Skip to main content

விருதுகள்


டூரிங் டாக்கிஸ் என்று சித்ரா லக்ஸ்மன் நடத்தும் யூடியூப் சனலை அவ்வப்போது பொழுதுபோக்காகக் கேட்பதுண்டு. அவர் ஒரு ஊடகவியலாளராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தமையால் சுவாரசியமான திரைத் தகவல்களை அடிக்கடி பகிர்ந்துகொள்வார். ரசிகர்கள் கேள்விகளுக்கும் வார வாரம் பதில் சொல்வார். அவருடைய சென்ற வாரத்து நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் அற்புதமான கேள்வி ஒன்றைக் கேட்டார்.

“என்னால் பல பாடல்களில் எஸ்பிபிக்கும் மனோவுக்கும் வித்தியாசம் கண்டறிய முடிவதில்லை. அதேபோல ஜேசுதாசுக்கும் உன்னிமேனனுக்கும் இடையிலும் குரல் வித்தியாசம் தெரிவதில்லை, நீங்கள் எப்படி சார்?”
அதற்குச் சித்ரா லக்ஸ்மனின் பதில்.
“நான் ஒரு இசை ரசிகனே ஒழிய கலைஞன் கிடையாது. எனக்கும் அந்தக் குழப்பங்கள் இருப்பதுண்டுதான்”
இருந்துட்டுப் போகட்டும். என் நண்பன் ஒருவனால் எம். எஸ். சுப்புலட்சுமிக்கும் சித் ஶ்ரீராமுக்கும் இடையில்கூட வித்தியாசம் கண்டுபிடிக்கமுடிவதில்லை. ஹூ கெயார்ஸ்?
ஆனால் பிரச்சனை அடுத்த சம்பவத்தில் இருக்கிறது.
2003ம் ஆண்டுத் தேசியத் திரைப்பட விருதுகளுக்கான குழுவிலே சித்ரா லக்ஸ்மனும் அங்கம் வகிக்கிறார். விருதுக்குழு எல்லா விருதுகளையும் தேர்ந்தெடுத்துவிட்டது. ஓரிரண்டுதான் மிச்சம். அதில் ஒன்று ‘சிறந்த பாடகி’ விருது. இவர்களுக்கு விருதுக்கு உகந்த பாடல்களைக் கேட்டு உள்வாங்கித் தேர்ந்தெடுக்க கால அவகாசம் இல்லை. இந்த நிலையில் கூட்டத்தில் சித்ரா லக்ஸ்மனே ஒரு பாடலைப் பாடிக்காட்டுக்கிறார். ‘பேஷ் அது நன்னா இருக்கறதே’ என்று குழுவும் அதைத் தெரிவு செய்கிறது. அந்தப்பாடல்தான் அழகி படத்தின் ‘பாட்டுச்சொல்லி பாடச்சொல்லி’. அந்தப் பெருமை மிகு விருதை வாங்கியவர் சாதனா சர்க்கம்.
பாட்டுச்சொல்லி ஒரு அற்புதமான பாடல் என்பதிலோ சாதனா சர்க்கம் ஒரு திறமையான பாடகி என்பதிலோ எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் ஒரு பாடகிக்கான விருதுப் பாடலை அந்தக் குழு அவர் குரலிலேயே கேட்கவில்லை என்பது எத்தனை அபத்தம் பாருங்கள். தவிர ஜேசுதாசுக்கும் உன்னிமேனனுக்குமிடையிலேயே குரல் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாத சித்ரா லக்ஸ்மன் அதை அனைவருக்கும் பாடிக்காட்டியிருக்கிறார். அவர்களும் அதை ரசித்து மூலப்பாடல் பாடிய சாதனா சர்க்கத்துக்கு விருது கொடுத்திருக்கிறார்கள். கல்பனா அக்காவின் அழகு மயிலாட பாட்டைக்கேட்டு ஜானகிக்கு விருது கொடுத்தால் எப்படியிருக்கும்? அப்படியே சித்ரா லக்ஸ்மன் பாடியது நன்றாக இருந்திருந்தாலுமே அதற்கான பெருமை இசையமைத்த இளையராஜவையோ அல்லது பாடிக்காட்டிய சித்ரா லக்ஸ்மனையோதான் சேருமே ஒழிய சாதனா சர்க்கம் காட்சியிலேயே இல்லையே.
இந்த விருதுகளை ஏன் இவர்களுக்குப் போய்க் கொடுக்கிறார்கள் என்று அடிக்கடி எமக்கு வரும் கேள்விகளுக்குப் பதிலை சித்ரா லக்ஸ்மன் தெளிவாகவே சொல்லிவிட்டார். ஒரு எழுந்தமான, தமக்கு வேண்டியவர்களைப் பெருமைப்படுத்த, தம்மிடமிருக்கும் மிகச்சில தெரிவுகளில் ஒன்றுக்குக் கொடுக்கும் முறைமையே பெரும்பாலான விருது முறைமைகள். ‘பாட்டுச் சொல்லி’ பாடல் வெளியான அதே ஆண்டுதான் 12B படத்தின் ‘பூவே வாய் பேசும்போது’ வெளியானது. மகாலக்ஸ்மி ஐயரைக் கொஞ்சமேனும் கருத்தில் எடுத்திருக்கவேண்டாம்?
இவர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்ற சந்தேகம் எனக்கு ‘மின்சாரக் கனவு’ காலத்திலேயே வந்துவிட்டது. ‘ஊ லல்லாலா’ ஒரு அற்புதமான இசைக்கோர்வைதான். ஆனால் சித்ராவுக்கு அதற்குத் தேசிய விருது கொடுத்தது கொஞ்சம் ஓவராகவே பட்டது. அதுவும் ‘ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி’யும் ‘பூ கொடியின் புன்னகை’யும் ‘வாராய் என் தோழியே’யும் வெளியான அதே ஆண்டில். சில ஆண்டுகளுக்கு முன்னர் யுவனின் இசையில் நந்தினி ஶ்ரீகர் பாடிய ‘ஆகா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே’ என்ற பாடல் வெளியானது. அப்படி ஒரு பாடலுக்குத் தேசிய விருது கொடுக்காவிட்டால் விருதுக்குழுவோடு சேர்ந்து டெல்லியும் எரிந்துபோகட்டும் என்று கண்ணகி சாபம் எல்லாம் போட்டேன். அந்தப் பாடலுக்குக் கடைசியில் மிர்ச்சி விருதுதான் கிடைத்தது.
பாடல்கள் வெறும் உதாரணத்துக்குத்தான். மற்றும்படி திரைத்துறை என்றில்லாமல் இலக்கியம், சமூகம், அரசியல் என எங்கெங்கெல்லாம் விருதுகள் அறிவிக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் படு அபத்தங்கள் நிகழ்ந்தேறுகின்றன. ஒருமுறை தனக்கு அறிவித்த இயல் விருதினை ஏற்றுக்கொண்டு அந்தப் பணப்பரிசிலை ஒரு அமைப்புக்குக் கொடுப்பதாக எழுத்தாளர் சோபாசக்தி அறிக்கை வெளியிட்டார். அதற்குக்கீழே வந்து எழுத்தாளர் முத்துலிங்கம் ‘உங்களுக்குக் கிடைத்தது இயல் விருது அல்ல, கண்டி வீரன் என்ற நாவலுக்கான விருது அது’ என்று தெளிவு படுத்தினார். பகிடி என்னவென்றால் கண்டி வீரன் ஒரு நாவல் கிடையாது. அது சிறுகதைத் தொகுப்பு. இதில் சோபாசக்தியில் தவறு இல்லை. விருதை அவர் கேட்கவும் இல்லை. எதிர்பார்க்கவும் இல்லை. விருதைப்பற்றிய விளக்கத்தைப் பெறுபவருக்குக் கொடுக்கவேண்டிய பொறுப்பு விருதுக்குழுவுக்கே உள்ளது. ஆனால் கொடுப்பதில் குடியிருக்கும் சின்னதான அதிகார மனப்பாங்கு அந்தப் பொறுப்பைத் தட்டிக்கழிக்கச்செய்கிறது. இந்த விசயத்தில் சயந்தன் போட்டிருந்த பதிலை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது.
“கொடுக்கிற ஆக்களுக்கும் என்னத்துக்கு விருது கொடுக்கிறோம் என்று தெரிவதில்லை. வாங்கிறாளுக்கும் எதுக்கு வாங்கிறோம் என்று தெரியுதில்லை”
ஆனால் என்ன சொன்னாலும் விருதுகளுக்கு என்று ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. அது ஒரு இலக்கியத்தையோ அல்லது திரைப்படத்தையோ, பாடலையோ மறுபடியும் ஒரு ரவுண்டு வருவதற்கு உதவி செய்யும். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களான அலிஸ் மன்றோவையும் கோட்ஸையும் அவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்தபின்னரேயே அறிந்துகொண்டேன். அதன்பின்னர்தான் ஒரு புத்தகத்தை வாசித்து, அது பிடித்து அடுத்தடுத்த அவர்களுடைய படைப்புகளைத் தேடி வாசித்தேன். ஆக விருதுகளுக்கான தேவை சமூகத்தில் இருக்கிறது. ஆனால் அவை எப்படித் தெரிவு செய்யப்படுகின்றன என்பதில்தான் பிரச்சனை.
இங்கே எல்லாமே லொபியிங்தான். உதாரணத்துக்கு நான் ஒரு பச்சை நிறச் செவ்வரத்தம் பூவை ஓவியமாக வரைகிறேன். பின்னர் அந்த ஓவியத்தை எனக்குத் தெரிந்த ஓவிய விருதுக் குழு அங்கத்தவர்களுக்கு எல்லாம் அனுப்பி வைக்கிறேன். அவர்களோடு அடிக்கடிப் பேசிக்கொள்கிறேன். சந்திக்கிறேன். திடீரென செவ்வரத்தம்பூ ஒரு குறியீடு என்பதாகப் பல கட்டுரைகள் இணையத்தில் வர ஆரம்பிக்கின்றன. அதிலும் பச்சை நிறச் செவ்வரத்தம்பூ என்பது புரட்சிக்கான அடையாளமாகிறது. பூ ஒன்று இலையாவதற்கான முதல் அடி என்ற வகையில் கவிதைகள் வருகின்றன. இவை எல்லாமே எப்படியோ ஓவிய விருதுக் குழுவின் கண்களிலும் பட்டுவிடுகிறது. அதிலும் விருதுக் குழுத் தலைவரான ஹெலன் கெல்லருக்கு என் ஓவியம் இன்னமும் பிடித்துவிடுகிறது.
ஈற்றில் பச்சைச் செவ்வரத்தைக்கு விருது கிடைக்கிறது.
உடனே நான் என்ன செய்வேன்? ஓவிய விருது பெற்றமைக்காக என்னைப் பாராட்டவென சிறப்புக் கண்காட்சி ஒன்றை அறிவிப்பேன். ஐ மீன், ஒரு அமைப்பு அறிவிக்கும். விருது பெற்ற ஓவியமும் காட்சியில் வைக்கப்படும் என்பேன். பல்வேறு நிறங்களில் மேலும் செவ்வரத்தைகளை நான் வரையத் தொடங்குவேன். பின்னர் மல்லிகை, முல்லை என்றும் போகலாம். நான் எங்கு போனாலும் ஓவிய விருது பெற்ற ஓவியர் என்றே அறிமுகப்படுத்துவார்கள். இனி நான் என்ன சவத்தையைக் கீறினாலும் அது ஓவியம்தான். உச்சம் எதுவென்றால், ஒரு இலையுதிர்காலத்துப் பல வண்ண இலைகளைக் கொண்ட மரத்தில் பூராவும் பச்சை நிறப் பூக்கள். ஆனால் அதற்கு ஏனோ சனியனுகள் விருது கொடுக்கவில்லை. நான் இப்போது ஹெலன் கெல்லரையே தாக்குவேன். பார்வை தெரியாதவருக்கு எப்படி என் ஓவியத்தின் அருமை தெரியும் என்பேன். சிலர் பழையதைக் கிளறுவார்கள். ஆனால் நான் பிரபலமானதால் என் சொல்தான் பிழைக்கும். ஒரு கட்டத்தில் கெல்லரைத் தூக்கிவிட்டு இன்னொருத்தர் வருவார். இப்போது விருதுக்குழுவும் என் கையில். அது சரிவராவிட்டால் அந்த விருதில் அரசியல் மெத்திப்போய்விட்டது என்று சொல்லி என் பழைய விருதுகளை அடையாளமாகத் திருப்பிக்கொடுத்துவிட்டால் முடிந்தது கதை. பிரபலமான பின்னர் யாருக்கு வேணும் இவர்களின் விருது? நானே இனிமேல் ‘செவ்வரத்தை விருதுகள்’ என்று ஒன்றை அறிவிப்பேன். விருதின் உச்சியில் பச்சை நிற செவ்வரத்தை பசும்பொன் பூசிய உலோகத்தில் வீற்றிருக்கும். இப்படியே காலத்தைக் கடத்திக் கடைசியில் வாழ் நாள் சாதனையாளர் விருதையும் வாங்கிவிட்டால் முடிந்தது சோலி.
இன்ஷா அல்லாஹ்.
பி.கு 1:
ஒவ்வொரு தடவையும் விருதுகள் பற்றிய ஒரு குறிப்பு எழுத அமரும்போதும் என் நண்பர் வட்டாரத்திலிருந்து ஆருக்கும் ஏதேனும் ஒரு விருது கிடைத்துவிடுகிறது. அல்லது தெரிந்த அமைப்பு ஒன்று விருதுகளை அறிவித்துவிடுகிறது. அதனால் நான் அவர்களைத் தாக்கியே எழுதுவதாகப் பலர் சரியாகக் கணித்துவிடும் அபாயம் இருக்கிறது. அத்தோடு இவனுக்குக் கிடைக்குதில்லையே என்ற காழ்ப்புணர்ப்பு என்பார்கள் சிலர். மண்டலக்கோட்டை அறிவொளி அமைப்பு (பதிவு எண் 8562B) எனக்கு ‘இளைய எழுத்தாளர்’ விருது கொடுக்கும்போது ‘பச்சைச் செவ்வரத்தைக்கு விருது வாங்கிட்டான்’ என்று ஒரு நாய் விருது அறிவிப்புக்குக் கீழேயே வந்து கூசாமல் கொமெண்ட் போடும். அக்சுவலி நாய்கள் என்று பன்மையில் வாசிக்கவும். இவை எல்லாவற்றிலும் இருக்கும் உண்மைகளைக் கருத்தில்கொண்டு நான் இந்தக் குறிப்பை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன். கடந்த சில நாட்களில் எந்த விருது அறிவுப்புகளும் இல்லாததால் இதனைத் தூசி தட்டி வெளியே போட்டாயிற்று. அல்லது அம்மா சொல்வதுபோல ‘கெடுகுடி சொல் கேளாது’ என்பதாகவும் வைத்துக்கொள்ளலாம்.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட