ வாழ வேண்டும்.
காவியம் பேசும் பூமுகம் பார்த்தால்
ஓவியம்கூட நாணுமே” — ராஜா.

“உனது பாடல் கேட்டது, 
மனதில் பாலை வார்த்தது, 
புயல் காற்றில் வாடி நின்ற ஓடம்தான்
கரையைச் சேர்ந்தது” — ரகுமான்

என் கொல்லைப்புறத்துக் காதலிகள்.

000

தொடர்புள்ள பதிவுகள்


Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக